Wednesday, December 31, 2008

நடுநிசிக் கள்வன்!

முத்து#10 – நடுநிசிக் கள்வன் - முன்னட்டை
முத்து#10 – நடுநிசிக் கள்வன் - முன்னட்டை
முத்து#10 – நடுநிசிக் கள்வன் - பின்னட்டை
முத்து#10 – நடுநிசிக் கள்வன் - பின்னட்டை
முத்து#156 – நடுநிசிக் கள்வன் - மறுபதிப்பு
முத்து#156 – நடுநிசிக் கள்வன் - மறுபதிப்பு
காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#13 - நடுநிசிக் கள்வன்
காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#13 - நடுநிசிக் கள்வன்
FLEETWAY SUPER LIBRARY – STUPENDOUS SERIES NO. 11 – THE BLINDING LIGHT
FLEETWAY SUPER LIBRARY – STUPENDOUS SERIES NO. 11 – THE BLINDING LIGHT
அதிரடி ஓபனிங்!
அதிரடி ஓபனிங்!
காளைக்கே வெற்றி கிடைக்கலாம்!
காளைக்கே வெற்றி கிடைக்கலாம்!
கள்வனைப் பிடிக்கக் காத்திருக்கும் மாயாவி!
கள்வனைப் பிடிக்கக் காத்திருக்கும் மாயாவி!
மாமன்னர் மாண்டிஜூமா!
மாமன்னர் மாண்டிஜூமா!

பச்சை வேதாளம்!

பச்சை வேதாளம்!
மாயாவியும் மூன்று குருடர்களும்!
மாயாவியும் மூன்று குருடர்களும்!
மாவீரன் மாண்டிஜூமா!
மாவீரன் மாண்டிஜூமா!

“யாரு முதல்ல வர்றாங்கன்றது முக்கியமில்ல,
லாஸ்ட்டுல யாரு ஃபர்ஸ்ட்டு வர்றாங்கன்றதுதான் முக்கியம்!”

-லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு (மன்மதன்)

வணக்கம்,

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அடியேனின் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நீண்டதொரு பிரிவிற்குப்பின் மீண்டும் சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி! இத்தனை நாளாய் ஆவலுடன் காத்திருந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி!

புதியதொரு பணிநிமித்தம் நேர்ந்த இடமாற்றத்தினால் ஏற்பட்ட தொல்லைகள், தாமதங்கள், புதிய இடத்தில் மீண்டும் சகல வசதிககளையும் அமைப்பதற்குள் உண்டான சிக்கல்கள் காரணமாக வலையுலகத்திலிருந்து விலகிநிற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இப்போது ஓரளவிற்கு செட்டிலாகிவிட்டதால் இனியும் காலதாமதம் செய்யவேண்டாம் என்பதற்காகவே இந்த அதிரடிப் பதிவு!

இந்த காலகட்டத்தில் நான் எதிரிகளுக்கு பயந்து நமீதாவோடு தலைமறைவாகி விட்டதாக சில வேண்டப்பட்ட விரோதிகள் அவதூறு பரப்பி வருவதை நம்பவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

அ.கொ.தீ.க. தலைமையக இடமாற்றம் இன்னும் ஒரிரு வாரங்களில் முழுமையடைந்துவிடும். அதன்பின் முழுமூச்சாக முயற்சிகள் செய்து பழைய ஃபார்முக்கு வந்துவிடப் பார்க்கிறேன்! (இன்னமும் தலைமையகத்தில் இனையத்தொடர்பு வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!)

சென்ற முறை ‘லார்கோ வின்ச்’ பதிவிட்டிருந்த அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவருக்கு நீங்கள் அனைவரும் நல்கிய நல்லாதரவுக்கு நன்றிகள். அவருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! லார்கோ வின்ச் திரைவிமர்சனம் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்

நான் இல்லாத சமயத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்துவிட்டுள்ளன. அவற்றையெல்லாம் பதிவின் முடிவில் அலசுவோம்! 

ஓ.கே., மொக்கை போட்டது போதும், இனி மேட்டருக்கு வருவோம்!

‘நடுநிசிக் கள்வன்’ என்ற பெயரைக் கேட்டாலே காமிக்ஸ் ரசிகர்களின் உள்ளங்களில் இனிய நினைவுகள் இன்ப ஊற்றாகப் பீறிடும். நானும் இதற்கு விதிவிலக்கல்ல!

இதில் சிறப்பு என்னவென்றால் முதன்முதலில் காமிக்ஸ் உலகிற்கு, குறிப்பாக ‘இரும்புக்கை மாயாவி’க்கு என்னை அறிமுகப்படுத்தியது 1987-ல் வெளிவந்த ‘நடுநிசிக் கள்வன்’-ன் மறுபதிப்புதான். நண்பர் ‘கிங் விஸ்வா’வும் எனக்கு நினைவு தெரிந்து இதுதான் நான் படித்த முதல் காமிக்ஸ் என்று கூறி தனது முதுமையை மறைக்கப் பார்க்கிறார்.

ஆனால் நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் திரு.ஷங்கர் விஸ்வலிங்கம் போன்றோர் இக்கதையை இதன் முதல் பதிப்பு ஜனவரி 1973-ல் வெளியான போதே படித்து மகிழும் பேறு பெற்றோர் ஆவர்.

அப்படி இந்தக் கதையில் என்னதான் இருக்கிறது என்று கேட்கும் அறியாப் பிள்ளைகளுக்கு சிலபல போதனைகளை அள்ளி வழங்குவதே இப்பதிவின் நோக்கமாகும்.

‘நடுநிசிக் கள்வன்’-ன் ஆரம்பமே ஆர்ப்பாட்டமாக இருக்கும். ஸ்பெயின் நாட்டில் பிரபலமான காளை மாட்டுச் சண்டை ஒன்றில் கதை தொடங்குகிறது. மாவீரன் ‘மாண்டிஜூமா’ காளையை அடக்க முயற்சிப்பதைக் கண்டு ஆர்ப்பரிக்கிறது மக்கள் கூட்டம்.

கூட்டத்தில் உணர்ச்சிவசப்படும் ஒரு ரசிகர் ‘வெற்றி வீரனுக்குதான்! இல்லையா நண்பரே?’ என்கிறார். அதற்கு ‘காளைக்கே வெற்றி கிடைக்கலாமென்று கருதுகிறேன்’ என ஒருவர் பதிலடியளிக்கிறார். அசந்து போகிறார் ரசிகர். மேலும் சண்டையின் முடிவிற்கு காத்திருக்காமல் முக்கியப்பணி இருப்பதாகக் கூறிக் கிளம்பி விடுகிறார். யாரிந்த மர்ம மனிதன். அவர்தான் ஈடிணையற்ற துப்பறியும் வீரரான ‘இரும்புக்கை மாயாவி’.

