“அதென்ன தலமேல கீறிப்புள்ள படுத்துருக்கு?!!” |
-கவுண்டமணி (படம்: ஜெய் ஹிந்த்) |
வணக்கம்,
IPL முடியப்போகும் தருவாயில் சீஸனின் ஆரம்பத்திலேயே இட்டிருக்க வேண்டிய இந்த இடுகையை தாமதமாக இடுவதற்கு முதலில் மன்னிக்க வேண்டுகிறேன்!
மங்கூஸ் மட்டை என்று அகில கிரிக்கெட் உலகமே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் போது கூர்ந்து நோக்கினால் அம்மட்டை கண்ட வெற்றிகளை விட (ஒரேயொரு போட்டியில் தான் அம்மட்டையின் சிறப்பு வெளிப்பட்டது) தோல்விகளே பல மடங்கு எண்ணிக்கையில் அதிகம்!
அப்பேற்பட்ட மொக்கை மட்டையை ஏன்தான் எல்லோரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனரோ?
ஆனால் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான இன்னொரு மங்கூஸ் அப்படியில்லை! எப்பொழுதும் தூள் கிளப்புவார்! அவர் வேறு யாருமல்ல! இரத்தப்படலம் கதைத்தொடரின் எதிர்நாயகன் மங்கூஸ் தான் அவர்! அவரது அதிரடிகளின் அணிவகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு! பதிவு முழுவதும் பல ‘காமிக்ஸ் குத்து!’க்கள் இடம்பெற்றுள்ளன! படித்து மகிழுங்கள்!
இரத்தப்படலம் I:
மங்கூஸ் நமக்கெல்லாம் அறிமுகமானது இரத்தப்படலம் பாகம்-Iல் தான்! மூன்றே மூன்று பக்கங்களில் தான் தன் மொட்டைத் தலையைக் காட்டுகிறார்! மூன்று நான்கு வசனங்கள் தான் பேசுகிறார்! இருந்தாலும் நம்மால் மறக்க முடியாத கதாபாத்திரமாக அமைந்துவிடுகிறார்!
ஆனால் இதில் ஒரு சிறு குழப்பம் உள்ளது! XIIIக்கு ஒன்றுமே நினைவில்லை என்றும் கூறும் போது மங்கூஸை மட்டும் எப்படி சரியாக அடையாளம் கண்டு கொண்டார் என்பது தான்? XIIIன் புரியாத பல புதிர்களில் இதுவும் ஒன்று!
வழக்கமாக இரத்தப் படலம் கதைகளில் மங்கூஸ் ENTRY கொடுக்கும் போது கதையின் போக்கே திசைமாறும்! அதுவும் நாம் சற்றும் எதிர்பாராத தருணத்தில் வந்து நம்மையும் XIII-யையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துவார்! இந்த முதல் கதை அந்த ட்ரெண்டை நன்றாகவே பதிக்கிறது!
இரத்தப்படலம் III:
இரண்டேயிரண்டு பக்கங்களுக்கே வந்தாலும் சற்றும் எதிர்பாராத தருணத்தில் வருகிறார்! கதையின் போக்கிலும் வழக்கம் போல ஒரு திருப்பத்தை உண்டாக்குகிறார்!
நான் முதன் முதலில் படித்த இரத்தப்படலம் கதை இந்த மூன்றாம் பாகம்தான்! கதைக்கு உண்டாக்கப்பட்ட HYPEம் கதையின் அற்புதமும் சேர்ந்து என்னை உடனடியாக விசிறியாக மாற்றிவிட்டன! அதில் என்னை மிகவும் கவர்ந்தது மங்கூஸ் பாத்திரப் படைப்புதான் என்பதை சொல்லவும் வேண்டுமா?
இரத்தப்படலம் VI:
இரண்டு பாகங்களுக்கு ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் வரும் மங்கூஸ் இந்த முறை உண்மையிலேயே தூள் கிளப்பியிருக்கிறார்! XIIIஐ கொல்ல தன் அல்லக்கையுடன் வரும் மங்கூஸ் அவனுக்கு XIIIஐக் கொல்வதில் உள்ள சிரமங்களை அற்புதமாக விளக்குகிறார்!
XIII என்றாலே ராசியில்லாத எண்ணாகக் கருதப் படுகையில் மங்கூஸிடமிருந்து இத்தனை முறை தப்பியிருக்கும் XIII உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷடசாலிதான்! இல்லையா?
ஆனால் கதையின் ஹை-லைட் க்ளைமாக்ஸில் தான் வருகிறது! XIIIஐ கொல்லும் முயற்சியில் தோல்வியடையும் மங்கூஸ் XIIIஐ கொல்லத்துடிக்கும் லோக்கல் வில்லன்களை அணுகி தன்னை ஒரு FBI ஏஜெண்டாக அமர்க்களமாக அறிமுகம் செய்து கொள்கிறார்! அவர் அந்த சமயத்தில் கூறும் விஷயங்கள் வாசகர்களான நமக்கு முற்றிலும் நம்பத் தகுந்த வகையில் கூறப்பட்டிருக்கும்!
அதிலும் குறிப்பாக தன் பெயர் காரணத்தை அவர் விளக்கும் கட்டம் அப்பப்பா! சொல்லி மாளாது! நீங்களே கண்டு மகிழுங்கள்!
ஒரு வேளை மங்கூஸ் உண்மையிலேயே FBI உளவாளியோ? XIII உண்மையிலேயே பயங்கர குற்றவாளியோ? என்றெல்லாம் எண்ணத் தூண்டவைக்கும் கதையம்சம்! ஏழாவது பாகம் எப்போது வரும் என காத்திருக்க வைத்த தருணங்கள்! அதுவும் பெரிய சைஸில் முதன் முறையாக XIIIன் அற்புத சித்திரங்களை கண்குளிர காணும் அரிய வாய்ப்பு என்று எல்லாம் சேர்ந்து எனது ஃபேவரைட் மங்கூஸ் தருணமாக இதை மாற்றி விட்டன!
இரத்தப்படலம் தொடரில் என்னை மிகவும் கவர்ந்த பாகமும் இதுவேயாகும்! அதற்கு இந்த மங்கூஸ் தருணம் மட்டுமே காரணமல்ல! இக்கதையில் வரும் இன்னொரு தருணமும் என்னை மிகவும் பாதித்தது! அது குறித்து விரைவில் பதிவிடுகிறேன் என கிங் விஸ்வா போன வருடமே கூறியுள்ளார்!
இரத்தப்படலம் VII:
ஆறாவது பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட ஏமாற்றமளிக்காமல் நிறைவு செய்தது இரத்தப்படலம் ஏழாம் பாகம்! வழக்கம் போல இதிலும் சில பல அதிரடி எண்ட்ரீக்களைக் கொடுக்கிறார் மங்கூஸ்!
க்ளைமாக்ஸில் முதன்முறையாக XIIIம் மங்கூஸும் நேருக்கு நேர் மோதும் அற்புதமான காட்சி! நீங்களே கண்டு மகிழுங்கள்!
இறுதியில் மங்கூஸ் கைது செய்யப் பட்டாலும் அவர் மீண்டும் வருவார் என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும்!
இரத்தப்படலம் VIII:
கதையின் ஆரம்பமே மங்கூஸின் அதிரடி மூலம்தான்! ஜெயிலிலிருந்து தப்பிக்கும் அவரது சாகஸம் மயிகூச்செறிய வைக்கும்! அதுவும் அவர் தப்பிக்க உதவும் ஜெயில் வார்டனுக்கு அவர் கொடுக்கும் வெகுமதியும், செல்லில் அவர் எழுதி வைத்து விட்டு போகும் வாசகமும் ட்ரேட்மார்க் மங்கூஸ் வில்லத்தனம்!
பின்னர் க்ளைமாக்ஸில் தோன்றும் மங்கூஸ் வழக்கமான நையாண்டியுடன் XIII-ஐ எதிர்கொள்கிறார்!
XIII-ஐ கொல்லும் முன் அவர் நினைவாற்றலை இழக்கக் காரணமான சம்பவங்களை அவருக்கு நினைவூட்ட விழைகிறார் மங்கூஸ்! மிக அற்புதமான தருணம் இது! முழு பக்கத்தையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்! படித்து மகிழுங்கள்!
மங்கூஸ் XIII-க்கு பிரியாவிடை கொடுக்கும் போது உதிர்க்கும் ‘காமிக்ஸ் குத்து!’ கனவுகளின் காதலர்-ன் கருத்தைக் கவரும்!
எட்டாவது பாகத்தில் கதை ஒரு வித க்ளைமேக்ஸை எட்டினாலும் XIIIன் வெற்றி பதிப்பகத்தாரை தொடரை மேலும் ஜவ்வாக நீட்டிக்க தூண்டியது! என்னைப் பொறுத்த வரை எட்டாம் பாகத்திலேயே கதையை முடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!
இக்கதை இன்னும் தமிழில் வெளிவராததால் விரிவாக எதையும் நான் கூற விரும்பவில்லை! ஆனால் மங்கூஸின் சகாப்தம் இத்துடன் நிறைவடைகிறது! ஆனால் போகும் போது அவர் ஒன்றும் சும்மா போகவில்லை! தனது தகுதிக்கேற்ப வீர மரணமே அடைந்துள்ளார்! மேலும் நான் எதுவும் கூறப் போவதில்லை! XIII ஸ்பெஷல் வந்ததும் நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்!
ஆனால் ஒரு விஷயம்! எட்டாம் பாகத்திலேயே முடிந்திருக்க வேண்டிய கதையை அட்லீஸ்ட் இந்த பாகத்திலாவது முடித்திருக்கலாம்! ஆனால் கதையை மேலும் ஜவ்வாக நீட்டி கடைசியில் பத்தொன்பதாம் பாகத்தில் அவசர அவசரமாக முடித்திருப்பார்கள்! கதாசிரியர் வான் ஹாம்மே இதுக்கு மேல நம்மால முடியாதுடா சாமி என்றிடாவிட்டால் இன்னும் கூட கதை நீண்டிருக்கும்! மங்கூஸ் உட்பட பல்வேறு அபிமான கதாபாத்திரங்கள் இறந்துவிடுவதால் பிந்தைய பாகங்களில் கதையின் மேல் ஒரு பற்று இல்லாமல் போய் விடுகிறது!
இக்கதை குறித்த கனவுகளின் காதலர்-ன் இடுகையைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
தொடர் முடிந்த பின்பும் பதிப்பகத்தாருக்கு XIII எனும் பொன் முட்டையிடும் வாத்தை விட மனமில்லை! கதாசிரியர் வான் ஹாம்மேவும் ஓவியர் வில்லியம் வான்ஸ்-ம் தொடரை விட்டு விலகி விட்டாலும் கூட வேறு ஆசிரியர், ஓவியர்களை வைத்து மங்கூஸின் பழைய கதையை வெளியிட்டனர்! இப்போது இரினாவின் கதையும் வந்துள்ளது!
இக்கதை குறித்த கனவுகளின் காதலர்-ன் இடுகையைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
இரினாவின் கதை குறித்தும் விரைவில் கனவுகளின் காதலர் பதிவிடுவார் என ஆவலுடன் காத்திருக்கிறேன்!
இப்படிப்பட்டதொரு அருமையான கதாபாத்திரத்தை படைத்த வான் ஹாம்மேக்கும், அதற்கு அற்புதமான சித்திரங்கள் மூலம் உயிரூட்டிய வில்லியம் வான்ஸ்-க்கும், ஒரிஜினலின் சுவை கொஞ்சம் கூட குன்றாமல் மேலும் மெருகூட்டி நமக்கு அளித்து வரும் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
பி.கு.:
பதிவ முடிக்கறதுக்கு முன்னாடி மங்கூஸ் மட்டை பத்தி இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்!
“உன்ன மாதிரி எத்தன கீறிக்குட்டிகள நான் பாத்துருக்குறேன்?!!” |
-கவுண்டமணி (படம்: ஜெய் ஹிந்த்) |
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:-
மங்கூஸ் மட்டை:
- http://www.cricinfo.com/ipl2010/content/story/452624.html
- http://kanavukale.blogspot.com/2010/03/blog-post_23.html
மங்கூஸ் சித்திர நாவல்:
- http://kanuvukalinkathalan.blogspot.com/2009/02/blog-post_12.html
- http://kanuvukalinkathalan.blogspot.com/2009/01/blog-post_30.html
XIII:
- http://tamilcomicsulagam.blogspot.com/search/label/XIII
- http://kanuvukalinkathalan.blogspot.com/search/label/XIII
- http://mudhalaipattalam.blogspot.com/2008/12/2.html
- http://www.karundhel.com/2010/04/xiii-1.html
- http://muthufanblog.blogspot.com/2006/03/lion-super-special-hi-all-thanks-for.html
XIII ஜம்போ ஸ்பெஷல் இன்று வரை வராதது குறித்த புலம்பல்/அலம்பல் பதிவுகள்:
- http://kanuvukalinkathalan.blogspot.com/2010/03/blog-post_14.html
- http://mrjcomics.blogspot.com/2009/07/xiii-collectors-edition-is-still-dream.html
- http://akotheeka.blogspot.com/search/label/XIII
CINEBOOK வெளியிடவிருக்கும் XIII ஆங்கிலத் தொடர் குறித்த செய்திப் பகிர்வுகள்:
- http://kakokaku.blogspot.com/2009/08/xiii-2010.html
- http://skipcomics.blogspot.com/2010/03/cinebooks-treasure-hunt-in-2010.html
XIII காமிக்ஸ் ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய:
XIII COLLECTOR’S EDITION WIDGET-ஐ உங்கள் வலைத்தளத்தில் இணைக்க: