Thursday, October 22, 2009

ஆண்டு மலர்!

ஓமக்குச்சி நரசிம்மன் : “நாராயணா… 420 கேஸ்ல சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாமே?!!”
பன்னிக்குட்டி ராமசாமி : “ஏன் கோயம்பத்தூர்ல முக்குனா கைது பண்ணமாட்டாங்களா?!!”
    -கவுண்டமணி (படம்: சூரியன்)

வணக்கம்,

இந்த தீபாவளித் திருநாள்/விடுமுறை சிறப்பு தினம் உங்களனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்! வாழ்த்து தெரிவித்துள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல!

சென்ற பதிவான் தீபாவளி மலர்! உங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி! இரும்புக்கை மாயாவி இருந்தாலே போதும், அது காமிக்ஸ் ஆனாலும் சரி… பதிவானாலும் சரி… நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகி விடும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்ததற்கு நன்றிகள்!

முதல் ஆண்டு மலர்:

அக்டோபர் 23 (நாளை) அ.கொ.தீ.க. ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் ஆகிறது! கடந்த ஒரு வருடத்தில் மொத்தம் 23 (இதையும் சேர்த்து) பதிவுகளே வந்துள்ளன! அவ்வப்போது காணாமல் போவதும், பின்னர் மீண்டும் புதுப் பொலிவுடன் வருவதும் நம் வாடிக்கையாகிவிட்ட நிலையில், அடியெடுத்து வைக்கப் போகும் புது ஆண்டிலாவது ரெகுலராக பதிவிட என்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறேன்!

இந்த தருணத்தில் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்! அ.கொ.தீ.க. பிறந்த அன்றுதான் நம் நாட்டின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்டாகப் போற்றப்படும் திரு.ஆர்.கே.லட்சுமண் அவர்களும் பிறந்தார்! ஆகையால் அவரைப் போற்றும் வகையில் பதிவில் அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் உண்டு!

அ.கொ.தீ.க.வின் முதல் பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! இது ஒரு சிறந்த மொக்கைப் பதிவு என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விடுகிறேன்! ஜாக்கிரதை!

இந்த ஆண்டு மலர் பதிவில் சிறப்பாக ஏதும் செய்ய நேரமிண்மை காரணமாக இதோ உங்களுக்காக சமீபத்தில் வெளிவந்த மொக்கை காமிக்ஸ் செய்திகளின் தொகுப்பு! ஆனால் அதற்கு முன்…

பதிவுக்கு போகும் முன் ஒரு மிகமிகமிகமிக முக்கிய அறிவிப்பு: 

XIII__logoநேற்று முன் தினம் லயன் காமிக்ஸ் அலுவலகத்தாரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் அளித்த சிலபல முக்கியத் தகவல்கள் நம்மையெல்லாம் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன! இத்தருணத்தில் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

இந்த மாதம் முடிவதற்குள் லயன் காமிக்ஸ்#207: கொலை செய்ய விரும்பு! (மாடஸ்டி பிளைஸி சாகஸம்) வெளிவரவிருக்கிறது! தொடர்ந்து முத்து காமிக்ஸ்#313: விண்ணில் ஒரு குள்ளநரி! (விங் கமாண்டர் ஜார்ஜ் சாகஸம்) மற்றும் காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#25: களிமண் மனிதர்கள்! (இரும்புக்கை மாயாவி சாகஸம்) ஆகியவை அடுத்த மாதத்திற்குள் வெளிவரவிருக்கின்றன! பின்னர் லயன் காமிக்ஸ்#208 – வெள்ளையாய் ஒரு வேதாளம்! (சிக்பில் சாகஸம்) புத்தாண்டிற்குள் வந்தாலும் வரலாம்!

ஆனால் நாம் அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் XIII COLLECTOR’S SPECIAL – இரத்தப்படலம்! (பாகம்1-18) ஜனவரி 2010-ல் நிச்சயமாக வந்துவிடும்! நானும் முதலில் இதைக் கேட்ட போது நம்பவில்லைதான்! வழக்கமாக கூறப்படும் கதைதானே என்று நினைத்தேன்! ஆனால் இம்முறை உறுதியாக சொன்ன தேதியில் புத்தகம் வந்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் சற்று அதிகமாகவே உள்ளன! அதற்கு அவர்கள் கூறிய காரணங்களை உங்களுக்கு அப்படியே தொகுத்து வழங்குகிறேன்!

இதுவரை மொத்தம் 640 புத்தகங்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன! ஆனால் கதைக்கான ராயல்டி, அச்சு முதலிய செலவுகளை ஈடுகட்டவே 1200 பிரதிகள் ரூ:200/- விலையில் விற்றால்தான் இயலும்! இம்மாபெரும் நஷ்டமே புத்தகம் வர இத்தனை நாள் தாமதம் ஏற்பட காரணம்!

இவ்வாறு நேரடி விற்பனை முறையில்லல்லாது வழக்கமான புத்தக கடைகளில் விற்பதற்கு விற்பனையாளார்கள் தயக்கம் காட்டியதே ஆரம்பத்திலேயே இந்த கனவு ப்ராஜக்ட் ஒத்தி வைக்கப்பட்ட காரணம்! இவ்வளவு விலை உயர்ந்த புத்தகத்தை முன் பணம் செலுத்தி பத்திரமாகப் பாதுகாத்து விற்ற பின்னர் ஒரு பகுதியை இலாபமாக வைத்துக் கொண்டு விற்காத புத்தகங்களை பத்திரமாக திருப்பியனுப்புவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எந்த விற்பனையாளரும் விரும்புவதில்லை! இதில் பதிப்பகத்தாருக்கு புத்தகத்திற்கான விலையில் ஒரு பகுதி மட்டுமே திரும்பக் கிடைக்குமென்பதால் இதில் பெரிய இலாபமும் இல்லை!

சென்னை புத்தகக் கண்காட்சியை குறிவைத்தே ஜனவரியில் புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்! ஆனால் அங்கு கடைகளில் குறைந்த பட்சம் 10% தள்ளுபடி அளிக்க வேண்டியது கட்டாயம்! கணிசமான புத்தகங்களை விற்றுவிட முடியும் என்றாலும் விற்பனையாளர்களுக்கு 40% வரை தள்ளுபடி அளிக்க வேண்டியிருப்பதால் அங்கும் பெரிய இலாபம் இல்லை! இதனால் நேரடி விற்பனை முறைதான் இந்த கனவு முயற்சிக்கு ஒத்துவரும்!   

ஆனால் இப்போது பெருத்த நஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு ஏன் இவர்கள் புத்தகத்தை வெளியிட வேண்டும்? 1986-ல் தொடங்கிய ஒரு தொடர், 2005 முதல் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் ஒரு காமிக்ஸ் களஞ்சியம், தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் (ஆசிரியர் உள்பட) கனவான இந்த XIII ஸ்பெஷலுக்காக முன்பதிவு செய்துள்ள வாசகர்களை மேலும் காக்க வைக்க வேண்டாம் என்ற எண்ணமே! மேலும் புத்தகக் கண்காட்சியையும் தவற விடக் கூடாது என்ற உந்துதலும் காரணம்! புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் எக்ஸ்போஷரையும், பரபர விற்பனையையும் அவர்கள் விட்டுவிட தயாராக இல்லை! 

இந்த முயற்சிக்கு நம்மால் இயன்ற உறுதுணையை அளிக்க நமக்கிருக்கும் ஒரே வழி, அவரவர் தங்களால் இயன்ற அளவு பிரதிகளை முன்பதிவு செய்வதுதான்! ஒரு புத்தகத்துக்கு மேல் வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்போருக்கு, காமிக்ஸ் படித்தறியாத, அல்லது படிப்பதை நிறுத்திவிட்ட உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக வழங்குங்கள்! புதிதாக காமிக்ஸ் படிக்க விரும்புவோருக்கு XIII-ஐ விட சிறந்ததொரு அறிமுகம் கிட்டுமா? இது மேலும் பல காமிக்ஸ் வாசகர்களை உருவாக்கும்!

இந்தப் பொங்கல் நம் அனைவருக்கும் XIII பொங்கல் ஆக அமைய அனைவரும் பிரார்த்திப்போம்! இல்லையெனில் வேட்டைக்காரன் பொங்கல், அசல் பொங்கல் என்று எதையாவது கொண்டாடித் தொலைக்க வேண்டியிருக்கும்!220789687_99fbe5f722

முக்கிய அறிவிப்பு போதும், இனி மொக்கை பதிவுக்கு போவோம்!

உன்னைப்போல் ஒருவன்:

சமீபத்தில் வெளிவந்த உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் வரும் காமன் மேன் (COMMON MAN) கதாபாத்திரம் வலையுலகில் பெரியளவு விவாதங்களைத் தூண்டியுள்ளது! யார் உண்மையான காமன் மேன்? என்ற கேள்வியை ஞாநி முதல் அண்ணன் SUREஷ் வரை அனைவரும் முன் வைத்துள்ளனர்!

ஆனால் கமலுக்கு பல வருடங்கள் முன்பிருந்தே மக்களின் சிந்தையை தொடர்ந்து தூண்டி வரும் ஒரிஜினல் காமன் மேனுக்கு சிறப்பு சேர்ப்பதே எனது நோக்கம்!

அக்டோபர் 23, 1924-ல் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்டாகப் போற்றப்படும் திரு.ஆர்.கே.லட்சுமண் அவர்களால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரமே காமன் மேன்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் YOU SAID IT! என்ற கார்ட்டூன் பகுதியின் நாயகன்தான் இந்த காமன் மேன்! தினசரி நாட்டுநடப்பில் தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அப்பாவியாக ஒரு ஓரத்தில் நின்று பார்ப்பதே இவரது குணாதிசயம்! இவரது காஸ்ட்யூம் அதை மிக பிரபலம்!

1951-லிருந்து தொடர்ந்து நம்மையெல்லாம் பல வருடங்கள் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் காமன் மேன் இந்திய உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்! காமன் மேனின் தாக்கத்தை உணர வேண்டுமெனில் பின்வரும் தகவல்கள் கொஞ்சம் உதவக்கூடும்!

  • இந்திய அரசால் 1988-ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் 150-வது ஆண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட ஒரு தபால் தலையில் காமன் மேன் படம் இடம்பெற்றுள்ளது!
  • புனேயில் SYMBIOSIS INSTITUTE-ல் காமன் மேன் சிலை நிறுவப்பட்டுள்ளது!
  • AIR DECCAN நிறுவணம் 2005-ல் தொடங்கிய மலிவு விலை விமானப் போக்குவரத்துக்கு காமன் மேனை MASCOT ஆக பயன்படுத்தி வருகிறது!

Common_man396600588_c21ce6b8d7

காமன் மேன் தவிர தன் அண்ணனாகிய அமரர் திரு.ஆர்.கே.நாராயண் அவர்களின் கதைகளுக்கு இவர் வரைந்த சித்திரங்கள் மிக பிரபலம்! இது குறித்த எனது முந்தைய பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான இன்னொரு கார்ட்டூன் கதாபாத்திரமான ASIAN PAINTS விளம்பரத்தில் வரும் சிறுவன் GATTUவையும் உருவாக்கியவரும் இவர்தான்! எனக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான கட்டுவின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு!

asian-paints-gattu-1asian-paints-gattu-6asian-paints-gattu-8asian-paints-gattu-2asian-paints-gattu-3asian-paints-gattu-4asian-paints-gattu-5asian-paints-gattu-7

இத்தனை மகிழ்வுகளை நமக்கெல்லாம் தொடர்ந்து அளித்துவரும் அவர் மென்மேலும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! 

காமன் மேன் குறித்து மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

எழுத்தாளர் எஸ்.ரா.வின் காமிக்ஸ் கனவுகள்:

சமீபத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் தன் வலைத்தளத்தில் தனது காமிக்ஸ் அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார்! அதன் முதல் பத்தியை மட்டும் சுட்டு அதை ஒரு துணுக்காக குங்குமம் வார இதழ் (26-10-2009) வெளியிட்டுள்ளது!

Kungumam Weekly Magazine Dated 26102009 Page 9 SRa Comics

பதிவை மறவாமல் படியுங்கள்! ஆதாரப்பூர்வ பிழைகள் சில இருப்பினும் (அவர் ஒன்றும் முழு நேர காமிக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கவில்லையே) தனது இளம்பிராய காமிக்ஸ் அனுபவங்களை அவருக்கே உரித்தான நடையில் அவர் தொகுத்து வழங்குவதைப் படிக்கும் போது மிகுந்த சுவாரசியமாக உள்ளது! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

புதிய தலைமுறை-ல் சித்திர நாவல் விமர்சனம்:

சமீபத்தில் தொடங்கப் பட்டுள்ள வாரப் பத்திரிக்கையான புதிய தலைமுறையின் இரண்டாவது இதழில் (06-10-2009) உலகப் புகழ் பெற்ற பெர்சிபொலிஸ் சித்திர நாவலின் தமிழாக்கம் விமர்சிக்கப்பட்டுள்ளது! இந்த சித்திர நாவலைத் தழுவி சமீபத்தில் ஒரு திரைப்படம் கூட வந்தது! 

இந்த வாரப் பத்திரிக்கையில் புகழ்பெற்ற வலைபதிவர்களான சில காமிக்ஸ் ரசிகர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது! 

Puthiya Thalaimurai Issue 2 Dated 06102009 Book Review Graphic Novel

தமிழில் வெளிவந்துள்ள இந்த அதியற்புத சித்திர நாவலை மறவாமல் வாங்கிப் படிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்! இந்த சித்திர நாவலை எனக்கு அறிமுகம் செய்து வைத்த கனவுகளின் காதலர்-க்கு இந்தத் தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

மீண்டும் பொன்வண்ணன் காமிக்ஸ் படிக்கிறார்:

இந்த வாரப் பத்திரிக்கைகள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் சளைக்காம இந்த நியூஸை போடுவாங்களோ தெரியல! அதை ஸ்கேன் பண்ணி போடுற பதிவர்களுக்கும், அதை படிச்சுத் தொலைக்க வேண்டியிருக்கிற வாசகர்களுக்கும் நிச்சயம் சலிப்பு தட்டியிருக்கும்! ஆனா தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல இவங்க எத்தனை முறை நியூஸ் போட்டாலும் அதை உங்களுக்கு வழங்கிடுவது நமது கடமையாகும்!

ஆகையால் இதோ வாசகர்களின் பேராதரவிற்கிணங்க மீண்டும் ஒரு முறை: பொன்வண்ணன் காமிக்ஸ் படிக்கிறார்! இம்முறை சினிமா எக்ஸ்பிரஸ் (16-10-2009) வார இதழில்!

Cinema Express Dated 16102009 Page 82 Ponvannan Comics Cinema Express Dated 16102009 Page 83 Ponvannan Comics

எகனாமிக் டைம்ஸ்-ல் காமிக்ஸ் டைம்: 

Economic Times Dated 19102009 Page 16 Dracula Revival

வழக்கமாக வணிக செய்திகள் வெளியிடும் எகனாமிக் டைம்ஸ் (19-10-2009) பத்திரிக்கையில் காமிக்ஸ் நியூஸ் கண்டவுடன் நான் அடைந்திட்ட இன்ப அதிர்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்! ஆனால் செய்திகள் என்னவோ படு மொக்கைதான்!

அந்த டிராகுலா செய்தி மட்டும் ஆர்வத்தைத் தூண்டுகிறது! புத்தகம் வந்ததும் பார்ப்போம் ப்ராம் ஸ்டோகர்-ன் பரம்பரைப் பராக்கிரமத்தை!

கனவுகளின் காதலர் புத்தகத்தை படித்துவிட்டு விமர்சிப்பார் என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

மொபைலில் காமிக்ஸ் படிப்பதையெல்லாம் ஏனோ என் மனம் ஏற்க மறுக்கிறது! இம்மாம் பெரிய கம்ப்யூட்டர் ஸ்க்ரீனிலேயே டவுன்லோடு செய்த காமிக்ஸை படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிற போது, இத்தணூண்டு மொபைல் ஸ்க்ரினில் என்னத்த காமிக்ஸ் பேரின்பத்தை பெருசா அனுபவிச்சிர முடியும்னு எனக்குத் தெரியல!  

வேதாளர் கதையை வேணும்னா மிஸ் பண்ணாம தினசரி படிச்சுக்கலாம்!

Economic Times Dated 19102009 Page 3 Airtel Comics Portal

மிகமிகமிகமிக முக்கியமான பின்குறிப்பு:

  • இதுக்கே “இப்பவே கண்ணக்கட்டுதே!” என்று புலம்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை! இன்னும் இது போல பல மொக்கை காமிக்ஸ் நியூஸ்களை கைவசம் வைத்திருக்கிறேன்! வரும் பதுவுகளில் அவை அவ்வப்போது வந்து உங்களைத் தாக்கும்! உஷார்!
  • குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறாங்களோ இல்லையோ, கண்டிப்பா ஒபாமா காமிக்ஸ் படிக்கிறார்! தகவல்கள் விரைவில்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

5 comments:

  1. XIII பற்றிய செய்தி மற்றும் வரப்போகும் லயன் செய்திகளுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய தலைவர் சமூகத்திற்கு,

    முதலில் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். அகொதீக வலைப்பூ ஆரம்பிக்கப்பட்ட பின்பே தமிழில் காமிக்ஸ் வலைப்பூக்களிற்கான ஜூரம் பற்றிக் கொண்டது.அங்கேயே ஆரம்பித்தவனும் பின் அதன் பின்னால் வந்தவன் என்றவகையிலும் எனக்குப் பெருமையே.

    ஒர் வலைப்பூவை தொடர்ந்து நடாத்துவது என்பது எப்போதும் இலகுவானதாக இருப்பதில்லை, குறிப்பாக அதிகம் ஆய்வு அல்லது தேடல்கள் செய்து தயாரிக்க வேண்டிய காமிக்ஸ் குறித்த பதிவுகளிற்குரிய மந்தமான வரவேற்பு, ஒவ்வொரு முறையும் மனதை தளரச் செய்யும் போதும் அதிலிருந்து புதிய துளிராக மீண்டு வந்து ஒரு வருட காலமாக நீங்கள் உங்கள் பணி, மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள்- ஜல்சாவும் இதில் அடக்கம்- மத்தியிலும் எங்களிற்கு அரிய, சிறப்பான பதிவுகளை தந்திருக்கிறீர்கள். உங்களை நான் மனமாரப் பாராட்டி, உற்சாகத்துடன் தொடர்ந்து உலகை உங்கள் நாசச் செயல்களால் துவம்சம் பண்ணும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.[ கழகக் கண்மணிகள் தயவு செய்து சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்]

    நீங்கள் தந்திருக்கும் செய்திகள் அருமை. நினைவூட்டப்படவேண்டிய கலைஞர்கள் குறித்து நீங்கள் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    XIII பொங்கல் கொண்டாட நான் தயார். நண்பர்களிற்கும் இது இனிப்பான செய்தி.

    அருமையான தகவல்களை உள்ளடக்கிய பதிவு,பதிவுகளிற்கிடையே நீங்கள் வழ்ங்கியிருக்கும் சுட்டிகளிற்கு நன்றி தலைவரே, அகொதீக மேலும் பல ஆண்டுகள் வெற்றி விழாக்காண வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. அகொதீக வலைத்தளத்திற்கும், காமிக்ஸ் டாக்டருக்கும் முதல் ஆண்டு நிறைவிற்கான வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன். காமிக்ஸ் செய்திகள், லயன் XIII பற்றிய மெகா அறிவிப்பு, காமன் மேன் என்று ஆண்டு மலரை அருமையாக செதுக்கியிருக்கிறீர்கள். நம் லயனின் ஒரு ஆண்டு மலரில் பலதரபட்ட கதைகளை ஒருசேர படித்த திருப்தி கிடைத்தது.

    இதேபோல அருமையாக மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  4. Thank you for a very informative post. I thoroughly enjoyed reading this.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!