உலகெங்கிலும் பல்வேறு அருங்காட்சியகங்களிலிருந்து பழங்கால ‘அஸ்டெக்’ பொக்கிஷங்கள் நள்ளிரவில் களவு போகின்றன. ‘நடுநிசிக் கள்வன்’-ஐப் பிடிக்க மாயாவி மாட்ரிட் வருகிறார். மாண்டிஜூமாவின் வீரத்தைக் கண்டு வியக்கும் மாயாவி தனது பணிக்குத் தயாராகிறார்.

தனது இரும்புக்கரத்தைப் பார்த்துப் புன்முறுவலித்தவாறே ‘தயாரா நண்பனே?’ என்று கேட்கிறார். நாமும் அவருடன் சேர்ந்து சாகஸத்திற்குத் தயாராகிறோம். ஒதுக்குப்புறமான ஒரு மின்கம்பத்தில் ஏறி மின்சாரக் கம்பியை பற்றுகிறார். மாயாவியின் உடல் வழியே மின்சாரம் பாய்ந்து அவர் மாயமாய் மறைகிறார். நாம் பரவசமடைகிறோம்.

பிரபல ‘ப்ராடோ’ மியூசியத்தில் இருளின் போர்வையில் நடுநிசிக் கள்வனுக்காக மாயாவி காத்திருக்கிறார். பளபளக்கும் இரும்புக்கரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்படுகிறது. கள்வனும் வருகிறான். ஒரு தங்கத்தட்டை களவாடிச் செல்ல முயல்கிறான். மாயாவி அவனை தடுத்துப் பிடிக்கிறார். நடுநிசிக் கள்வனை பிடித்துவிட்ட திருப்தியில் மாயாவி அங்கிருந்து அகல்கிறார்.

பின்னிரவில் ஒரு மர்ம உருவம் தனது வைர மோதிரத்தால் ஜன்னலில் துளையிட்டு உட்புகுந்து அந்தத்  தட்டைக் களவாடிச் செல்கிறது. அது வேறு யாருமல்ல. காளைச் சண்டை வீரன் ‘மாண்டிஜூமா’வே ஆவான். இதற்குமுன் வந்து பிடிபட்டவன் அவனது அல்லக்கையான ‘சாஞ்சோ’.

தங்கத் தட்டுடன் தனது தாய்நாடான மெக்ஸிகோ செல்லும் மாண்டிஜூமா 'யுகாடான்' பிராந்தியத்திலுள்ள ஒரு புராதான கோவிலுக்குச் செல்கிறான். அங்கு ஒரு முரட்டுக் காளை கொட்டிலில் அடைபட்டு சீறிக்கொண்டிருக்க அதை மாண்டிஜூமா பாசத்துடன் நோக்குகிறான். காளையோ அவனை வெறுப்புடன் வெறிக்கிறது. முன்பு அக்காளையுடன் போட்ட சண்டையில் மாண்டிஜூமாவின் தலையில் காயம் ஏற்பட்டு புத்திபேதலித்துவிட்டதை நாம் இலைமறைகாயாக உணர்கிறோம். தனது அறிவுக்கண்ணை திறந்துவைத்தாக நம்பி அக்காளையைக் கொல்லாமல் பராமரித்து வருகிறான் மாண்டிஜூமா.

அடுத்த காட்சியில் நம்மை பிரமிக்கவைக்கும் விதத்தில் முழு ராஜாலங்காரத்தோடு அரியனையில் வீற்றிருக்கும் மாண்டிஜூமா அத்தங்கத்தட்டில் உள்ள ரகசியத்தைப் படிக்குமாறு ஒரு கிழட்டு மதகுருவிற்கு ஆனையிடுகிறான். அதில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி எதிரிகளின் பார்வையைப் போக்கும் ஆயுதம் பற்றிய ரகசியத்தைக் கண்டறிந்து கூறுகிறான் 'டாடெக்' என்னும் அம்மதகுரு.

அதைக்கேட்டு உற்சாகமடையும் மாண்டிஜூமா தன்னை எதிர்போர் அனைவரையும் வென்று அஸ்டெக் சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவப்போவதாக சூளுரைக்கிறான். தன்னைத் தடுக்கும் டாடெக்கிடம் "இனிமேல் என்னைத் தலைவரே என்று அழைக்காதே மாமன்னரே என்று அழை" என்று உத்தரவிட்டு குரூரமாக நகைக்கிறான்.  

முதல் அத்தியாயம் முற்றுபெறுகிறது.

இரண்டாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மாயாவி பிரிட்டனில் உள்ள ஒரு சீனப்பகுதியில் 'பச்சை வேதாளம்' என்று அழைக்கப்படும் ஒரு நிழற்படை ஏஜென்டை சந்தித்து நடுநிசிக் கள்வன் விவகாரம் இன்னும் முற்றுபெறவில்லை எனவும், மாண்டிஜூமாதான் இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி என்றும் அறிகிறார். மாண்டிஜூமாவைப் பிடிக்க மெக்ஸிகோ கிளம்புகிறார் மாயாவி. இதுவும் அற்புதமான சித்திரங்களைக்கொண்ட ஒரு அருமையான கட்டமாகும். குறிப்பாக பச்சை வேதாளத்தின் உருவம் நம்மை திகிலடையச் செய்கிறது (சிறுவயதிலும், இப்போதும்).

கதைக்களம் மெக்ஸிகோவுக்கு மாறுகிறது. அங்கே சம்பவங்கள் சூடுபிடிக்க ஆரம்பிக்கின்றன. அஸ்டெக் படையினர் மெக்ஸிகோ நகரை ஆக்ரமிக்கின்றனர். எதிர்ப்போர் அனைவரையும் ஹெலிகாப்டரில் அமைக்கப்பட்ட பயங்கர ஒளி விளக்கு குருடாக்குகிறது. அஸ்டெக் படை மாபெரும் வெற்றி பெறுகிறது.

மெக்ஸிகோ வந்தடையும் மாயாவியின் விமானத்தை அங்கிருந்து தப்பிக்கத் துடிக்கும் குருடாகிப்போன மக்கள் கூட்டம் சூழ்ந்துவிட மாயாவி மீண்டும் மின்சாரத்தின் துணையோடு அங்கிருந்து நைஸாக நழுவுகிறார். கடந்து செல்லும் அஸ்டெக் படையில் ஒரு வாகனத்தைத் தாக்கி அதில் ஒரு வீரனை விசாரிக்கிறார். உண்மைகளைக் கண்டறிகிறார்.  'யார் நீ?' என்று முனகும் வீரனிடம் 'எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். பதில் சொல்லி பழக்கமில்லை!' என பன்ச் அடித்துவிட்டு அங்கிருந்து ஒரு விமானத்தைக் கிளப்பிகொண்டு 'யுகாடான்' விரைகிறார்.

இதற்கிடையே... (காமிக்ஸ் உலகில் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை இதுதான்!) வழக்கம் போல அடுத்தவன் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா இங்கும் அஸ்டெக் படையை எதிர்த்து மூன்று போர் விமானங்களை அனுப்புகிறது. அவர்களும் ஒளிக்கதிருக்கு பலியாகின்றனர். 

மூன்றாவது அத்தியாயம்! இதன் தொடக்கத்திலும் அற்புதமான காட்சியமைப்பு. கண் குருடாகிப்போன அமெரிக்க விமானிகளை அரூபமாக இருக்கும் மாயாவி வழிநடத்திச் செல்வார். இந்தக் காட்சியமைப்பின் IRONY (இதற்கு சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை, அறிஞர்கள் உதவவும்) எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அப்போதும், இப்போதும், எப்போதும்! தலைசிறந்த காமிக்ஸ் காட்சியமைப்புகளில் இக்காட்சி தனித்து விளங்கும் என்பதில் ஐயமில்லை!

அமெரிக்காவின் அத்துமீரலினால் வெகுண்டெழும் மாண்டிஜூமா அமெரிக்கா மீது படையெடுத்து டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஒரு நகரை சூறையாடி வெல்கிறான். இவனைத் தடுக்க யாருமே இல்லையா? ஏன் இல்லை? இரும்புக்கை மாயாவி இருக்கிறாரே! அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? விமானத்தில் யுகாடானை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்!

அப்போது அவருக்கு எதிரில் ஒளிக்கதிர் ஏந்திச் செல்லும் ஹெலிகாப்டர் வருகிறது! மாயாவி மீது ஒளியை பாய்ச்சுகிறது! என்ன ஆனது? இங்கே சில டுபாக்கூர் சம்பவங்கள் நடைபெறும். மாயாவியை மட்டும் ஒளிக்கதிர் ஒன்றும் செய்யாதாம்! ஏனென்றால் அப்போது அவர் அரூபமாக இருப்பாராம், ஒளிக்கதிர் அவரை ஊடுருவி சென்று விடுமாம்!

டுபாக்கூர் சம்பவங்கள் நாலாவது அத்தியாயத்திலும் தொடர்கின்றன! மாயாவியின் சுயரூபம் வழக்கம் போல அவருக்கு இக்கட்டை உண்டாக்கும் சூழலில் திரும்புகிறது! எதிரிகள் அவரது விமானத்தை சுட்டு வீழ்த்தி அவரது இரும்புக்கரத்தைப் பிரித்து மாண்டிஜூமாவிடம் கைதியாகக் கொண்டு செல்கின்றனர். அங்கே அவரை சூரியனுக்கு பலியிடுமாறு கிழட்டு மதகுரு 'டாடெக்'கிற்கு உத்தரவிடுகிறான் மாண்டிஜூமா.

பலிபீடத்தில் இருக்கும் மாயாவியைக் காக்க திடீரென புயல் வருகிறது. மின்னல் தாக்கி இறக்கிறான் டாடெக். அதே மின்னல் மாயாவியை மறையச் செய்கிறது. இரும்புக்கரம் இல்லாமல் தப்பி ஓடுகிறார். மாண்டிஜூமாவுடன் ஒற்றைக்கையுடன் மோதுகிறார். மாயாவி மீது ஒளிக்கதிரை ஏவுகிறான் மாண்டிஜூமா. மாயாவி கண்ணைப் பொத்திக் கொள்கிறார். மாண்டிஜூமா நேராக ஒளிக்கதிரைப் பார்த்துக் குருடனாகிறான்!

என்னாங்கடா இது? யார் காதுல பூ சுத்துறீங்க? என கேட்கும் மனோநிலையில் சிறுவயதிலும் சரி,  இப்போதும் சரி நான் இல்லை.  மாயாவியின் சாகஸங்களில் மயங்கி அவரை மன்னிப்போம்!

இத்தனை காதுலபூ சமாச்சாரங்களையும் ஈடு கட்டும் விதமாக அமைக்கிறது க்ளைமாக்ஸ்! குருடாகிப்போன மாண்டிஜூமா கால் இடறி முரட்டுக் காளை அடைபட்டிருக்கும் கொட்டகைக்குள் விழுகிறான். மாட்டின் உறுமலைக் கேட்டு சட்டையைக் கழற்றுகிறான். இறுதி மோதலுக்கு தயாராக நிற்கிறான்! இக்காட்சியின் தாக்கத்தை விவரிக்க எனக்குத் தமிழாளுமை போதாது என்பதால் படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!

அடடா! என்னே வீரம்! கண் தெரியாத போதிலும் காளைக்குப் போக்கு காட்டுகிறான்! அவனது முடிவு நெருங்கும் பொது மாயாவி அவனைக் காக்கிறார். அவனது வீரத்தை மெச்சிவிட்டு ஒளிக்கதிரை அழித்துவிட்டு அங்கிருந்து வழக்கம் போல நழுவுகிறார் மாயாவி. மாண்டிஜூமாவை அமெரிக்க இராணுவம் பரிதாபத்திற்குரிய நிலையில் கைது செய்கிறது. செத்த பாம்பை அடிப்பது தானே அவர்களது வழக்கம்!

கதைக்கு சுபம் போட்டாயிற்று! ஆனால் நம் மனதை விட்டகல மறுக்கிறான் மாண்டிஜூமா! இக்கதையின் வெற்றி மாண்டிஜூமாவை சித்தரித்த விதத்தில்தான் அடங்கும்! தலைசிறந்த காமிக்ஸ் வில்லன்களில் அவனும் ஒருவன். எங்கே அவன் போட்டிக்கு வந்தால் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் அம்மாவீரனை இருட்டடிப்பு செய்ய வேண்டியதாகி விட்டது!

இப்படியொரு அறிமுகத்திற்குப்பின் அது யாராயினும் அவர்கள் மனதில் ‘இரும்புக்கை மாயாவி’ பச்சக்கென்று ஒட்டிக் கொள்வதில் ஆச்சரியமில்லை. 'இரும்புக்கை மாயாவி' எனது ஃபேவரைட் நாயகன் ஆனதற்கும், முத்து காமிக்ஸ் எனது ஆஸ்த்தான காமிக்ஸ் ஆனதற்கும் இக்கதை தனிப்பெரும் காரணியாகும்.

இங்கிலாந்தின் 'ஃப்ளீட்வே' (FLEETWAY) நிறுவனம் ஜூன் 1967-ல் வெளியிட்ட டைஜஸ்ட் வடிவிலான காமிக்ஸ்களில் "ஸ்டுபென்டஸ் ஸீரீஸ்" (STUPENDOUS SERIES) எனும் தொடரில் பதினோராவது இதழான 'தி ப்ளைண்டிங் லைட்' (THE BLINDING LIGHT) எனும் கதைதான் நடுநிசிக் கள்வனின் மூலம்.

ஜனவரி 1973-ல் பொங்கல் மலராக முத்து காமிக்ஸின் பத்தாவது இதழில் முல்லை தங்கராசனின் முத்தான மொழிபெயர்ப்பில் இக்கதை முதன்முதலில் தமிழுக்கு வந்தது. இந்த இதழுடன் பொங்கல் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்களேன்?! முடிந்தால் அந்தப் பரிசை இன்னும் பத்திரமாக வைத்திருந்தீர்களானால் புகைப்படம் அனுப்புங்களேன்?!

அதன் பிறகு முத்து # 156 - பிப்ரவரி 1987-லும், காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 13 - ஜூன் 2003-லும் இக்கதை மறுபதிப்பு செய்யப்பட்டது. இன்னும் எத்தனை முறை வந்தாலும் இக்கதைக்கான வரவேற்பு காமிக்ஸ் ரசிகர்களிடையே குன்றவே குன்றாது!

இக்கதைக்கு தமிழில் கிடைத்த வெற்றிக்கு முல்லை தங்கராசனின் மொழிபெயர்ப்பு மாபெரும் பங்கு வகிக்கிறது. பதிவின் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டிய மறக்கவொண்ணா சம்பவங்களை இவரது மொழி நடை மேலும் மெருகூட்டுகிறது. இவரைப் பற்றி காமிக்ஸ் வலைப்பூ சங்கத்தினர் யாரேனும் கூடிய விரைவில் பதிவிடுங்களேன்? அய்யம்பாளையத்தார் கவனிக்கவும்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆங்கிலப் பதிப்புகளைப் பற்றிய அத்துனை தகவல்களையும் அளித்துதவிய நண்பர் 'முத்து விசிறி'க்கு மனமார்ந்த நன்றிகள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:

இவை வலையுகத்திலிருந்து நான் விலகியிருந்த நாட்களில் நிகழ்ந்த மாற்றங்களை எனக்கு நானே நினைவு படுத்திக் கொள்ள குறித்து வைத்துக் கொண்டவை.

  • ஓட்டெடுப்பு முடிந்துவிட்டது. தமிழ் காமிக்ஸ் உலகின் தலைசிறந்த வில்லத்தனம் புரியும் அமைப்பாக அ.கொ.தீ.க. பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது! இரண்டாவது இடத்தில் அடியேனும் வந்துள்ளேன்! இதை அ.கொ.தீ.க.வின் வெற்றிக்கே சமர்ப்பிக்கிறேன். நல்ல/கள்ள ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி! கட்சிமாறி நல்லவனாக திருந்திவிட்ட துரோகி ‘ஸ்பைடர்’ ஆரம்பத்தில் முன்னிலை வகித்தாலும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ஒரு வாக்கு கூட பெறாமல் மண்ணைக் கவ்வினான். ஏன்னா நாங்க கள்ள ஓட்டு போட ஆரம்பிச்சதே அப்பதானே! இதைத்தான் ‘மன்மதன்’ படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ‘சிம்பு’ பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு  கூறுவார்.
  • 'வெகுமதி!' போட்டிக்கு சென்ற முறை யாருமே விடையளிக்க முன்வரவில்லை! இது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அ.கொ.தீ.க.வின் தியாகச் செம்மல்களில் ஒருவரான 'கருப்பு வேங்கை'யை உங்களில் யாருக்கும் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்! இம்முறையேனும் கொஞ்சம் ஆர்வம் காட்டுங்களேன்…
  • நண்பர் க.கொ.க.கூ. பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டார். இத்தனை நாள் நான் வலையுலகிலிருந்து விலகியிருந்ததால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியவில்லை. மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அவர் ஒன்றும் மாபெரும் குற்றம் இழைக்கவில்லை என்பதே என் கருத்து. காமிக்ஸ் என்பது கடல். அதில் நாம் எல்லோரும் முத்தெடுக்க வாய்ப்புள்ள போது இவ்வாறு ஒருவருக்கொருவர் துவேஷம் கொள்வது தேவையில்லை! அவரது சமீபத்திய பதிவுகளான குண்டன் பில்லியும் டெக்ஸ் வில்லர்-ம் மிக அருமையாக உள்ளன.
  • நண்பர் ரஃபிக் ராஜா ராணி காமிக்ஸ் பற்றி பிரத்தியேக வலைப்பூ ஒன்று தொடங்கியுள்ளார்.
  • சிறுவர் இலக்கியவாதி திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன் அவர்கள் முடிவேயில்லாத கன்னித்தீவு சிந்துபாத் பற்றி அருமையாக ஆய்ந்து எழுதியுள்ளார்.
  • மொக்கை காமிக்ஸ் (எ) தலைசிறந்த ஒலக காமிக்ஸ் என்று புதிதாக ஒலக காமிக்ஸ் ரசிகர் ஒருவர் கிளம்பியுள்ளார். உஷாராக இருக்க வேண்டும் போலிருக்கிறதே?
  • முத்து விசிறி டெக்ஸ் வில்லர் பற்றிய இடுகைகளிட ஆரம்பித்திருக்கிறார். சுவையான விருந்து காத்திருக்கிறது.
  • கனவுகளின் காதலன் லார்கோ வின்ச் திரைவிமர்சனம் எழுதியுள்ளார். இவரது கோட் நேம் மின்னல் ப்ற்றிய பதிவு ஆர்வத்தைத் தூண்டுகிறது. 
  • நண்பர் கிங் விஸ்வா ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு இடுகை இட்டுள்ளார். அவரும் யார் கூடயாவது பிஸியாக இருந்தாரோ, என்னவோ? புத்தாண்டு முதல் அவரும் என்னைப் போல் ரெகுலராக ஆஜராகி விடுவதாக உறுதி பூண்டுள்ளார். 
  • நண்பர் ஷிவ் ஹிந்தியில் வெளிவந்த ரோட்ஸைட் ரோமியோ அனிமேஷன் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காமிக்ஸ் பற்றி பதிவிட்டுள்ளார்.
  • பங்கு வேட்டையர் இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிவிட்டுதான் மறுவேலை பார்ப்பதென்று கங்கனம் கட்டிக்கொண்டு அலைகிறார் (‘கங்கனா ரனாவத்’தையல்ல). வேதாள நகரம் ஃபுல் ஸ்பீடில் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறது.

தொடர்புடைய இடுகைகள்:

'முத்து'வின் முதல் இதழ் - 'இரும்புக்கை மாயாவி':

'இரும்புக்கை மாயாவி':

'முத்து' இதழ்களின் முழு விவரம்:

ஃப்ளீட்வே/முத்து - ஒரு பார்வை:


'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' பற்றிய இடுகைகள்:

Friday, November 28, 2008

லார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

வணக்கம்,

நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவராக சிறப்பாகப் பணிபுரிந்து வரும் திரு.ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்கள் அவ்வப்போது எனக்கு அனுப்பும் ரகசியத் தகவல்களில் ‘லார்கோ வின்ச்’ எனும் காமிக்ஸ் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

இத்தொடரை உருவாக்கியவர் நமக்கெல்லாம் ஏற்கெனவே பரிச்சயமான XIII-ஐ உருவாக்கிய அதே வான் ஹாம்மே தான். இதன் ஆங்கிலப் பதிப்பை நான் சில மாதங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. வான் ஹாம்மேவின் எழுத்தின் ரசிகர்களை இத்தொடர் நிச்சயம் கவரும்.

மேற்கூறிய வாசகத்தை எண்ணி (சொன்னது யாரு?) நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவரை இதைப் பற்றி ஒரு இடுகையிடுமாறு பணித்தேன்! அந்த இடுகை இதோ உங்கள் பார்வையில்! ஆங்காங்கே நானும் கொஞ்சம் “மானே! தேனே! பொன்மானே!” எல்லாம் போட்டுள்ளேன்!

எனது மொக்கை போதும். ஓவர் டு ஷங்கர் விஸ்வலிங்கம்!

 
லார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி
-ஷங்கர் விஸ்வலிங்கம்

Largo_Cதெருக்களை ஈரம் காய அனுமதிக்காத குளிர்,பெய்வதே தெரியாது தூவிக்கொண்டிருக்கும் சாரல், ஹைக்கூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகள். பிரகாசமாக ஒளியூட்டப்பட்ட புத்தகசாலைகளின் கண்காட்சி தட்டுக்களில் சம்மணமிட்ட நிலையில், இறுதியாக வந்துள்ள தன் ஆல்பத்தின் அட்டையில் தியானத்தில் ஆழ்ந்துள்ள லார்கோ வின்ச் (LARGO WINCH). சலிப்பான இவ்விலையுதிர் காலம் லார்கோவின் ரசிகர்களிற்கு உவப்பானதாக அமையும் என்பது நிச்சயம்.

பத்து பில்லியன் டாலர்கள் பெறுமதிப்பான கம்பனிகளுக்கு சக்கரவர்த்தி நீரியோ வின்ச் (NERIO WINCH), திருமணமாகதவன், வாரிசுகள் கிடையாது. தன் வாழ்வின் ஒர் முக்கிய தருணத்தில் தன் வேர்களை தேட ஆரம்பிக்கின்றான். அவன் தேடல் ஸரயேவோவில் (SARAJEVO) ஸனிட்ஸா வின்ஸ்லாவ் (SANITZA WINCZLAV) எனும் பெண்ணின் கல்லறையில் முடிவடைகிறது. அப்பெண்ணின் மகனான லார்கோ வின்ஸ்லாவ் (LARGO WINCZLAV) நகரத்தின் அனாதை இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனையே தன் மகனாக தத்தெடுத்துக்கொள்வதுடன் அவனை வளர்கும் பொறுப்பை நல்மனம் கொண்ட ஒர் தம்பதியினரிடம் ஒப்படைக்கிறான் நீரியோ வின்ச். லார்கோவிற்கு பத்து வயதாகும் போது இங்கிலாந்திற்கு கல்வி கற்க அனுப்பபடுகிறான் .

பதினாறு வருடங்களின் பின் உடல் வருத்தமுற்ற நிலையில் சந்தேகத்திற்குள்ளாகும் விதத்தில் மரணமடைகிறான் நீரியோ வின்ச். அவசரமாக கூடும் வின்ச் குழுமத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அது வரை பல நிர்வாகிகளிற்கு ரகசியமாக வைக்கப்பட்ட லார்கோ வின்ச் பற்றிய உண்மை வெளியாகிறது. நீரியோவின் முழுச்சொத்துக்களிற்கும் வாரிசாகிறான் லார்கோ வின்ச்.

தனக்காக காத்திருக்கும் பெரும் பொறுப்புகளை பற்றிய கவலையேதுமின்றி உல்லாசமாக,நாடோடியாக உலகத்தை சுற்றுகிறான் லார்கோ. இஸ்தான்புல்லில் (ISTANBUL) அவன் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் தருணத்தில் கொலைச்சதி ஒன்றில் சிக்கி சிறைக்கு செல்கிறான், சைமன் ஓவ்ரன்னாஸ் (SIMON OVRONNAZ) எனும் திருடனின் உதவியுடன் சிறையிலிருந்து தப்புகிறான். துருக்கி காவல் துறையின் K-பிரிவின் திட்டங்களை முறியடித்து தன் விமான ஓட்டியான ஃப்ரெட்டி கப்லான் (FREDDY KAPLAN) துணையுடன் துருக்கியை விட்டு தப்பி செல்லும் அவனிற்கு தன் வளர்ப்புத் தந்தையின் மரணச்செய்தி அறிவிக்கப்படுகிறது. வின்ச் குழுமத்திற்கு எதிராக லார்கோவின் அதிரடி அட்டகாசங்களும் ஆரம்பமாகிறது.

லார்கோவின் ஒவ்வொரு சாகசங்களும் இரண்டு புத்தகங்களில் கூறப்படுகிறது. முதல் புத்தகமானது லார்கோ சதிவலையில் இனி மீட்சியே இல்லை எனும் நிலையில் மாட்டிக்கொள்வதையும், இரண்டாம் புத்தகமானது அவன் எவ்வாறு சதிகளை முறியடித்து சதிக்கு பின்னுள்ள காரணிகளையும், காரணகர்த்தாக்களையும் உலகிற்கு வெளிப்படுத்துவதையும் விவரிக்கிறது. லார்கோ ஒர் சாதாரன கோடீஸ்வரனைப் போல் பெண்கள், உல்லாசம், கொண்டாட்டம் என வலம் வந்தாலும் அதிரடியான தருணங்களில் கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ இலகுவாக பயன்படுத்த தயங்காதவன். தன்னையும், தன் கம்பனிகளையும் குறிவைக்கும் எதிரிகளை சாத்தியத்தின் விளிம்பு வரை சென்று போராடுபவன். நட்பை மதிப்பவன், சொன்ன வார்த்தையை மீறாதவன். கண்ணிமைகள் மூடுவதற்குள் அழகிய பெண்களை மயக்குபவன். பெண்கள் மட்டுமல்ல வாசகர்களும் தான் லார்கோவிடம் மயங்கி போனார்கள்.

லார்கோ வின்ச்சின் பாத்திரமானது முதன் முதலாக ழான் வான் ஹாம்மே (JEAN VAN HAMME) எழுதிய நாவல்களில் அறிமுகமானது. மெர்க்யூர் டி ஃப்ரான்ஸ் (MERCURE DE FRANCE) எனும் பதிப்பகம் 1977 முதல் 1984 வரையில் அவர் எழுதிய ஆறு நாவல்களை வெளியிட்டது. நாவல்களோ, லார்கோவோ ரசிகர்களிடம் சொல்லிக்கொள்ளுமளவு பிரபல்யமடையவில்லை. ஆனால் வான் ஹாம்மே தன் மனதில் ஒர் அனலை ஊதிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அனல் 1988ல் பிலிப் ஃப்ரான்க்-ஐ (PHILIPPE FRANCQ) லார்கோ வின்ச்சின் சித்திரக்கதை உருவாக்கலில் சித்திரங்களிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவர் வேண்டிக்கொண்ட போது பற்றிக்கொண்டது. இன்றுவரை அது அனையவே இல்லை.

சோல்வே வியாபார பயிற்சிப்பள்ளியில் (SOLVAY BUSINESS SCHOOL) வான் ஹாம்மே மாணவனாக செலவிட்ட வருடங்கள் பணம் ,கம்பனிகள், நிர்வாகம் என கதையாடலில் தராளமாக அவரிற்கு உதவியிருக்கவேண்டும். பிலிப் ஃப்ரான்க்கின் சம்பவத்தை நேரில் காண்பது போன்ற யதார்த்தை தழுவிய சித்திரங்களும், மனதிலே ஒட்டிக்கொள்ளும் வண்ணத்தெரிவுகளும், தெளிவான ஆனால் படு வேகமான கதை சொல்லலும், லார்கோ வின்ச்சின் சித்திரக்கதை பாத்திரத்தை அவர் அறிமுகமான நாவல்களை விட பெரும் வெற்றியடைய செய்துள்ளது. சாதாரன வெற்றியல்ல, ஒவியர் பிலிப் ஃப்ரான்க் தற்போது லார்கோ வின்ச் ஆல்பங்களிற்கு மட்டுமே பணிபுரிந்தால் போதுமென்றளவிற்க்கான மாபெரும் வெற்றி அது.

கோடீஸ்வர மனிதர்களின் பணவெறி, அதிகார ஆசை, முன்னால் சிரித்து பின்னால் குத்தும் நற்குணம் என்பவையும், அழகான பெண்கள், அளவான செக்ஸ், அதிரடி ஆக்ஷன் ,கதைக்கு கதை நாடுவிட்டு நாடு மாற்றி புதிய காட்சி சித்திரங்களை அறிமுகப்படுத்தல் எனும் போதையேற்றும் காக்டெயில் கலவையும் வாசகர்களை கிறங்கடிக்க செய்தது என்பதில் ஜயமில்லை. லார்கோ வின்ச்சின் மகத்தான விற்பனையும், ரசிகர்களின் தொடர் வரவேற்பும் , ஆதரவும் அவர் இன்னும் வருவார் என்பதற்கு உறுதி அளிக்கும் சான்றுகளாகும்.

லார்கோ வின்ச்சின் சித்திரக்கதைகள் டுப்யீ (DUPUIS) எனும் பெல்ஜிய பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன. இதுவரை 16 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 500 000 பிரதிகள் விற்றுதீர்ந்திருக்கின்றன. ஆங்கில பதிப்பை சினிபுக் (CINEBOOK) வெளியிடுகிறது. லார்கோவின் வெற்றி சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. ஜெரோம் ஸால்லின் (JEROME SALLE) இயக்கத்தில், டோமர் ஸிஸ்லி (TOMER SISLEY) பிரதான வேடமேற்று நடிக்கும் "லார்கோ வின்ச்" எனும் திரைப்படம் பிரான்ஸ் திரையரங்குகளில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவருகிறது. ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை காண சற்று பொறுத்திருப்போம்.
 

படம் வந்தவுடன் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுமாறு அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவரை தலைமையகம் பணிக்கிறது. இது போல் மென்மேலும் பல சிறப்பான இடுகைகளைத் தொடர்ந்து வழங்குமாறு அவருக்கு கட்டளையிடப்படுகிறது!

படம் ஆங்கிலத்திலும் வருவதால் டிவிடி கிடைத்ததும் நாம் பார்த்துக் கொள்ளலாம்!

இதுவரை வெளிவந்துள்ள ஆல்பங்களின் அட்டைப்படங்கள்:

தொடர்ச்சியாக ஒரே கதையுள்ள இரண்டு ஆல்பங்களின் அட்டைப்படங்கள் ஒரே மாதிரியான வண்ணக் கலவையை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள்!

கீழ்கண்ட படங்களின் மேல் ‘க்ளிக்’கினால் அட்டைப்படத்தையும், உள்பக்கங்கள் சிலவற்றையும் காணலாம். கதைச்சுருக்கமும் உண்டு. ஃப்ரெஞ்சு மொழி தெரிந்தவர்கள் படித்து ரசித்துக்கொள்ளலாம்!

9782800117911-G9782800118321-G9782800119472-G9782800120461-G9782800121277-G9782800122014-G9782800123073-G9782800124445-G9782800126289-G9782800128498-G9782800129815-G9782800131238-G9782800133874-G9782800135366-G9782800138619-G9782800140704-G

இதுவரை வந்துள்ள ‘சினிபுக்’ ஆங்கில வெளியீடுகள்:

முதலிரண்டு பாகங்களைக் கொண்ட முதல் புத்தகம் சென்னை ஸ்பென்சர் மற்றும் நுங்கம்பாக்கம் ‘லாண்ட்மார்க்’கில் கிடைக்கும். விலை ரூ:350/- மட்டுமே. பிரதிக்கு முந்துங்கள்! நண்பர் ‘ரஃபிக்’ இதைப் பற்றி இன்னும் பதிவு போடாதது ஆச்சரியமூட்டுகிறது!

‘சினிபுக்’ வெளியீடுகள் அனைத்தும் இரண்டு பாகங்கள் கொண்ட கதைகளை ஒரே புத்தகத்தில் வெளியிடுவதால் முடிவு தெரியாமல் நாம் அல்லாட வேண்டியிருக்காது.

Largo Winch Vol1 978-1-905460-48-9 CoverR_lLargo Winch - Takeover Bid_l9781905460786_l

லார்கோவை தமிழில் ரசிக்க நமக்கெல்லாம் கொடுத்துவைக்கவில்லை. S.விஜயன் சார் மனசு வைத்தால் முடியும்! செய்வாரா?

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். “வெகுமதி” போட்டியிலும் கலந்துகொண்டு பாராட்டுக்களைப் பெறுங்கள்! ஓட்டெடுப்பு முடியும் நேரமும் வந்துவிட்டது. வாக்களிக்க விரும்புவோர் சீக்கிரம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:

  • ஆசிரியர் S.விஜயன் அவர்கள் முதன்முறையாக நண்பர்கள் ‘முதலைப் பட்டாளம்’ மற்றும் ‘ரஃபிக் ராஜா’ ஆகியோரின் காமிக்ஸ் வலைப்பூக்களில் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். படிக்க முறையே இங்கே மற்றும் இங்கே ‘க்ளிக்’கவும். வாழ்த்துக்கள் நண்பர்களே!

லார்கோ வின்ச் இணையதளங்கள்:

லார்கோ வின்ச் டிவி தொடர்:

லார்கோ வின்ச் திரைப்படம்:

லார்கோ வின்ச் திரைப்பட ட்ரைலர்:

Sunday, November 16, 2008

அன்டோனியோ காடி

Antonio Gaudi - Criterion Collection - DVD Cover
அன்டோனியோ காடி –
தி க்ரைட்டீரியான் கலெக்ஷன் – டிவிடி அட்டைப்படம்

வணக்கம்,

வலைப்பூவை வந்து பார்த்து வாழ்த்தியோருக்கு நன்றி! "வெகுமதி!" கேள்விக்கு இந்த முறை நண்பர் செழியன் முந்திக்கொண்டு பதிலளித்துள்ளார். வாழ்த்துக்கள்! பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.

ஒலக சினிமா பற்றி எழுதுவதாக அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருந்தேன் அல்லவா? இதோ அதில் முதல் பதிவு.

சமீபத்தில் முத்து காமிக்ஸில் வெளிவந்த 'பொன்னில் ஒரு பிணம்' கதையில் குறிப்பிடப் பட்டுள்ளக் கட்டுமானக் கலைஞராகிய 'அன்டோனியோ காடி' பற்றி வந்திருந்த ஒரு ஆவணப் படத்தை ரொம்ப நாளாக கேள்விப் பட்டிருந்தேன். ‘எண்மிய பல்திற வட்டு’ம் (அட டிவிடிங்க) கிடைத்தது.ஆனால் ஆர்வமின்மை காரணமாகப் பார்க்காமலே விட்டுவிட்டேன். ஆனால் நமது காமிக்ஸில் படித்தவுடன் அவரைப் பற்றி ஆர்வம் மேலிட டிவிடியை தூசு தட்டி எடுத்துப் பார்த்தேன்.

வழக்கமான ஆவணப் படங்கள் என்றால் யாரோ ஒருவர் பின்புலத்தில் நாம் காணும் காட்சிகளை விளக்கிக் கொண்டே வருவார். பல சமயங்களில் அவரே அவ்வப்போது திரையில் தோன்றி அவர் சாப்பிடுவது, தூங்குவது, பல் துலக்குவது என்று எல்லாவற்றையும் காண்பிப்பார். ஆனால் கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேரம் ஓடும் இந்தப் படத்தில் நாம் கேட்கும் வசனங்கள் நான்கோ ஐந்தோ நிமிடங்கள் தான் தேறும்.

Muthu # 310 - Cover
முத்து#310 - பொன்னில் ஒரு பிணம் - முன்னட்டைப்படம்

அதுவும் கடைசி கடைசியில் நமக்கு முத்துவின் மூலம் பரிச்சயமான 'சாக்ரடா ஃபெமிலியா' (புனித குடும்பம்) தேவாலயத்தைப் பற்றி நாம் காணும் போது அதை கட்டி முடிக்கும் முன் காடி எப்படி ட்ராம் விபத்தில் 1926-ல் இறந்தார் என்றும், அவர் உருவாக்கிய மாதிரிகள் அனைத்தும் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின் போது (1938) அழிக்கப் பட்டது என்றும் அதனால் இப்போது மிகவும் சிரமப்பட்டு மற்ற நிபுணர்களால் கட்டிமுடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் பற்றியும் சுருக்கமாக பத்து வரிகளில் கூறப்படுகிறது. அவ்வளவுதான்.

மீதி ஒரு மணி நேரத்தில் நாம் காண்பதனைத்தும் பிரமிக்க வைக்கும் காடியின் கலைப் படைப்புகளே. 'டோரு டகேமிட்சு'வின் லயிப்பூட்டும் பின்னணி இசையுடன் காடி உருவாக்கிய ஒவ்வொரு கலைப் படைப்பையும் இயக்குனரின் கேமரா வழியாக நாம் காணும் போது நம்மையும் அறியாமல் நாம் வேறொரு இடத்திற்கு சென்று விடுகிறோம். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வார்த்தைகளை விட காட்சிகளே அதிமாகப் பேசும் மிக அரிய படைப்புகளில் ஒன்று இது.

காடி ஒரு தீவிர கத்தோலிக்கர். அதனால் அவரது படைப்புகள் பெரும்பாலும் தேவாலயங்களாகவே இருக்கும். தேவாலயங்கள் என்றதும் உடனே நமது நினைவுக்கு வருவது நேர்கோட்டு வடிவங்களாலான கட்டிடங்களே ஆகும். ஆனால் காடியின் உந்து சக்தியோ இயற்கையாக அமைந்தது. 

இயற்கையின் பாதிப்பில் உருவான இவரது கட்டிடங்களில் காணப்படும் தூண்கள் வழக்கமான தூண்களைப் போல் அல்லாமல் மரங்களைப்போல் கிளைவிட்டும், வேரூன்றியும் காணப்படும்.

Antonio Gaudi
அன்டோனியோ காடி

இவரது வடிவங்கள் பெரும்பாலும் வளைவு, நெளிவு, சுளிவுகளுடன் இருக்கும். இயற்கையின் வடிவங்கள் பலவற்றையும் பல்வேறு முறைகளில் தனது ஆக்கங்களில் இவர் பயன்படுத்தியிருப்பார்.

இயற்கை வழிபாட்டிற்கு எதிரான கிறிஸ்துவர்கள் இவரது படைப்புகளைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இப்போது அவரது மறைவுக்குப் பிறகு அவரை புனிதராக்கும் முயற்சிகள் கூட நடைபெற்று வருகின்றன.

இவரது படைப்புகளை விவரிக்கும் அளவுக்கு எனக்கு கட்டிடக்கலையோ, தமிழோ தெரியாது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். காண மட்டுமே கண்கள் கோடி வேண்டும் போலிருக்கிறது. நேரில் காணும் பாக்கியமாவது இந்தப் பிறவியிலேயே நமக்கு அமைய வேண்டுமென கலைக்கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

படத்தின் இயக்குனரான 'ஹிரோஷி டேஷிகாஹாரா' சிறு வயதில் தனது தந்தையுடன் பார்சிலோனாவிற்கு சென்ற போது அவர் காடியின் கலைப் படைப்புகளைக் கண்டு பிரமித்து அதை ஒரு படமாக பதிவு செய்தார்.

அவரது தந்தை ஜப்பானின் புகழ்பெற்ற பூவலங்காரக் கலையான 'இகிபானா'வில் தேர்ந்தவர். அவர் அக்கலையில் புதிதாக ஒரு பாணியை உருவாக்கி அந்த குழுமத்தின் தனிமுதற் தலைவராக விளங்கினர்.

HiroshiTeshigahara
ஹிரோஷி டேஷிகாஹாரா

இயற்கையை உந்துதாலாகக் கொண்ட காடியின் படைப்புகள் இயற்கைக் கலை புரியும் ஒரு ஏகலைவருக்கு துரோணராக விளங்கியதில் வியப்பில்லை.

பின்னாளில் சர்வதேசப் புகழ்பெற்ற பரீட்சார்த்தப் புதுமைப் படைப்பாளியாக விளங்கிய இயக்குனர் டேஷிகாஹாரா தான் சிறுவயதில் தற்குறியாக எடுத்த காடி படத்தை மறக்காமல் இந்தப் படத்தை இயக்கினார்.

தானே ஒரு தலைசிறந்த படைப்பாளியாக இருப்பினும் அந்த மமதை துளியும் தலைதூக்காவண்ணம் காடியின் காலத்தால் அழியாத கலையை முன்னிலைப்படுத்தி படமெடுத்திருப்பது பிரமிக்க வைக்கிறது.

இரண்டு தலைசிறந்த கலைஞர்கள் இணைந்தால் என்னாகும்? அமர்க்களம்தான்!

Sagrada Familia
சாக்ரடா ஃபெமிலியா

இந்தப் படத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இந்தப் பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி! இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்?

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்.

பி.கு.:

  • அய்யம்பளையத்தார் பின்னிப்பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது வலைப்பூவின் வடிவமைப்பு நாளுக்குநாள் மெருகேறிக்கொண்டேயிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்வந்த அம்புலிமாமா இதழை அவர் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். படிக்க இங்கே 'க்ளிக்'கவும்.
  • இதுவரை 'ஹைக்கூ' எழுதுகிறேன் பேர்வழி என்று நம்மையெல்லாம் இம்சித்துக்கொண்டிருந்த 'பங்கு வேட்டையர்' இப்போது 'கௌபாய்' கதை வேறு எழுதுகிறார். அதில் எல்லோரது டவுசரையும் அவிழ்த்து விடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார். உஷார்! மக்களே, உஷார்! பாகம்-1, பாகம்-2.
  • நமக்குப் போட்டியாக 'க.கொ.க.கூ.' மற்றும் 'முதலை பட்டாளம்' என இரு சக தீவிரவாதிகள் வலைப்பூக்களை ஆரம்பித்துள்ளனர். இதில் 'முதலை பட்டாளம்' வைத்திருக்கும் ‘ப்ருனோ பிரேசில்’ ஒரு கவுண்டர்-டெர்ரரிஸ்ட் என கூறிக்கொள்கிறார்! வரவேற்கிறோம்! அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! சும்மா ஒரு பதிவோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து காமிக்ஸ் பற்றி எழுதுங்கள். காமிக்ஸ் பற்றி உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். காமிக்ஸ் என்பது ஒரு கடல். அதில் எல்லோரும் சேர்ந்தே முத்தெடுக்கலாமே?

தொடர்புடைய இடுகைகள்:

படவிவரங்கள்:

வருடம் : 1984
ஓடும் நேரம் : 72 நிமிடங்கள்
மொழி : ஜப்பானிய மொழி
சப்-டைட்டில் : ஆங்கிலம்
இயக்கம் : ஹிரோஷி டேஷிகாஹாரா
இசை : டோரு டகேமிட்சு 
குரோடோ மௌரி 
ஷின்ஜி ஹோரி
ஒளிப்பதிவு : யோஷிகாசு யானாகிடா
ரியு ஸெகாவா
எடிட்டிங் : ஹிரோஷி டேஷிகாஹாரா
எய்கோ யோஷிடா
தயாரிப்பு : ஹிரோஷி டேஷிகாஹாரா
நோரிகோ நொமூரா
வெளியீடு : தி க்ரைட்டீரியான் கலெக்ஷன்

கண்கொள்ளாக் காட்சிகள்:

title antonio gaudi criterion antonioni gaundi 10229criterion antonioni gaundi 939criterion antonioni gaundi PDVD_00019criterion antonioni gaundi 4831criterion antonioni gaundi 314criterion antonioni gaundi 5410criterion antonioni gaundi 407 menu2 antonio gaudi PDVD_010menu2 antonio gaudi PDVD_005menu2 antonio gaudi PDVD_007menu2 antonio gaudi PDVD_009

ட்ரைலர்: