“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”
வணக்கம்,
நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவராக சிறப்பாகப் பணிபுரிந்து வரும் திரு.ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்கள் அவ்வப்போது எனக்கு அனுப்பும் ரகசியத் தகவல்களில் ‘லார்கோ வின்ச்’ எனும் காமிக்ஸ் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
இத்தொடரை உருவாக்கியவர் நமக்கெல்லாம் ஏற்கெனவே பரிச்சயமான XIII-ஐ உருவாக்கிய அதே வான் ஹாம்மே தான். இதன் ஆங்கிலப் பதிப்பை நான் சில மாதங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. வான் ஹாம்மேவின் எழுத்தின் ரசிகர்களை இத்தொடர் நிச்சயம் கவரும்.
மேற்கூறிய வாசகத்தை எண்ணி (சொன்னது யாரு?) நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவரை இதைப் பற்றி ஒரு இடுகையிடுமாறு பணித்தேன்! அந்த இடுகை இதோ உங்கள் பார்வையில்! ஆங்காங்கே நானும் கொஞ்சம் “மானே! தேனே! பொன்மானே!” எல்லாம் போட்டுள்ளேன்!
எனது மொக்கை போதும். ஓவர் டு ஷங்கர் விஸ்வலிங்கம்!
லார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி
-ஷங்கர் விஸ்வலிங்கம்
தெருக்களை ஈரம் காய அனுமதிக்காத குளிர்,பெய்வதே தெரியாது தூவிக்கொண்டிருக்கும் சாரல், ஹைக்கூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகள். பிரகாசமாக ஒளியூட்டப்பட்ட புத்தகசாலைகளின் கண்காட்சி தட்டுக்களில் சம்மணமிட்ட நிலையில், இறுதியாக வந்துள்ள தன் ஆல்பத்தின் அட்டையில் தியானத்தில் ஆழ்ந்துள்ள லார்கோ வின்ச் (LARGO WINCH). சலிப்பான இவ்விலையுதிர் காலம் லார்கோவின் ரசிகர்களிற்கு உவப்பானதாக அமையும் என்பது நிச்சயம்.
பத்து பில்லியன் டாலர்கள் பெறுமதிப்பான கம்பனிகளுக்கு சக்கரவர்த்தி நீரியோ வின்ச் (NERIO WINCH), திருமணமாகதவன், வாரிசுகள் கிடையாது. தன் வாழ்வின் ஒர் முக்கிய தருணத்தில் தன் வேர்களை தேட ஆரம்பிக்கின்றான். அவன் தேடல் ஸரயேவோவில் (SARAJEVO) ஸனிட்ஸா வின்ஸ்லாவ் (SANITZA WINCZLAV) எனும் பெண்ணின் கல்லறையில் முடிவடைகிறது. அப்பெண்ணின் மகனான லார்கோ வின்ஸ்லாவ் (LARGO WINCZLAV) நகரத்தின் அனாதை இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனையே தன் மகனாக தத்தெடுத்துக்கொள்வதுடன் அவனை வளர்கும் பொறுப்பை நல்மனம் கொண்ட ஒர் தம்பதியினரிடம் ஒப்படைக்கிறான் நீரியோ வின்ச். லார்கோவிற்கு பத்து வயதாகும் போது இங்கிலாந்திற்கு கல்வி கற்க அனுப்பபடுகிறான் .
பதினாறு வருடங்களின் பின் உடல் வருத்தமுற்ற நிலையில் சந்தேகத்திற்குள்ளாகும் விதத்தில் மரணமடைகிறான் நீரியோ வின்ச். அவசரமாக கூடும் வின்ச் குழுமத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அது வரை பல நிர்வாகிகளிற்கு ரகசியமாக வைக்கப்பட்ட லார்கோ வின்ச் பற்றிய உண்மை வெளியாகிறது. நீரியோவின் முழுச்சொத்துக்களிற்கும் வாரிசாகிறான் லார்கோ வின்ச்.
தனக்காக காத்திருக்கும் பெரும் பொறுப்புகளை பற்றிய கவலையேதுமின்றி உல்லாசமாக,நாடோடியாக உலகத்தை சுற்றுகிறான் லார்கோ. இஸ்தான்புல்லில் (ISTANBUL) அவன் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் தருணத்தில் கொலைச்சதி ஒன்றில் சிக்கி சிறைக்கு செல்கிறான், சைமன் ஓவ்ரன்னாஸ் (SIMON OVRONNAZ) எனும் திருடனின் உதவியுடன் சிறையிலிருந்து தப்புகிறான். துருக்கி காவல் துறையின் K-பிரிவின் திட்டங்களை முறியடித்து தன் விமான ஓட்டியான ஃப்ரெட்டி கப்லான் (FREDDY KAPLAN) துணையுடன் துருக்கியை விட்டு தப்பி செல்லும் அவனிற்கு தன் வளர்ப்புத் தந்தையின் மரணச்செய்தி அறிவிக்கப்படுகிறது. வின்ச் குழுமத்திற்கு எதிராக லார்கோவின் அதிரடி அட்டகாசங்களும் ஆரம்பமாகிறது.
லார்கோவின் ஒவ்வொரு சாகசங்களும் இரண்டு புத்தகங்களில் கூறப்படுகிறது. முதல் புத்தகமானது லார்கோ சதிவலையில் இனி மீட்சியே இல்லை எனும் நிலையில் மாட்டிக்கொள்வதையும், இரண்டாம் புத்தகமானது அவன் எவ்வாறு சதிகளை முறியடித்து சதிக்கு பின்னுள்ள காரணிகளையும், காரணகர்த்தாக்களையும் உலகிற்கு வெளிப்படுத்துவதையும் விவரிக்கிறது. லார்கோ ஒர் சாதாரன கோடீஸ்வரனைப் போல் பெண்கள், உல்லாசம், கொண்டாட்டம் என வலம் வந்தாலும் அதிரடியான தருணங்களில் கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ இலகுவாக பயன்படுத்த தயங்காதவன். தன்னையும், தன் கம்பனிகளையும் குறிவைக்கும் எதிரிகளை சாத்தியத்தின் விளிம்பு வரை சென்று போராடுபவன். நட்பை மதிப்பவன், சொன்ன வார்த்தையை மீறாதவன். கண்ணிமைகள் மூடுவதற்குள் அழகிய பெண்களை மயக்குபவன். பெண்கள் மட்டுமல்ல வாசகர்களும் தான் லார்கோவிடம் மயங்கி போனார்கள்.
லார்கோ வின்ச்சின் பாத்திரமானது முதன் முதலாக ழான் வான் ஹாம்மே (JEAN VAN HAMME) எழுதிய நாவல்களில் அறிமுகமானது. மெர்க்யூர் டி ஃப்ரான்ஸ் (MERCURE DE FRANCE) எனும் பதிப்பகம் 1977 முதல் 1984 வரையில் அவர் எழுதிய ஆறு நாவல்களை வெளியிட்டது. நாவல்களோ, லார்கோவோ ரசிகர்களிடம் சொல்லிக்கொள்ளுமளவு பிரபல்யமடையவில்லை. ஆனால் வான் ஹாம்மே தன் மனதில் ஒர் அனலை ஊதிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அனல் 1988ல் பிலிப் ஃப்ரான்க்-ஐ (PHILIPPE FRANCQ) லார்கோ வின்ச்சின் சித்திரக்கதை உருவாக்கலில் சித்திரங்களிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவர் வேண்டிக்கொண்ட போது பற்றிக்கொண்டது. இன்றுவரை அது அனையவே இல்லை.
சோல்வே வியாபார பயிற்சிப்பள்ளியில் (SOLVAY BUSINESS SCHOOL) வான் ஹாம்மே மாணவனாக செலவிட்ட வருடங்கள் பணம் ,கம்பனிகள், நிர்வாகம் என கதையாடலில் தராளமாக அவரிற்கு உதவியிருக்கவேண்டும். பிலிப் ஃப்ரான்க்கின் சம்பவத்தை நேரில் காண்பது போன்ற யதார்த்தை தழுவிய சித்திரங்களும், மனதிலே ஒட்டிக்கொள்ளும் வண்ணத்தெரிவுகளும், தெளிவான ஆனால் படு வேகமான கதை சொல்லலும், லார்கோ வின்ச்சின் சித்திரக்கதை பாத்திரத்தை அவர் அறிமுகமான நாவல்களை விட பெரும் வெற்றியடைய செய்துள்ளது. சாதாரன வெற்றியல்ல, ஒவியர் பிலிப் ஃப்ரான்க் தற்போது லார்கோ வின்ச் ஆல்பங்களிற்கு மட்டுமே பணிபுரிந்தால் போதுமென்றளவிற்க்கான மாபெரும் வெற்றி அது.
கோடீஸ்வர மனிதர்களின் பணவெறி, அதிகார ஆசை, முன்னால் சிரித்து பின்னால் குத்தும் நற்குணம் என்பவையும், அழகான பெண்கள், அளவான செக்ஸ், அதிரடி ஆக்ஷன் ,கதைக்கு கதை நாடுவிட்டு நாடு மாற்றி புதிய காட்சி சித்திரங்களை அறிமுகப்படுத்தல் எனும் போதையேற்றும் காக்டெயில் கலவையும் வாசகர்களை கிறங்கடிக்க செய்தது என்பதில் ஜயமில்லை. லார்கோ வின்ச்சின் மகத்தான விற்பனையும், ரசிகர்களின் தொடர் வரவேற்பும் , ஆதரவும் அவர் இன்னும் வருவார் என்பதற்கு உறுதி அளிக்கும் சான்றுகளாகும்.
லார்கோ வின்ச்சின் சித்திரக்கதைகள் டுப்யீ (DUPUIS) எனும் பெல்ஜிய பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன. இதுவரை 16 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 500 000 பிரதிகள் விற்றுதீர்ந்திருக்கின்றன. ஆங்கில பதிப்பை சினிபுக் (CINEBOOK) வெளியிடுகிறது. லார்கோவின் வெற்றி சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. ஜெரோம் ஸால்லின் (JEROME SALLE) இயக்கத்தில், டோமர் ஸிஸ்லி (TOMER SISLEY) பிரதான வேடமேற்று நடிக்கும் "லார்கோ வின்ச்" எனும் திரைப்படம் பிரான்ஸ் திரையரங்குகளில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவருகிறது. ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை காண சற்று பொறுத்திருப்போம்.
படம் வந்தவுடன் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுமாறு அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவரை தலைமையகம் பணிக்கிறது. இது போல் மென்மேலும் பல சிறப்பான இடுகைகளைத் தொடர்ந்து வழங்குமாறு அவருக்கு கட்டளையிடப்படுகிறது!
படம் ஆங்கிலத்திலும் வருவதால் டிவிடி கிடைத்ததும் நாம் பார்த்துக் கொள்ளலாம்!
இதுவரை வெளிவந்துள்ள ஆல்பங்களின் அட்டைப்படங்கள்:
தொடர்ச்சியாக ஒரே கதையுள்ள இரண்டு ஆல்பங்களின் அட்டைப்படங்கள் ஒரே மாதிரியான வண்ணக் கலவையை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள்!
கீழ்கண்ட படங்களின் மேல் ‘க்ளிக்’கினால் அட்டைப்படத்தையும், உள்பக்கங்கள் சிலவற்றையும் காணலாம். கதைச்சுருக்கமும் உண்டு. ஃப்ரெஞ்சு மொழி தெரிந்தவர்கள் படித்து ரசித்துக்கொள்ளலாம்!
இதுவரை வந்துள்ள ‘சினிபுக்’ ஆங்கில வெளியீடுகள்:
முதலிரண்டு பாகங்களைக் கொண்ட முதல் புத்தகம் சென்னை ஸ்பென்சர் மற்றும் நுங்கம்பாக்கம் ‘லாண்ட்மார்க்’கில் கிடைக்கும். விலை ரூ:350/- மட்டுமே. பிரதிக்கு முந்துங்கள்! நண்பர் ‘ரஃபிக்’ இதைப் பற்றி இன்னும் பதிவு போடாதது ஆச்சரியமூட்டுகிறது!
‘சினிபுக்’ வெளியீடுகள் அனைத்தும் இரண்டு பாகங்கள் கொண்ட கதைகளை ஒரே புத்தகத்தில் வெளியிடுவதால் முடிவு தெரியாமல் நாம் அல்லாட வேண்டியிருக்காது.
லார்கோவை தமிழில் ரசிக்க நமக்கெல்லாம் கொடுத்துவைக்கவில்லை. S.விஜயன் சார் மனசு வைத்தால் முடியும்! செய்வாரா?
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். “வெகுமதி” போட்டியிலும் கலந்துகொண்டு பாராட்டுக்களைப் பெறுங்கள்! ஓட்டெடுப்பு முடியும் நேரமும் வந்துவிட்டது. வாக்களிக்க விரும்புவோர் சீக்கிரம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு.:
- ஆசிரியர் S.விஜயன் அவர்கள் முதன்முறையாக நண்பர்கள் ‘முதலைப் பட்டாளம்’ மற்றும் ‘ரஃபிக் ராஜா’ ஆகியோரின் காமிக்ஸ் வலைப்பூக்களில் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். படிக்க முறையே இங்கே மற்றும் இங்கே ‘க்ளிக்’கவும். வாழ்த்துக்கள் நண்பர்களே!
லார்கோ வின்ச் இணையதளங்கள்:
- http://www.dupuis.com/servlet/jpecat?pgm=VIEW_SERIE&lang=UK&SERIE_ID=67
- http://www.largowinch.com/
- http://www.cinebook.co.uk/catalogue~cat~A-008-019B.asp
லார்கோ வின்ச் டிவி தொடர்:
- http://en.wikipedia.org/wiki/Largo_Winch_(TV_series)
- http://www.imdb.com/title/tt0224902/
- http://www.imdb.com/title/tt0283446/
லார்கோ வின்ச் திரைப்படம்:
- http://www.largowinch-lefilm.com/
- http://www.imdb.com/title/tt0808339/
- http://en.wikipedia.org/wiki/Largo_Winch_(film)
லார்கோ வின்ச் திரைப்பட ட்ரைலர்: