Saturday, December 25, 2010

அ.கொ.தீ.க. டைம்ஸ்!

வணக்கம்,

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

டிசம்பர் இறுதி வரையில் எனது உலகப் பிரசித்தி பெற்ற சோம்பேறித்தனம் காரணமாக எந்தப் பதிவும் இடவில்லை! நாளை முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்சுகள் இரண்டு ஆரம்பித்து விடுவதால் கண்டிப்பாக இனி டிசம்பரில் வேறெந்தப் பதிவையும் என்னால் இட இயலாது!

டிசம்பரில் வேறெந்த பதிவுகளும் இடாததாலும் இனி அடுத்து உங்களைப் புத்தாண்டில்தான் சந்திப்பேன் என்பதாலும் இந்த எக்ஸ்பிரஸ் பதிவு! இம்முறை வெறும் நியூஸ் மட்டும் போடாமல் சற்று வித்தியாசமாக சுவாரசியம் நிறைந்த சில பல துணுக்குகளுடன் உங்களை சந்திக்கிறேன்!

இவற்றைப் படிக்கும் போது உங்களுக்கும் உங்களது இளம்பிராயத்து நினைவுகள் அலைமோதலாம்! அப்படி மோதினால் பின்னூட்டம் மூலம் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

ஓகே! மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்கு போவோம்!

சுட்டி டிவியில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் பேட்டி:

சமீபத்தில் வெளிவந்த இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமானதே! இச்செய்திகளின் தொடர்ச்சியாக இதோ இன்று காலை முதல் தமிழின் நம்பர் ஒன் குழந்தைகளுக்கான சேனலான சுட்டி டிவியில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் பேட்டி ஒளிபரப்பாகிறது!

இப்பேட்டியானது சுட்டி டிவி நியூஸில் ஒரேயொரு நிமிடம் மட்டுமே வந்தாலும் கூட இவ்வளவு பெரிய நெட்வொர்க்கில் காமிக்ஸ் குறித்த செய்திகள் வருவதென்பது நம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் செய்தியென்பதால் பாராட்டத் தக்க விஷயமே!

இதோ அதற்கான காணொளி! இதனை வலையேற்றிய நண்பர் கிங் விஸ்வாவுக்கு நன்றிகள்!

சுட்டி டிவி நியூஸ் ( 25/12/2010) லயன் காமிக்ஸ் ஆசிரியர் S.விஜயன் பேட்டி

இச்செய்தியைத் தவற விட்டோர் கீழ்காணும் நேரங்களில் இன்று முழுவதும் சுட்டி டிவியில் கண்டு மகிழலாம்!

காலை : 6:55AM & 7:55AM IST

இரவு     : 10:25PM IST

அத்தோடு திங்களன்று (27/12/2010) வரும் குங்குமம் வார இதழில் வரவிருக்கும் ஜம்போ ஸ்பெஷல் குறித்த விரிவான காமிக்ஸ் செய்தியையும் தவறாமல் படியுங்கள்!

ஈரோடு பேருந்து நிலைய புத்தகக் கடை:

சிறு வயது நினைவுகளைத் தூண்டும் விஷயங்கள் குறித்த பதிவு இது என்று கூறியிருந்தேனல்லவா? இதோ முதல் விஷயம்!

ரொம்ப நாளாக நானும் கிங் விஸ்வாவும் பதிவிட எண்ணியிருந்த விஷயம் இது! தற்போதெல்லாம் தமிழ் காமிக்ஸ் கடைகளில் கிடைப்பதென்பது அரிதாகி விட்டது! பழைய புத்தகங்களை விடுங்கள்! புதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பதே பல நெடுநாள் வாசகர்களுக்கு தெரியாததால் பல வாசகர்களை நமது காமிக்ஸ்கள் இழக்க நேரிடுகின்றன!  இதில் புதிய வாசகர்களை வேறு எங்கிருந்து உருவாக்குவது!

முன்பெல்லாம் ஒவ்வொரு ஊரின் முக்கிய சாலைகளிலும் குறைந்த பட்சம் 5 நியூஸ்பேப்பர் கடைகளாவது இருக்கும்! சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களின் ஒவ்வொரு பகுதியிலும் குறைந்த பட்சம் 10 கடைகளாவது இருக்கும்! அவற்றில் எல்லாவற்றிலும் காமிக்ஸ் கிடைக்கும்! அது ஒரு பொற்காலம்!

ஒவ்வொரு நாளும் நான் பள்ளியிலிருந்து திரும்பும் போதும் தெருமுனையிலுள்ள இரண்டு புத்தகக் கடைகளிலும் தவறாமல் ஒரு பத்து நிமிடம் நோட்டம் விட்ட பின்புதான் வீட்டுக்கு செல்வேன்! பின்னர் கடைக்காரரிடம் சொல்லி புத்தகங்களைப் பதுக்கி வைத்து விடுமுறையின் போது வீட்டில் அடம் பிடித்து காசு வசூல் செய்து வாங்கிப் படிப்பது வழக்கம்!

ஆனால் தற்போது பெட்டிக்கடைகள் எண்ணிக்கையில் குறைந்து விட்ட நிலையில், பத்து கடைகள் இருந்த இடத்தில் ஒரேயொரு கடை இருந்தால் கூட பெரிய விஷயம் என்ற நிலையில், அதுவும் காமிக்ஸ் புத்தகங்கள் அங்கு கிடைக்க வேண்டுமெனும் பொழுது அது சற்று மலைப்பான விஷயமாகவே உள்ளது! 

இதை மனதில் கொண்டே ஒவ்வொரு ஊரிலும் புதிய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் குறித்து தொடர்ந்து பதிவிடுவது என்று நானும் கிங் விஸ்வாவும் 2008ல் எங்கள் வலைப்பூக்கள் முறையே ஆரம்பித்த போதே முடிவெடுத்தோம்! ஆனால் வழக்கம் போலவே இன்று வரை ஒரு பதிவு கூட உருப்படியாக இடவில்லை!  இதோ அந்த முயற்சியில் வரும் முதல் பதிவு!

கோவை வாசியான நான் விடுமுறைக் காலங்களில் எனது தாத்தா/பாட்டி ஊரான ஈரோட்டுக்குச் செல்வது வழக்கம்! விடுமுறையில் மாலை வேளைகளில் தினந்தோறும் தவறாமல் எனது தாத்தாவுடன் வாக்கிங் கிளம்பி விடுவேன்! வேறெதற்கு?!! புத்தக வேட்டைக்குத்தான்!

வாக்கிங் போகும் வழியிலுள்ள அத்தனை புத்தகக் கடைகளிலும் நோட்டம் விட்டு தினசரி ஒரு புத்தகம் வீதம் வாங்கி விடுவேன்! விடுமுறை முடியும் முன் எப்படியும் கையில் பத்து புத்தகங்களாவது இருக்கும்! இவையெல்லாம் அப்போது புதிதாக கடைகளுக்கு வந்த புத்தகங்கள் என்பதை நினைவில் கொள்ளவும்! விடுமுறை என்பதால் முந்தைய மாத வெளியீடுகளையும் கடைக்காரர்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்!

ஆனால் இப்போது அந்தக் கடைகள் ஏதும் இல்லை! ஒன்றைத் தவிர!

ஈரோட்டில் அப்போதும் இப்போதும் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கச் சிறந்த இடம் பேருந்து நிலையத்திலுள்ள புத்தகக் கடையே! இங்கு நான் வாங்கிய பல காமிக்ஸ்கள் இன்னும் பசுமையாக நினைவுள்ளன! முக்கியமாக மினி லயன் வெளியீடுகளான புதிர் குகை! விற்பனைக்கொரு ஷெரீஃப்!  ஆகியவை இன்னும் மனதில் நிற்கின்றன! 

இந்தப் புத்தகக் கடையின் சிறப்பு என்னவென்றால் வேறெந்த ஊரிலும் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் முன் இங்கு விற்பனைக்கு வந்து விடும்! விடுமுறையில் ஈரோட்டில் வாங்கிய புத்தகங்கள் கோவைக்கு வருவதற்கு குறைந்தது ஒரு மாதமாவது ஆகி விடும்!

ஒரு முறை வழக்கமாக விடுமுறைக்கு வரும் கோடை மலர் ஒன்றை தேர்வுகள் நடக்கும் போதே ஈரோட்டில் எனது தாத்தா வாங்கி எனது தந்தை மூலம் அனுப்பி வைத்தார்! பிறகென்ன தேர்வுக்குப் படித்த மாதிரிதான்! நல்லவேளை பரீட்சையில் நான் கோட்டை விடவில்லை! இல்லையேல் அன்றோடு எனது காமிக்ஸ் சகாப்தம் முடிந்திருக்கும்!

அதெப்படி கோவையில் புத்தகங்கள் கிடைக்கும் முன்னரே ஈரோட்டில் புத்தகங்கள் கிடைக்கின்றன என நான் பல நாட்கள் வியந்திருக்கின்றேன்! சமீபத்தில் தான் அதற்கு விடை கிடைத்தது!

சிவகாசியிலிருந்து கட்டு கட்டாக வரும் புத்தகங்கள் நேராக ஈரோடு பேருந்து நிலையத்தில்தான் இறக்கி வைக்கப்படுகின்றன! இங்கிருந்து தான் கோவை, திருப்பூர், சேலம் போன்ற நகரங்களுக்கு புத்தகங்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன! சென்னைக்கே கூட இங்கிருந்துதான் புத்தகங்கள் செல்வதாகக் கேள்வி! இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை! சிவகாசியிலிருந்து ஈரோட்டுக்கு தினசரி நேரடிப் பேருந்து வசதியிருப்பதாலேயே இது சாத்தியப் படுகிறது!

டிஸ்ட்ரிப்யூஷனில் உள்ள கட்டமைப்புகள் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லாததால் இது குறித்து நண்பர் கேப்டன் ஹெச்சை மேலும் விளக்கினால் நலம்! 

இதனால் ஈரோடு வாசகர்களுக்கு சந்தாதாரர்களுக்கு முதல் புத்தகம் அனுப்பப்பட்டவுடனேயே அதிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே புத்தகம் கிடைத்து விடுகிறது! ஹ்ம்ம்ம்! கொடுத்து வைத்தவர்கள்! கோவைக்கு புத்தகம் வர ஒரு மாதமாவது ஆகிறது!

DSC01328

ஈரோடு பேருந்து நிலைய புத்தகக் கடை!

முன்பு நான்கைந்து கடைகள் இருந்த இடத்தில் இப்போது ஒரேயொரு கடைதான் உள்ளது! புத்தகக் கடைகளுக்குப் பதில் பேக்கரிகள் முளைத்து விட்டன! ஆனால் இன்றளவிலும் ஈரோடு வாசகர்களுக்கு மற்ற ஊர்களுக்கு முன் காமிக்ஸ் புத்தகங்களை முந்தி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது ஈரோடு பேருந்து நிலைய புத்தகக் கடை!

அடுத்த முறை நீங்கள் ஈரோடு செல்ல நேர்ந்தால் தவறாமல் ஒரு முறையேனும் இந்தப் புத்தகக் கடையினுள் எட்டிப்பாருங்கள்! புதிதாக காமிக்ஸ் ஏதேனும் வந்திருக்கக் கூடும்!

உங்கள் ஊரிலும் இது போல் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் உள்ளனவா? அப்படியென்றால் தெளிவான முகவரி, புகைப்படம் இவற்றுடன் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்களேன்! தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகம் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கும்!

காமிக்ஸ் புத்தககங்கள் கிடைக்கும் கடைகள் குறித்த கிங் விஸ்வாவின் முந்தைய பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் இலவச இணைப்பு:

சிறு வயது நினைவுகளில் மூழ்க இதோ இன்னுமொரு சமாச்சாரம்!

சென்ற வருடம் இதே சமயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பதிவு! ஒன்றை வெளியிட்டோம்! அதைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

அப்பதிவில் முத்து காமிக்ஸ் # 180 – ஆழ்கடல் அதிரடி! குறித்து விரிவாக அலசியிருப்போம்! ஆனால் அச்சமயத்தில் வெளியிடாத ஒரு தகவலும் உண்டு! அது அப்புத்தகத்துடன் வழங்கப்பட்ட இலவச இணைப்பேயாகும்! அப்போது அந்த இலவச இணைப்பு என்னிடம் கைவசம் இல்லை!

Muthu Comics # 180 - Christmas Special

நெடுநாட்கள் ஆகிவிட்ட படியால் அது என்ன இலவச இணைப்பு என்பதும் எனக்கு ஞாபகம் வரவில்லை! ஆனால் சமீபத்தில் நண்பர் முத்து விசிறியின் உபயத்தால் அந்த இலவச இணைப்பின் ஸ்கேன்கள் சிக்கின! அவருக்கு எனது நன்றிகள்!  

பாக்கெட் சைஸுக்குத் தோதாக எட்டாக மடிக்கப்பட்ட இரு வண்ண அச்சில் ஒரு காகிதம்! அதில் முன் பின் அட்டைப்படங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா! உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் சில புதிர்கள்! முழுவதுமாக விரித்தால் ஒரு பகுதியில் இரும்புக்கை மாயாவியும், C.I.D.லாரன்ஸ்-ம் கொண்ட ஒரு தாய விளையாட்டு! இப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்டதொரு இலவச இணைப்பு!

கண்டதும் அப்படியே சிறு வயது நினைவுகளில் மூழ்கி விட்டேன்! இந்த தாய விளையாட்டை அப்போது எத்தனை முறை உருட்டி விளையாண்டிருப்பேன் என்று எனக்கே நினைவில்லை! பின்னர் எப்படியோ தொலைந்து விட்டது! மீண்டும் நினைவு படுத்திய நண்பர் முத்து விசிறிக்கு நன்றிகள்! 

இந்த அற்புத இலவச இணைப்பின் ஸ்கேன்களை வெளியிட இதை விட சிறந்த சந்தர்ப்பம் வேறேதும் சிக்காதென்பதால் இதோ அந்தக் கண்கொள்ளா ஸ்கேன்கள் உங்கள் பார்வைக்கு!

Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 1Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 2Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 3Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 4

படங்களைக் ‘க்ளிக்’ செய்து பெரிதாக்கிப் பார்த்து மகிழவும்!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்!  உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:-

XIII ஜம்போ ஸ்பெஷல் குறித்த செய்திகள்/பதிவுகள்:

பிற XIII பதிவுகள்:

மங்கூஸ் சித்திர நாவல்:

XIII ஜம்போ ஸ்பெஷல் வருவதில் தாமதம் குறித்த புலம்பல்/அலம்பல் பதிவுகள்:

CINEBOOK வெளியிட்டு வரும் XIII ஆங்கிலத் தொடர் குறித்த செய்திப் பகிர்வுகள்:

XIII காமிக்ஸ் ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய:

XIII COLLECTOR’S EDITION WIDGET-ஐ உங்கள் வலைத்தளத்தில் இணைக்க: