“ஏக் விஸ்வநாதன்!
தோ விஸ்வநாதன்!
ஏக் தோ விஸ்வநாதன்!
தீன் விஸ்வநாதன்!
சார் விஸ்வநாதன்!
ஏக் தோ தீன் சார் விஸ்வநாதன்!”
-கவுண்டமணி (படம் : தேடினேன் வந்தது)
வணக்கம்,
தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அடியேனின் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த நன்னாளில் பிறந்த நாள் காணும் நமது அபிமான தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னர் நண்பர் கிங் விஸ்வாவிற்கு நம் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்தப் பதிவு அவரின் நீண்ட(நீண்டுவிட்ட) ஆயுளுக்கு சமர்ப்பணம்! மேற்கூறிய கவுண்டரின் ஹிந்திக் கவிதையும் தான்! மார்க்கண்டேயன் போல, பெஞ்சமின் பட்டன் போல, ஷாகித் அஃப்ரிதி போல மேலும் மேலும் அவரது வயது குறைந்து வாலிபம் வளர வாழ்த்துகிறேன்!
சென்ற பதிவான முத்து ஸ்பெஷல்-க்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றிகள்! தொடர்ந்து இது போன்ற சிறப்பான பதிவுகளை வழங்க என்னால் இயன்றவரை முயற்சிக்கிறேன்! உங்கள் கருத்துரைகளிருந்த கேள்விகளுக்கான பதில்களை நானறிந்த வரை வழங்கியுள்ளேன்! பயனிருப்பின் மகிழ்ச்சி!
மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு வருவோம்!
சென்ற வருடம் வரை இந்த சித்திரை நன்னாளில் தமிழ் புத்தாண்டு அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. நம் காமிக்ஸ் உலகம் மட்டும் விதிவிலக்கா என்ன?
முத்துவிலும், ராணியிலும் சிலபல தமிழ் புத்தாண்டு மலர்கள் வெளிவந்துள்ளன! லயனில் இதுவரை வந்ததில்லை, இனிமேலும் வர வாய்ப்புகள் குறைவுதான்! ஏனெனில் ஏப்ரல், மே மாதங்களில் லயனில் சிறப்பான பல கோடை மலர்கள் வந்து அந்த SLOT-ஐ ஆக்ரமித்துக் கொண்டுவிட்டபடியால் சித்திரைச் சிறப்பிதழ்கள் வரும் வாய்ப்புகள் எப்போதும் சொற்பமாகவே இருந்துள்ளன!
இதுவரை வெளிவந்த தமிழ் புத்தாண்டு மலர்கள் இதோ:
ராணி காமிக்ஸ்:-
இவையனைத்தும் ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்கள் பொறுப்பிலிருந்த போது வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது!
-
1985 – ராணி#020 – ராட்சத பல்லி!
-
1986 – ராணி#044 – மந்திர மண்டலம்
-
1987 – ராணி#068 – மர்ம வீரன்!
ஏற்கெனவே இங்கே குறிப்பிட்டுள்ள பல்வேறு காரணங்களுக்காக நான் இவற்றைப் பற்றிப் பெரிதாக நான் எதுவும் சொல்லப் போவதில்லை!
முத்து காமிக்ஸ்:-
சித்திரைத் திருநாளன்று பலப் புத்தகங்கள் முத்து வெளியிட்டிருந்தாலும் எனக்குத் தெரிந்த வரை இரண்டேயிரண்டு முறைதான் தமிழ் புத்தாண்டு மலர்கள் என அறிவிக்கப்பட்டு சிறப்பிதழ்கள் வெளிவந்தன!
முத்து#158 – சதிவலையில் மாயாவி + கடத்தல் முதலைகள் (மறுபதிப்பு):-
நான் படித்த முதல் தமிழ் புத்தாண்டு மலர். இதில் இரண்டு கதைகள்! கூடவே கபீஷும், மொட்டைத்தலையன் ஹென்ரியும்.
முத்து#158 - சதி வலையில் மாயாவி + கடத்தல் முதலைகள் (மறுபதிப்பு) - அட்டைப்படம்
முத்து#158 - சதி வலையில் மாயாவி - பக்கம் 131
இதில் மாயாவியின் சிறுகதை ஒரு சிறந்த மொக்கைக் கதையாகும்! இன்னொரு கதையான கடத்தல் முதலைகள் ஒரு க்ளாஸிக் ஜானி நீரோ கதை. இதை விமர்சனம் செய்ய தனிப்பதிவு ஒன்று வேண்டுமென்பதால் இப்போதைக்கு இந்தப் புத்தகத்தைப் பற்றி நோ விமர்சனம்! அட்டைப்படங்கள் மட்டும்தான்!
முத்து#020 - கடத்தல் முதலைகள் - அட்டைப்படம் காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#010 - கடத்தல் முதலைகள்! – அட்டைப்படம்
ஜானி நீரோ பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழேயுள்ள சுட்டிகளைப் பயன்படுத்தி முத்து விசிறியின் அருமையான பதிவுகளை வாசித்து மகிழவும்! போனஸாக நீங்கள் படித்து மகிழ கபீஷும், ஹென்றியும்.
கூடவே மாயாவிக் கதையின் VALIANT ANNUAL 1969-ல் வெளிவந்த ஆங்கிலப் பதிப்பு! இக்கதை முழுமையாக இனையத்தில் டவுன்லோடு கிடைக்கவில்லை! 2 பக்கம் நடுவில் மிஸ்ஸாகும்! சுமாரான குவாலிட்டி தான்! ஆனால் இது ஜட்டி போடாத சூப்பர் ஹீரோ மாயாவியின் தலைசிறந்த மொக்கைக் கதை என்பதால் பெரிதாக ஒன்றும் குடிமுழுகிப்போய் விடாது!
ஓ.கே. இனி பதிவின் முக்கியப் பகுதிக்கு வருவோம்!
முத்து#025 – கொரில்லா சாம்ராஜ்யம்:-
ஏப்ரல் 1974-ல் தமிழ் புத்தாண்டு மலராக வெளிவந்த இவ்விதழ் பல சிறப்பம்சங்கள் பெற்றது!
- முத்துவின் 25-வது இதழ்!
- முத்துவின் முதல் முழு வண்ண இதழ்! (மேலும் மூன்று இதழ்கள் வந்தன!)
- மறைந்த திரு.முல்லை தங்கராசன் முத்துவின் ஆரம்ப காலங்களில் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்த போது அவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த கடைசி முத்து இதழ்! மீண்டும் 1982-84ல் அவர் முத்து வார மலர்-ல் பணிபுரிந்தார்!
- ஆரம்ப கால முத்துவின் முதல் பாக்கெட் சைஸ் இதழ்! பாக்கெட் சைஸ் என்றால் இப்போது வரும் சைஸ் அல்ல! 11cmX15cm அளவுடன் சற்றே பெரியது!
இப்பேர்ப்பட்ட சிறப்பம்சங்கள் பொருந்திய இதழின் விளம்பரமும், அட்டைப்படமும் இதோ!
இக்கதை மீண்டும் 1992-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது! அப்போது வெளிவந்த முத்துவின் 200-வது இதழுடன் இவ்விதழும் கடைகளுக்கு வந்தது! ஆனால் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் முத்துவின் 300-வது இதழில் வெளியிட்டிருந்த பட்டியலில் வெளியீட்டு எண்ணைத் தவறுதலாகக் குறிப்பிட்டிருப்பார்! முத்துவின் 200-வது இதழ் பற்றிப் பேசினாலே எனக்குக் கடுப்பாகிறது! முத்துவின் சரித்திரத்தைப் பற்றிப் பின்னொரு தருணத்தில் பேசும் போது இவ்விரண்டு விஷயங்கள் பற்றித் தவறாதுக் குறிப்பிடுகிறேன்! இப்போதைக்கு வேண்டாம்!
முத்து#200(a) - கொரில்லா சாம்ராஜ்யம்! - அட்டைப்படம்
இன்னும் இக்கதை காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ல் வரவில்லை. இக்கதை அடுத்த மறுபதிப்புக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!
கதை:-
பெரிதாக ஒன்றுமில்லை! கிம்பர் என்ற ஒரு கிறுக்கு விஞ்ஞானி! டிரான்ஸ் ஆல்பா எனும் கருவி மூலம் கொரில்லாக்களின் சக்தியை மனிதர்களுக்கு மற்றுவது எப்படி என்று ஆராய்கிறான்! அவனது பலியாடு, சக்கரவர்த்தி எனும் கொரில்லா!
இது போன்ற கதைகளின் இனி என்ன ஆகும்? வழக்கம்போல ஒரு நாள் திடீரென சக்கரவர்த்தி தப்பித்துக் கொள்கிறது. டிரான்ஸ் ஆல்பா மூலம் கிம்பரின் அறிவைப் பெற்றுக்கொள்கிறது! ஒரு கொரில்லாப் படையொன்றையமைத்துக் கொண்டு உலகையேத் தன்வசப்படுத்த முயற்சிக்கிறது!
இறுதியில் மாயாவி எப்படி டிரான்ஸ் ஆல்பாவை அழித்து இவ்வுலகை சக்கரவர்த்தியிடமிருந்து காக்கிறார் என்பதே கதை!
கதையின் மூலம்:-
1963-ல் வெளிவந்த PLANET OF THE APES எனும் நாவல் உலகெங்கிலும் சக்கை போடு போட்டது! பல படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வந்தன! அனைத்தும் பிரம்மாண்ட வெற்றி பெற்றன்!
ஆச்சரியப் படத்தக்க விஷயம் என்னவெனில் இக்கதை ஆங்கிலத்தில் வெளியானது 1967-ல். முதல் PLANET OF THE APES படம் வந்தது 1968-ல். ஒரு வேளை படம் தயாராகிக் கொண்டிருக்கும்போதே அதன் விளம்பரப் பின்னனியில் புத்தகத்தை விற்று விடலாம் என FLEETWAY எண்ணியிருக்கலாம்?!!
2001-ல் BATMAN (1989) புகழ் டிம் பர்ட்டன் PLANET OF THE APES படத்தை ரீ-மேக் செய்தார். இது ஒரு சிறந்த மொக்கைப் படமாகும்! படம் உலகெங்கும் ஊத்திமூடியதில் வியப்பேதுமில்லை!
முழுநீள வண்ணச் சித்திரக்கதை!:-
இக்கதை முழு வண்ணத்தில் வந்தது, என்றேனல்லவா? இதோ கலருக்கும், கருப்பு வெள்ளைக்குமான வித்தியாசம்! என்னதான் ஃபோட்டோஷாப்பில் ஒப்பேற்றினாலும் கருப்பு வெள்ளையில் மொக்கையாகத்தான் இருக்கிறது, இல்லையா? முழு வண்ணத்தில், தரமான வெள்ளைக் காகித்தில் இவ்விதழை வாசிப்பதே ஒரு சுகானுபவம்!
இதோ நீங்கள் ரசித்து மகிழ இன்னும் சில வண்ணப்படங்கள்! ஈஸ்ட்மென் கலரில் படங்கள் ஜொலிப்பதைக் காணுங்கள்! தமிழில் வெளிவந்த தலைசிறந்த முழு வண்ணக் காமிக்ஸ் இதுதான் என்பதில் சந்தேகமேயில்லை!
ஆங்கிலப் பதிப்பு:-
இக்கதை ஆங்கிலத்தில் அக்டோபர் 1967-ல் இங்கிலாந்தின் FLEETWAY நிறுவனத்தினர் வெளியிட்ட FLEETWAY SUPER LIBRARY-ன் STUPENDOUS SERIES தொடரின் 19-வது வெளியீட்டில் வெளிவந்தது! ஆங்கிலத்தில் கூட கருப்பு வெள்ளைதான். அனேகமாக இக்கதை உலகிலேயே முதன்முறையாக வண்ணத்தில் வந்தது தமிழில்தான் என்பது என் எண்ணம்!
தவறாகவும் இருக்கலாம்! ஏனெனில் ஐரோப்பாவிலும் மாயாவி மிகப் பிரபலம்! அங்கே வண்ணப் பதிப்பு வந்திருக்கலாம்! அப்படியே வந்திருந்தால் கூட இந்தளவுக்கு சிறப்புடன் வந்திருக்குமா என்பது சந்தேகமே!
போனஸாகப் பின்னட்டையின் உள்பக்கத்தில் வந்த ஒரு விச்சு & கிச்சு கதை! படித்து மகிழுங்கள்! இவ்விதழுடன் பிறந்த நாள் பரிசு! என்ற இலவச இனைப்பு ஒன்று வழங்கப்பட்டது! அது என்னவென்று தெரிந்தால் நெடுநாளைய வாசகர்கள் யாரேனும் கூறுங்களேன்! சத்தியமாக எனக்குத் தெரியாது!
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! ஆங்கில பதிப்புகளின் அத்தனை விபரங்களையும் அளித்த நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு.:-
தொடர்புடைய இடுகைகள்:-
ஜானி நீரோ:
கபீஷ்:
முத்துவின் முதல் இதழ் - இரும்புக்கை மாயாவி:
இரும்புக்கை மாயாவி:
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பற்றிய இடுகைகள்:
பிற சிறப்பிதழ்கள்: