வணக்கம்,
தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள், தைத் திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம், தைப் பொங்கல், காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் என அனைத்து நன்னாட்களுக்கும் விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!
இந்த நன்னாளில் பொங்கல் மலர் ஆக அறிவிக்கப்பட்ட இரும்புக்கை மாயாவி (வேறு யார்?) சாகஸமான முத்து காமிக்ஸ் # 181 – கண்ணீர்த் தீவில் மாயாவி! குறித்த ஒரு விரிவான அலசலைக் காண்போம்!
புத்தக விவரங்கள்:
தலைப்பு | : | கண்ணீர் தீவில் மாயாவி! |
இதழ் | : | முத்து காமிக்ஸ் (மாத இதழ்) |
வெளியீடு # | : | 181 |
தேதி | : | 15 ஜனவரி, 1990 - பொங்கல் மலர் (அறிவிக்கப்பட்டது) |
முதல் பதிப்பு | : | 15 ஏப்ரல், 1990 (Actual Release Date) |
பதிப்பாசிரியர் | : | M.செளந்திரபாண்டியன் |
பொறுப்பாசிரியர் | : | S.விஜயன் |
மறுபதிப்புகள் | : | இதுவரை இல்லை |
நாயகன் | : | இரும்புக்கை மாயாவி |
மூலம் | : | THE VULTURE (ஆங்கிலம்) |
இதழ் | : | VALIANT (Weekly) |
பதிப்பகம் | : | FLEETWAY (I.P.C.) |
தேதி | : | 30-10-1965 முதல் 02-04-1966 வரை (23 வாரங்கள்) |
கதை | : | TOM TULLY |
ஓவியம் | : | JESUS BLASCO/TOM KERR |
தமிழில் | : | S.விஜயன் |
பக்கங்கள் | : | 160 (கருப்பு வெள்ளை) |
சைஸ் | : | 9cmx13cm (பாக்கெட் சைஸ்) |
விலை | : | ரூ:3/- (1990 முதல் பதிப்பின் போது) |
விளம்பரம்:
இந்தக் கதைக்கான விளம்பரங்கள் முத்து காமிக்ஸ் # 166 – கொள்ளைக்காரப் பிசாசு! (மறுபதிப்பு) மார்ச் 1988 முதலே வரத் தொடங்கியிருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பொங்கல் மலர் ஆக முத்து காமிக்ஸ் # 180 – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!ல் அறிவிக்கப்பட்டது!
ஆயினும் முத்து காமிக்ஸ் # 180 – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! புத்தகமே தாமதமாக வந்ததினால் பொங்கல் மலர் ஆக வெளிவர வேண்டிய புத்தகம் மிகத் தாமதமாக ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு மலர் ஆகத்தான் வெளிவந்தது! அறிவிக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்தும் வழங்கப் படவில்லை என்பது ஞாபகம்! தவறாக இருப்பின் சுட்டிக்காட்டவும்!
கதைச்சுருக்கம்:
அதிபயங்கர ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கான திறந்த வெளிச் சிறையாக செயல் பட்டு வருகிறது கண்ணீர் தீவு! அதன் வார்டன் வல்ச்சர்-ம் அவனது உதவியாளன் மோர்ட்டோவும் கைதிகளுக்கு சிம்ம சொப்பனம்! இதற்கிடையில் அங்கிருந்து சில கைதிகள் தப்பியோடிவிட இண்டர்போல்-ன் உதவியை நாடுகிறான் வல்ச்சர்! அதே போல் அங்கு நடமாடும் சதுப்பு நில ஆவியும் கைதிகள் தப்பியோட துணை புரிவது புரியாத புதிராகவே உள்ளது! மர்மத்தைத் துப்புதுலக்க வருகிறார் இரும்புக்கை மாயாவி!
கண்ணீர் தீவு – SIGHTS & SOUNDS:
கதைக்களமான கண்ணீர் தீவின் கண்கொள்ளாக் காட்சிகள்! தீவை நீங்கள் சுற்றிப் பார்க்கும் போது இந்தக் காட்சிகளைத் தவறாமல் கண்டு களிக்கவும்! கண்ணீர் தீவை சென்றடைய கடல் வழி பயணம் மட்டுமே சாத்தியம்! பழங்கால கப்பலில் பயணிகளே துடுப்பு வலித்து கண்ணீர் தீவை அடைவதே ஒரு ரம்மியமான அனுபவம்! உங்களை உற்சாகப் படுத்த சவுக்கடிகளும் உண்டு!
கப்பல் பயணம்! | பயணிகள்! |
கண்ணீர் தீவில் தங்குவதற்கு சொகுசான சிறைகள் உண்டு! கூடுதல் வசதிகள் விரும்புவோருக்கு ஸ்பெஷலாக பாதாளச் சிறையும் உண்டு!
சிறைச்சாலை! | பாதாளச் சிறை! |
கண்ணீர் தீவில் மணியடித்தால் சோறு! பந்தியில் முந்துவோருக்கு லெக் பீஸ் கிடைக்கவும் வாய்ப்புள்ளது!
லெக் பீஸ்! |
கண்ணீர் தீவில் பயங்கர வேட்டை நாய்களும், ஆட்கொல்லி ஜெல்லி மீன்களும், இன்னபிற கொடிய ஜந்துக்களும் ஏராளம் உண்டு! இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்கம்!
வேட்டை நாய்! | ஜெல்லி மீன்! |
கண்ணீர் தீவின் மேலும் சில சுற்றுலா தலங்கள்! உங்கள் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் கல்லுடைப்பது, கீல் வாருவது என பல உடற்பயிற்சிகள் உண்டு! சாகஸத்தில் ஆர்வமுள்ளோருக்கு சதுப்பு நிலத்தில் முங்கு நீச்சல் போடும் வாய்ப்பும் உள்ளது!
கண்ணீர் தீவு – நுழைவாயில்! | சதுப்பு நிலத்தில் கைதிகள் அணிவகுப்பு! |
கலீயன் மயானம்! | கீல் வாரும் மையம்! |
சுண்ணாம்புக் கல் குவாரி! | கழுகுப் பாறை! |
இறுதியாக கண்ணீர் தீவின் STAR ATTRACTION! சதுப்பு நில ஆவி! காணத் தவறாதீர்கள்!
சதுப்பு நில ஆவி! |
உங்கள் அனைத்து சுற்றுலாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே இடம் கண்ணீர் தீவு தான் என்பதில் ஐயமில்லை!
கண்ணீர் தீவு – முக்கிய பிரமுகர்கள்:
எந்த ஒரு சூப்பர் ஹீரோவின் கதைகளின் வெற்றி அவர் எதிர்த்து மோதும் வில்லன்களைப் பொறுத்தே அமைகிறது! இதில் வல்ச்சர்-ம், அவனது அடியாள் மோர்ட்டோவும் அவரவர் பணியை திறம்படச் செய்கின்றனர்! மாவீரன் மாண்டிஜூமா அளவிற்கில்லையெனினும் இவர்கள் வழக்கமான வில்லத்தனத்தில் சோடை போகவில்லை!
வல்ச்சர்! | மோர்ட்டோ! | கைதிகள்! |
வாய்ப்புகள் சரியாக அமையாததால் இப்படங்களை வெகுமதி! போட்டிக்குப் பயன் படுத்த முடியாமல் போனது துரதிர்ஷ்டமே!
சுவாரசியமான சங்கதிகள்:
இரும்புக்கை மாயாவியின் TIME-LINEல் இக்கதை அவரது சக்திகளின் வளர்ச்சியில் இரண்டாம் கட்டத்தில் நடைபெறுவதால் அவருக்கு மிகவும் குறைவான சக்திகளை பிரயோகிக்கும் வாய்ப்புகளே கிடைக்கின்றன! அவை பின் வருமாறு!
- மாயமாய் மறையும் தண்மை
- மின்சாரம் பாய்ச்சும் சக்தி
- மின் காந்த சக்தி
இரும்புக்கை மாயாவியின் பரிணாம வளர்ச்சி குறித்து தீவிர ஆய்வுகள் செய்து வருகிறேன்! கூடிய விரைவில் அதிரடிப் பதிவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன்! அதுவரை கதையில் இரும்புக்கை மாயாவி புரியும் சில அதிரடி சாகஸங்களைக் கண்டு களியுங்கள்!
கடைசி படம் கொள்ளைக்காரப் பிசாசு! கதையை லைட்டாக ஞாபகப் படுத்துகிறது, இல்லையா?
ஆங்கிலம்/தமிழ் – ஒரு பார்வை:
கதையின் ஆங்கிலப் பக்கங்கள் சிலவும் அவற்றின் தமிழாக்கப் பக்கங்களும் உங்கள் பார்வைக்கு! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் மொழி பெயர்ப்புத் திறனுக்கு மேலும் ஒரு சான்று! இதில் இரும்புக்கை மாயாவி மின்காந்த சக்தியை பிரயோகிப்பதைக் காணலாம்!
இரும்புக்கரத்தில் இன்னமும் ஆயுதங்கள் ஏதும் பொருத்தப்படாததால் விளக்கை உடைக்க மாயாவி கல்லைப் பயன்படுத்துவதையும், பூட்டுகளைத் திறந்து மூட விசேட சாவி உபயோகிப்பதையும் கவனிக்கவும்!
அடுத்த வெளியீடு:
தொடரும் மாதங்களில் வரும் வெளியீடுகளுக்கான விளம்பரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!
வரவேற்பு:
இந்தக் கதையும் இரும்புக்கை மாயாவி கதைகளுக்குரிய பெருத்த வரவேற்பைப் பெற்றது என்பதைக் கூறவும் வேண்டுமா? அதற்கு சான்றாக அடுத்த வெளியீடான முத்து காமிக்ஸ் # 182 – துரோகியைத் தேடி! இதழில் வெளிவந்த வாசகர் கடிதங்கள் உங்கள் பார்வைக்கு! கடிதம் எழுதுவோரை ஊக்குவிக்க பிரசுரிக்கப்படும் கடிதங்களுக்குப் பரிசும் வழங்கப் பட்டது!
பதிவைப் படிக்கும் யாரேனும் எழுதிய கடிதங்கள் இதில் பிரசுரமாகியுள்ளனவா? பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன்!
நிறைகள்:
- டாம் டல்லியின் அதிரடி ஆக்ஷன் கதைக்கு ஜீசஸ் ப்ளாஸ்கோ/டாம் கெர் கூட்டணியில் சிறப்பான ஒவியங்கள்!
- ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் சிறப்பான தமிழாக்கம்!
- நீண்ட நெடுநாட்களுக்குப் பின் பொங்கல் மலர் என விளம்பரப் படுத்தப்பட்ட முத்து காமிக்ஸ் இதழ் இது!
- இரும்புக்கை மாயாவியின் இதுவரை வெளிவராத புத்தம் புதிய சாகஸம்! இதுவரை மறுபதிப்புகள் மூலம் மட்டுமே இவரது சாகஸங்களை ரசிக்க முடிந்த நீண்ட கால முத்து காமிக்ஸ் வாசகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!
- பல நாட்களாக விளம்பரப் படுத்தப்பட்டிருந்தாலும் காத்திருந்தோருக்கு ஏமாற்றமளிக்கவில்லை! இதுவே எல்லாம் வல்ல இரும்புக்கை மாயாவியின் மகிமை!
குறைகள்:
- சட்டை பாக்கெட் சைஸ், தரமற்ற தாள், சுமாரான அச்சு, கண்ணை வருத்தும் சிறிய எழுத்துக்கள் என புத்தகத்தின் அமைப்பே ஒரு மிகப்பெரிய மைனஸ்!
- பல நாட்கள் விளம்பரம் செய்யப்பட்டும் சரியான நேரத்திற்கு விற்பனைக்கு வராதது!
ஆனால் இரும்புக்கை மாயாவி என்றொரு சூப்பர் ஸ்டார் இருக்கையில் இவைகள் மிகப்பெரிய குறைகளாகத் தெரியவில்லை!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்! ஆங்கில மூலம் குறித்த தகல்வகளை வழக்கம் போல அளித்துதவிய நண்பர் முத்து விசிறி-க்கு மனமார்ந்த நன்றிகள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:
இரும்புக்கை மாயாவி:
- http://muthufan.0catch.com/Maayavi.htm
- http://muthufan.tripod.com/Maayavi.htm
- http://muthufanblog.blogspot.com/2008/07/i-have-been-collecting-english.html
- http://muthufan.0catch.com/firstmuthu.html
- http://muthufan.tripod.com/firstmuthu.html
- http://sharehunter.wordpress.com/2008/10/17/comicssupers2/
- http://sharehunter.wordpress.com/2008/10/21/ironclaw2/
- http://akotheeka.blogspot.com/search/label/இரும்புக்கை%20மாயாவி
- http://browsecomics.blogspot.com/search/label/Steel%20Claw
- http://tamilcomic.blogspot.com/search/label/இரும்புக்கை%20மாயாவி
பிற சிறப்பிதழ்கள்:
- http://akotheeka.blogspot.com/search/label/தீபாவளி%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/பொங்கல்%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/கோடை%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/புத்தாண்டு%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/கிறிஸ்துமஸ்%20ஸ்பெஷல்
- http://akotheeka.blogspot.com/search/label/ஆண்டு%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/தமிழ்%20புத்தாண்டு%20மலர்
- http://tamilcomicsulagam.blogspot.com/2009/06/one-man-show-special-issues-in-tamil.html