“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!”
-கவுண்டமணி (படம் : சூரியன்)
வணக்கம்,
தேர்தல் ஜுரம் உச்சத்திலிருக்கிறது! வாக்கெடுப்பு முடிந்துவிட்டிருப்பினும் வழக்கம் போலக் கள்ள வோட்டு போடுவதிலும், சாவடிகளைச் சூறையாடுவதிலும் பிஸியாக இருந்ததனால் பதிவு தாமதமாக வருகிறது!
ஆனாலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் இப்பதிவு வருவது பொருத்தமானதாகவேயிருக்கும்!
த.கா.உ. தலைவர் தேர்தல் சிறப்புப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்! அய்யம்பாளையத்தார் தனது அரசியல் கருத்துக்களுடன் எப்போது வேண்டினும் திடீரெனக் களமிறங்கலாம்! இப்படியிருக்கையில் அ.கொ.தீ.க. மட்டும் அமைதியாக இருந்தால் எப்படி? அதனால்தான் சம்மர் ஸ்பெஷல்-ஐ இப்போதைக்கு ஓரம்கட்டிவிட்டு இந்த அதிரடிப்பதிவு!
அப்புறம் தேர்தல்ல நமக்கு கள்ள வோட்டு போடாதவங்க வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல்ல வரும்! முடிஞ்சா உயிரக் காப்பாத்திக்கங்க!
சென்ற பதிவான ருஷ்ய சிறுவர் இலக்கியம்-க்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி! அப்பதிவுடன் தொடர்புடைய சிறியதொரு அப்டேட் இப்பதிவின் முடிவில் உள்ளது! பார்க்கத் தவறாதீர்கள்!
மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்கு வருவோம்!
தேர்தல் சம்பந்தமுடைய காமிக்ஸ் பற்றி பேசும் போது மதியில்லா மந்திரி கதைகள் நினைவுக்கு வருவதுண்டு! லக்கி லூக் கதைகள் சிலவற்றில் அரசியல் பின்னனியும் இருப்பதுண்டு, ஆனால் அவை கதையின் ஒரு சிறு பகுதியாகவே இருக்கும்!
தமிழில் ஓவியர் செல்லம்-ன் கைவண்ணத்தில் காட்டிலே தேர்தல் என்றொரு கதை படித்த ஞாபகம்! ஆனால் கதை பற்றிய விபரங்கள் எதுவும் இப்போதைக்கு சிக்கவில்லை! அய்யம்பாளையத்தார் இடம் கேட்டால் இதேப் போல் நான்கைந்து(!!!) கதைகள் தன்னிடம் இருக்கலாம் எனக் கூறிக் கடுப்பேற்றினார்! ஆகையால் அவற்றைப் பற்றி அவர் விரைவில் பதிவிட வேண்டும் என விண்ணப்பமிட்டுவிட்டு அமைதியானேன்!
சரி வேறென்ன செய்யலாம் என யோசிக்கும் போது சட்டென்று நினைவுக்கு வந்தது ஒரேயொரு கதைதான்! அது சிக்பில் குழுவினரின் விற்பனைக்கு ஒரு ஷெரீப்!
இக்கதை ஜூனியர் & மினி லயன் சரித்திரத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது! மேலும் விபரங்களுக்கு இங்கே ‘க்ளிக்’கவும்!
ஓ.கே. இனி கதைக்கு வருவோம்!
அதற்கிடையே சிக்பில் (CHICK BILL) யாரெனத் தெரியாத அறிவிலிகளுக்காக இதோ ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் அளித்திருக்கும் அறிமுகம்!
அமைதியாய் இருக்கும் உட்ஸிடி நகரில் தேர்தல் நேரம்! ஆண்டுக்கொரு முறை நிகழ்த்தப் படும் ஷெரீப்புக்கான தேர்தலில் எப்போதும் போல தன்னை எதிர்ப்போர் யாருமில்லாததால் அனைத்து தரப்பினரின் ஆதரவோடு அமோக வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்தில் என்ஜாயாக இருக்கிறார் ஷெரீப் டாக்புல் (BULL DOG-ஐ திருப்பி போட்டால் வருமே, அந்த DOG BULL)!
ஆனால் நகருக்கு வரும் புதிய நீதிபதியான ஜட்ஜ் ராட்டன்மைண்ட் (ROTTENMIND) டெபுடி ஷெரீப் கிட் ஆர்டின்-ன் (KID ORDINN) பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைக்கிறார்!
பால் தவிர வேறெதுவும் பருகாத பச்சிளம் பாலகன் போன்ற கிட்டிற்கு பீரை வார்க்கிறார் ஜட்ஜ்! அவன் மனதில் ஷெரீப் பதவிக்கு போட்டியிடும் ஆசையை விதைக்கிறார்! நண்பர்களிடையே வேற்றுமையை வளர்க்கிறார்!
தேர்தலில் கிட் ஆர்டின் வெற்றிபெற்று ஷெரீப்பும் ஆகிவிடுகிறான்! அவனிடம் கற்றை கற்றையாக அலுவல் காகிதங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்ளும் ஜட்ஜ் பல புதிய சட்டங்கள் மூலம் உட்ஸிடியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்!
தனது அடியாட்களான பிங்கோ (BINGO), மற்றும் டொமேடோ (TOMATO) எனும் தடியர்களுடன் உட்ஸிடியில் அராஜகம் புரியும் ஜட்ஜின் திட்டத்தை ஒட்டுக் கேட்டுவிடும் சிக்பில்லை பிடித்துவைத்து விடுகிறார்கள் கயவர்கள்!
சிக்பில் தப்பினானா? டாக்புல்லின் கதி என்ன? அப்பாவி கிட்டின் நிலை என்ன? உட்ஸிடி இந்த சிக்கலிலிருந்து எப்படி மீண்டது? கேள்விகளுக்கு விடையளிக்கிறது கதை!
சிக்பில் கதைகளில் காமெடியில்லாமல் எப்படி? அதுவும் இப்படியொரு அருமையான கதைக்கருவைக் கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் கதாசிரியர்! இதோ நீங்கள் படித்து மகிழ சிலபல சிரிப்பு வெடிகள்!
முதலில் கிட் ஆர்டின் மக்களின் வாக்குகளைப் பெற ஆற்றும் உரை (?!!) மக்களின் அமோக ஆதரவை பிங்கோவும் டொமேடோவும் உறுதி செய்கிறார்கள்! எப்படியென்றுதான் பாருங்களேன்!
அதையடுத்து நடைபெற்ற டாக்புல்லின் சொற்பொழிவு எப்படி அரங்கேறியது என நீங்களே காணுங்கள்!
தேர்தலன்று நடைபெறும் அட்டூழியங்களை நமது அரசியல்வாதிகள் படித்து தெரிந்து கொண்டால் என்னாவது? அப்புறம் நம் ஜனநாயக நாட்டின் கதி என்ன?
தேர்தல் முடிவடைந்து விட்டது! கிட் ஆர்டின் அமோக வெற்றி! அதையடுத்து நிகழும் ஒரு காட்சி! இதற்குப் பெயர் தான் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது!
ஆனால் நமது டாக்புல் கடமை வீரர் அல்லவா?!! அட்டையில் நமது நாயகர்களின் சீருடை மாறியிருப்பதை கழுகுக் கண் கொண்டு நீங்கள் இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள்! அதற்கான காரணம் இதோ!
க்ளைமாக்ஸில் வழக்கமாக சண்டைக் காட்சிதான் வரும்! ஆனால் கதையின் மிகப்பெரிய காமெடியே இங்குதான் அரங்கேறுகிறது! சிரித்து மகிழுங்கள்!
காமிக்ஸ் உலகின் கவுண்டமணி & செந்தில் ஜோடி எனக் கூறிவிட்டு கிட் ஆர்டின் டாக்புல்லிடம் உதை வாங்காதிருந்தால் எப்படி? இதோ CLOSING PUNCH! கூடவே வெளியீட்டு விபரங்கள்!
கதையில் இன்னும் இது போல பல காமெடி காட்சிகள் உள்ளன! அவற்றையெல்லாம் வெளியிட்டால் முழு புத்தகத்தையும் வெளியிட வேண்டியிருக்கும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் விரைவில் இதை மறுபதிப்பு செய்வார் என வேண்டிக்கொள்வதுதான் நம்மால் இயன்றது!
சிக்பில் கதைகள் முழு வண்ணத்தில் வெளிவந்த கால கட்டங்கள் அவை! இதற்குப் பிறகு இன்றுவரை சிக்பில் முழு வண்ணத்தில் வெளிவரவில்லை! அதுவுமின்றி ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறன் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் வந்த கதையாகும்!
மினி லயனில் ஆரம்பத்தில் வந்தக் கதைகளில் கதையின் ஹீரோ சிக்பில் என்றே முன்னிறுத்தப்பட்டிருக்கும்! பின்னாட்களில் டாக்புல்லும் கிட் ஆர்டினும் அடிக்கும் கூத்துக்களைக் கண்டு அவர்களை காமிக்ஸ் உலகின் கவுண்டமணி & செந்தில் ஜோடி என விளம்பரம் செய்து வெற்றி கண்டார் ஆசிரியர்!
எனினும் கதையின் கருவிலுள்ள காமெடி கதை முழுவதும் விரவியிருப்பதால் மொழிபெயர்ப்பாளருக்கு பெரிதாக வேலையெதுவும் வைக்கவில்லை! இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சிக்பில் கதைகள் ஆங்கிலத்தில் எதுவும் வந்ததில்லை!
“இந்தியாவிலேயே… ஏன் நம்ம வோர்ல்டுலேயே…” (கவுண்டமணி – படம் : கரகாட்டக்காரன்) ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து தமிழில் மட்டும்தான் சிக்பில் கதைகள் வெளிவந்துள்ளன!
இது ஒரு பெருமைக்குறிய விஷயமாகும்! இந்த அற்புதக் கதைகளை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
கதை விவரங்கள்:
சிக்பில்லை உருவாக்கியவர் டிபெட் (TIBET), ஓவியரும் இவரே! இவர்தான் நமக்கு பரிச்சயமான ரிப்போர்ட்டர் ஜானி, துப்பறியும் மூவர், டிடெக்டிவ் ட்ரேக் போன்ற பல கதைத்தொடர்களை உருவாக்கியவர்!
மொத்தம் இதுவரை 69 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன! அவற்றில் பல இன்னும் தமிழில் வராதவை! இந்தத் தொடர் பற்றி நண்பர் கிங் விஸ்வா விரைவில் முழுமையான ஒரு ஆய்வுப் பதிவு இடப்போவதால் நான் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்!
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
- சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த நிக்கலாய் நோசவ்-வின் விளையாட்டுப் பிள்ளைகள் சிறுகதைத் தொகுப்பு NCBH நிறுவனத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது! விலை - ரூ:125/- மட்டுமே! மோசமாக ஸ்கேன் செய்யப்பட்ட அட்டைப்படம், சுமாரான அச்சுக் காகிதம், HARD BINDING இல்லாதது போன்ற சில குறைகள் இருப்பினும் நம் சிறுவயதை நினைவு படுத்தும் ஒரு பொக்கிஷம் இதுவென்பதால் ஏற்கெனவே படித்தோரும், புதிதாகப் படிக்கவிருப்போரும் தவறாது வாங்கிட வேண்டிய புத்தகமிது!
தொடர்புடைய இடுகைகள்:-