“செக்கச் செவேலென பூக்கள்! பச்சப் பசேலென புற்கள்!”
-கவுண்டமணி (படம் : நடிகன்)
வணக்கம்,
எனது பிறந்த நாளையொட்டி சக பதிவர்கள் இட்டுள்ள பதிவுகளுக்கு எனது நன்றிகள்! பதிவிடாத பஞ்சமா பாதகர்களுக்கு பார்சலில் பாம் வந்து பத்திரமாகப் பரலோகம் சேர்க்கும்!
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் புதுப் பொலிவுடன் வந்திருக்கும் அ.கொ.தீ.க.வுக்கு தங்களின் பொன்னான ஆதரவை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
கோடையின் கடுமையைக் கடந்து பருவ மழையைப் பூமி பரவசத்துடன் புசித்துவிட்டு பூரித்து பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பருவத்தில் அ.கொ.தீ.க. தலைமையகம் அமைந்துள்ள அற்புத சூழலை விவரிக்கவே மேற்குறிப்பிட்டுள்ள கவுண்டரின் ‘பன்ச்’! உங்களை மகிழ்ச்சி மழையில் நனைக்க இதோ மீண்டும் ஒரு கோடை மலர் பதிவு!
பல நாட்களாகவே வெரும் விளம்பரமாகவே நின்றுவிட்ட இப்பதிவை இடுவதில் உங்களைக் காட்டிலும் எனக்குப் பெருமகிழ்ச்சியே! சென்ற பதிவான தேர்தல் சிறப்புப் பதிவு-க்குத் தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி!
மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்கு வருவோம்! இந்தப் பதிவைப் படிக்கும் போது முத்து ஸ்பெஷல்! பதிவை ஒரு முறை REFERENCE-க்காக படித்துவிடுவது சாலச் சிறந்தது!
சம்மர் ஸ்பெஷல்:
மே 1988-ல் முத்து ஸ்பெஷல்! வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்ட ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் மே 1989-ல் சம்மர் ஸ்பெஷல் வெளியிட்டு நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்! அந்தக் காலகட்டத்தில் லயன், முத்து, திகில், மினி லயன் என அனைத்திலும் ஸ்பெஷல் வெளியீடுகள் இட்டு அசத்துவார் ஆசிரியர்!
ஆசிரியர் திரு.S.விஜயன் வெளியிட்டுள்ள அனைத்து ஸ்பெஷல் வெளியீடுகள் பற்றிய கிங் விஸ்வா-வின் மெகா ஸ்பெஷல் பதிவு-ஐப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! இதில் சிறப்பு என்னவென்றால் இது அவரது 50-வது பதிவு ஆகும்! அ.கொ.தீ.க. மற்றும் தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகம் சார்பாக அவருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
வெளியீட்டு விவரங்கள்:
கதைக்கான விளம்பரங்களை விட முத்துவின் நெடுநாளைய வாசகர்களைக் கவர்ந்திருக்கூடிய விஷயம் அதிமேதை அப்பு மீண்டும் வருவது பற்றிய அறிவிப்பாகத்தான் இருந்திருக்கும்!
ஆனால் என்னைப் போல 80-களிலிருந்தே காமிக்ஸ் படிக்கும் வாசகர்களுக்கு இது சற்று புதிரானதாகவே இருந்தது!
அட்டைப்படம்:
மீண்டும் ஏதோ ஒரு ஜேம்ஸ்பாண்ட் அட்டைப்படத்தின் தழுவல் என நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு! இந்த அட்டைப் படத்தின் ஒரிஜினலைப் பார்க்க இங்கே ‘க்ளிக்’கவும்!
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? இதற்கே அதிர்ச்சியடைந்தால் எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கிறது! ஹாலிவுட்டின் அப்பட்டமான காப்பியடிக்கும் வழக்கத்திற்கு மற்றுமொரு சான்று இதோ! இளகிய மனமுடையோர் இங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்!
ஹாட்லைன்:
ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் ஹாட்லைன் வழக்கம் போலவே புத்தகம் அச்சாவதற்குப் பல நாட்கள் முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும்! ஆகையால் அவரும் இப்புத்தகத்தில் இன்ஸ்பெக்டர் கருடா வருவதாகவே குறிப்பிட்டுள்ளார்! ஆனால் கடைசி நேரத்தில் எக்காரணத்தாலோ மாற்றம் செய்துள்ளார்!
ஆசிரியர் இங்கும் அதிமேதை அப்பு புராணம் பாடி என்னைப் போன்ற புதிய வாசகர்களின் எதிர்பார்ப்புகளைத் தூண்டுகிறார்! அப்பு இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தானா? விடைகாண தொடர்ந்து படியுங்கள்!
கதை#1 – அதிமேதை அப்பு
அதிமேதை அப்பு-வின் இரண்டு சிறுகதைகளை முழு வண்ணத்தில் வெளியிட்டுள்ளார் ஆசிரியர்! ஓவியர் செல்லம் தனக்கேயுரிய பிரத்யேக பாணியில் வரைந்திருக்கும் ஓவியங்கள் கலரில் கண்ணைப் பறிக்கின்றன! அதிமேதை அப்பு-வின் ஆத்மார்த்த விசிறியாகிவிட்டேன் எனக் கூறவும் வேண்டுமா?
இனிமேல் தொடர்ந்து அதிமேதை அப்புவின் சாகஸங்கள் முத்துவில் இடம்பெறும் எனவும், அப்பு பதில்கள் வரும் என்ற அறிவிப்புகளும் எனக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டன!
ஆனால், அந்தோ! பரிதாபம்! அடுத்த இதழாகிய முத்து#177 – இரத்தப் பாதை இதழுடன் அதிமேதை அப்புவின் சாகஸங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது! அக்கதைகளும் கருப்பு வெள்ளையில்தான் வந்தன! பின்னர் நெடுநாட்களுக்கு அப்புவின் மர்மங்கள் புரியாமல் நானும் விழித்துக் கொண்டிருந்தேன், நண்பர் முத்து விசிறி-யை சந்திக்கும் வரை!
அவர் மூலம்தான் அதிமேதை அப்பு பற்றியும் முத்து காமிக்ஸ் வாரமலர் பற்றியும் அறிந்து கொண்டேன்! விரைவில் அதிமேதை அப்பு பற்றிய ஒரு முழு நீளப் பதிவிடலாம் என்று எண்ணம்! மக்கள் விரும்பினால் நிறைவேற்றலாம்!
அதிமேதை அப்பு பற்றியும் முத்து காமிக்ஸ் வாரமலர் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? முத்து விசிறி-யின் முத்தான பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
கதை #2 – புலிப்பொறி!
1969-ம் ஆண்டில் இங்கிலாந்தின் FLEETWAY நிறுவனத்தைச் சேர்ந்த ACTION PICTURE LIBRARY மாத இதழின் 3-வது வெளியீடான TIGER TRAP எனும் அதியற்புத ஆக்ஷன் சித்திரக்கதையை நமக்கு அழகிய தமிழில் வழங்கியிருக்கிறார் ஆசிரியர்!
1969-ல் நமது கதாநாயகன் ஜோ கார்ஸன் இரண்டாவாது உலகப் போரில் வீரச் சேவை புரிந்த தனது தந்தையுடன் மலேசியக் கானகங்களினூடே ரயிலில் பயனித்துக் கொண்டிருக்கிறான்! தனது வாழ்நாள் முடிவதற்குள் தான் பணியாற்றியப் பகுதியை மீண்டும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்ற தன் தந்தையின் தீராத ஆவலை நிறைவேற்றவே இருவரும் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்!
அப்போது ஏற்படும் ஒரு விபத்தில் அவன் தந்தை இறந்து விடுகிறார்! ஆனால் அது ஒரு விபத்தல்ல, துணிகரக் கொள்ளை என்பதையும், கொள்ளையர்கள் ஜப்பானியர்கள் என்றும் கார்ஸன் அறிந்து கொள்கிறான்! போலீசின் உதவியோடு அவர்களில் சிலரைப் பிடிக்கிறான்! அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற லாரியில் புலி முத்திரை இருப்பதைக் காணுகிறான் கார்ஸன்!
அது செயூங்-போ எனும் சிங்கப்பூரைச் சேர்ந்த மிகப்பெரும் வியாபார காந்தத்தின் முத்திரையாகும்! செயூங்-போவை பிடிக்குமாறு போலீசாரிடம் மன்றாடும் கார்ஸனுக்கு கிடைப்பதோ ஏமாற்றமே! அப்போது அவன் போதை மருந்து கடத்தல் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வாங்-ஐச் சந்திக்கிறான்! இருவரும் செயூங்-போவை எவ்வாறேனும் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவது என உறுதி கூறுகின்றனர்!
துறைமுகத்தில் நிகழவிருக்கும் போதை மருந்து கடத்தல் பற்றிய துப்பு கிடைக்க அங்கு போலீஸ் படையுடன் இருவரும் செல்கின்றனர்! அப்போது நிகழும் அற்புதமான விசைப்படகு துரத்தும் காட்சியே ஆங்கில மூலத்தின் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளது!
இறுதியில் கயவர்கள் தப்பிச் சென்று விட நமது நாயகர்களுக்கோ ஏமாற்றம்! ஆனால் அவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கிறது! கடத்தல்காரர்களின் கிடங்கில் செயூங்-போவின் முத்திரை பதித்த ஒரு கார் கிடைக்கிறது! செயூங்-போவை சந்திக்க அவரது காரை திருப்பிக் கொடுக்கும் வகையில் சென்று அவரது கோட்டைக்குள்ளேயே அவரை எதிர்கொள்ள முடிவெடுத்துக் கிளம்புகிறார்கள் நமது நாயகர்கள்!
செயூங்-போ பிடிபட்டானா? தனது தந்தையின் மரணத்துக்கு கார்ஸன் பழிதீர்த்துக் கொண்டானா? இன்ஸ்பெக்டர் வாங் போதை மருந்து கடத்தும் கும்பலைப் பிடித்தாரா? கேள்விகளுக்கு விடையளிக்கிறது கதை!
க்ளைமாக்ஸில் வரும் அற்புத ட்விஸ்ட்டைக் கூறி கதையைப் புதிதாகப் படிக்கும் போது ஏற்படும் உணர்வைக் கெடுக்க நான் விரும்பவில்லை! கதை முழுக்கப் பரவியிருக்கும் அதிரடி ஆக்ஷன் கதையை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறது! இன்று வரை நான் படித்திட்ட சிறந்த ஆக்ஷன் கதைகளில் ஒன்றாக இதை நான் குறிப்பிடுவேன்!
கதை#3 – ஆவியின் கீதம்
சிஸ்கோ கிட்-டின் அதியற்புத சாகஸமாகிய ஆவியின் கீதம் மறுபதிப்பாக இப்புத்தகத்தில் வந்துள்ளது! இக்கதை சிலபல விதங்களில் என் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது! அதற்கான காரணங்கள் இதோ!
- நான் படித்த முதல் சிஸ்கோ கிட் கதை! முதல் கதையிலேயே மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார் சிஸ்கோ! அதுவும் இந்த அற்புதக் கதையை பேய் மனிதன் என்று ராணியில் படித்த பிறகு முத்துவில் வெளிவந்த சிஸ்கோ கிட் கதைகளுக்குத் தீவிர ரசிகனானேன்!
- இக்கதையைப் படித்த நெடுநாட்களுக்குப் பின்னரே எனக்கு இக்கதையின் முதல் பதிப்பு கிடைத்தது! இரு வண்ணத்தில் அற்புதமாக இருக்கும்! நான் வாங்கிய முதல் பழைய முத்து இதழ்களில் இது இடம் பிடித்திருந்தது ஒரு இன்ப அதிர்ச்சியாக இப்போதும் இருக்கிறது!
- இறுதியாக ஆனால் உறுதியாக இக்கதை என் மனதில் இடம் பிடிக்கக் காரணம் முத்து விசிறி-யுடனான நட்பு ஆழமானதற்குக் காரணமாக இக்கதை விளங்கியதுதான்!
இக்கதை குறித்து முத்து விசிறி ஏற்கெனவே முழுவதுமாக அலசி ஆராய்ந்திருப்பதால் நான் வேறெதையும் கூற விரும்பவில்லை! முழு நீளப் பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
நண்பர் காமிக்ஸ் பிரியன் சிஸ்கோ கிட் திரைப்படங்கள் குறித்து இட்டுள்ள பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
கதை#4 – மர்மப் பணி!
இரும்புக்கை மாயாவியின் சாகஸச் சிறுகதை! உண்மையில் இது ஒரு சிறந்த மொக்கைச் சிறுகதையாகும்!
முக்கிய ரகசியங்கள் அடங்கிய மைக்ரோ ஃபிலிம் ஒன்றை ஒரு புத்தகத்தில் பதித்து அதை பத்திரமாக எடுத்துச் சென்று சேர்க்கும் பணியை மாயாவியிடம் ஒப்படைக்கிறார் மேஜர் ப்ராண்ட்! இப்பணிக்குத் தடையாக மாயாவி எதிர்கொள்ளும் வில்லன்தான் மிஸ்டர் நோ ஃபேஸ் (Mr.NO FACE)! நோ ஃபேஸிடமிருந்து அந்த ரகசியங்களை மாயாவி பத்திரமாகக் பாதுகாத்துக் கொண்டு போய் சேர்த்தாரா என்பதே கதை!
கதையை எழுதியவர் இரும்புக்கை மாயாவியின் ஆஸ்தான எழுத்தாளராகிய டாம் டல்லி! ஓவியங்கள் வரைந்தவர் ரெக் பன் (REG BUNN)! இவர் ஸ்பைடர் கதைகளை வரைந்து புகழ் பெற்றவர்! இவர் வரைந்த ஒரே மாயாவிக் கதை இதுதான்! இந்த மொக்கைக் கதையின் ஒரே ஆறுதலான விஷயம் ரெக் பன்-ன் ஓவியங்கள் தான்! அதிலும் வில்லன் நோ ஃபேஸ் சற்று கோணங்கித் தனமாக ஸ்பைடர் வில்லன் போல் வரையப் பட்டிருப்பது கதையின் தாக்கத்தைக் குறைக்கிறது!
இக்கதை முதன்முதலாக ஆங்கிலத்தில் VALIANT வார இதழில் 17-01-1970 முதல் 31-01-1970 வரை 3 வாரங்களுக்கு இரண்டிரண்டு பக்கங்களாகத் தொடராக வெளிவந்தது! பின்னர் VULCAN ANNUAL 1977-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது!
நண்பர் லக்கி லிமட் இக்கதையைப் பற்றி இட்டுள்ள பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! முன்பு அவர் இந்தக் கதைக்கு டவுன்லோடு லிங்க் வழங்கியிருந்தார்! ஆனால் இப்போது அதை நீக்கி விட்டபடியால் இதோ உங்களின் பார்வைக்கு முழுக்கதையும்! “என்சாய்!” (ஜனகராஜ், படம் – அக்னி நட்சத்திரம்)
கதை#5 – பார்முலா கடத்தல்!
மீண்டும் ஜெஸ் லாங்-கின் ஒரு அதிரடி ஆக்ஷன் சித்திரக் கதை! இதில் ஸ்லிம் ஸல்லிவன் மூக்கில் ஒரு கட்டி வந்து அவதிப் படுவது நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும் பின்னர் அதுவே கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை கொண்டு வருவதாகக் கதை அமைக்கப் பட்டிருக்கிறது!
அதே போல் ஸ்லிம் எப்போதும் கூலிங் க்ளாஸ் அணிந்திருப்பது குறித்து வியக்கும் நமக்கு அதற்கும் ஒரு ட்விஸ்ட் வைத்து கதையை அற்புதமாக நகர்த்திச் சென்றிருப்பார் ஆசிரியர்!
ராணுவத்திற்கான புதிய வித ரகசியத் தளவாடங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திலிருந்து ரகசியங்கள் கடத்தப் படுகின்றன! குற்றவாளி யார் என்பதைக் நமது சாகஸ ஜோடி எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை!
ஜெஸ் லாங் பற்றி மேலும் அறிந்து கொள்ள கிங் விஸ்வா இட்டுள்ள பதிவை இங்கே ‘க்ளிக்’கிப் படிக்கவும்!
கதை#6 – நியூஸ் டீம்
விளம்பரப் படுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் கருடா-விற்கு பதில் இக்கதை வந்தது! 80-களில் EAGLE பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு தொடர் என்பதைத் தவிர வேறு எதுவும் தகவல்கள் இப்போதைக்கு இல்லை! சிறுகதை என்பதால் கதையிலும் பெரிதாக மனம் லயிக்கவில்லை! புதிதாகத் திறக்கப் படவிருக்கும் ஒரு பாலத்தைப் பற்றிய மோசடிகளை ஆராய்ந்து அது திறக்கும் முன்னர் எவ்வாறு மக்களைக் காக்கின்றனர் என்பதே கதை!
இதன் ஓவியர் நமக்கு மிகவும் பரிச்சயமானவர்! சிறுவர் மலர்-ல் வெளிவந்த உயிரைத் தேடி! மற்றும் திகிலில் வெளிவந்த கம்ப்யூட்டர் மாக்ஸ் கதைகளுக்கு ஓவியம் வரைந்த ஜோஸ் ஆர்டிஸ் தான் இதற்கும் ஓவியர்! ஆகையால் சுமாரான கதைக்கு சூப்பர் ஓவியங்கள் அமைந்திருப்பது ஒரு ஆறுதல்!
இது குறித்து குறிப்பிட்டுள்ள சுட்டிகள் யாவும் நண்பர் ரஃபிக் ராஜா-வின் காமிக்கியல் வலைத்தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டவை! அவருக்கு நன்றிகள்!
துணுக்குகள்:
இட நிரப்பிகளாக விச்சு & கிச்சு-வின் க்ளாஸிக் கதை ஒன்றின் மறுபதிப்பும், அடங்காப் பிடாரி! என்ற BUSTER சிறுவர் இதழில் வெளிவந்த ஒரு சிறுகதையையும் வெளியிட்டுள்ளார் ஆசிரியர்! இரண்டுமே இதோ உங்களின் பார்வைக்கு! “என்சாய்!” (ஜனகராஜ், படம் – அக்னி நட்சத்திரம்)
விச்சு & கிச்சு பற்றி மேலும் அறிந்து கொள்ள கிங் விஸ்வா இட்டுள்ள பதிவை இங்கே ‘க்ளிக்’கிப் படிக்கவும்!
இப்படியொரு சிறப்பான புத்தகத்தை நமக்களித்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! வழக்கம்போல ஆங்கில பதிப்புகளின் அத்தனை விபரங்களையும் அளித்த நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்! உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு.:-
எனது பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் தமிழ் காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் பலர் பதிவிட்டு சிறப்பித்துள்ளனர்! அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் இதோ அவற்றை சுட்டுகிறேன்!
- அய்யம்பாளையத்தார் எனக்குப் பிறந்த நாள் பரிசாக பூந்தளிர் முதல் வருடம் குறித்து அற்புதமாக அலசி ஆராய்ந்திருக்கிறார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
- ஒலக காமிக்ஸ் ரசிகர் எனக்குப் பிறந்த நாள் பரிசாக மாடஸ்தி-யின் குளியலறைக் காட்சிகளை வெளியிட்டுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
- காமிக்ஸ் பிரியர் எனக்குப் பிறந்த நாள் பரிசாக தினத் தந்தியில் வெளிவந்த ஒரு காரிகன் கதையை வெளியிட்டுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
- கனவுகளின் காதலர் மீண்டும் ஒரு தலைசிறந்த மங்கா பற்றி பதிவிட்டுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
- புலா சுலாகி மீண்டும் ஒரு வேதாளரின் கதையோடு தாக்கியிருக்கிறார்! இதில் வசனப் போட்டியும் உண்டு! படிக்க, பங்கு பெற இங்கே ‘க்ளிக்’கவும்!
- நமது துப்பறியும் நிருபர் கிசுகிசு கோபால் என்னுடைய பிறந்த நாள் கொண்டா(களியா)ட்டங்களை லைவ் கவரேஜ் செய்துள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
பிற செய்திகள்:
- எனக்குப் பிறந்த நாள் பரிசாகப் பதிவு கூட இடாத எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியாகிய கிங் விஸ்வா தனது வலைப்பூவில் 50-வது சிறப்புப் பதிவு இட்டுள்ளார்! வாழ்த்துக்கள்! பதிவைப் படித்து தொலைக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
- ரொம்ப நாளாகத் தூங்கிக் கொண்டிருந்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் வலைப்பூ இப்பொது மீண்டும் துளிர் விட்டிருக்கிறது! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
- கடைசியாக ஒரு சூப்பர் நியூஸ்! EUROBOOKS நிறுவனம் ரொம்ப நாளாக விளம்பரப் படுத்தியிருந்த 24 லக்கி லூக் கதைகளை ஒரு வழியாக வெளியிட்டுள்ளனர்! இது குறித்து நண்பர் ரஃபிக் ராஜா இட்டுள்ள பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
தொடர்புடைய இடுகைகள்:-
கிங் விஸ்வா-வின் 50-வது சிறப்(பிதழ்கள்)புப் பதிவு:
அதிமேதை அப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ள:
தனது ஆல்-டைம் ஃபேவரைட் சிஸ்கோ கிட் கதையாகிய ஆவியின் கீதம் குறித்து முத்து விசிறி-ன் முத்தான பதிவு:
காமிக்ஸ் பிரியன்-ன் சிஸ்கோ கிட் பதிவு:
லக்கி லிமட்டின் இரும்புக்கை மாயாவி பதிவுகள்:
ஜெஸ் லாங் பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:
விச்சு & கிச்சு பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:
முத்துவின் முதல் இதழ் - இரும்புக்கை மாயாவி:
- http://muthufanblog.blogspot.com/2008/07/i-have-been-collecting-english.html
- http://muthufan.0catch.com/firstmuthu.html
- http://muthufan.tripod.com/firstmuthu.html
இரும்புக்கை மாயாவி:
- http://muthufan.0catch.com/Maayavi.htm
- http://muthufan.tripod.com/Maayavi.htm
- http://sharehunter.wordpress.com/2008/10/17/comicssupers2/
- http://sharehunter.wordpress.com/2008/10/21/ironclaw2/
- http://akotheeka.blogspot.com/search/label/இரும்புக்கை%20மாயாவி
பிற சிறப்பிதழ்கள்: