Showing posts with label லாரன்ஸ்-டேவிட். Show all posts
Showing posts with label லாரன்ஸ்-டேவிட். Show all posts

Friday, November 14, 2008

அ.கொ.தீ.க. என்றால் என்ன?

வலைப்பூவை வந்து பார்த்து வாழ்த்தியோருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்! "வெகுமதி!" கேள்விக்கு முந்திக்கொண்டு பதிலளித்த ‘அம்மா ஆசை விசிறி’-க்கு வாழ்த்துக்கள். 'முத்து விசிறி'-க்கு இந்த முறை இரண்டாம் இடம்தான். பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.

சென்ற முறை நான் கூறிய கருத்துக்கள் சிலவற்றிற்கு மக்கள் பயங்கரமாக எதிர்வினை அளித்துள்ளார்கள். காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று நான் கூறியதை நண்பர்கள் நேரிலும், பின்னூட்டம் மூலமாகவும் ஆட்சேபித்துள்ளார்கள். அவர்களுக்கு நான் தெளிவாக பதிலளித்துள்ளேன். சென்ற பதிவிற்கான பின்னூட்டங்களில் இறுதியாக அதைக் காணலாம். மீண்டும் இங்கே கூற மனம் வரவில்லை. ஆகையால் இங்கே 'க்ளிக்'க்கி படித்துக் கொள்ளவும்.

'புலி வருது' கதையாக ரொம்ப நாளாக விளம்பரம் மட்டுமே செய்து வந்த பதிவை நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். என்ஜாய்!

தமிழில் வந்த முதல் லாரன்ஸ் & டேவிட் கதை "ஃப்ளைட் 731"-ல் தான் அ.கொ.தீ.க. முதலில் அறிமுகம் ஆனார்கள். அதன் பிறகு அ.கொ.தீ.க.வினர் ஒவ்வொரு கதையிலும் ஒரு புதிய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்வர். அவற்றை லாரன்ஸ் & டேவிட் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என கதைகள் அமையும்.

அ.கொ.தீ.க.வின் உண்மையான பெயர் 'W.A.M.' (War Against Mankind) என்பதேயாகும். இவர்கள் ‘கோட் நேம் : பாரகுடா' என்ற கதைத்தொடரில் வில்லன்கள். சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் நமக்கு பரிச்சயமான சி.ஐ.டி.லாரன்ஸ் தான் 'பாரகுடா'. ஜூடோ டேவிட்டின் பெயர் 'ஃப்ரோலோ'. இவர்கள் இருவரும் அ.கொ.தீ.க.வை ஒழிக்க ஐ.நா. சபையினால் விசேடமாக நியமிக்கப்பட்ட உளவாளிகள்.

இந்தக் கதைத்தொடரை இங்கிலாந்தின் 'ஃப்ளீட்வே' நிறுவனத்தைச் சேர்ந்த 'லயன்' (நமது லயன் அல்ல) பத்திரிகை 10.09.66 முதல் 24.02.68 வரை மொத்தம் 77 வாரங்கள் தொடர்ந்து வெளியிட்டது. வாரம் இரண்டு பக்கம் என மொத்தம் ஏழு கதைகள் தொடராக வந்தன. இவற்றில் மூன்று கதைகள் நமது 'லயன்' காமிக்ஸில் வந்துள்ளது.

இது தவிர 'ஆண்டு மலர்'-களில் நான்கு சிறுகதைகள். அவற்றில் இரண்டு, மூன்று கதைகள் லயனில் வந்ததாக ஞாபகம். அங்கும் நம்மைப் போலவே 'கோடை மலர்', 'ஆண்டு மலர்' எல்லாம் உண்டு. சொல்லப் போனால் அந்த பத்திரிக்கைகளின் பாதிப்பு நமது காமிக்ஸில் நிறையவே உண்டு. வரும் பதிவுகளில் அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயமான 'முத்து' காமிக்ஸில் வந்த கதைகள் அனைத்தும் 'ஃப்ளீட்வே' வெளியிட்ட டைஜஸ்ட் வடிவிலான காமிக்ஸ்களில் "சீக்ரெட் ஏஜென்ட்" எனும் தொடரில் ஜனவரி 1967 முதல் ஜனவரி 1968 வரை மொத்தம் 13 கதைகள் மாதாமாதம் தொடர்ந்து வெளிவந்தன.

'முத்து'வின் தீவிர(வாத) ரசிகர்கள் அ.கொ.தீ.க. 'இரும்புக்கை மாயாவி'யின் கதைகளிலும் வருவதை நினைவு கொள்ளலாம். இதில் ஒரு உள்குத்து உள்ளது.

முத்துவின் முதல் இதழான 'இரும்புக்கை மாயாவி'யில் மாயாவி 'க.கொ.க.கூ.' (கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு) என்னும் இயக்கத்துக்கு எதிராக போராடுவார். பின்னர் 'மர்மத்தீவில் மாயாவி' கதையிலும் இக்கூட்டத்தைச் சேர்ந்த 'ஸ்கார்ல்' எனும் வில்லனோடு மோதுவார்.

க.கொ.க.கூ.வின் ஒரிஜினல் பெயர் 'F.E.A.R.' (Federation of Extortion, Assassination and Rebellion) என்பதாகும். இந்தக் கூட்டமைப்புதான் பின்னாளில் வந்த கதைகளில் அ.கொ.தீ.க. என்றே அழைக்கப்பட்டது. ஏன் என்பது முத்து காமிக்ஸ் ஆசிரியருக்கே வெளிச்சம்!

க.கொ.க.கூ. என்று போட்டிக்கு யாரேனும் வலைப்பூ ஆரம்பிக்குமுன் நானே அதை பதிவு செய்து விடவேண்டும்!

இதுவரை வந்த அ.கொ.தீ.க. மற்றும் க.கொ.க.கூ. கதைகள்:

அ.கொ.தீ.க. (லாரன்ஸ் & டேவிட்) கதைகள்
முத்து காமிக்ஸ் # தேதி(1) FLEETWAY LIBRARY #(2) தேதி
ஃப்ளைட் 731 5 Aug-72 Payment in Death SA-10 May-67
காற்றில் கரைந்த கப்பல்கள் 7 Oct-72 The Underground Jungle SA-14 Jul-67
மஞ்சள் பூ மர்மம் 11 Feb-73 The Evil Ones SA-06 Mar-67
விண்ணில் மறைந்த விமானங்கள் 14 May-73 The Death Merchants SA-08 Apr-67
ஃபார்முலா X-13 17 Aug-73 Fatal Formula SA-11 Jun-67
வான்வெளிக் கொள்ளையர் 21 Dec-73 Call For Barracuda SA-04 Feb-67
தலை கேட்ட தங்கப்புதையல் 26 May-74 The Devil’s Ransom SA-16 Aug-67
சிறைப்பறவைகள் 27 Jun-74 Crime Buster SA-18 Sep-67
சி.ஐ.டி. லாரன்ஸ் 29 Aug-74 Code Name - Barracuda SA-02 Jan-67
பனிக்கடலில் ஒரு பயங்கர எரிமலை 34 Jan-75 The Destroyers SA-24 Dec-67
திகிலூட்டும் நிமிடங்கள் 126 Jul-81 Operation Flashpoint SA-20 Oct-67
ஃபார்முலா திருடர்கள் 133 Mar-82 Treacherous Trail SA-26 Jan-68
திசை மாறிய கப்பல்கள் 137 Nov-82 The Phantom Captain SA-22 Nov-67
LION Magazine(3) தேதி
பரலோகப் பயணம் 190 Jul-91 ??? ???
பறந்து வந்த பயங்கரவாதிகள் 197 Oct-91 ??? ???
மறுபதிப்புகள் #(4) தேதி
ஃப்ளைட் 731 139 Jun-85
காற்றில் கரைந்த கப்பல்கள் 143 Oct-85
வான்வெளிக் கொள்ளையர் 146 Jan-86
மஞ்சள் பூ மர்மம் 148 Apr-86
விண்ணில் மறைந்த விமானங்கள் 152 Oct-86
ஃபார்முலா X-13 155 Jan-87
தலை கேட்ட தங்கப்புதையல் 160 Jul-87
சிறைப்பறவைகள் 165 Jan-88
திசை மாறிய கப்பல்கள் ??? 1991
ஃபார்முலா திருடர்கள் ??? 1991
திகிலூட்டும் நிமிடங்கள் 210 Oct-92
சி.ஐ.டி. லாரன்ஸ் 234 May-95
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # தேதி
சிறைப்பறவைகள் 2 Aug-99
ஃப்ளைட் 731 6 Sep-00
மஞ்சள் பூ மர்மம் 8 Mar-01
ஃபார்முலா X-13
திசை மாறிய கப்பல்கள்
11 Jul-02
தலை கேட்ட தங்கப்புதையல் 14 Feb-04
விண்ணில் மறைந்த விமானங்கள் 15 Jun-04
திகிலூட்டும் நிமிடங்கள் 19 Aug-05
ஃபார்முலா திருடர்கள் 21 Aug-06
காற்றில் கரைந்த கப்பல்கள் 23 Sep-08
லயன் காமிக்ஸ் # தேதி LION Magazine தேதி
காணாமல் போன கடல் 14 Jun-85 King Cobra 18.3.67-26.8.67
காணாமல் போன விஞ்ஞானி(5) 25 May-86 The Albino 2.9.67-7.10.67
ஆழ்கடல் யுத்தம்(6) 31 Nov-86 Lion Annual ???(3)
எலிகள் ஜாக்கிரதை(7) 36 Apr-87 Lion Annual 1969
காணாமல் போன கோடீஸ்வரர் 37 May-87 The Richest Man in the World 10.9.66-8.10.66
நடுக்கடல் கொள்ளை(8) 42 Oct-87 Lion Annual ???(3)
க.கொ.க.கூ.('இரும்புக்கை மாயாவி) கதைகள்
முத்து காமிக்ஸ் # தேதி FLEETWAY LIBRARY #(2) தேதி
இரும்புக்கை மாயாவி 1 Jan-72 The Raiders of FEAR FS-01 Jan-67
இமயத்தில் மாயாவி 8 Nov-72 Forbidden Territory SS-09 May-67
மர்மத்தீவில் மாயாவி 13 Apr-73 The Formula of FEAR SS-15 Aug-67
VALIANT Magazine தேதி
மந்திர வித்தை 119 Nov-80 The Magician 9.4.66-17.9.66
களிமண் மனிதர்கள் 138 Jul-84 Warlock 4.3.67-29.7.67
இயந்திரப் படை 157 Mar-87 The Builder 2.3.68-22.11.69
மர்மப் பனி(9) 176 May-89 Mr.No-Face 17.1.70-31.1.70
மறுபதிப்புகள் # தேதி
இரும்புக்கை மாயாவி 148 Oct-87
மர்மத்தீவில் மாயாவி 163 Jun-86
இமயத்தில் மாயாவி 193 May-91
மந்திர வித்தை 228 Oct-94
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # தேதி
இரும்புக்கை மாயாவி 5 Aug-00
இமயத்தில் மாயாவி 19 Jan-01
மர்மத்தீவில் மாயாவி 19 Aug-05

(1)-இங்கு குறிப்பிட்டுள்ள தேதிகள் அனைத்தும் 'குத்துமதிப்பாக' இடப்பட்டவை. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டத் தவறவேண்டாம். மேற்கொண்டு தகவல்கள் இருப்பினும் தெரியப்படுத்தவும்.
(2)-SA-சீக்ரெட் ஏஜென்ட் சீரீஸ்,FS-ஃபென்டாஸ்டிக் சீரீஸ்,SS-ஸ்டுபெண்டஸ் சீரீஸ்
(3)-ஆங்கில 'லயன்' பத்திரிகையில் வந்த இந்த கதைகளைப் பற்றி மேற்கொண்டு தகவல்கள் கிடைத்ததும் தெரிவிக்கிறேன். உங்களிடம் ஏதேனும் தகவல்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்.
(4)-முத்துவின் 'இருண்ட' காலத்தில் வெளிவந்த புத்தகங்கள் பலவற்றில் வெளியிட்டு எண்ணோ, தேதியோ கண்டுபிடிக்க இயலாது. இது பற்றி மேலும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் தெரிவியுங்களேன்?
(5)-லயன் கோடை மலர் '86-ல் சிறுகதையாக வந்தது.
(6)-லயன் தீபாவளி மலர் '86-ல் சிறுகதையாக வந்தது.
(7)-இந்தக் கதையைப் படித்துள்ளேன். ஆனால் எப்போது வந்தது என ஞாபகம் இல்லை. புத்தகமும் கைவசம் இல்லை. லயன் கோடை மலர் '87-ல் சிறுகதையாக விளம்பரப் படுத்தப்பட்டது. ஆனால் வரவில்லை. தவறாகவும் இருக்கலாம். இருந்தால் சுட்டிக் காட்டவும்.
(8)-லயன் சூப்பர் ஸ்பெஷல்-ல் சிறுகதையாக வந்தது.
(9)- முத்து சம்மர் ஸ்பெஷல் '89-ல் சிறுகதையாக வந்தது.
 

இவை தவிர அ.கொ.தீ.க.(லாரன்ஸ் & டேவிட்)வின் 'லயன்'-ல் தொடராக வந்த 4 கதைகளும் ஒரிரு சிறுகதைகளும் இன்னும் தமிழில் வெளிவரவில்லை. அது போக இன்னும் வெளிவராத இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் கதைகள் சிலபல உள்ளன. ஆர்ச்சி கதைகள் பலபல உள்ளன. அவற்றை பற்றி எழுத தனியாக ஒரு பதிவுதான் (நீங்கள் விரும்பினால்) போட வேண்டும். விஜயன் சார் மனசு வைத்தால் நாம் இவற்றை தமிழில் ரசிக்கலாம்.

இந்த முறை ஏன் படங்கள் எதுவும் வெளியிடவில்லை என நீங்கள் கேட்கலாம்? லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ, இரும்புக்கை மாயாவி ஆகியோரின் கதைகள் அனைத்தையும் விமர்சனம் செய்யலாம் என்றிருக்கிறேன். இப்போதே அனைத்து அட்டைப்படங்களையும் வெளியிட்டு விட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதனால்தான்! உங்களுக்கு ரொம்ப போரடிக்காமல் இருக்க வேறு சில பதிவுகளும் வரும்.

வழக்கம் போல ஆங்கிலப் பதிப்புகளைப் பற்றிய அத்துனை தகவல்களையும் அளித்துதவிய நண்பர் 'முத்து விசிறி'க்கு மனமார்ந்த நன்றிகள். இந்த பதிவு சம்பந்தமாக அவர் இட்டுள்ள இடுகைகளையும் பாருங்கள்.

இந்தப் பதிவில் நிறைய தவறுகள் இருக்கலாம் (தேதிகள், வரிசை எண்கள்). இருப்பின் சுட்டிக்காட்டத் தயங்க வேண்டாம். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இதுவரை நான் அளித்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்?

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்.

தொடர்புடைய இடுகைகள்:

'முத்து'வின் முதல் இதழ் - 'இரும்புக்கை மாயாவி':

'இரும்புக்கை மாயாவி':

'முத்து' இதழ்களின் முழு விவரம்:

ஃப்ளீட்வே/முத்து - ஒரு பார்வை:


'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' பற்றிய இடுகைகள்:

Wednesday, November 5, 2008

ஃப்ளைட் 731

"சோத்த வடிச்சாச்சு, இனி கொழம்பு வெக்கணுமே...!"

-கவுண்டமணி (படம் : உன்னை நான் சந்தித்தேன்)

வணக்கம்,

முதலில் வலைப்பூவை வந்து பார்த்து வாழ்த்தியோருக்கு நன்றிகள். அதே போல் புதுப் பதிவை எதிர்நோக்கி வந்து ஏமாந்தவர்களுக்கு வருத்தங்களைத் தெரிவித்து, மன்னிக்க வேண்டுகிறேன்.

தீபாவளிக்கு முன்னால் "அ.கொ.தீ.க. என்றால் என்ன?" என்ற பதிவு போடுவதாக இருந்தது. சில களப்பணிகள் பின்தங்கி விட்டதால் அப்பதிவை சில முறை மாற்றி மாற்றி போட்ட பின் நீக்கியே விட்டேன். ஆனால் நண்பர்களின் வலைப்பூக்களில் அது புதிய பதிவாக விளம்பரமாகி விட்டது. வந்து பார்த்து ஏமாந்தவர்களே, மீண்டும் ஒரு முறை மன்னிக்க வேண்டுகிறேன்! சோம்பேறித்தனத்துக்கு இப்படியெல்லாமா சாக்கு சொல்வது என்று நீங்கள் கடுப்பாகிக் கதறுவது கேட்கிறது.

வலைப்பூவுக்கு நீங்கள் அளித்த வரவேற்பு உண்மையிலேயே என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டது. "வெகுமதி" போட்டிக்கு முந்திக் கொண்டு விடையளித்த "முத்து விசிறி"-க்கு எனது வாழ்த்துக்கள். ஓட்டு போட்ட எல்லாருக்கும் நன்றிங்கோவ்! "காமிக்ஸ் குத்து" பகுதியை நீங்கள் வெகுவாக ரசிப்பது புரிகிறது. "காமிக்ஸ் குத்து"-ம், "வெகுமதி" போட்டியும் ஒவ்வொரு முறை புதுப் பதிவு போடும் போதும் இலவச இணைப்பாக வரும்!

பதிவின் ஆரம்பத்தில் நான் எடுத்தாண்டிருக்கும் கவுண்டரின் பன்ச்சுக்கும் இந்தப் பதிவிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று கேட்பவர்களுக்கு என் பதில் : ஆம்! இருக்கிறது! வலைப்பூ ஆரம்பித்தாயிற்று, இனி ஏதாவது பதிவு போடனுமே... என நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது பளிச்சென இந்த வசனம் ஞாபகம் வந்தது.

என்ன பதிவு போடுவது என யோசித்துக் கொண்டிருக்கும் போது, அ.கொ.தீ.க. பற்றி எழுதலாம் என முடிவு செய்து, அதற்கான களப்பணிகளில் இறங்கினேன். முடிவில்லாது நீண்டு கொண்டே சென்றது அந்தப் பதிவு. அதற்கான களப்பணிகளும் முற்று பெறவில்லை. ஆகையால், அப்பதிவை நீக்கி விட்டு தீபாவளி விடுமுறையில் களப்பணிகளை வெற்றிகரமாக முடித்து திரும்பியிருக்கிறேன். அது கொஞ்சம் நீளமான பதிவு என்பதாலும், தீவிர ஆவ்யு தேவைப்பட்டதாலும் அதை மேலும் சிறிது நாட்களுக்கு ஒத்தி வைத்துவிட்டேன். அ.கொ.தீ.க.வின் முதல் கதையான "ஃப்ளைட் 731" பற்றி ஒரு எக்ஸ்பிரஸ் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த வார இறுதியில் அ.கொ.தீ.க. பற்றி விரிவான ஒரு பதிவை நீங்கள் படித்து மகிழலாம். மேலும் நண்பர்கள் விஸ்வா, ரஃபிக், மற்றும் அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தீபாவளி ஸ்பெஷலாக புதுப்புது பதிவகளை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் உங்களை மேலும் காத்திருக்க வைக்க கூடாதென்பதற்காகவும் இந்த திடீர் பதிவு.

மொக்கை போட்டது போதும், இனி மேட்டருக்கு வருவோம்!

முத்து காமிக்ஸ்-ன் முதல் நான்கு இதழ்களும் "இரும்புக்கை மாயாவி" கதைகளையே தாங்கி வந்தன. அதன் பின்னர் புதிய கதாநாயகர்களை அறிமுகப் படுத்தும் முயற்சியில் இரும்புக்கை மாயாவி கதைகளை 1960-களில் ஆங்கிலத்தில் டைஜஸ்ட் வடிவில் வெளியிட்டுக் கொண்டிருந்த பிரிட்டனின் "ஃப்ளீட்வே" (FLEETWAY) நிறுவனத்தினரின் மற்றொரு படைப்பான "CODE NAME : BARRACUDA"-வை தமிழில் "சி.ஐ.டி. லாரன்ஸ்" என்ற பெயரில் அறிமுகம் செய்தனர். இதில் லாரன்ஸின் பெயர் தான் "பாரகுடா". டேவிட்டின் உண்மையான பெயர் "ஃப்ரோலோ". இந்தப் பெயர்கள் நம் வாயில் நுழையாது என்பதால்தான் தமிழில் நிகழ்ந்த பெயர்மாற்றம்.

அ.கொ.தீ.க. என்ற சர்வதேச தீவிரவாதக் கும்பலை ஒடுக்க ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழுவினால் விசேடமாக நியமிக்கப் பட்டவர்களே சி.ஐ.டி. லாரன்ஸும் அவரது சகாவான மொட்டைத் தலை "ஜுடோ டேவிட்"-டும். இவர்களது முதல் சாகசம் தான் "ஃப்ளைட் 731".

இந்தக் கதையை சமீபத்தில் தான் நான் படிக்க நேர்ந்தது. ஆகையால் சிறு வயதில் படித்த கதைகள் (அவை எவ்வளவு மொக்கையாக இருந்தாலும்) உண்டாக்கும் தாக்கம் ஏற்படவில்லை. மாறாக ஒரு முதிர்ந்த கண்ணோட்டத்தோடே இக்கதையை நான் விமர்சிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக என்னிடம் இந்தக் கதையின் முதல் பதிப்பு இல்லை. ஆகையால் அதன் அட்டைப்படத்தை வெளியிடவில்லை. இதன் மறுபதிப்புகளுக்கான அட்டைப்படங்களை மட்டும் இங்கு இட்டுள்ளேன்.

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. அ.கொ.தீ.க. தலைவர் இறந்து விடுகிறார். அடுத்த தலைவர் பதவிக்கு ஏழு பேர் போட்டியிடுகின்றனர். யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்கு அவர்களுக்குள் ஒரு போட்டி வைக்கப்படுகிறது. வேறென்ன? அ.கொ.தீ.க.வின் பரம வைரியான சி.ஐ.டி. லாரன்ஸை யார் கொல்கிறார்களோ அவர் தான் தலைவர். இதற்காக ஒரு பொய்த் தகவலின் பேரில் லாரன்ஸும் டேவிட்டும் ஆஸ்த்திரேலியா வரவழைக்கப் படுகின்றனர். திரும்பும் போது ஃப்ளைட் 731-ல் பயணம் செய்யும் அவர்கள் ஏழு ஊர்களில் ஏழு வில்லன்களை எதிர்கொண்டு வெற்றியோடு ஊர் திரும்புவதுதான் கதை. க்ளைமாக்ஸில் ஒரு திருப்பமும் உண்டு.

முல்லை தங்கராசனின் ஜனரஞ்சகமான மொழிபெயர்ப்பில் மறக்க முடியாத பல கட்டங்களை நாம் ரசிக்கலாம். அதிலும் இந்த முறை "காமிக்ஸ் குத்து"-வில் இடம்பெறும் வசனம் ஆறு வில்லன்களை முறியடித்து ஜெர்மனி வரும் லரான்ஸைக் கொல்லக் காத்திருக்கும் ஏழாவது வில்லன் பிஸ்மார்க் அடிக்கும் பன்ச் அற்புதம்!

சொல்லப் போனால் இக்கதைக்கு "உலகம் சுற்றும் சி.ஐ.டி." என்று பேர் வைத்து எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடித்து இந்தக் கதை உருவாக்கப்பட்ட 1960-களின் பிற்பகுதியில் படமாக வந்திருந்தால் வெள்ளி விழா கண்டு வெற்றி பெற்றிருக்கும். வழக்கம் போல எம்.ஜி.ஆர். "சி.ஐ.டி.ராமு"வாக வருவார். வில்லன்களாக பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், அசோகன், ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, ஜாவர் சீதாராமன் ஆகியோரையும், வில்லியாக கவர்ச்சி நடிகை யாரையாவது போட்டு ஒரு காபரே டான்சும் வைக்கலாம். டேவிட்டுக்கு இந்தக் கதையில் அதிகம் வேலை இல்லை என்பதால் அவருக்கு பதில் காமெடிக்கு நாகேஷைப் போடலாம். அதே போல் ஒவ்வொரு ஊரிலும் ஜெயலலிதா, லதா, மஞ்சுளா, லட்சுமி, கே.ஆர்.விஜயா, காஞ்சனா, ராஜஸ்ரீ என ஒவ்வொரு ஹீரோயினுடனும் ஒரு கசமுசா டூயட் வைக்கலாம். கிளுகிளுப்புக்கு பஞ்சமே இருக்காது. கூடவே செண்டிமெண்டுக்கு அம்மாவாக பண்டரிபாய். படம் பின்னிப் பெடலெடுக்கும். என்ன சொல்றீங்க?

இந்தக் கதைத் தொடர்கள் அனைத்தும் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றாலும், வழக்கமாக பெரியவர்களும் ரசிக்கும்படியே இருக்கும். ஆனால் இந்தக் கதை கொஞ்சம் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேசத் தீவிரவாதிகளின் பெயர்களாக தேசத் தலைவர்களின் பெயர்களை உபயோகித்திருப்பது நெருடுகிறது. அதிலும் பாகிஸ்தானியராக வரும் பூட்டோ பழங்கால இந்திய மகாராஜாவைப் போல் தலைப்பாகை அணிவதும், யானை தாயத்து வைத்திருப்பதும், அவரது மகள் தாய்லாந்து நடனம் ஆடுவதும், அவரது மனைவி பர்மாவாசி போல் உடையனிந்திருப்பதும் காண சகிக்கவில்லை. ஜெர்மனியின் தேசத்தந்தையாகக் கருதப்படும் பிஸ்மார்க்கின் பெயரை ஒரு தீவிரவாதிக்கு சூட்டியிருப்பதன் மடமையை என்னவென்பது?

இது மட்டும் அல்ல, உலகெங்கும் சரித்திரப் பாட புத்தகங்களுக்கு இணையாகப் பேசப்படும் "ஆஸ்ட்ரிக்ஸ்" கூட இந்தியாவிற்கு வரும் கதையான "ஆஸ்ட்ரிக்ஸ் அண்டு தி மேஜிக் கார்பெட்"டில் துளி கூட ஆய்வு செய்யாமல் எவனோ ஒரு கிறுக்கு வெள்ளைக்காரன் கூறியதை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதப் பட்டிருக்கும். ஒரு வேளை கதைகளைத் தீர்க்கமாக ஆய்ந்து எழுதும் "கோஸ்சின்னி" இறந்த பிறகு வந்த கதை என்பதால் கதை எழுதியவரும் அற்புதமாக ஓவியம் வரைந்தவருமான "உடற்ஸோ" கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

வேதாளரை உருவாக்கிய "லீ ஃபால்க்"கும் இவ்விஷயத்தில் கோட்டை விட்டிருப்பார். வேதாளர் வாழும் காடு நமக்கெல்லாம் 'பங்கல்லா' அல்லது 'டென்காலி' என்றுதான் பரிச்சயம். ஆனால் அதன் உண்மைப் பெயர் "பெங்காலி". அது ஒரு மொழி என்று கூட ஆராய்ந்தறியாமல் விட்டு விட்டார். நல்ல வேளை நம்மூர் ஆசிரியர்கள் உஷாராக மாற்றி விட்டார்கள்.

இப்படி சிறுவர்களுக்கு தவறான கருத்துக்களைப் பரப்புவதால் வரும் விளைவுகள் என்ன என்பதை அறியாமல் உலகெங்கிலும் உள்ள பதிப்பாளர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள். அவர்களுடைய நாட்டுக்குள் மட்டுமே இக்கதைகள் விற்கின்றன என்ற எண்ணம் தான் காரணம். தங்கள் பதிப்புகள் உலக மக்கள் அனைவரையும் சென்றடையும் என்பதை மனதில் கொண்டு இனிமேலாவது அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்களா?

ஒரு வேளை இந்தக் கதையை சிறுவனாகப் படித்திருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சித்திருக்க மாட்டேனோ? ஆனால் மீண்டும் படிக்கும் போது மேற்கூறிய நெருடல்கள் வந்திருக்கத்தான் செய்யும்.

எப்படியோ, ஒரு பதிவை போட்டு விட்டேனப்பா! ஆங்கிலப் பதிப்பு பற்றி செய்திகள் மற்றும் படங்கள் அளித்த நண்பர் "முத்து விசிறி"க்கு நன்றிகள் பல! மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள். இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு நன்றிகள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்.