Showing posts with label கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Show all posts
Showing posts with label கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Show all posts

Saturday, December 25, 2010

அ.கொ.தீ.க. டைம்ஸ்!

வணக்கம்,

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

டிசம்பர் இறுதி வரையில் எனது உலகப் பிரசித்தி பெற்ற சோம்பேறித்தனம் காரணமாக எந்தப் பதிவும் இடவில்லை! நாளை முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்சுகள் இரண்டு ஆரம்பித்து விடுவதால் கண்டிப்பாக இனி டிசம்பரில் வேறெந்தப் பதிவையும் என்னால் இட இயலாது!

டிசம்பரில் வேறெந்த பதிவுகளும் இடாததாலும் இனி அடுத்து உங்களைப் புத்தாண்டில்தான் சந்திப்பேன் என்பதாலும் இந்த எக்ஸ்பிரஸ் பதிவு! இம்முறை வெறும் நியூஸ் மட்டும் போடாமல் சற்று வித்தியாசமாக சுவாரசியம் நிறைந்த சில பல துணுக்குகளுடன் உங்களை சந்திக்கிறேன்!

இவற்றைப் படிக்கும் போது உங்களுக்கும் உங்களது இளம்பிராயத்து நினைவுகள் அலைமோதலாம்! அப்படி மோதினால் பின்னூட்டம் மூலம் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

ஓகே! மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்கு போவோம்!

சுட்டி டிவியில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் பேட்டி:

சமீபத்தில் வெளிவந்த இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமானதே! இச்செய்திகளின் தொடர்ச்சியாக இதோ இன்று காலை முதல் தமிழின் நம்பர் ஒன் குழந்தைகளுக்கான சேனலான சுட்டி டிவியில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் பேட்டி ஒளிபரப்பாகிறது!

இப்பேட்டியானது சுட்டி டிவி நியூஸில் ஒரேயொரு நிமிடம் மட்டுமே வந்தாலும் கூட இவ்வளவு பெரிய நெட்வொர்க்கில் காமிக்ஸ் குறித்த செய்திகள் வருவதென்பது நம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் செய்தியென்பதால் பாராட்டத் தக்க விஷயமே!

இதோ அதற்கான காணொளி! இதனை வலையேற்றிய நண்பர் கிங் விஸ்வாவுக்கு நன்றிகள்!

சுட்டி டிவி நியூஸ் ( 25/12/2010) லயன் காமிக்ஸ் ஆசிரியர் S.விஜயன் பேட்டி

இச்செய்தியைத் தவற விட்டோர் கீழ்காணும் நேரங்களில் இன்று முழுவதும் சுட்டி டிவியில் கண்டு மகிழலாம்!

காலை : 6:55AM & 7:55AM IST

இரவு     : 10:25PM IST

அத்தோடு திங்களன்று (27/12/2010) வரும் குங்குமம் வார இதழில் வரவிருக்கும் ஜம்போ ஸ்பெஷல் குறித்த விரிவான காமிக்ஸ் செய்தியையும் தவறாமல் படியுங்கள்!

ஈரோடு பேருந்து நிலைய புத்தகக் கடை:

சிறு வயது நினைவுகளைத் தூண்டும் விஷயங்கள் குறித்த பதிவு இது என்று கூறியிருந்தேனல்லவா? இதோ முதல் விஷயம்!

ரொம்ப நாளாக நானும் கிங் விஸ்வாவும் பதிவிட எண்ணியிருந்த விஷயம் இது! தற்போதெல்லாம் தமிழ் காமிக்ஸ் கடைகளில் கிடைப்பதென்பது அரிதாகி விட்டது! பழைய புத்தகங்களை விடுங்கள்! புதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பதே பல நெடுநாள் வாசகர்களுக்கு தெரியாததால் பல வாசகர்களை நமது காமிக்ஸ்கள் இழக்க நேரிடுகின்றன!  இதில் புதிய வாசகர்களை வேறு எங்கிருந்து உருவாக்குவது!

