வணக்கம்,
ஜூலை மாதம் வந்தாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது நமது அபிமான லயன் காமிக்ஸின் ஆண்டு மலரும் வழக்கமாக ஆண்டு மலரில் வரும் மாடஸ்டி கதைகளும் தான்! இந்த ஜூலையில் தனது 26வது பிறந்த நாளைக் கொண்டாடும் லயன் காமிக்ஸிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் அமைந்ததே இந்த சிறப்பு ஆண்டு மலர் பதிவு!
1984-ல் தொடங்கிய நமது அபிமான லயன் காமிக்ஸின் சகாப்தம் தற்போது பல முட்டுக்கட்டைகளைச் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி மென்மேலும் வளர இத்தருணத்தில் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்! லயன் காமிக்ஸ் மூலம் நமக்கு தொடர்ந்து மகிழ்வூட்டி வரும் நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களையும் இத்தருணத்தில் பாராட்டுவோம்!
சுவாரசியமான துணுக்குகள்:
- ஆண்டு மலர் என்றாலே நம் நினைவுக்கு வரும் மாடஸ்டி பிளைஸி இதுவரை மூன்றே மூன்று ஆண்டு மலர்களில் தான் சாகஸம் புரிந்துள்ளார் என்பது ஆச்சரியமளிக்கிறது! லயன் காமிக்ஸ் முதல் இதழில் தோன்றியது முதல் ஆஸ்தான நாயகியாக விளங்கும் மாடஸ்டியை நாம் லயன் காமிக்ஸின் ஆரம்ப காலத்தில் வந்த ஆண்டு மலர்களில் படித்து மகிழ்ந்த காரணத்தினாலோ என்னவோ ஆண்டு மலர் என்றாலே மாடஸ்டி என்கிற எண்ணம் நம் ஆழ்மனதில் வேரூன்றி விட்டதோ?!!
- இதுவரை ஆண்டு மலரில் அதிகமாகத் தோன்றி சாகஸம் புரிந்தது வழக்கம் போல டெக்ஸ் வில்லர் தான்! அடுத்தபடியாக லக்கி லூக் அதிக சாகஸங்கள் புரிந்திருக்கிறார்!
- 1985 முதல் வருடந்தவறாது வெளிவந்து கொண்டிருந்த ஆண்டு மலர் 2004-ல் தான் முதன் முதலாக வராமல் போனது! அதற்கு காரணம் மே 2004-ல் வந்த மெகா-ட்ரீம் ஸ்பெஷல் தான்!அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வரும் ரூ:100/- விலையிலான ஸ்பெஷல்கள் ஆண்டு மலர்களை கபளீகரம் செய்து விடுவது வழக்கமாகி விட்டது!
- ஆண்டு மலரில் பல சமயங்களில் காணாமல் போய்விட்ட பழைய ஹீரோக்கள் திடீரென வந்து நம்மை திக்குமுக்காடச் செய்வர் (உதா: இரும்புக்கை நார்மன், ஆக்ஷன் ஹீரோ சைமன், இரகசிய ஏஜெண்ட் காரிகன், கேப்டன் பிரின்ஸ்...)!
பட்டியல்:
இது வரை வெளிவந்த லயன் காமிக்ஸ் ஆண்டு மலர்களின் பட்டியல் இதோ! விளம்பரப்படுத்தப்பட்டு வெளிவராத ஆண்டு மலர்களும், ஜூலை மாதம் வந்திட்ட பிற இதழ்களும் இதில் அடக்கம்!
ஆண்டு மலர் | வருடம் | TITLE | Issue # | விலை | குறிப்புகள் |
0 | 1984 | கத்தி முனையில் மாடஸ்டி பிளைஸி | 001 | ரூ:2/- | இங்கு தான் எல்லாம் ஆரம்பித்தது! |
1 | 1985 | சைத்தான் விஞ்ஞானி! + குதிரை வீரன் ஆர்ச்சி! | 015 | ரூ:3/- | ஸ்பைடர் + ஆர்ச்சி = மாபெரும் வெற்றி! |
2 | 1986 | பவளச்சிலை மர்மம்! | 027 | ரூ:3/- | டெக்ஸ் வில்லரின் சாகஸங்களில் இது தலையானது! |
3 | 1987 | அதிரடிப் படை! | 039 | ரூ:3/- | அற்புதமான கதைத் தொடர்! அருமையான ஓவியங்கள்! இத்தொடர் குறித்து விரைவில் பதிவிடுகிறேன்! |
4 | 1988 | கானகத்தில் கண்ணாமூச்சி! | 052 | ரூ:2.50/- | மாடஸ்டி + போனஸ் ஆக்ஷன் கதை! சூப்பர் கதையை எப்படி சொதப்புவதென்று வயிரக்கண் பாம்பு கூறும்! |
5 | 1989 | நடுக்கடலில் அடிமைகள்! | 062 | ரூ:3/- | மாடஸ்டி + போனஸ் டெக்ஸ் வில்லர் (?!!) சிறுகதை! |
6 | 1990 | எமனுடன் ஒரு யுத்தம்! | 070 | ரூ:3/- | டெக்ஸ் வில்லர் குழுவின் ஆக்ஷன் அதிரடி! 3வது பக்கத்திலேயே ‘டுமீல்!’ சத்தம் தொடங்கிவிடும்! கதை முடியும் வரை ஓயாது! |
7 | 1991 | மர்ம முகமூடி! | 077 | ரூ:3/- | இரகசிய ஏஜெண்ட் காரிகன் சாகஸம்! |
8 | 1992 | மின்னலோடு ஒரு மோதல்! | 084 | ரு:3/- | ஆக்ஷன் ஹீரோ சைமன் சாகஸம்! இவர் குறித்து விரைவில் ஒரு முழு நீள பதிவிடுகிறேன்! |
9 | 1993 | கானகக் கோட்டை! | 091 | ரூ:3.50/- | ரிப் கிர்பியின் அற்புத சாகஸம்! |
10 | 1994 | மந்திர மண்ணில் மாடஸ்டி! | 102 | மீண்டும் மாடஸ்டி! | |
11 | 1995 | பூம்-பூம்-படலம்! | 114 | ரூ:5.50/- | லக்கி லூக்கின் இருவண்ண சாகஸம்! |
12 | 1996 | இரத்தப் படலம்! 6 | 122 | ரூ:7.50/- | XIII-ன் கண்ணீர் காவியம்! எனக்கு மிகவும் பிடித்த பாகம்! |
13 | 1997 | மிஸ்டர் மஹாராஜா! | 133 | ரூ:5/- | சிக்-பில், டெக்ஸ் என இரு சர்ப்ரைஸ் கதைகள்! நீண்ட இடைவெளிக்குப் பின் நான் மீண்டும் ரெகுலராக காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது இந்த இதழ் முதல்தான்! |
14 | 1998 | கானகத்தில் கலவரம்! | 142 | ரூ:7.50/- | கேப்டன் பிரின்ஸ்-ன் கடைசி சாகஸச் சிறுகதை! லக்கி லூக்கின் இருவண்ண போனஸ் சாகஸமும் உண்டு! |
15 | 1999 | தலை வாங்கும் தேசம்! | 151 | ரூ:6/- | ரொம்ப நாள் விளம்பரத்திற்குப் பின் வந்த சிக்-பில் குழுவினரின் முழு நீள காமெடி கலாட்டா! |
16 | 2000 | இரத்த பூமி! | 162 | ரூ:7/- | வித்தியாசமான கெள-பாய் கதை! |
17 | 2001 | மெக்ஸிகோ படலம்! | 169 | ரூ:10/- | டெக்ஸ் வில்லரின் வழக்கமான அதிரடி ஆக்ஷன்! |
18 | 2002 | பயங்கரப் பயணிகள்! | 173 | ரூ:10/- | மொக்கை டெக்ஸ் வில்லர் கதையின் சுமாரான முதல் பாகம்! லயன் காமிக்ஸின் மறுமலர்ச்சி காலத்தில் வந்திட்ட முதல் ஆண்டு மலர்! |
19 | 2003 | பரலோகத்திற்கொரு பாலம்! | 181 | ரூ:10/- | லக்கி லூக்கின் முழு நீள வண்ண கார்ட்டூன்! |
20 | 2004 | ஆண்டு மலர் எதுவும் வெளியிடப்படவில்லை! | |||
21 | 2005 | கோட்-நேம் மின்னல்! | ரூ:10/- | விளம்பரப்படுத்தப்பட்டது! ஆனால் வெளிவரவில்லை! | |
22 | 2006 | சூ-மந்திரகாளி...! | 196 | ரூ:10/- | லக்கி லூக்கின் முழு நீள வண்ண கார்ட்டூன்! |
23 | 2007 | காட்டேரிக் கானகம்! | ரூ:10/- | மீண்டும் மாடஸ்டி! ஆண்டு மலர் என விளம்பரப்படுத்தப்பட்டது! ஆனால் மிகத் தாமதமாக நவம்பரில் தான் வந்தது! ஜூலையில் டெக்ஸ் வில்லர் (காலன் தீர்த்த கணக்கு..!) தான் தாமதமாக வந்தார்! | |
24 | 2008 | மரணத்தின் முன்னோடி! | 203 | ரூ:10/- | டெக்ஸ் வில்லர் சாகஸம்! ஜுலையில் வந்தாலும் ஆண்டு மலர் என குறிப்பிடவில்லை! |
25 | 2009 | மாண்டவன் மீண்டான்! | 206 | ரூ:10/- | இரகசிய ஏஜெண்ட் காரிகன் மறுபிரவேசம்! 25வது ஆண்டு மலர்! திடீரென வந்து திக்குமுக்காடச் செய்தது! |
26 | 2010 | இதுவரையில் எதுவும் வரவில்லை! |
விளம்பரம்:
ஆண்டு மலர் என்றாலே நம் கண் முன் விரியும் காட்சி அநேகமாக இந்த விளம்பரமாகத் தான் இருக்க முடியும்! அப்படி நம் உள்மனதில் ஊறிவிட்ட அந்த விளம்பரத்தின் முதல் பிரதி இதோ உங்கள் பார்வைக்கு!
அட்டைப்படங்கள்:
இதுவரை வெளிவந்த ஆண்டு மலர் அட்டைப்படங்களின் கண்கவர் அணிவகுப்பு இதோ! இதுவரை வெளிவராத, ஜூலையில் வந்த ஆனால் ஆண்டு மலர் என்ரு விளம்பரப்படுத்தப்படாத, ஆண்டு மலர் என்று அறிவித்து தாமதமாக வந்த கதைகளின் அட்டைப்படங்களும் அடக்கம்!
அட்டைப்படங்கள் உபயம்:
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:
மாடஸ்டி பிளைஸி குறித்து கிங் விஸ்வாவின் இடுகை:
கோட்-நேம் மின்னல் குறித்து கனவுகளின் காதலரின் இடுகை:
மாடஸ்தி குறித்து ஒலக காமிக்ஸ் ரசிகரின் இடுகை:
டெக்ஸ் வில்லர் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு: