Sunday, October 11, 2009

மால்குடி டேஸ்!

வணக்கம்,

வேட்டைக்காரன் – திரை விமர்சனம்! பதிவிற்கு நீங்கள் அனைவரும் அளித்த அமோக ஆதரவுக்கு நன்றி! இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாக புரிந்தது! என்னதான் மாங்கு, மாங்கென்று ஸ்கேன் செய்து, தீவிர ஆராய்ச்சியின் பின் பதிவுகள் வெளியிட்டாலும் அவை தமிலிஷ்-ல் பிரபலம் ஆவதில்லை! (உம்: சாட்டையடி வீரன்!) ஆனால் இது போல் ஏதோ ஒன்றை மொக்கையாக போட்டால் உடனே பிரபலம் ஆகி தொலைத்து விடுகிறது! நமது வலைப்பூவுக்கும் ஹிட்ஸ் வந்து குவிகிறது! என்ன கொடுமை சார் இது?

பதிவுக்கு செல்லும் முன் முந்தைய பதிவுகளில் இடம்பெற்ற வெகுமதி! கேள்விகளும், அவற்றின் விடைகளும், வெற்றி பெற்றோருக்கு பரிசு தர பொருளாதாரப் பின்னடைவால் இயலவில்லை என்பதால் பாராட்டுதல்களும் வழங்குகிறோம்!

வெகுமதி!

சாட்டையடி வீரன்! பதிவில் இடம்பெற்ற கேள்விக்கான விடை:

கேள்வி : சாட்டையடி வீரர் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்களை சரியாகக் கூறவும்!
விடை : சாட்டையடி வீரர்    – ஒற்றைக்கண் பிலிப்
அவரது நண்பர்கள்  – லியோ, சைமன்

சரியான விடையை முதலாவதாகக் கூறிய பங்கு வேட்டையர்-க்கும், இரண்டாவதாக வந்த VEDHAவுக்கும் பாராட்டுக்கள்!

வேட்டைக்காரன் – திரை விமர்சனம்! பதிவில் இடம்பெற்ற கேள்விக்கான விடை:

கேள்வி : கல்கியில் காந்தன் திரைவிமர்சனம் செய்யாத போது நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒருவர் அந்த பணிகளை செய்வதுண்டு! அவர் யார்?
விடை : நாமெல்லாம் வாண்டுமாமா என்று அறிந்த திரு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கல்கியில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கெளசிகன் என்ற புனைப்பெயரில் கதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனம் மற்றும் முக்கியமாக சித்திரக் கதைகள் பலவற்றையும் எழுதித் தள்ளியுள்ளார்!

சரியான விடையை முதன்மையாகக் கூறி பாராட்டுக்களைத் தட்டிச் செல்கிறார் நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் திரு.கனவுகளின் காதலன் அவர்கள்! அவருக்கு நவஜோ மதகுருவிடம் பூரிக்கட்டை அடி வாங்காமல் மேகான் ஃபாக்ஸ் முத்தம் கிட்டக் கடவுவதாக!

பின்னால் வந்த காமிக்ஸ் காதலன் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக பல அரிய தகவல்களை நமக்கு வழங்கியுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்! 

வாண்டுமாமா பற்றி மேலும் அறிந்து கொள்ள:

மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு வருவோம்!

அக்டோபர் 10, 2009 - இந்திய ஆங்கில மொழி எழுத்துலகின் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் அமரர் திரு.ஆர்.கே.நாராயண் அவர்கள் பிறந்த நாள்.

இவரது பல படைப்புகளை நான் படித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அனைத்தும் ஆங்கிலத்தில் தான். SWAMI AND FRIENDS, THE ENGLISH TEACHER, Mr.SAMPATH, THE FINANCIAL EXPERT, THE GUIDE, THE VENDOR OF SWEETS ஆகிய முழு நீள நாவல்களையும், MALGUDI DAYS, LAWLEY ROAD AND OTHER STORIES, A HORSE AND TWO GOATS AND OTHER STORIES முதலிய சில சிறுகதைத் தொகுப்புகளையும், MY DATELESS DIARY, RELUCTANT GURU ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் நான் தேடிப் பிடித்துப் படித்து ரசித்திருக்கிறேன். மீதம் உள்ளவற்றையும் வாங்கிப் படித்துவிட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.

தமிழில் விகடன் பிரசுரம் சுவாமியும் சினேகிதர்களும், இருட்டு அறை என இரண்டு புத்தகங்கள் மட்டும் வெளியிட்டு விட்டு அத்தோடு நிறுத்தி விட்டனர் என்பது வருத்ததிற்குரிய விஷயம். இக்கதைகள் ஆனந்த விகடன் வார இதழில் 1937 -ல் தொடராக வெளிவந்தன. அவற்றின் மறுபதிப்புகள் தான் இந்த புத்தகங்கள். 

ஆனால் இங்கு நான் அவரது உலகப் புகழ் பெற்ற நாவல்கள் குறித்து அலசப் போவதில்லை. மாறாக அவரது படைப்புகளின் திரை வடிவங்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன்.

VHIF0214 மிஸ்டர் சம்பத்:

1947-ல் ஆர்.கே.நாராயணின் நெருங்கிய நண்பரான ஜெமினி ஃபிலிம்ஸ் அமரர் திரு.எஸ்.எஸ்.வாசன் (ஆனந்த விகடன் பத்திரிக்கையின் நிறுவனரும் இவரே) அவர்களால் தயாரிக்கப்பட்டு, திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இயக்கி, மிஸ்டர் சம்பத்தாகவும் நடித்து, திரு.பரூர் எஸ்.அனந்தராமன் அவர்கள் இசையில் மிஸ் மாலினி என்ற பெயரில் இக்கதை திரைப்படம்மாக்கப்பட்டது.

இதில் புஷ்பவல்லி, ‘ஜாவர்’ சீதாராமன், சுந்தரிபாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல் மன்னன் ஜெமினி கணேசன் அறிமுகமான படம் இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.

இது ஒரு சிறந்த சமூக திரைப்படமாக கருதப் பட்டாலும், வசூலில் ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் ஜனரஞ்சக சமாச்சாரங்கள் எதுவும் இல்லாததே படத்தின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாகும். இப்படம் குறித்து தமிழ் சினிமா வரலாற்று பேரறிஞர் திரு.ராண்டார் கை அவர்கள் தி ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையை படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்.

பின்னர் 1952-ல் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள் இதே கதையை மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் ஹிந்தியில் தயாரித்து இயக்கினார். இதில் நாட்டியப் பேரொளி பத்மினி மிஸ் மாலினி-யாக நடித்துள்ளார். ஹிந்தியிலும் படம் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இப்படத்தின் VCD மோசர்பேர் நிறுவனத்தினரால் வெளியிடப் பட்டுள்ளது. வாங்க இங்கே ‘க்ளிக்’கவும்.

1972-ல் இதே கதையை திரு.சோ அவர்கள் இயக்கி நடித்து மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் ஒரு படம் வந்தது. இதில் சோ தான் மிஸ்டர் சம்பத் ஆக நடித்திருப்பார்.Guide_1965_film_poster

GUIDE:

ஆர்.கே.நாராயண்  1965-ல் தேவ் ஆனந்த், வஹீதா ரெஹ்மான் நடித்து, தேவ் ஆனந்தின் தம்பி விஜய் ஆனந்த் இயக்கி, எஸ்.டி.பர்மன் இசையமைத்து வெளிவந்த GUIDE திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். உலக அளவிலும் இப்படம் நற்பெயர் பெற்றது.

இந்திய (ஹிந்தி) சினிமாவின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக இப்படம் கருதப்பட்டாலும் ஆர்.கே.நாராயணுக்கு இத்திரைப்படம் குறித்து நல்ல அபிப்ராயம் இல்லை.

THE MISGUIDED GUIDE என்று தனது அற்புதக் கதை படமாக்கப்பட்ட விதம் குறித்து LIFE பத்திரிக்கையில் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார்.

கதை முழுவதும் விரவிக் கிடக்கும் மெல்லிய நகைச்சுவை உணர்வு படத்தில் மிஸ்ஸிங். தேவ் ஆனந்தின் ஹீரோ இமேஜுக்காக நகைச்சுவை பலிகடாவாக்கப்பட்டு காதல், தியாகம், உணர்ச்சிகள், செண்டிமெண்ட் என்ற வழக்கமான இந்திய சினிமா வட்டத்திற்குள் படம் சிக்கி விடுவது பரிதாபம்.

THE FINANCIAL EXPERT:

1983-ல் இக்கதை கன்னடத்தில் பேங்கர் மார்க்கைய்யா என்ற பெயரில் படமாக்கப் பட்டது. இப்படம் குறித்த விவரங்களுக்கு இங்கே ‘க்ளிக்’கவும்.

மால்குடி டேஸ்:

1986-ல்   PADAM RAG FILMS திரு.டி.எஸ்.நரசிம்மன் அவர்கள் தயாரித்து பிரபல கன்னட நடிகரும், இயக்குனருமான அமரர் திரு.ஷங்கர் நாக் அவர்கள் இயக்கத்தில் மால்குடி டேஸ் என்ற தலைசிறந்த தொலைக்காட்சித் தொடர் தூர்தர்ஷன்-ல் ஒளிபரப்பானது.

இதில் அனந்த் நாக், கிரிஷ் கர்னாட், ஷங்கர் நாக் உள்ளிட்ட பலர் அற்புதமாக நடித்துள்ளனர். எல்.வைத்தியநாதன்-ன் இசையை கேட்ட யாரலும் மறக்க முடியாது. டைட்டில் கார்டுகளில் காணப்படும் கார்ட்டூன்கள் ஆர்.கே.நாராயணின் தம்பியும் இந்தியாவின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்டுமான திரு.ஆர்.கே.லட்சுமண் அவர்களால் உருவாக்கப்பட்டவை. இவர் ஏற்கெனவே தி ஹிந்து நாளிதழில் தனது சகோதரரின் படைப்புகள் பிரசுரிக்கப் பட்ட போது அதற்கு ஓவியங்கள் வரைந்தவர் ஆவார்.

இத்தொடரில் SWAMI AND FRIENDS மற்றும் VENDOR OF SWEETS ஆகிய கதைகள் படமாக்கப்படன. அற்புதமான இந்தத் தொடர் அனைவராலும் பாராட்டப் பெற்றது. ஆர்.கே.நாராயணும் கூட இத்தொடரை முழுமையாக அங்கீகரித்துள்ளார். மொத்தம் 39 பகுதிகள் கொண்ட இத்தொலைக்காட்சித் தொடர் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.

2004-ல் மீண்டும் மால்குடி டேஸ் தொடர் கவிதா லங்கேஷ் இயக்கத்தில் தொடங்கப் பட்டது. இதில் அனந்த் நாக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார். ஏப்ரல் 26, 2006 முதல் இத்தொடர் தூர்தர்ஷன்-ல் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரையை வாசிக்க இங்கே ‘க்ளிக்’கவும்.

இத்தொடரில் THE MAN-EATER OF MALGUDI, LAWLEY ROAD முதலிய கதைகள் படமாக்கப் பட்டன. இதிலும் டைட்டில் கார்டுகளில் ஆர்.கே.லட்சுமணின் கார்ட்டுன்கள் இடம்பெற்றன. ஆனால் முதல் தொடர் போல் இது அவ்வளவு பிரபலமடையலில்லை. சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் இத்தொடர் வந்ததும் போனதும் யாருக்கும் தெரியாமலேயே போய் விட்டது.LOGO   

இத்தொடர் இப்போது DVD/VCDகளில் பல இனையதளங்களில் கிடைக்கிறது. பல இடங்களில் தரவிறக்கம் செய்ய வசதிகளும் உண்டு. ஆனால் இவையெல்லாம் ஹிந்தி அல்லது ஆங்கிலத்திலேயே உள்ளன. இன்று வரை இத்தொடர் தமிழில் வந்ததில்லை.

இக்குறையை போக்கும் விதத்தில் தமிழில் முதன்முறையாக சமீபத்தில் தொடங்கப்பட்ட பாலிமர் டிவி-யில் அடுத்த ஞாயிறு (18-10-2209) முதல் ஒளிபரப்பாகவுள்ளது. காணத் தவறாதீர்கள். இப்பதிவை நான் இடத்தூண்டியதும் இந்த மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.

போனஸ்:

ஆனந்த விகடன் வார இதழின் இந்த வாரப் பிரதியில் (14-10-2009) பொக்கிஷம் பகுதியில் வெளிவந்துள்ள 22-01-1989 இதழில் வெளிவந்த திரு.ஆர்.கே.நாராயண் அவர்களின் பேட்டியின் மறுபதிப்பு இதோ உங்கள் பார்வைக்கு.Anantha Vikatan Dated 22011989 RK Narayan Interview1

துணுக்கு:

 • LAWLEY ROAD என்று கோவையில் ஒரு சாலை உண்டு. இதற்கும் ஆர்.கே.நாராயணின் கதைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என நான் அடிக்கடி வியந்ததுண்டு. ஏனெனில் அவரது கதைகளின் களமான மால்குடி என்பது தமிழக-கன்னட எல்லையில் அவர் வளர்ந்த கிராமத்தை அடிப்படையாகக் கொண்டதென அறிஞர்கள் கூறுவதுண்டு. சரி கர்நாடகாவிலும் ஏதாவது LAWLEY ROAD இருக்கலாம் என நான் மனதை தேற்றிக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, அவர் காதலித்து திருமணம் புரிந்த அவரது மனைவி வாழ்ந்திருந்தது கோவையில் தான் என்று. ஒரு வேளை அவர் LAWLEY ROAD அருகே வசித்திருக்கலாமோ? 

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:

 • நெடு நாட்கள் கழித்து ஒரு முழு நீள பதிவின் மூலம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். கடந்த சில பதிவுகள் சற்று மொக்கையாக அமைந்து விட்டபடியால் அதை நிவர்த்தி செய்யவே இந்த பதிவு. ரசித்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.
 • திரு.ஆர்.கே.நாராயனண் அவர்களின் சகோதரர் திரு.ஆர்.கே.லட்சுமண் அவர்களின் பிறந்த நாளும் இதே அக்டோபர் மாதத்தில் வருவதால் அவரைப் பற்றிய ஒரு பதிவையும் நீங்கள் விரைவில் எதிர் பார்க்கலாம். இந்த முறை போல் அல்லாது அம்முறையேனும் தாமதமில்லாமல் சரியான நேரத்திற்கு பதிவிட முயல்கிறேன்.

தொடர்புடைய இடுகைகள்:

மால்குடி டேஸ் அனைத்து பாகங்களையும் ஆன்லைனில் கண்டு மகிழ:

மிஸ் மாலினி திரைப்படம் குறித்து தி ஹிந்து நாளிதழில் ராண்டார் கை:

மிஸ்டர் சம்பத் ஹிந்தி திரைப்பட VCD வாங்க:

ஆர்.கே.நாராயண் கதைகளை தமிழில் விகடன் பிரசுரம் வெளியிட்ட புத்தகங்களை வாங்க:

5 comments:

 1. தலைவர் அவர்களே,

  அற்புதமான பதிவு. நல்ல தேடலுடனும் அருமையான தகவல்களுடனும் கலந்து செய்த கலவை. பாராட்டுக்கள். தொடருங்கள்.

  //ஆனால் இங்கு நான் அவரது உலகப் புகழ் பெற்ற நாவல்கள் குறித்து அலசப் போவதில்லை// ஏன்? நீங்கள் படிக்கும் புத்தகங்கள் குறித்தும் நீங்கள் எங்களுடன் பதிவுகள் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஹாபிட் பதிவில் நீங்கள் எடுத்துக்காட்டிய பாடல் என் மனதில் இன்ப அதிர்ச்சியை வழங்கியது என்பது உண்மை. தயவு செய்து எழுதுங்கள், இது என் அன்பான வேண்டுகோள் தலைவரே.

  பல மணி நேரம் செலவிட்டு நீங்கள் தந்த காமிக்ஸ் பதிவுகள் எல்லாம் நிச்சயமாக காமிக்ஸ் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தமிழ் உலகில் காமிக்ஸ் என்றால் கிடைக்கும் வரவேற்பிற்கு உங்கள் பதிவுகள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் தலைவரே.

  சினிமாவின் பாதிப்பு நீங்கள் அறிந்த ஒன்றே. எனவே தயங்காது சினிமா, காமிக்ஸ் மற்றும் உங்களைக் கவர்ந்த விடயங்கள் குறித்து பதிவுகள் வழிபகிர்ந்து கொள்ளுங்கள்.

  மெகான் ஃபாக்ஸ்ஸின் முத்தம் வாங்க நான் உயிரையும் தரத் தயார்.

  அட்டகாசங்கள் தொடரட்டும்

  ReplyDelete
 2. தலைவரே,

  அருமையான பதிவு. நல்ல நினைவுகளுக்கு நன்றி. இந்த தொடரை என்னுடைய பள்ளி நாட்களில் ரசித்து பார்த்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தங்கி இருந்த நேரத்தில் டீ.வி.டி செட் ஒன்றில் இந்த முழு தொடரையும் வாங்கினேன். இன்று அதனை தேடி பிடித்து பார்க்கப் போகிறேன்.

  அருமையான தொடர். நான் நிறைய புத்தகங்களை படித்தது இல்லை. கைட் நான் ரசித்த படங்களில் ஒன்று.

  பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 3. I remember reading it somewhere about the forming of the word Malgudi, I think it was one of his interviews. It was in fact not the name of a place. He mentioned that the word Malgudi was from Mail-Ghadi(Ghadi - Vehicle in Hindi - The train which brings the mail). If you remember in olden days kids just run along any vehicle that comes to a village. RK has enjoyed running with the train it seems. Since he liked the slightly changed word, that also brings the joy of childhood memories, he used Malgudi in his stories.

  Could't get that interview anywhere though.

  ReplyDelete
 4. என்னுடைய பதிவுக்கு லிங்க் கொடுத்தமைக்கு நன்றி. வோட்டும் போட்டு விட்டேன் .

  ReplyDelete
 5. thanks for you to bring back my memories about malkudi days. it is not a children serial and also for adults, such kind of serials not showing today, today hot selling thing is rality shows(full of dump)captain tiger storys are pending for market? no news about him in lion and muthu, atleast friends you bring some interesting stories about captain tiger. thanks

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!