முன்பெல்லாம் ஒவ்வொரு ஊரின் முக்கிய சாலைகளிலும் குறைந்த பட்சம் 5 நியூஸ்பேப்பர் கடைகளாவது இருக்கும்! சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களின் ஒவ்வொரு பகுதியிலும் குறைந்த பட்சம் 10 கடைகளாவது இருக்கும்! அவற்றில் எல்லாவற்றிலும் காமிக்ஸ் கிடைக்கும்! அது ஒரு பொற்காலம்!

ஒவ்வொரு நாளும் நான் பள்ளியிலிருந்து திரும்பும் போதும் தெருமுனையிலுள்ள இரண்டு புத்தகக் கடைகளிலும் தவறாமல் ஒரு பத்து நிமிடம் நோட்டம் விட்ட பின்புதான் வீட்டுக்கு செல்வேன்! பின்னர் கடைக்காரரிடம் சொல்லி புத்தகங்களைப் பதுக்கி வைத்து விடுமுறையின் போது வீட்டில் அடம் பிடித்து காசு வசூல் செய்து வாங்கிப் படிப்பது வழக்கம்!

ஆனால் தற்போது பெட்டிக்கடைகள் எண்ணிக்கையில் குறைந்து விட்ட நிலையில், பத்து கடைகள் இருந்த இடத்தில் ஒரேயொரு கடை இருந்தால் கூட பெரிய விஷயம் என்ற நிலையில், அதுவும் காமிக்ஸ் புத்தகங்கள் அங்கு கிடைக்க வேண்டுமெனும் பொழுது அது சற்று மலைப்பான விஷயமாகவே உள்ளது! 

இதை மனதில் கொண்டே ஒவ்வொரு ஊரிலும் புதிய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் குறித்து தொடர்ந்து பதிவிடுவது என்று நானும் கிங் விஸ்வாவும் 2008ல் எங்கள் வலைப்பூக்கள் முறையே ஆரம்பித்த போதே முடிவெடுத்தோம்! ஆனால் வழக்கம் போலவே இன்று வரை ஒரு பதிவு கூட உருப்படியாக இடவில்லை!  இதோ அந்த முயற்சியில் வரும் முதல் பதிவு!

கோவை வாசியான நான் விடுமுறைக் காலங்களில் எனது தாத்தா/பாட்டி ஊரான ஈரோட்டுக்குச் செல்வது வழக்கம்! விடுமுறையில் மாலை வேளைகளில் தினந்தோறும் தவறாமல் எனது தாத்தாவுடன் வாக்கிங் கிளம்பி விடுவேன்! வேறெதற்கு?!! புத்தக வேட்டைக்குத்தான்!

வாக்கிங் போகும் வழியிலுள்ள அத்தனை புத்தகக் கடைகளிலும் நோட்டம் விட்டு தினசரி ஒரு புத்தகம் வீதம் வாங்கி விடுவேன்! விடுமுறை முடியும் முன் எப்படியும் கையில் பத்து புத்தகங்களாவது இருக்கும்! இவையெல்லாம் அப்போது புதிதாக கடைகளுக்கு வந்த புத்தகங்கள் என்பதை நினைவில் கொள்ளவும்! விடுமுறை என்பதால் முந்தைய மாத வெளியீடுகளையும் கடைக்காரர்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்!

ஆனால் இப்போது அந்தக் கடைகள் ஏதும் இல்லை! ஒன்றைத் தவிர!

ஈரோட்டில் அப்போதும் இப்போதும் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கச் சிறந்த இடம் பேருந்து நிலையத்திலுள்ள புத்தகக் கடையே! இங்கு நான் வாங்கிய பல காமிக்ஸ்கள் இன்னும் பசுமையாக நினைவுள்ளன! முக்கியமாக மினி லயன் வெளியீடுகளான புதிர் குகை! விற்பனைக்கொரு ஷெரீஃப்!  ஆகியவை இன்னும் மனதில் நிற்கின்றன! 

இந்தப் புத்தகக் கடையின் சிறப்பு என்னவென்றால் வேறெந்த ஊரிலும் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் முன் இங்கு விற்பனைக்கு வந்து விடும்! விடுமுறையில் ஈரோட்டில் வாங்கிய புத்தகங்கள் கோவைக்கு வருவதற்கு குறைந்தது ஒரு மாதமாவது ஆகி விடும்!

ஒரு முறை வழக்கமாக விடுமுறைக்கு வரும் கோடை மலர் ஒன்றை தேர்வுகள் நடக்கும் போதே ஈரோட்டில் எனது தாத்தா வாங்கி எனது தந்தை மூலம் அனுப்பி வைத்தார்! பிறகென்ன தேர்வுக்குப் படித்த மாதிரிதான்! நல்லவேளை பரீட்சையில் நான் கோட்டை விடவில்லை! இல்லையேல் அன்றோடு எனது காமிக்ஸ் சகாப்தம் முடிந்திருக்கும்!

அதெப்படி கோவையில் புத்தகங்கள் கிடைக்கும் முன்னரே ஈரோட்டில் புத்தகங்கள் கிடைக்கின்றன என நான் பல நாட்கள் வியந்திருக்கின்றேன்! சமீபத்தில் தான் அதற்கு விடை கிடைத்தது!

சிவகாசியிலிருந்து கட்டு கட்டாக வரும் புத்தகங்கள் நேராக ஈரோடு பேருந்து நிலையத்தில்தான் இறக்கி வைக்கப்படுகின்றன! இங்கிருந்து தான் கோவை, திருப்பூர், சேலம் போன்ற நகரங்களுக்கு புத்தகங்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன! சென்னைக்கே கூட இங்கிருந்துதான் புத்தகங்கள் செல்வதாகக் கேள்வி! இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை! சிவகாசியிலிருந்து ஈரோட்டுக்கு தினசரி நேரடிப் பேருந்து வசதியிருப்பதாலேயே இது சாத்தியப் படுகிறது!

டிஸ்ட்ரிப்யூஷனில் உள்ள கட்டமைப்புகள் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லாததால் இது குறித்து நண்பர் கேப்டன் ஹெச்சை மேலும் விளக்கினால் நலம்! 

இதனால் ஈரோடு வாசகர்களுக்கு சந்தாதாரர்களுக்கு முதல் புத்தகம் அனுப்பப்பட்டவுடனேயே அதிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே புத்தகம் கிடைத்து விடுகிறது! ஹ்ம்ம்ம்! கொடுத்து வைத்தவர்கள்! கோவைக்கு புத்தகம் வர ஒரு மாதமாவது ஆகிறது!

DSC01328

ஈரோடு பேருந்து நிலைய புத்தகக் கடை!

முன்பு நான்கைந்து கடைகள் இருந்த இடத்தில் இப்போது ஒரேயொரு கடைதான் உள்ளது! புத்தகக் கடைகளுக்குப் பதில் பேக்கரிகள் முளைத்து விட்டன! ஆனால் இன்றளவிலும் ஈரோடு வாசகர்களுக்கு மற்ற ஊர்களுக்கு முன் காமிக்ஸ் புத்தகங்களை முந்தி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது ஈரோடு பேருந்து நிலைய புத்தகக் கடை!

அடுத்த முறை நீங்கள் ஈரோடு செல்ல நேர்ந்தால் தவறாமல் ஒரு முறையேனும் இந்தப் புத்தகக் கடையினுள் எட்டிப்பாருங்கள்! புதிதாக காமிக்ஸ் ஏதேனும் வந்திருக்கக் கூடும்!

உங்கள் ஊரிலும் இது போல் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் உள்ளனவா? அப்படியென்றால் தெளிவான முகவரி, புகைப்படம் இவற்றுடன் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்களேன்! தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகம் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கும்!

காமிக்ஸ் புத்தககங்கள் கிடைக்கும் கடைகள் குறித்த கிங் விஸ்வாவின் முந்தைய பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் இலவச இணைப்பு:

சிறு வயது நினைவுகளில் மூழ்க இதோ இன்னுமொரு சமாச்சாரம்!

சென்ற வருடம் இதே சமயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பதிவு! ஒன்றை வெளியிட்டோம்! அதைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

அப்பதிவில் முத்து காமிக்ஸ் # 180 – ஆழ்கடல் அதிரடி! குறித்து விரிவாக அலசியிருப்போம்! ஆனால் அச்சமயத்தில் வெளியிடாத ஒரு தகவலும் உண்டு! அது அப்புத்தகத்துடன் வழங்கப்பட்ட இலவச இணைப்பேயாகும்! அப்போது அந்த இலவச இணைப்பு என்னிடம் கைவசம் இல்லை!

Muthu Comics # 180 - Christmas Special

நெடுநாட்கள் ஆகிவிட்ட படியால் அது என்ன இலவச இணைப்பு என்பதும் எனக்கு ஞாபகம் வரவில்லை! ஆனால் சமீபத்தில் நண்பர் முத்து விசிறியின் உபயத்தால் அந்த இலவச இணைப்பின் ஸ்கேன்கள் சிக்கின! அவருக்கு எனது நன்றிகள்!  

பாக்கெட் சைஸுக்குத் தோதாக எட்டாக மடிக்கப்பட்ட இரு வண்ண அச்சில் ஒரு காகிதம்! அதில் முன் பின் அட்டைப்படங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா! உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் சில புதிர்கள்! முழுவதுமாக விரித்தால் ஒரு பகுதியில் இரும்புக்கை மாயாவியும், C.I.D.லாரன்ஸ்-ம் கொண்ட ஒரு தாய விளையாட்டு! இப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்டதொரு இலவச இணைப்பு!

கண்டதும் அப்படியே சிறு வயது நினைவுகளில் மூழ்கி விட்டேன்! இந்த தாய விளையாட்டை அப்போது எத்தனை முறை உருட்டி விளையாண்டிருப்பேன் என்று எனக்கே நினைவில்லை! பின்னர் எப்படியோ தொலைந்து விட்டது! மீண்டும் நினைவு படுத்திய நண்பர் முத்து விசிறிக்கு நன்றிகள்! 

இந்த அற்புத இலவச இணைப்பின் ஸ்கேன்களை வெளியிட இதை விட சிறந்த சந்தர்ப்பம் வேறேதும் சிக்காதென்பதால் இதோ அந்தக் கண்கொள்ளா ஸ்கேன்கள் உங்கள் பார்வைக்கு!

Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 1Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 2Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 3Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 4

படங்களைக் ‘க்ளிக்’ செய்து பெரிதாக்கிப் பார்த்து மகிழவும்!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்!  உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:-

XIII ஜம்போ ஸ்பெஷல் குறித்த செய்திகள்/பதிவுகள்:

பிற XIII பதிவுகள்:

மங்கூஸ் சித்திர நாவல்:

XIII ஜம்போ ஸ்பெஷல் வருவதில் தாமதம் குறித்த புலம்பல்/அலம்பல் பதிவுகள்:

CINEBOOK வெளியிட்டு வரும் XIII ஆங்கிலத் தொடர் குறித்த செய்திப் பகிர்வுகள்:

XIII காமிக்ஸ் ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய:

XIII COLLECTOR’S EDITION WIDGET-ஐ உங்கள் வலைத்தளத்தில் இணைக்க:

Thursday, December 24, 2009

கிறிஸ்துமஸ் சிறப்புப் பதிவு!

வணக்கம்,

அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! வழக்கமாக விடுமுறை தின சிறப்புப் பதிவுகளை குறைந்த பட்சம் ஒரு வாரமாவது லேட்டாக வெளியிடும் நான் ஒரு மாறுதலுக்காக இம்முறை ஒரு நாள் முன்பே பதிவை வெளியிடுகிறேன்! படித்து மகிழுங்கள்!

கிறிஸ்துமஸ் சிறப்புப் பதிவாக நமது காமிக்ஸ்களில் வெளிவந்த மிகக் குறைவான சில கிறிஸ்துமஸ் கதைகளையும், சிறப்பிதழ்களையும் காண்போம்!

ராணி காமிக்ஸ் # 038 - சூப்பர் ஹீரோ டைகர் தூள் பறத்தும் கிறிஸ்துமஸ் பரிசு! (ஜனவரி 15-31, 1986)

பொங்கல் மலர்-ஆக வெளிவந்த ராணி காமிக்ஸ் # 038 – கொள்ளைக் கூட்டம்! இதழில் வெளிவந்த ஒரு சிறுகதை! ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களின் EDITOR’S TOUCH - ஆக பொங்கல் மலர்-ல் வழக்கம் போல இந்திய நாயகர்கள் இன்ஸ்பெக்டர் ஆசாத் மற்றும் மன்னர் பீமா ஆஜர்! கூட போனஸாக சூப்பர் ஹீரோ டைகர் தூள் பறத்தும் கிறிஸ்துமஸ் பரிசு! என்னும் சாகஸ சிறுகதை!

கதை முழுவதும் உங்கள் பார்வைக்கு! படித்து மகிழவும்!

Rani Comics # 038 - Kollai KoottamRani Comics # 038 - Christmas Parisu - Page 03Rani Comics # 038 - Christmas Parisu - Page 04Rani Comics # 038 - Christmas Parisu - Page 05Rani Comics # 038 - Christmas Parisu - Page 06Rani Comics # 038 - Christmas Parisu - Page 07Rani Comics # 038 - Christmas Parisu - Page 08Rani Comics # 038 - Christmas Parisu - Page 09Rani Comics # 038 - Christmas Parisu - Page 10

மினி லயன் # 024 - கிறிஸ்துமஸ் கனவுகள்! (ஃபிப்ரவரி 1990)

மினி லயன் # 024 – இரத்த வெறி..!-ல் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் அங்கிள் ஸ்க்ரூஜ்-ன் கிறிஸ்துமஸ் கனவுகள் எனும் சிறுகதையை வெளியிட்டிருந்தார்! நமது பதிவு போல் அல்லாமல் இவ்வி்ரு கதைகளும் மிகத் தாமதமாகவே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

Mini Lion # 24 - Iratha VeriMini Lion # 24 - Christmas Kanavukal

கதையின் ஆங்கில மூலம் முழுவதும் உங்கள் பார்வைக்கு! என்சாய்!

Uncle_Scrooge_137_01_FCUncle_Scrooge_137_25Uncle_Scrooge_137_26Uncle_Scrooge_137_27Uncle_Scrooge_137_28Uncle_Scrooge_137_29Uncle_Scrooge_137_31Uncle_Scrooge_137_32Uncle_Scrooge_137_33

அங்கிள் ஸ்க்ரூஜ் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

முத்து காமிக்ஸ் # 180 - கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! (டிசம்பர் 1990)

நானறிந்தவரையில் நமக்கு பரிச்சயமான் காமிக்ஸ் குழுமங்களின் சரித்திரத்தில் வெளிவந்த ஒரே கிறிஸ்துமஸ் சிறப்பிதழ் இதுதான்! தவறாகவும் இருக்கலாம்! இருப்பின் சுட்டிக் காட்டிட மறந்து விட வேண்டாம்!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்-ன் வெளியீட்டின் பின் ஒரு சரித்திரமே உள்ளது! மே 1989-ல் கோடை மலர் ஆக முத்து காமிக்ஸ் # 176 – சம்மர் ஸ்பெஷல்! வெளியிட்டு வெற்றியும் பெற்ற கையோடு முத்து காமிக்ஸ் # 177 – இரத்தப் பாதை!-ல் தீபாவளி மலர் குறித்து விளம்பரம் செய்தார் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள்!

Muthu Comics # 177 - Iratha PaadhaiMuthu Comics # 177 - Iratha Paadhai -  Deepaavali Special - Ad

ஆனால் அடுத்த இதழான முத்து காமிக்ஸ் # 178 – சிங்கத்தின் குகையில்! இதழில் விளம்பரத்தில் சில மாற்றங்கள் செய்தார்! ஜெஸ் லாங் தோன்றும் நெருப்பின் நிழலில்! கதையை இந்த இதழிலிலேயே வெளியிட்டு விட்டார் ஆசிரியர்! ஆகையால் இரவு மனிதன்! என்ற வேறொரு கதையை விளம்பரம் செய்தார்!

அதே போல் இரும்புக்கை மாயாவி தோன்றும் கண்ணீர்த் தீவில் மாயாவி! கதைக்கு பதில் பச்சை வானம் மர்மம்! எனும் கதை விளம்பரம் செய்யப்பட்டது! பின்னர் பொங்கல் மலர்-ஆக முத்து காமிக்ஸ் # 181 – கண்ணீர்த் தீவில் மாயாவி (ஜனவரி 1990) வெளியிடப் பட்டது!

Muthu Comics # 178 - Singathin GuhaiyilMuthu Comics # 178 - Singathin Guhaiyil - Deepaavali Special - AdMuthu Comics # 181 - Kanneer Theevil Mayavi

ஆனால் அக்டோபர் 1989-ல் தீபாவளி மலர்-ஆக வந்ததோ ரூ:2.50/- விலையில் ஒரேயொரு கதை மட்டுமே அடங்கிய முத்து காமிக்ஸ் # 179 - பச்சை வானம் மர்மம்! இது குறித்து ஹாட்-லைன்-ல் ஆசிரியர் கூறியிருப்பதை கவனியுங்கள்!

Muthu Comics # 179 - Pachai Vaanam MarmamMuthu Comics # 179 - Pachai Vaanam Marmam - EditorialMuthu Comics # 179 - Pachai Vaanam Marmam - Next Issue Ad

அடுத்த வெளியீட்டை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்-ஆக அறிவித்தார் ஆசிரியர்! ஆனால் அடுத்த வெளியீடாக யுத்த வியாபாரிகள்! எனும் ஜான் சில்வர் சாகஸத்தை ரூ:2.50/- விலையில் வெளிவருவதாக விளம்பரம் செய்துள்ளார்! CONFUSED?!! YOU WILL BE!!!

ஒரு வழியாக டிசம்பர் 1989-ல் முத்து காமிக்ஸ் # 180 – ஆழ்கடல் அதிரடி! கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்-ஆக வெளிவந்தது! உள்ளே என்னென்ன கதைகள் வந்தன என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்!

  • கதை # 1 : ஆழ்கடல் அதிரடி! (இரகசிய ஏஜெண்ட் டேவிட் சாகஸம்)
  • கதை # 2 : விச்சு & கிச்சு!
  • கதை # 3 : இரவு மனிதன்! (ஜெஸ் லாங் சாகஸம்)
  • கதை # 4 : யுத்த வியாபாரிகள்! (ஜான் சில்வர் சாகஸம்)
  • கதை # 5 : மாயாவியுடன் ஒரு மினி! (இரும்புக்கை மாயாவி சாகஸம்)
  • கதை # 6 : ஐஸ் பெட்டியில் ஒரு பிணம்! (இன்ஸ்பெக்டர் கருடா சாகஸம்)

விளம்பரப்படுத்தப்பட்ட அதிமேதை அப்பு காணாமல் போயிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்! நிகழ்ந்த பல மாற்றங்களில் இதுவும் ஒன்று! இனி இவற்றை ஒவ்வொன்றாக விரிவாகக் காண்போம்!

அட்டைப்படம்:

அட்டைப்படத்தின் முதுகில் நீங்கள் காணும் கருப்படிக்கப்பட்டப் பகுதியில் ஒரிஜினலாக தீபாவளி ஸ்பெஷல்! என்று அச்சடிக்கப்பட்டிருந்தது! ஸ்கேனில் தெளிவாகக் காண இயலாதெனினும் புத்தகம் கையிலிருப்போர் இதைக் கண்கூடாகக் காணலாம்! மற்றபடிக்கு அட்டைப்படத்தின் தரம் A1! கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள், பாக்கெட் சைஸ் என்று இந்த புத்தகத்தின் பல ஹை-லைட்களில் அட்டைப்படமும் ஒன்று!

Muthu Comics # 180 - Christmas Special

இனி கதைகளை ஒவ்வொன்றாகக் காண்போம்!

கதை # 1 : ஆழ்கடல் அதிரடி!

பெயருக்கு ஏற்றார் போல் கதையில் அதிரடிக்குப் பஞ்சமில்லை! இரகசிய ஏஜெண்ட் டேவிட் இதற்கு முன் முத்து காமிக்ஸ் # 178 - சிங்கத்தின் குகையில்! சாகஸம் செய்த பிறகு மீண்டும் ஒரு அற்புதக் கதையில் அசத்துகிறார்! இவரைக் குறித்த தீவிரமான அலசல் செய்யும் ஒரு பதிவு விரைவில் அ.கொ.தீ.க.வில் வெளிவரும்!

Muthu Comics # 180 - Christmas Special - Story # 1 - Aazkadal Adhiradi (Spy 13) 

இரண்டாம் உலக யுத்தம் சமயத்தில் நடப்பதாக அமைக்கப் பட்டிருக்கும் கதை என்பதால் வழக்கம் போல நாஜிக்களின் சதிச்செயலை முறியடிக்கும் கதைதான் எனினும், கதையின் ஹீரோ தசாவதாரம் கமல் போல நிமிடத்திற்கொரு கெட்டப் மாற்றி நாஜிக்களை மட்டுமன்றி நமது காதிலும் பூ சுற்றுகிறார்! ஆனால் கதையின் வேகம் காரணமாக இது போன்ற லாஜிக் மீறல்கள் பெரிதாக உறுத்தவில்லை!

கதை # 2 : விச்சு & கிச்சு!

விச்சு & கிச்சு-வின் வழக்கமான காமெடி கலாட்டா! படித்து மகிழுங்கள்!

Muthu Comics # 180 - Christmas Special - Story # 2 - Vichu  & Kichu (Sporty & Sydney)

விச்சு  & கிச்சு பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

கதை # 3 : இரவு மனிதன்!

ஜெஸ் லாங்-கின் மற்றுமொரு க்ரைம் த்ரில்லர்! இரவு நேரங்களில் தெருக்களில் சுற்றித் திரியும் ஒரு சைக்கோவைப் பற்றிய கதை! நிஜ சம்பவங்களின் அடிப்படையில் கதை எழுதப் பட்டிருப்பது சிறப்பு! தெளிவான ஒவியங்கள் ப்ளஸ் பாயிண்ட்!

Muthu Comics # 180 - Christmas Special - Story # 3 - Iravu Manidhan (Jess Long)Jess Long Issue No 3 CoverJess Long Issue No 3 Page 33

ஜெஸ் லாங் குறித்து மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

கதை # 4 : யுத்த வியாபாரிகள்!

ஜான் சில்வர்-ன் மேலுமொரு அதிரடி ஆக்‌ஷன் கதை! ஒரு கூலிப்படையைத் தனி ஒருவராக ஜான் சில்வர் எவ்வாறு அழிக்கிறார் என்பதுதான் கதை! இதில் சுவாரசியமான விஷயம் வில்லன்களின் பெயர்கள்தான்! சார்ஜெண்ட் சனியன், கர்னல் எமன் என்று பெயராலேயே நம்மை மிரட்டுகிறார்கள்! இவை யாவும் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறனுக்கு சான்று!

Muthu Comics # 180 - Christmas Special - Story # 4 - Yudhdha Viyaabaarigal (John Havoc)Top Secret Picture Library No. 2 - Operation ScorpionTop Secret Picture Library No. 2 - Operation Scorpion - Page 3

ஜான் சில்வர் குறித்து ஒரு  சிறப்புப் பதிவு வகு விரைவில் உங்கள் அபிமான அ.கொ.தீ.க. வலைத்தளத்தில் வெளிவரும்! அதுவரை காத்திருக்கவும்!

கதை # 5 : மாயாவியுடன் ஒரு மினி!

சிறப்பிதழ் என்றால் இரும்புக்கை மாயாவி கதை இல்லாமலா! சாகஸ சிறுகதை மூலம் நம்மையெல்லாம் பரவசப் படுத்துகிறார் மாயாவி! வழக்கம் போல உலகையே அச்சுறுத்தும் ஒரு கிறுக்கு விஞ்ஞானியை எதிர்க்கிறார் மாயாவி! இடையில் இரும்புக்கரத்தின் அனைத்து சக்திகளையும் உபயோகிக்கும் வாய்ப்பும் அமைகிறது!

Muthu Comics # 180 - Christmas Special - Story # 5 - Mayaviyudan Oru Mini (Steel Claw)

கதை # 6 : ஐஸ் பெட்டியில் ஒரு பிணம்!

இன்ஸ்பெக்டர் ஈகிள்-ன் துப்பறியும் திறனும் ஹவில்தார் நாயக்கின் காமெடியும் நிறைந்த சிறுகதை! இவர்கள் குறித்த ஒரு சிறப்புப் பதிவை பொங்கலுக்குள் எதிர்பாருங்கள்!

Muthu Comics # 180 - Christmas Special - Story # 6 - Ice Pettiyil Oru Pinam (Inspector Garuda)

இன்ஸ்பெக்டர் ஈகிள் குறித்து நண்பர் ஷிவ் இட்டுள்ள பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

புத்தகம் : கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!
இதழ் : முத்து காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு # : 180
முதல் பதிப்பு : டிசம்பர் 1989
பதிப்பாசிரியர் : M.சவுந்திரபாண்டியன்
பொறுப்பாசிரியர் : S.விஜயன்
தமிழில் : S.விஜயன்
பக்கங்கள் : 240 (கருப்பு வெள்ளை)
சைஸ் : 9.5cmx13.5cm (பாக்கெட் சைஸ்)
விலை : ரூ:5/- (1989 முதல் பதிப்பின் போது)

Muthu Comics # 180 - Christmas Special - Credits

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு:

வரும் வாரங்களில் அ.கொ.தீ.க. மிகவும் பிஸியாக இருக்கும்! சராமரியாக சிறப்புப் பதிவுகள் உங்களை வந்து தொடர்ந்து தாக்கும்! அவை குறித்த ஒரு சிறு முன்னோட்டம்!

  • டிசம்பர் 26-ம் தேதி அமரர் எம்.ஜி.ஆர்.ன் நினைவு தினம்! அது குறித்த ஒரு வித்தியாசமான சிறப்புப் பதிவு வரும் வார இறுதியில் வெளிவரும்!
  • புத்தாண்டு, பொங்கல் முன்னிட்டு சிறப்புப் பதிவுகளும் தயாராகி வருகின்றன! பதிவு மழை உஷார்!
  • வலையுலகமே வேட்டைக்காரன் திரைப்படத்தினால் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது! நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஓடு! ஓடு! ஓடு! ஓடு! ஓடு! ஓடு! ஓடு! ஓடு!
வர்றான் பாரு வேட்டைக்காரன்!

தொடர்புடைய இடுகைகள்:

பிற சிறப்பிதழ்கள்:

ஜெஸ் லாங் பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:

விச்சு & கிச்சு பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:

இன்ஸ்பெக்டர் ஈகிள் குறித்து நண்பர் ஷிவ் இட்டுள்ள இடுகை: