“ரங்கநாதன்னு பேரு வெச்சிருக்கறவனுக்கெல்லாம் சைக்கிள் தர்றதில்ல!”
-ஆல் இன் ஆல் அழகுராஜா (படம் – வைதேகி காத்திருந்தாள்)
முத்து#144 – விண்வெளிக் கொள்ளையர்! - அட்டைப்படம்
வணக்கம்,
குடியரசு மற்றும் தியாகிகள் தின சிறப்புப் பதிவான போர் சித்திரக் கதைகள்-க்கு தாங்கள் அனைவரும் அளித்துள்ள நல்லாதரவுக்கு நன்றி! ஆனால் நான் குறிப்பிடாத பல கதைகளைக் கூறி என்னை திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள்! இதைக் காரணம் காட்டி என்னை மீண்டும் ‘தேசத் துரோகி’ என பட்டம் கட்டிட சில புல்லுருவிகள் முயன்றனர்!
சத்தியமாக அந்த புத்தகங்கள் எல்லாம் என்னிடம் இல்லை! ஆகையால் குறிப்பிடவில்லை! மன்னிக்கவும்! அதுவுமில்லாமல் எல்லா கதைகளையும் இப்போதே போட்டு விட்டால் அப்புறம் சுதந்திர தினம், கொடி நாள், அடுத்த வருட குடியரசு தினத்துக்கெல்லாம் என்ன போடுவதாம்?!!
வெகுமதி! போட்டிக்கு நண்பர் செழி-யைத் தவிர வேறு அன்பர்கள் யாரும் பதில் தர முன்வராதது வருத்தமளிக்கிறது! இப்படியே தொடர்ந்தால் வெகுமதி!யும் காமிக்ஸ் “குத்து!”-ம் விரைவில் நிறுத்தப் பட வேண்டியதிருக்கும்! நமது காமிக்ஸ் காலப் பயணம் மேலும் சிறக்க உதவ உருவாக்கபட்ட இப்பகுதிகளையும் தயை கூர்ந்து ஆதரியுங்கள்! தங்களின் ஆதரவை பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்துங்களேன்!
ஒகே! மொக்கை போதும், இனி ஓவர் டு இரும்புக்கை மாயாவி!
முத்து#311 – நொறுங்கிய நானல் மர்மம்! – காமிக்ஸ் டைம் |
காமிக்ஸ் டைம்:
சமீபத்தில் வெளிவந்த முத்து#311 : நொறுங்கிய நானல் மர்மம்! இதழில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் காமிக்ஸ் டைம்-ல் குறிப்பிட்டிருந்த ஒரு செய்தி காமிக்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது!
வழக்கமாக வரும் அடுத்த வெளியீடுகள் பற்றிய செய்திகளில் மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் மற்றும் நமது அபிமான ரிப்போர்ட்டர் ஜானி ஆகியோர் மீண்டு(ம்) வருவது குறித்த செய்திகள் மகிழ்ச்சிக்குறியதாக இருப்பினும், நம்மையெல்லம் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தக் கூடிய ஒரு இனிப்பான செய்தியையும் வெளியிட்டுள்ளார்!
அது, முத்துவின் பழைய சூப்பர்-ஹிட் வெளியீடான விண்வெளிக் கொள்ளையர் காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ல் மறுபதிப்பாகும் விஷயம் தான்! இதில் விசேஷம் என்னவென்றால் இந்தக் கதை வெளிவந்த அதே ஒரிஜினல் பெரிய அளவில் மீண்டும் வருவதுதான்!
‘இதில் என்ன விசேடம், முத்துவிலும், லயனிலும் இதற்கு முன்பே சிறப்பிதழ்கள் பெரிய அளவில் வந்துள்ளனவே!’ எனும் சக வாசக நண்பர்களே, இக்கதை வெளிவந்த காலகட்டத்தை நாம் கருத்தில் கொண்டே இந்த இதழின் தாக்கத்தை ஆராய வேண்டும்! அதற்கு நாம் மீண்டும் ஒரு காலப் பயணம் மேற்கொள்ள வேண்டும்! தயாரா நண்பர்களே!
முத்து#138 – களிமண் மனிதர்கள் - அட்டைப்படம் |
ஜூலை 15, 1984:
இந்தத் தேதி ‘முத்து’வின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான ஒன்று! முத்துவின் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்த சோக தினம் அது. இதற்கு முன்பு கடைசியாக 1982-ல் தான் முத்து காமிக்ஸ் வெளிவந்தது.
பின்பு நவம்பர் 14, 1982 முதல் ஃபிப்ரவரி 19, 1984 வரை பல வருடங்களுக்குப் பின் முத்து குழுமத்தில் மீண்டும் சேர்ந்த திரு.முல்லை தங்கராசன் அவர்களின் மேற்பார்வையில் முத்து காமிக்ஸ் வார மலர் இதழ் 22 முறை தட்டுத் தடுமாறி வெளிவந்தது. அந்த சமயத்தில் முத்து காமிக்ஸ் எதுவும் வெளிவரவில்லை.
அந்த கடைசி இதழ் இரும்புக்கை மாயாவி சாகஸமான களிமண் மனிதர்கள்! (முத்து # 138). இந்தக் கதையைப் பற்றி பின்னால் பார்ப்போம். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பின்னே முத்து காமிக்ஸ் மீண்டும் வந்தது!
இதே ஜூலை 1984-ல் தான் நமது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் லயன் காமிக்ஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது! அதுமட்டுமின்றி திரு.முல்லை தங்கராசன் அவர்கள் முத்து குழுமத்திலிருந்து மீண்டும் ஒரு முறை விலகி மேத்தா காமிக்ஸ் தொடங்கியதும் இந்த சமயத்திலேதான். ராணி காமிக்ஸ் முதல் இதழ் திரு.S.ராமஜெயம் மேற்பார்வையில் வெளிவந்ததும் இதே சமயத்தில் தான்.
‘முத்து’வின் மறு(பதிப்பு)மலர்ச்சி:
ஜூன் 1985-ல் தான் அடுத்த முத்து காமிக்ஸ் ஃப்ளைட் 731 மறுபதிப்பைத் தாங்கி வந்தது. அதன் பிறகு தொடர்ந்து மறுபதிப்புகளாக வெளியிட்டுக் கொண்டிருந்த முத்துவின் முதல் தீபாவளி மலர் தான் விண்வெளிக் கொள்ளையர்!
தீபாவளி மலர் 1985:
அது வரை பாக்கெட் சைஸில் மட்டுமே மறுபதிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த ‘முத்து’ அதன் மறுமலர்ச்சிக்குப் பின் முதன் முறையாக பெரிய அளவில் (A4) ரூ:4/- விலையில் ‘இரும்புக்கை மாயாவி’யின் அட்டகாசமான சாகஸக் கதையை தீபாவளி மலராக வெளியிட்டது!
மறுபதிப்புகள் மட்டுமின்றி புதிய கதைகளையும் ‘முத்து’ தாங்கி வரும் என்று வாசகர்களின் மனதில் நம்பிக்கையூட்டிய முதல் இதழ் இதுதான் என்பதில் ஐயமில்லை!
‘சூப்பர் ஹீரோ’ மாயாவி! - ஷேம்! ஷேம்! பப்பி ஷேம்! மாயாவி ஜட்டியே போடல! |
கதைக்களம்:
களிமண் மனிதர்கள்! கதையிலிருந்து ‘மாயாவி’ ஒரு ‘சூப்பர் ஹீரோ’வாக வலம் வர ஆரம்பித்தார். இது ஒரு சிறந்த மொக்கைக் கதையாகும்! ஆகையால் அதைப் பற்றி பின்னொரு பதிவில் காண்போம்!
‘களிமண் மனிதர்கள்!’ கதையிலிருந்து ‘மாயாவி’ கதை வரிசையில் பல மாற்றங்களை நாம் காணலாம். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நாம் காண்போம்!
- முக்கியமானதும், முதன்மையானதுமான மாற்றம் ‘மாயாவி’ சூப்பர் ஹீரோ வேடம் தறிக்கிறார். இதனைப் பற்றி விரிவாகக் காணலாம்!
- பல வித நூதன சக்திகள் மாயாவிக்கு நிழற்படை விஞ்ஞானிகளால் வழங்கப் படுகிறது. கூடவே எதிரிகள் அவரை அடையாளம் கண்டு கொள்ளாமலிருக்க அவருக்கு சூப்பர் ஹீரோ சீருடையும் வழங்கப்படுகிறது.
- சூப்பர் ஹீரோ ஆகிவிட்ட பிறகு ரகசிய அடையாளம் இல்லாமல் எப்படி. சூப்பர் ஹீரோ வேடம் தறிக்காத நேரங்களில் டாக்ஸி ஓட்டும் சாதாரண மனிதனாக லண்டனின் தெருக்களில் உலவுகிறார், இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்.
- மாயாவியின் உண்மையான பெயர் லூயிஸ் கிராண்டேல் என்று நாம் தமிழில் முதன்முதலாகத் தெரிந்து கொள்கிறோம். திரு.முல்லை தங்கராசன் அவர்கள் சூட்டிய பட்டப்பெயரான இரும்புக்கை மாயாவியே நிலைத்துவிட இதுநாள் வரை ‘மாயாவி’ என்ற பெயரிலேயே ரசிகர்கள் அவரை அறிந்து வந்தனர்.
- இதுவரை அரையிருளில் அனாமதேயனாக இருந்த நிழற்படை தலைவரை நாம் முதன்முறையாகக் காணுகிறோம். மேஜர் ப்ராண்ட் (ஆள் கிட்டத்தட்ட மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இருப்பார், பேச்சும் அதே மாதிரிதான்) என்ற பெயரில் வெறுக்கத்தக்க ஒரு கதாபாத்திரமாக வலம் வருகிறார்.
- சூப்பர் ஹீரோ என்றால் கூட ஒரு ‘அல்லக்கை’ பொடியனும் வேண்டுமே! மோரீஸ் எனும் மாயாவிக்கு உதவும் சிறுவன் நமக்கு அறிமுகமாகிறான்.
- கதைகளில் முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு ‘காதுல பூ’ சாகஸங்கள் நிறைந்திருக்கும். குறிப்பாக அயல் கிரக வாசிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின!
மேற்கூறியவற்றை மனதிற்கொண்டு பின்வரும் கருத்துக்களைக் அலசுவோம்.
பேட்மேன் & ராபின்! - தொப்பையைக் குறைக்க அதிகாலையில் ‘ஜாகிங்’! |
‘சூப்பர் ஹீரோ’ மாயாவி:
மாயாவி இப்படி திடீரென ஏன் ‘சூப்பர் ஹீரோ’வாக மாற வேண்டும்? காரணம், 1960-களில் உலகெங்கிலும் மிகப் பிரபலமடைந்திருந்த பேட்மேன் தொலைக்காட்சித் தொடர்-ன் பாதிப்பேயாகும்!
இத்தொடரைப் பற்றி விரிவாகப் பின்னொரு நாளில் எழுதுகிறேன். ஆனால் இத்தொடரில் பேட்மேனை ‘டேமேஜ்’ பண்ணியது போல் வேறெதிலும் நடைபெறவில்லை. இத்தொடரை 90-களில் ‘ஸ்டார் ப்ளஸ்’ஸில் ஒளிபரப்பினார்கள்!
ஆடம் வெஸ்ட் எனும் நடிகர் தொப்பையும், தொந்தியுமாய் ஒரு ‘டைட்’டான டி-ஷர்ட் மற்றும் பைஜாமாவுக்கு மேல் ஜட்டியை அணிந்து கொண்டு பேட்மேன்-ஆக வலம் வருவார். பட்டப் பகலில் நடுத்தெருவில் ‘தத்தக்கா பித்தக்கா’ என ராபினுடன் ஓடியே எதிரிகளைத் துரத்துவார்.
டாக்ஸியில் மாயாவியும் மோரீஸும்! |
ராபின் பற்றி சொல்லவே வேண்டாம்! பர்ட் வார்ட் எனும் இளம் நடிகர் வார்த்தைக்கு வார்த்தை ஏதேனும் ‘பன்ச்’ அடிக்கிறேன் பேர்வழி என்று நமது பொறுமையை சோதித்து விடுவார். சீரியஸாக செல்ல வேண்டிய கதைகள் செம்ம காமெடியாக மாறி விடுவதுண்டு!
இத்தொடரில் வரும் BATMOBILE-க்கு இனையாக ‘மாயாவி’ டாக்ஸி ஓட்டுகிறார். ‘ராபின்’-க்கு பதில் சிறுவன் மோரீஸ். பேட்மேனின் உடைக்கும் மாயாவியின் உடைக்கும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள்!
அதே போல் இது வரை முகம்காட்டாத நிழற்படைத் தலைவர் நமக்கு மேஜர் ப்ராண்ட்-ஆக அறிமுகமாகிறார். இவர் ஸ்பைடர்மேன் கதைகளில் வரும் ஜே.ஜேனா ஜேம்ஸன் எனும் பாத்திரத்தின் தழுவலேயாகும். இவரை நீங்கள் ஸ்பைடர்மேன் படங்களில் கண்டு ரசித்திருப்பீர்கள்!
ஜே.ஜோனா ஜேம்ஸன் – ஸ்பைடர்மேன் காமிக்ஸில்… | மேஜர் சுந்தர்ராஜன்... I MEAN, அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா, மேஜர் ப்ராண்ட்! |
மாயாவியை எப்போதும் மட்டம் தட்டிக் கொண்டேயிருக்கும் இவர் நமது வெறுப்பை சம்பாதிப்பதற்காகவே உருவாக்கப் பட்டவர் ஆவார். அப்போதுதானே மாயாவியின் மேல் நமக்கு அனுதாபம் ஏற்படும்!
அதே போல் மாயாவிக்கு மின்காந்த சக்தியை உபயோகப் படுத்தி பறக்கும் சக்தியும் நிழற்படை விஞ்ஞானிகளால் வழங்கப் படுகிறது. இன்னும் பல நூதன சக்திகளையும் பெறுகிறார் மாயாவி!
சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் என உலகின் தலைசிறந்த மூன்று சாகஸ நாயகர்களின் மொத்த உருவமாக ‘மாயாவி’-யை சித்தரிக்க எண்ணிய கதாசிரியர்களின் மடமையை என்னவென்பது! கதைகள் சொதப்பலாகவே இருப்பினும் நாம் சிறுவயதில் படித்திருப்பதால் நம் மனதை மாயாவியின் சாகசங்கள் ஆட்கொண்டிருப்பதை மறுக்க முடியாது!
டார்கத்! |
X-டோல்! |
உதிரும் நோய்! |
மல்ட்டி மேன்! |
பறக்கும் தட்டு! |
மாறுவேடத்தில் மாயாவி! |
வீரிய சைத்தான்! |
நிழற்படை வீரர்கள்! |
ராட்சத டார்கத்! |
கதை:
ஓகே! இனி ஒரு வழியாக கதைக்கு வருவோம்!
அ.கொ.தீ.க.வின் மற்றுமொரு சதிச் செயலை (முத்து#138 - களிமண் மனிதர்கள்) முறியடித்து விட்டுத் தலைமையகம் திரும்பும் மாயாவிக்கும் நிழற்படைத் தலைவர் மேஜர் ப்ராண்டுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, மாயாவியை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்கிறார் மேஜர்.
வெறுப்புடன் தனது டாக்ஸியில் லண்டன் மாநகரின் தெருக்களைச் சுற்றி வரும் மாயாவியை அயல் கிரக வாசிகளின் வருகையை பற்றிய செய்திகளுன் சந்திக்கிறான் சிறுவன் மோரீஸ். பெரிதாகக் கவலையேதும் இன்றி இருக்கிறார் மாயாவி.
பூமிக்கு வரும் அயல் கிரக வாசிகளோ பல்வேறு கிரகங்களுக்கு சென்று அவற்றின் செல்வங்களைச் சூறையாடும் ஒரு கொள்ளையர் கும்பல்! க்ரைஸ்டாயிட்ஸ் (CRYSTOIDS) என அழைக்கப்படும் அவர்களின் தலைவன் டார்கத் (DARGATH)!
பூமியின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி வேவு பார்த்து வர X-டோல் எனும் ஒரு க்ரைஸ்டாயிடிடம் பொறுப்பை ஒப்படைக்கிறான் டார்கத்! கூடவே ஒரு பூலோக வாசியையும் ஆய்வுக்காகக் கடத்தி வரும் படியும் X-டோலுக்கு உத்தரவிடப் படுகிறது.
உத்தரவின்படி ஒரு பூங்காவில் ஒரு சிறுவனைக் கடத்த முயலும் X-டோலை தற்செயலாக அங்கே ஒரு சவாரிக்காக வரும் மாயாவி (சூப்பர் ஹீரோ சீருடையுடன்) எதிர்கொள்கிறார்! X-டோலின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சுகிறார் மாயாவி. X-டோல் க்ரைஸ்டாயிடுகளின் சிம்ம சொப்பனமான உதிரும் நோய்-ஆல் பாதிக்கப் பட்டு இறக்கிறது!
இதைக் கண்டு வெகுண்டெழும் டார்கத் அடுத்தடுத்து மாயாவியை எதிர்கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாளுகிறான்!
மல்ட்டி மேன் எனும் ஒரு விந்தை ரோபோவை மாயாவியை அழிக்க அனுப்புகிறான் டார்கத்! இந்த ரோபோவுக்கும் மாயாவிக்கும் நடக்கும் சண்டைதான் என்னைப் பொறுத்தவரை கதையின் ஹை-லைட்.
TERMINATOR 2 – JUDGEMENT DAY-ல் வரும் வில்லன் ரோபோவை விடப் பல மடங்கு பயங்கரமான ஒரு வில்லனாக வலம் வரும் மல்ட்டி மேனை மாயாவி எப்படி தோற்கடிக்கிறார் என்பதைக் கூறி கதையைப் படிக்காதவர்களுக்கு சஸ்பென்ஸை உடைக்க நான் விரும்பவில்லை! காமிக்ஸ் க்ளாசிக்ஸில் வரும் போது தவறாமல் படிக்கவும்!
இதன் பிறகு கதை எங்கெங்கோ செல்கிறது! மல்ட்டி மேனுடன் போராடியதால் ஏற்பட்ட காயங்களால் மாயாவி சோர்வுற்றிருக்க, டார்கத் பூலோகவாசிகளை மாயாவியைத் தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் அனைவரையும் அழிக்கப் போவதாக மிரட்டுகிறான்!
மக்கள் கூட்டம் மாயாவியைத் தேடியலைய மாயாவி மறைந்திருக்கிறார்!
மேலும் புதிதாக வீரிய சைத்தான் என ஒன்றை உருவாக்கி மாயாவியின் மேல் ஏவுகிறான்! ஒளிந்திருக்கும் மாயாவியைக் கண்டுபிடிக்கும் மேஜர் ப்ராண்ட் மாயாவிக்கு புதிய சக்தியொன்றை வழங்குகிறார். மக்களிடமிருந்து தப்பிக்க மாறுவேடத்துடன் புறப்படுகிறார் மாயாவி. வீரிய சைத்தானை வீழ்த்துகிறார்.
பின்தொடரும் நிழற்படை வீரர்கள் மாயாவியைக் கைது செய்கின்றனர்! மாயாவியின் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட வோல்டா துப்பாக்கி மூலம் க்ரைஸ்டாயிடுகளை வெல்ல முடியும் என மார்தட்டுகிறான் மேஜர்! மாயாவியின் ஆற்றல் இனித் தேவையில்லை என்று அவரை அடைத்து வைக்க தீர்மாணிக்கிறான்!
அங்கிருந்து தப்பும் மாயாவி ராட்சத உருக் கொண்டுவிட்ட டார்கத்தை எதிர்கொள்கிறார். டார்கத்தை வீழ்த்தி எப்படி இறுதி வெற்றி கொள்கிறார் என்பதே மீதிக் கதை!
கதையின் தாக்கம்:
முத்து விசிறி போன்ற ஆரம்ப கால ‘முத்து’ காமிக்ஸ் வாசகர்களுக்கு இக்கதை பிடிக்காமல் போனாலும், இக்கதையை என்னைப் போல் சிறுவனாக இருக்கும் போது படிக்க நேர்ந்தால் அதன் கற்பனை உலகில் மூழ்கிப் போவதில் வியப்பில்லை!
க்ரைஸ்டாயிடுகள், X-டோல், படிக கதிர் துப்பாக்கி, மல்டிமேன், கிராவா கதிர்கள், டார்கத், ஹோவர் டிஸ்க், க்ரிஸ்டளிசர் கதிர்கள், கொலஸ்ஸா கதிர்கள், ட்ரகடான் குண்டு, நியுக்ளியர் நர்ஸ், கம்மா-ட்ரான், வீரிய சைத்தான், ட்ரேசர் குண்டு, வோல்டா துப்பாக்கி, ராட்சத டார்கத் என்று பல ‘காதுல பூ’ சமாச்சாரங்கள் நிறைந்த கதை இது.
இருப்பினும் ஜீஸஸ் ப்ளாஸ்கோ-வின் அதியற்புத ஓவியங்களுக்காகவே இக்கதையை காலாகாலத்திற்கும் காக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷமாகக் கருத வேண்டியதிருக்கிறது!
இக்கதை மேற்குறிப்பிட்டவாறு மொழிபெயர்ப்பில் பல மாற்றங்கள் கொண்டிருப்பதாலும், ‘லயன்’ காமிக்ஸ் ஆரம்பித்த பின் இக்கதை வந்திருப்பதாலும் நமது மதிப்பிற்குறிய ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் பங்களிப்பு கொஞ்சமாவது இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
அதிலும் குறிப்பாக அட்டைப் பட டிசைன் ஆரம்ப கால ‘லயன்’ அட்டைப் படங்களுடன் ஒத்துப் போவது தற்செயலான ஒன்று அல்ல! அதிலும் இதே கால கட்டத்தில் லயனில் தீபாவளி மலராக வந்த லயன்#19 – தலைவாங்கிக் குரங்கு! இதழின் அட்டைப் படத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் டிசைனில் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை விளங்கும்! பார்க்க இங்கே ‘க்ளிக்’கவும்! (நன்றி : முத்து விசிறி)
அவரே இப்போது ‘காமிக்ஸ் க்ளாசிக்ஸ்’ பற்றி அறிவிப்பு செய்ததிலிருந்து இது அவரது மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு கதை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்!
1985-ல் ரூ:4/- விலையில் வந்தவொரு அற்புதக் கதையை மீண்டும் நாம் ரூ:10/- அல்லது அதிக பட்சமாக ரூ:15/- விலையில் கிடைக்கப் பெறுவதென்பது சிறப்பான ஒரு விஷயமாகும்! இதை நாம் சிறப்பிக்கும் வகையில் இந்த புத்தகத்தை ஒரு மாபெரும் வெற்றியாக மாற்றிக் காட்டினால் பிற்காலத்தில் இது போன்ற பல ஸ்பெஷல் வெளியீடுகளை ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்!
குறிப்புகள்:
THE CRYSTOIDS | ||
கதை | : | டாம் டல்லி (TOM TULLY) |
ஓவியம் | : | ஜீஸஸ் ப்ளாஸ்கோ (JESUS BLASCO) |
பதிப்பகம் | : | ஃப்ளீட்வே (FLEETWAY) |
வார இதழ் | : | வேலியண்ட் (VALIANT) |
ஓட்டம் | : | 05-08-1967 முதல் 24-02-1968 வரை (30 வாரங்கள் – வாரத்துக்கு 2 பக்கங்கள் – மொத்தம் 60 பக்கங்கள்) |
தமிழில் | : | முத்து#144 விண்வெளிக் கொள்ளையர் (தீபாவளி மலர் - 1985) |
விலை | : | ரூ:4/- (காமிக்ஸ் வேட்டையர்களுக்கு விலைமதிப்பற்ற பொக்கிஷம்) |
அளவு | : | A4 |
பக்கங்கள் | : | 56 + அட்டை |
மறுபதிப்பு | : | காமிக்ஸ் க்ளாசிக்ஸில்… விரைவில்… அதே சைஸில்… |
நீங்கள் பார்த்து மகிழ தமிழில் சில பக்கங்களும் அவற்றின் ஆங்கில ஒரிஜினல்களும். என்ஜாய்!
வெகுமதி!
மீண்டும் ஒரு வித்தியாசமான ‘வெகுமதி!’ போட்டியுடன் உங்களை எதிர்கொள்கிறேன்! கீழ்க்காணும் மூன்று படங்களும் ‘விண்வெளிக் கொள்ளையர்’ கதையில் இடம்பெறுபவை. கேள்வியென்னவென்றால் இப்படங்கள் பின்னர் வெளிவந்த ஒரு கதைக்கு விளம்பரம் செய்ய உபயோகப் படுத்தப் பட்டன. அது என்ன கதை என்று கண்டுபிடித்துக் கூறுங்களேன்! பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு!
இம்முறை பதிவிலேயே கேள்வியைக் கேட்டிருக்கிறேன். உங்கள் பதில்கள் இதன் மூலமாவது விரைந்து வருமா என எதிர்பார்க்கிறேன்!
நன்றியுரை:
மிக நீண்ட இந்தப் பதிவைப் பொறுமையுடன் படித்ததற்கு நன்றி! இதைப் படித்ததன் மூலம் உங்களின் பொன்னான நேரத்தில் கொஞ்சம் உங்களுக்கு வீணாகியிருப்பின் மன்னிக்கவும்! மாறாக உபயோகமாக இருந்திருந்தால் மகிழ்வேன்!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆங்கிலப் பதிப்புகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அளித்த நண்பர் முத்து விசிறி-க்கு நன்றி.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு.:
- கிங் விஸ்வா முத்து#311 : நொறுங்கிய நானல் மர்மம்! விமர்சனம் மற்றும் வழக்கம்போல் ஒரு செய்தித் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் புத்தகம் எனக்கு அவர் பதிவிடுவதற்கு முன்பே கிடைத்துவிட்டது. ஆனால் அவருக்கு இதுவரை புத்தகம் வந்த பாடில்லை! திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன் அவர்களின் புத்தகத்தை நைஸாக ‘லவட்டி’க் கொண்டு வந்து படித்துப் பதிவிட்டிருக்கிறார்! ‘ஏன் எனக்கு புத்தகத்தைத் தரவில்லை?’ என்று அவர் என்னை நச்சரித்துக் கேட்டபோது மேற்குறிப்பிட்ட கவுண்டரின் ‘பன்ச்’ ஞாபகத்துக்கு வர ‘விஸ்வான்னு பேரு வச்சவனுக்கெல்லாம் புக்கு தர்றதில்ல!’ என்று சொல்லி ‘எஸ்கேப்’பினேன்!
- கனவுகளின் காதலர் இதுவரை நாம் தமிழில் படித்திராத ஒரு லக்கி லூக் கதையை மொழிபெயர்க்க ஆரம்பித்துள்ளார். வயிற்றுப்புண்ணால் அவதிப் படுபவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்!
- க.கொ.க.கூ. சிஸ்கோ கிட் மற்றும் ரகசிய ஏஜண்ட் ரஜினி பதிவுகள் இட்டுள்ளார்.
- ரஃபிக் ராஜா திகில் மற்றும் சினிபுக் பற்றி பதிவிட்டுள்ளார்.
- வேதாள நகரம் சைலண்டாக இருப்பதைப் பார்த்தால் பெரிதாக ஏதோ வெடிக்கும் என்று தோன்றுகிறது. அய்யா பங்கு வேட்டையர் அவர்களே, சஸ்பென்ஸ் தாங்கவில்லை, சீக்கிரம் வாருங்கள்!
தொடர்புடைய இடுகைகள்:
முத்துவின் முதல் இதழ் - இரும்புக்கை மாயாவி:
- http://muthufanblog.blogspot.com/2008/07/i-have-been-collecting-english.html
- http://muthufan.0catch.com/firstmuthu.html
- http://muthufan.tripod.com/firstmuthu.html
இரும்புக்கை மாயாவி:
- http://muthufan.0catch.com/Maayavi.htm
- http://muthufan.tripod.com/Maayavi.htm
- http://sharehunter.wordpress.com/2008/10/17/comicssupers2/
- http://sharehunter.wordpress.com/2008/10/21/ironclaw2/
- http://akotheeka.blogspot.com/search/label/இரும்புக்கை%20மாயாவி
முத்து காமிக்ஸ் வார மலர் பற்றி முத்து விசிறியின் முத்தான பதிவு:
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பற்றிய இடுகைகள்:
- http://muthufanblog.blogspot.com/2005/10/thanks-for-encouraging-messages-for-my.html
- http://muthufanblog.blogspot.com/2005/10/apologiesapologiesapologies-thanks-for.html
- http://muthufanblog.blogspot.com/2005/10/thanks-for-visiting-my-blog-and-big.html
- http://muthufan.0catch.com/classics/index.htm
- http://muthufan.tripod.com/classics/index.htm
- http://tamilcomicsulagam.blogspot.com/search/label/Comics%20Classics
- http://comicology.blogspot.com/search/label/Comics%20Classics
நடுநிசிக் கள்வன் பற்றிய பதிவு:
முத்து இதழ்களின் முழு விவரம்:
கிங் விஸ்வாவின் பொறை முதிர்ந்த பார்வையில் முத்து#311 – நொறுங்கிய நானல் மர்மம்!