"பொங்கலோ பொங்கல்! மாட்டுக்குப் பொங்கல்!
இன்னிக்கு சேட்டுக்குப் பொங்கல்!"
-கவுண்டமணி (படம்-ஜெண்டில்மேன்)
வணக்கம்,
தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு தமிழ்/ஆங்கிலப் புத்தாண்டு, தமிழர் திருநாள், தைத் திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம், தைப் பொங்கல், காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் என அனைத்து நன்னாட்களும் இனியதாக அமைய அடியேனின் வாழ்த்துக்கள்! மாவீரன் மாண்டிஜூமாவைப் போல் ‘மஞ்சு விரட்டு’-ம் (யார் அந்த மஞ்சு?) மறத்தமிழர்கள் அனைவரும் வெற்றி மாலை சூட மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சென்ற பதிவான நடுநிசிக் கள்வன்-க்கு நீங்கள் அனைவரும் அளித்த உற்சாகமான வரவேற்புக்கு நன்றி! உங்கள் பாராட்டுக்களைத் தக்கவைத்துக் கொள்ள என்னால் இயன்றமட்டும் உழைப்பேன்(?!!) என்று இந்தப் புத்தாண்டில் உறுதிமொழி கூறுகிறேன்!
‘வெகுமதி’ போட்டிக்கு விரைந்து விடையளித்த நண்பர் ‘காமிக்ஸ் பிரியன்’ க.கொ.க.கூ.-வுக்கு வாழ்த்துக்கள்! இருப்பினும் அவர் ‘கொலைக்கரம்’ வில்லன் ‘மைக்கேல்’-ன் பெயரைக் கூறவில்லை என்பதால் பாராட்டுக்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இது ஒரு பொங்கல் சிறப்புப் பதிவு என்பதாலும் மொக்கை கொஞ்சம் ஓவராக இருப்பதாலும் இப்பதிவை இரு பாகங்களாகப் பிரித்துள்ளேன்! இப்பதிவை கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்புத் திரைப்படமான வீரத்தளபதி ஜே.கே.ஆர்.-ன் ‘நாயகன்’-ஐக் கண்டுகளித்தபின் அதன் பாதிப்பிலிருந்து விலகாமல் எழுதுவதால் நிறையோ, குறையோ எதுவாயினும் அது ‘வீரத் தளபதி’யையேச் சாரும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் சங்க மாநாடு!
சமீபத்தில் (சனிக்கிழமை, ஜனவரி 10) சென்னையில் மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் சங்க மாநாடு இனிதே நடைபெற்றது. சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த போது சக காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் சிலரை ஒரே கூரையின் கீழ் (உண்மையிலேயே) சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நண்பர் கிங் விஸ்வா வெளியிட்டிருந்த புத்தகக் கண்காட்சிப் புகைப்படங்கள் அனைவரது ஆர்வத்தையும் தூண்டிவிட, தற்செயலாக அனைவரும் ஒரே புத்தகக் கடையினுள் (கடை எண் : 35 - இன்ஃபோ மேப்ஸ்) காமிக்ஸ் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
கருத்துப் பரிமாற்றங்களும், சூடான விவாதங்களும் நடைபெற்றன என்று நான் இங்கு பொய் சொல்லப் போவதில்லை. நேரில் சந்தித்துக் கொண்டதில்லையே தவிர ஏற்கெனவே அனைவரும் தொலைபேசி மூலம் அறிமுகமாகியிருந்ததால் ஆளாளுக்கு கையில் கிடைப்பதை முந்திக் கொண்டு அள்ளுவதிலே மும்முரமாக இருந்துவிட்டோம். சந்திப்பின் நினைவாக சிலபல அரிய புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. அவையெல்லாம் அ.கொ.தீ.க.வின் ரகசியப் பாசறையில் பத்திரமாகப் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன. பொது மக்கள் பார்வைக்குச் சென்றால் எவ்வித நாசவிளைவுகள் ஏற்படக்கூடும் என்று யாராலும் கணிக்க முடியாத காரணத்தால் அவற்றை பரம ரகசியமாக வைத்திருக்க அனைத்துத் தரப்பினராலும் ஒருமனதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
காமிக்ஸ் வேட்டையில் சிலபல அரிய பொக்கிஷங்களும் சிக்கின. அவற்றைப் பற்றி விரிவாகப் பின்வரும் பதிவுகளில் காணாலாம். விலை காரணமாக சிலவற்றை ‘ச்சீ! ச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!’ என ஒதுக்கி விடவேண்டியதாயிற்று (உதாரணம் - BONE). புத்தகக் கண்காட்சி பற்றி புகைப்படங்களுடன் நண்பர் கிங் விஸ்வா இட்டுள்ளப் பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும். பின்னூட்டங்களையும் தவறாது படிக்கவும்.
மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டோர் விவரம்:
- வேண்டப்பட்ட விரோதி திரு.கிங் விஸ்வா அவர்கள் - தமிழ் காமிக்ஸ் உலகம்
- சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி திரு.அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்கள் - காமிக்ஸ் பூக்கள்
- தமிழிலும் ஆங்கிலத்திலும் காமிக்ஸ் வலையுலகில் கரைகண்ட கரிகாற்சோ(தோ)ழர் திரு.ரஃபிக் ராஜா அவர்கள் - காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
- வேதாள நகரம் தந்த வியாபார வேங்கை திரு.பங்கு வேட்டையர் (SHAREHUNTER) அவர்கள்
- இவர்களுடன், அடியேன் பயங்கரவாதி டாக்டர் செவன் - தலைவர், அ.கொ.தீ.க.
வரத்தவறியோர்:
- தமிழ் காமிக்ஸ் வலையுலகப் பிதாமகர் திரு.முத்துவிசிறி அவர்கள் - உலகம் சுற்றும் வாலிபன் போல் இவர் கண்டம் விட்டுக் கண்டம் தாவிக் கொண்டே இருந்ததனால் இவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
- அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் திரு.கனவுகளின் காதலன் அவர்கள் - இவர் ‘ஜெனீலியா’வுடன் ஜல்சா புரிவதிலும், அதன் காரணமாகத் தனது துனைவியார் திருமதி.நவஜோ மதகுருவிடம் பூரிக்கட்டையில் அடிவாங்குவதிலுமே பிஸியாக இருந்ததனால் கலந்துகொள்ளவில்லை.
- ஒலக காமிக்ஸ் ரசிகர் - மொக்கை காமிக்ஸ் (எ) GREATEST EVER COMICS - பயணக் களைப்பைக் காரணம் காட்டி வரத்தவறியதோடு மட்டுமல்லாது அழைக்கப்படவில்லை என்று அவதூறு வேறு கிளப்பிக்கொண்டிருக்கும் இவரை இச்சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!
- காமிக்ஸ் பிரியர் - க.கொ.க.கூ. - இவரு யாருன்னே தெரியல! அதனால அழைக்கக்கூட வழியில்ல!
சிறப்பு விருந்தினர்கள்:
- லக்கிலுக்
- தமிழ்குட்டி
‘டேய்! அடப் பாவிகளா! அஞ்சு பேரு கூடி நின்னு மொக்கை போட்டுட்டு, அதென்னங்கடா அது, மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் சங்க மாநாடு?’ எனக் கேட்போருக்கு நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன்! நானும் நண்பர் கிங் விஸ்வாவும் ஃபோனில் பேசிக்கொண்டாலே அதுதான் பொதுக்குழு கூட்டம்! கூட ‘கான்ஃபரன்ஸ்’-ல் நண்பர்கள் அய்யம்பாளையத்தார், பங்கு வேட்டையர், ரஃபிக் ராஜா, கனவுகளின் காதலன், முத்து விசிறி, ஒலக காமிக்ஸ் ரசிகர் என இவர்களில் யாரேனும் ஒருவர் இருந்தாலுமே அது பேரணி! அப்போ அஞ்சு பேர் ஒரே இடத்துல கூடுனா அது மாநாடுதானே?
இது ஒரு சிறந்த மொக்கைப் பதிவாக மாறிக் கொண்டிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொண்டு இந்தத் தலைப்பிலிருந்து விலகி அடுத்த தலைப்புக்குச் செல்வோம்.
பொங்கல் மல(ர்)ரும் நினைவுகள்!
சமீபத்தில் நண்பர் ‘கனவுகளின் காதலன்’ இட்டிருந்த தமிழ் காமிக்ஸ் வலையுலகின் முதல் மங்கா பற்றிய பதிவில் இந்தப் பொங்கலுக்கேனும் பொங்கல் மலர் வருமா என வினவியிருந்தார். அதன் விளைவாகவே இந்தப் பதிவு.
பொங்கலுக்கும் தமிழ் காமிக்ஸிற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. இந்தத் தைத்திருத் திங்களில் தான் தமிழ் காமிக்ஸ் உலகம் மூன்று/நான்கு புதுவரவுகளைச் சந்தித்துள்ளது. 1972-ல் முத்து, 1986-ல் திகில், 1987-ல் மினி & ஜூனியர் லயன் எனப் பொங்கலன்று நமது வாழ்வில் மேலும் மகிழ்ச்சி பொங்க வைத்த வெளியீடுகள் அவை. இவற்றில் திகில், மினி & ஜூனியர் லயன் ஊத்திமூடப் பட்டுவிட்டாலும் முத்து மட்டும் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
இது மட்டுமல்லாது ‘முத்து’வில் முன்னொரு காலத்தில் புத்தாண்டு/பொங்கல் சிறப்பு மலர்கள் வெளிவரும். காலண்டர் போன்ற இலவச இனைப்புகளும் வழங்கப்பட்டது. பின்னர் முத்து மாதமிருமுறை வெளிவந்த போது புத்தாண்டு மற்றும் பொங்கல் மலர்கள் தனித்தனியாக ஆண்டு தோறும் வெளிவந்தன. லயனிலும் சில பொங்கல் மலர்கள் வெளிவந்தன. சில அட்டைப்படங்களை மட்டும் வெளியிட்டுள்ளேன். பார்த்துப் பரவசமடையுங்கள்!
இப்போதெல்லாம் காமிக்ஸ் வந்தாலே நமக்கெல்லாம் பொங்கலும், தீபாவளியும் ஒருசேர வந்ததைப்போல் இருக்கிறது. இந்நிலை மாற எல்லாம் வல்ல ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் மனசு வைத்தால் மட்டுமே முடியும். லயனுக்கு மட்டும் ஆண்டு மலர் வருடம் தவறாது (அது கூட சந்தேகம்தான்) வெளியிடும் அவர் முத்துவில் பல வருடங்களாக சிறப்பு வெளியீடுகள் எதையுமே வெளியிடவில்லை. பொங்கல் சிறப்பு வெளியீடு இடுவதால் ஆண்டு/பொங்கல் மலர் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கலாமே! நடக்குமா?!!
ராணியில் வெளிவந்த பொங்கல் மலர்கள் மொத்தம் ஐந்து. அவற்றில் திரு.ராமஜெயம் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றியப் பொற்காலமாகிய நான்காண்டு காலத்தில் வருடந்தோரும் பொங்கல் மலர்கள் வந்தன. வழக்கமாக ஜனவரி 16-31 என்று தேடியிடப்பட்ட இதழ்கள் ‘பொங்கல் மலர்’ என வெளிவரும். ஆனால் ராணி உச்சத்திலிருந்த போது பொங்கலுக்கு இரு நாட்கள் முன்பே நமது கைகளில் புத்தகங்கள் இருக்கும். அதுமட்டுமின்றி தமிழர் திருநாளான பொங்கல் மலரில் ‘இன்ஸ்பெக்டர் ஆசாத்’, ‘இன்ஸ்பெக்டர் கருடா’ போன்ற இந்திய கதாநாயகர்களே இடம்பிடித்திருப்பர். பொங்கலுக்கு அடுத்த இதழான ஃபிப்ரவரி 1-15 காமிக்ஸில் ஜேம்ஸ் பாண்ட் இடம்பிடித்திருப்பார். ஒரு வேளை ‘காதலர் தினம்’ சிறப்பிதழில் ‘காதல் மன்னன்’ 007 சாகஸம் புரிவதே சிறப்பு என திரு.ராமஜெயம் கருதியிருக்கலாம்.
அவருக்குப்பின் திரு.அ.ம.சாமியால் ஒரேயொரு பொங்கல் மலர்தான் வெளியிடப்பட்டது. அதுவும் திரு.ராமஜெயம் அவர்கள் முன்கூட்டியே வெளியிடத் திட்டமிட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த இதழ் (பூனைக்கண் மனிதன்) ஜனவரி 1-16-ம் தேதியில் வழக்கம் மாறி வெளிவந்தது. ஆறாவது ஆண்டிலிருந்து ஜனவரி இதழ்களில் பொங்கல் மலர் என்று குறிப்பிடப் பட்டிருக்காது.
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். ராணி காமிக்ஸ் பற்றிய சுவையான தகவல்கள் அளித்த நண்பர் ‘கிங் விஸ்வா’வுக்கு நன்றி.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு.:
- ராணி காமிக்ஸ் ரசிகர்கள் பலர் நமது வலைப்பூக்களைத் தொடர்ந்து படித்து வருவது தெரிந்த விஷயமே. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தொடர்ந்து ராணி காமிக்ஸ் பற்றிப் பதிவிடுமாறு என்னை தயவுசெய்து வற்புறுத்தாதீர்கள். தமிழ் காமிக்ஸில் வெளிவந்த பொங்கல் மலர்கள் பற்றிய பதிவை பூர்த்தி செய்வதற்காகவே ராணி பொங்கல் மலர்களைப் பற்றி எழுதியுள்ளேன். ராணி மீது எனக்கு அவ்வளவாக நாட்டமில்லை என்பதோடு, ராணி காமிக்ஸ்-க்கென்று நண்பர் ரஃபிக் ராஜா பிரத்யேகமாக வலைப்பூ ஒன்றை வேறு ஆரம்பித்திருக்கிறார் என்பதால் ராணியிலிருந்து நான் விலகியே நிற்கப் போகிறேன். ராணி பொங்கல் மலர்களைப் பற்றி நண்பர் ‘ரஃபிக்’ விரைவில் தனது வலைப்பூவில் பதிவிடுவார் என எதிர் பார்க்கிறேன். காமிக்கியல்-லிலும் அவர் தொடர்ந்து பின்னிக் கொண்டிருக்கிறார்.
- க.கொ.க.கூ. ‘டேஞ்சர் டயபாலிக்’ பற்றி சிறப்பு பதிவொன்று இட்டுள்ளார்.
- கனவுகளின் காதலன் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் முதன்முறையாக மங்கா பற்றிய பதிவிட்டுள்ளார். படித்து மகிழுங்கள்.
- கிங் விஸ்வா வழக்கம் போல செய்திதாள்களிலிருந்து பதிவுகளை சுட்டுப் போட்டு தான் ஒரு சிறந்த ‘பலாப்பழ சோம்பேறி’ என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தகவல்களை முந்தித் தருவது தமிழ் காமிக்ஸ் உலகம் தான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார். யோவ்! சீக்கிரமா ஏதாவது காமிக்ஸ் பதிவு போடுமய்யா!
- ப்ரூனோ ப்ரேசில் லயன் காமிக்ஸ் அடிக்கடி வராததாலும், லயன் ஆசிரியர் வாசகர் கடிதங்கள் படிக்கிறாரா/பிரசுரிக்கிறாரா என்று சந்தேகம் எழுவதாலும் தொடர்ந்து தனது கருத்துககளை தனது முதலைப் பட்டாளம் வலைப்பூவில் இட்டுக்கொண்டிருக்கிறார். ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் கவனிக்க!
- செந்தழல் ரவி புத்தகக் கண்காட்சி பற்றி பதிவிட்டுள்ளார். ரொம்ப நாளாகத் துயில்கொண்டிருந்த தமிழ் காமிக் வலைப்பூ மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது!
- முத்து விசிறி, அய்யம்பாளையத்தார், பங்கு வேட்டையர், ஒலக காமிக்ஸ் ரசிகர், சித்திரக்கதை இவர்களையெல்லம் கொஞ்ச நாளாய் ஆட்களையே காணோம். வேதாள நகரம் தூங்குவதால் கொஞ்சம் நிம்மதியாக உள்ளது!
தொடர்புடைய இடுகைகள்:
'முத்து'வின் முதல் இதழ் - 'இரும்புக்கை மாயாவி':
‘மினி லயன்’-ன் முதல் இதழ் - ‘சூப்பர் சர்க்கஸ்’:
‘வைரஸ்-X’ பற்றி ‘முத்து விசிறி’-யின் பதிவு:
‘நடுநிசிக் கள்வன்’ பற்றிய பதிவு:
‘டெக்ஸ் வில்லர்’ ப்ற்றி ‘முத்து விசிறி’யின் பதிவு:
‘சென்னை புத்தகக் கண்காட்சி – 2009’ பற்றிய இடுகைகள்: