“இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும், எனக்கு சிலை வெப்பாங்க, ஸ்டூடண்ட்ஸெல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க…!”
-கவுண்டமணி (படம்:சூரியன்)
வணக்கம்,
தலைப்பைப் பார்த்து ஏதோ சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்-ன் அடுத்த படத்தின் முன்னோட்டம் என நினைத்து வாசகர்கள் பயந்து ஓட வேண்டாம்! நமது அபிமான லயன் காமிக்ஸ் புவியில் ஒளியூட்ட உதித்த வருடம் அதுதான்! சரியாக 25 ஆண்டுகள் கடந்து வெள்ளி விழா கொண்டாடும் இத்தருணத்தில் அம்மறக்க முடியாத முதல் வருடத்தை மலரும் நினைவுகளாகத் திரும்பிப் பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது!
பதிவிற்கு செல்லும் முன் சில தகவல்கள்!
- நண்பர் காமிக்ஸ் பிரியர் சிலபல ஆண்டுகளுக்கு முன் இன்றுதான் இப்பூவுலகில் பிறந்தார்! அவரை வாழ்த்தும் வகையில் இப்பதிவு அவருக்கு சமர்ப்பிக்கப் படுகிறது! அவர் இன்று போலவே என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்!
- கிங் விஸ்வா லயன் காமிக்ஸ் முதல் இதழ் பற்றி விரிவாக எழுதியுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
- சென்ற பதிவாகிய சம்மர் ஸ்பெஷல்!-க்கு நீங்கள் அனைவரும் வழங்கியுள்ள நல்லாதரவுக்கு நன்றி! தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடுகிறேன்!
- மேற்குறிப்பிட்டுள்ள கவுண்டரின் ‘பன்ச்’ போல என்றேனும் ஒரு நாள் நமது அபிமான ஆசிரியருக்கு மரியாதைகள் செய்யப் பட வேண்டும் என்பது என் சிறு நப்பாசை!
ஓ.கே. இனி பதிவிற்கு வருவோம்!
கூற வேண்டிய அனைத்தையும் நண்பர் கிங் விஸ்வா-வின் இடுகையில் பதிவிலும், கருத்துக்களிலும் கூறப்பட்டுவிட்டதால் நான் இங்கு புதிதாக ஒன்றும் கூறிவிடப் போவதில்லை! காமிக்ஸ் ஒரு VISUAL MEDIUM என்பதால் நானும் வார்த்தைகளைத் தவிர்த்து செய்திகளைப் படங்கள் கொண்டே முடிந்தவரைத் தெரிவிக்கிறேன்!
லயனின் முதல் வருடம்:
முதல் வருடத்திலேயே மொத்தம் 14 இதழ்களை வெளியிட்டு அசத்தியிருப்பார் ஆசிரியர்! தமிழ் மாதப் பத்திரிக்கை உலகில் இது ஒரு சாதனை! இதற்கு முன்பும் சரி, பின்னும் சரி எந்த ஒரு மாத இதழும் ஒரே வருடத்தில் 14 இதழ்கள் வெளியிட்டதாக சரித்திரமும் இல்லை, பூகோளமும் இல்லை!
# | கதை | தேதி |
1 | கத்தி முனையில் மாடஸ்டி பிளைஸி | ஜூலை 1984 |
2 | மாடஸ்டி in இஸ்தான்புல் | ஆகஸ்ட் 1984 |
3 | எத்தனுக்கு எத்தன் | செப்டம்பர் 1984 |
4 | டாக்டர் டக்கர் | அக்டோபர் 1984 |
5 | இரும்பு மனிதன் | தீபாவளி மலர் |
6 | கபாலர் கழகம் | நவம்பர் 1984 |
7 | பாதாளப் போராட்டம்! | டிசம்பர் 1984 |
8 | கொலைப் படை + மர்மத் தீவு | பொங்கல் மலர் |
9 | பயங்கர நகரம்! | ஜனவரி 1985 |
10 | கடத்தல் குமிழிகள்! | ஃபிப்ரவரி 1985 |
11 | மரணக் கோட்டை! | மார்ச் 1985 |
12 | பழி வாங்கும் பொம்மை! | ஏப்ரல் 1985 |
13 | சதி வலை+நதி அரக்கன்(கோடை மலர்) | மே 1985 |
14 | காணாமல் போன கடல் | ஜூன் 1985 |
ஆசிரியர் இவ்வாறு 14 இதழ்கள் வெளியிட்ட காரணத்தை ஓரளவு யூகிக்க முடிகிறது! உலகெங்கிலும் வார, மாத இதழ்களின் சிறப்பு வெளியீடுகள் வழக்கமான இதழ்களின் வரிசை எண்ணிலிருந்து விலகியே இருக்கும்! இதனால் வழக்கமாக வரும் இதழ்களின் எண்ணிக்கை குறையாது!
அதே ஸ்டைலை ஆரம்பத்தில் ஒரு ஆர்வக் கோளாறில் நமது ஆசிரியரும் பின்பற்றியிருக்க வேண்டும்! அதனால் சிறப்பிதழ்கள் வெளியிடும் மாதங்களில் வழக்கமான இதழ்களும் வந்திருக்க வேண்டும்! இது வெறும் யூகம் மட்டுமே! உண்மை ஆசிரியருக்கே வெளிச்சம்!
இதோ இந்த 14 இதழ்களுக்கான கண்கவர் அட்டைப் படங்கள்! பார்த்து மகிழுங்கள்!
முதலாம் ஆண்டின் முடிவில் ஒரு பரிசுப் போட்டியும் அறிவித்திருந்தார் ஆசிரியர்! இதோ லயனின் முதல் ஆண்டு குறித்து எனது பார்வை! என்ன ஒரு 24 வருடங்கள் லேட்டாக வருகிறது! அப்போதே வந்திருந்தால் அந்த ரு:50/- பரிசு எனக்குத்தான், இல்லையா?
இந்த இதழ்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது! அதை நான் கூறுவதை விட நமது அபிமான ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் தனக்கேயுரிய பாணியில் கூறுவதே சிறப்பாக இருக்குமென நான் எண்ணுகிறேன்!
சிங்கத்தின் சிறுவயதில்…!
லயனின் ஆரம்ப காலம் குறித்த எந்தப் பதிவானாலும் நமது அபிமான ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் தனது ஆரம்ப கால அனுபவங்களைப் பற்றி எழுதி வரும் பேராதரவு பெற்ற சிங்கத்தின் சிறுவயதில்…! தொடரைக் குறிப்பிடாமல் எழுத முடியாது!
ஆகையால் இதோ தமிழ் காமிக்ஸ் வலையுலகில் முதன்முறையாக இது வரை வெளிவந்த அனைத்து சிங்கத்தின் சிறுவயதில்…! தொடர் கட்டுரைகளும், உங்கள் பார்வைக்காக! படித்து மகிழுங்கள்!
ஆசிரியரின் மொழி நடைக்கு உங்களைப் போலவே நானும் தீவிர ரசிகன்! ஒவ்வொரு பாகத்தின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து அவர் முடிக்கும் விதம் எழுத்துலக ஜாம்பவான்களையே பொறாமை கொள்ளச் செய்யும்! நம்மில் பலரும் புத்தகத்தைத் திறந்ததும் முதலில் படிப்பது ஆசிரியரின் ஹாட்-லைன் பகுதியைத் தானே!
தற்போதெல்லாம் அவர் அதிகம் எழுதுவதில்லை என்பது வருத்தத்திற்குறிய விஷயம்! கடைசியாக வந்த இரண்டு லயன் இதழ்களிலுமே அவர் எதுவும் எழுதவில்லை! 25-வது ஆண்டு மலரிலாவது அவர் மீண்டும் இதைத் தொடர வேண்டும் என்பது உங்களைப் போலவே எனது விருப்பமும் கூட!
25-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நமது காமிக்ஸ் உலக அரசனுக்கு இத்தருணத்தில் நம் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! லயனின் புகழ் மென்மேலும் ஓங்கி வளர நம் அனைவரின் ஆதரவும் தேவை! அதுவே நாம் நம் அபிமான ஆசிரியருக்கு ஆண்டு தோறும் செய்யக் கூடிய மிகப்பெரிய தொண்டாகும்!
இப்பதிவைப் படிக்கும் அனைவரும் உடனடியாக நமது மூன்று காமிக்ஸ் வெளியீடுகளுக்கும் ஓராண்டு சந்தாவும், XIII JUMBO ஸ்பெஷலுக்கு மினிமம் ஒரு முன்பதிவாவது செய்துவிட வேண்டும் என்பது அகிலமே அஞ்சும் அ.கொ.தீ.க. தலைவரின் அரசாணை!
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு.:-
- இப்பதிவில் காணப்படும் படங்கள் அனைத்தும் நண்பர்கள் முத்து விசிறி, அய்யம்பாளையத்தார் மற்றும் வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வா ஆகியவர்களின் பேருதவியாலேயே நீங்கள் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிப்பது எனது கடமையாகும்! ஆகையால் உங்களின் போற்றல்கள் அவர்களையே சாரும்!
தொடர்புடைய இடுகைகள்:-
லயன் காமிக்ஸ் முதல் இதழ் குறித்து கிங் விஸ்வா-வின் பார்வை:
கிங் விஸ்வா-வின் 50-வது சிறப்(பிதழ்கள்)புப் பதிவு:
பிற சிறப்பிதழ்கள்: