Friday, June 26, 2009

சம்மர் ஸ்பெஷல்!

“செக்கச் செவேலென பூக்கள்! பச்சப் பசேலென புற்கள்!”
-கவுண்டமணி (படம் : நடிகன்)

வணக்கம்,

எனது பிறந்த நாளையொட்டி சக பதிவர்கள் இட்டுள்ள பதிவுகளுக்கு எனது நன்றிகள்! பதிவிடாத பஞ்சமா பாதகர்களுக்கு பார்சலில் பாம் வந்து பத்திரமாகப் பரலோகம் சேர்க்கும்!

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் புதுப் பொலிவுடன் வந்திருக்கும் அ.கொ.தீ.க.வுக்கு தங்களின் பொன்னான ஆதரவை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

கோடையின் கடுமையைக் கடந்து பருவ மழையைப் பூமி பரவசத்துடன் புசித்துவிட்டு பூரித்து பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பருவத்தில் அ.கொ.தீ.க. தலைமையகம் அமைந்துள்ள அற்புத சூழலை விவரிக்கவே மேற்குறிப்பிட்டுள்ள கவுண்டரின் ‘பன்ச்’! உங்களை மகிழ்ச்சி மழையில் நனைக்க இதோ மீண்டும் ஒரு கோடை மலர் பதிவு!

பல நாட்களாகவே வெரும் விளம்பரமாகவே நின்றுவிட்ட இப்பதிவை இடுவதில் உங்களைக் காட்டிலும் எனக்குப் பெருமகிழ்ச்சியே! சென்ற பதிவான தேர்தல் சிறப்புப் பதிவு-க்குத் தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி!

மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்கு வருவோம்! இந்தப் பதிவைப் படிக்கும் போது முத்து ஸ்பெஷல்! பதிவை ஒரு முறை REFERENCE-க்காக படித்துவிடுவது சாலச் சிறந்தது!

சம்மர் ஸ்பெஷல்:

மே 1988-ல் முத்து ஸ்பெஷல்! வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்ட ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் மே 1989-ல் சம்மர் ஸ்பெஷல் வெளியிட்டு நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்! அந்தக் காலகட்டத்தில் லயன், முத்து, திகில், மினி லயன் என அனைத்திலும் ஸ்பெஷல் வெளியீடுகள் இட்டு அசத்துவார் ஆசிரியர்!

ஆசிரியர் திரு.S.விஜயன் வெளியிட்டுள்ள அனைத்து ஸ்பெஷல் வெளியீடுகள் பற்றிய கிங் விஸ்வா-வின் மெகா ஸ்பெஷல் பதிவு-ஐப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! இதில் சிறப்பு என்னவென்றால் இது அவரது 50-வது பதிவு ஆகும்! அ.கொ.தீ.க. மற்றும் தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகம் சார்பாக அவருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

வெளியீட்டு விவரங்கள்:

வெளியீடு# : முத்து காமிக்ஸ்#176
தேதி : மே 1989
சைஸ் : பாக்கெட் சைஸ்
பக்கங்கள் : 268 பக்கங்கள்
விலை : ரூ.5/-
ஆசிரியர் : S.விஜயன்
விளம்பரங்கள்:
சம்மர் ஸ்பெஷலில் வரவிருக்கும் கதைகள் பற்றிய விளம்பரம் இதோ! வழக்கம் போலவே விளம்பரப்படுத்தப் பட்டக் கதைகள் அனைத்தும் வெளிவந்துவிடவில்லை! இன்ஸ்பெக்டர் கருடா-விற்குப் பதிலாக வேறொரு கதை வந்தது!

Muthu Comics #175 - வழிப்பறிப் பிசாசு! - Summer Special - Ad

கதைக்கான விளம்பரங்களை விட முத்துவின் நெடுநாளைய வாசகர்களைக் கவர்ந்திருக்கூடிய விஷயம் அதிமேதை அப்பு மீண்டும் வருவது பற்றிய அறிவிப்பாகத்தான் இருந்திருக்கும்!

Muthu Comics #174 - ஆகாயக் கல்லறை! - Back Cover - அதிமேதை அப்பு - Ad Muthu Comics #175 - வழிப்பறிப் பிசாசு! - Back Cover - Summer Special - Ad

ஆனால் என்னைப் போல 80-களிலிருந்தே காமிக்ஸ் படிக்கும் வாசகர்களுக்கு இது சற்று புதிரானதாகவே இருந்தது!

அட்டைப்படம்:

மீண்டும் ஏதோ ஒரு ஜேம்ஸ்பாண்ட் அட்டைப்படத்தின் தழுவல் என நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு! இந்த அட்டைப் படத்தின் ஒரிஜினலைப் பார்க்க  இங்கே ‘க்ளிக்’கவும்!

Muthu Comics # 176 - Summer Special - Cover

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? இதற்கே அதிர்ச்சியடைந்தால் எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கிறது! ஹாலிவுட்டின் அப்பட்டமான காப்பியடிக்கும் வழக்கத்திற்கு மற்றுமொரு சான்று இதோ! இளகிய மனமுடையோர் இங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்!

ஹாட்லைன்:

ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் ஹாட்லைன் வழக்கம் போலவே புத்தகம் அச்சாவதற்குப் பல நாட்கள் முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும்! ஆகையால் அவரும் இப்புத்தகத்தில் இன்ஸ்பெக்டர் கருடா வருவதாகவே குறிப்பிட்டுள்ளார்! ஆனால் கடைசி நேரத்தில் எக்காரணத்தாலோ மாற்றம் செய்துள்ளார்!

Muthu Comics # 176 - Summer Special - Hotline

ஆசிரியர் இங்கும் அதிமேதை அப்பு புராணம் பாடி என்னைப் போன்ற புதிய வாசகர்களின் எதிர்பார்ப்புகளைத் தூண்டுகிறார்! அப்பு இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தானா? விடைகாண தொடர்ந்து படியுங்கள்!

கதை#1 – அதிமேதை அப்பு

அதிமேதை அப்பு-வின் இரண்டு சிறுகதைகளை முழு வண்ணத்தில் வெளியிட்டுள்ளார் ஆசிரியர்! ஓவியர் செல்லம் தனக்கேயுரிய பிரத்யேக பாணியில் வரைந்திருக்கும் ஓவியங்கள் கலரில் கண்ணைப் பறிக்கின்றன! அதிமேதை அப்பு-வின் ஆத்மார்த்த விசிறியாகிவிட்டேன் எனக் கூறவும் வேண்டுமா?

Muthu Comics # 176 - Summer Special - அதிமேதை அப்பு

இனிமேல் தொடர்ந்து அதிமேதை அப்புவின் சாகஸங்கள் முத்துவில் இடம்பெறும் எனவும், அப்பு பதில்கள் வரும் என்ற அறிவிப்புகளும் எனக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டன!

ஆனால், அந்தோ! பரிதாபம்! அடுத்த இதழாகிய முத்து#177 – இரத்தப் பாதை இதழுடன் அதிமேதை அப்புவின் சாகஸங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது! அக்கதைகளும் கருப்பு வெள்ளையில்தான் வந்தன! பின்னர் நெடுநாட்களுக்கு அப்புவின் மர்மங்கள் புரியாமல் நானும் விழித்துக் கொண்டிருந்தேன், நண்பர் முத்து விசிறி-யை சந்திக்கும் வரை!

அவர் மூலம்தான் அதிமேதை அப்பு பற்றியும் முத்து காமிக்ஸ் வாரமலர் பற்றியும் அறிந்து கொண்டேன்! விரைவில் அதிமேதை அப்பு பற்றிய ஒரு முழு நீளப் பதிவிடலாம் என்று எண்ணம்! மக்கள் விரும்பினால் நிறைவேற்றலாம்!

அதிமேதை அப்பு பற்றியும் முத்து காமிக்ஸ் வாரமலர் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? முத்து விசிறி-யின் முத்தான பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

கதை #2 – புலிப்பொறி!

1969-ம் ஆண்டில் இங்கிலாந்தின் FLEETWAY நிறுவனத்தைச் சேர்ந்த ACTION PICTURE LIBRARY மாத இதழின் 3-வது வெளியீடான TIGER TRAP எனும் அதியற்புத ஆக்‌ஷன் சித்திரக்கதையை நமக்கு அழகிய தமிழில் வழங்கியிருக்கிறார் ஆசிரியர்!

Muthu Comics # 176 - Summer Special - Story#2 - புலிப் பொறி!

1969-ல் நமது கதாநாயகன்  ஜோ கார்ஸன் இரண்டாவாது உலகப் போரில் வீரச் சேவை புரிந்த தனது தந்தையுடன் மலேசியக் கானகங்களினூடே ரயிலில் பயனித்துக் கொண்டிருக்கிறான்! தனது வாழ்நாள் முடிவதற்குள் தான் பணியாற்றியப் பகுதியை மீண்டும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்ற தன் தந்தையின் தீராத ஆவலை நிறைவேற்றவே இருவரும் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்!

அப்போது ஏற்படும் ஒரு விபத்தில் அவன் தந்தை இறந்து விடுகிறார்! ஆனால் அது ஒரு விபத்தல்ல, துணிகரக் கொள்ளை என்பதையும், கொள்ளையர்கள் ஜப்பானியர்கள் என்றும் கார்ஸன் அறிந்து கொள்கிறான்! போலீசின் உதவியோடு அவர்களில் சிலரைப் பிடிக்கிறான்! அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற லாரியில் புலி முத்திரை இருப்பதைக் காணுகிறான் கார்ஸன்!

அது செயூங்-போ எனும் சிங்கப்பூரைச் சேர்ந்த மிகப்பெரும் வியாபார காந்தத்தின் முத்திரையாகும்! செயூங்-போவை பிடிக்குமாறு போலீசாரிடம் மன்றாடும் கார்ஸனுக்கு கிடைப்பதோ ஏமாற்றமே! அப்போது அவன் போதை மருந்து கடத்தல் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வாங்-ஐச் சந்திக்கிறான்! இருவரும் செயூங்-போவை எவ்வாறேனும் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவது என உறுதி கூறுகின்றனர்!

துறைமுகத்தில் நிகழவிருக்கும் போதை மருந்து கடத்தல் பற்றிய துப்பு கிடைக்க அங்கு  போலீஸ் படையுடன் இருவரும் செல்கின்றனர்! அப்போது நிகழும் அற்புதமான விசைப்படகு துரத்தும் காட்சியே ஆங்கில மூலத்தின் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளது!

இறுதியில் கயவர்கள் தப்பிச் சென்று விட நமது நாயகர்களுக்கோ ஏமாற்றம்! ஆனால் அவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கிறது! கடத்தல்காரர்களின் கிடங்கில் செயூங்-போவின் முத்திரை பதித்த ஒரு கார் கிடைக்கிறது! செயூங்-போவை சந்திக்க அவரது காரை திருப்பிக் கொடுக்கும் வகையில் சென்று அவரது கோட்டைக்குள்ளேயே அவரை எதிர்கொள்ள முடிவெடுத்துக் கிளம்புகிறார்கள் நமது நாயகர்கள்!   

Action Picture Library#3 - Tiger Trap Action Picture Library#3 - Tiger Trap - Page 3

செயூங்-போ பிடிபட்டானா? தனது தந்தையின் மரணத்துக்கு கார்ஸன் பழிதீர்த்துக் கொண்டானா? இன்ஸ்பெக்டர் வாங் போதை மருந்து கடத்தும் கும்பலைப் பிடித்தாரா? கேள்விகளுக்கு விடையளிக்கிறது கதை!

க்ளைமாக்ஸில் வரும் அற்புத ட்விஸ்ட்டைக் கூறி கதையைப் புதிதாகப் படிக்கும் போது ஏற்படும் உணர்வைக் கெடுக்க நான் விரும்பவில்லை! கதை முழுக்கப் பரவியிருக்கும் அதிரடி ஆக்‌ஷன் கதையை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறது! இன்று வரை நான் படித்திட்ட சிறந்த ஆக்‌ஷன் கதைகளில் ஒன்றாக இதை நான் குறிப்பிடுவேன்!

கதை#3 – ஆவியின் கீதம்

சிஸ்கோ கிட்-டின் அதியற்புத சாகஸமாகிய ஆவியின் கீதம் மறுபதிப்பாக இப்புத்தகத்தில் வந்துள்ளது! இக்கதை சிலபல விதங்களில் என் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது! அதற்கான காரணங்கள் இதோ!

  • நான் படித்த முதல் சிஸ்கோ கிட் கதை! முதல் கதையிலேயே மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார் சிஸ்கோ! அதுவும் இந்த அற்புதக் கதையை பேய் மனிதன் என்று ராணியில் படித்த பிறகு முத்துவில் வெளிவந்த சிஸ்கோ கிட் கதைகளுக்குத் தீவிர ரசிகனானேன்!
  • இக்கதையைப் படித்த நெடுநாட்களுக்குப் பின்னரே எனக்கு இக்கதையின் முதல் பதிப்பு கிடைத்தது! இரு வண்ணத்தில் அற்புதமாக இருக்கும்! நான் வாங்கிய முதல் பழைய முத்து இதழ்களில் இது இடம் பிடித்திருந்தது ஒரு இன்ப அதிர்ச்சியாக இப்போதும் இருக்கிறது!
  • இறுதியாக ஆனால் உறுதியாக இக்கதை என் மனதில் இடம் பிடிக்கக் காரணம் முத்து விசிறி-யுடனான நட்பு ஆழமானதற்குக் காரணமாக இக்கதை விளங்கியதுதான்!

    Muthu Comics # 176 - Summer Special - Story#3 - ஆவியின் கீதம்

இக்கதை குறித்து முத்து விசிறி ஏற்கெனவே முழுவதுமாக அலசி ஆராய்ந்திருப்பதால் நான் வேறெதையும் கூற விரும்பவில்லை! முழு நீளப் பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

நண்பர் காமிக்ஸ் பிரியன் சிஸ்கோ கிட் திரைப்படங்கள் குறித்து இட்டுள்ள பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

கதை#4 – மர்மப் பணி!

இரும்புக்கை மாயாவியின் சாகஸச் சிறுகதை! உண்மையில் இது ஒரு சிறந்த மொக்கைச் சிறுகதையாகும்!

முக்கிய ரகசியங்கள் அடங்கிய மைக்ரோ ஃபிலிம் ஒன்றை ஒரு புத்தகத்தில் பதித்து அதை பத்திரமாக எடுத்துச் சென்று சேர்க்கும் பணியை மாயாவியிடம் ஒப்படைக்கிறார் மேஜர் ப்ராண்ட்! இப்பணிக்குத் தடையாக மாயாவி எதிர்கொள்ளும் வில்லன்தான் மிஸ்டர் நோ ஃபேஸ் (Mr.NO FACE)! நோ ஃபேஸிடமிருந்து அந்த ரகசியங்களை மாயாவி பத்திரமாகக் பாதுகாத்துக் கொண்டு போய் சேர்த்தாரா என்பதே கதை!

Muthu Comics # 176 - Summer Special - Story#4 - மர்மப் பணி! Muthu Comics # 176 - Summer Special - Story#4 - மர்மப் பணி! - Page 108

கதையை எழுதியவர் இரும்புக்கை மாயாவியின் ஆஸ்தான எழுத்தாளராகிய டாம் டல்லி! ஓவியங்கள் வரைந்தவர் ரெக் பன் (REG BUNN)! இவர் ஸ்பைடர் கதைகளை வரைந்து புகழ் பெற்றவர்! இவர் வரைந்த ஒரே மாயாவிக் கதை இதுதான்! இந்த மொக்கைக் கதையின் ஒரே ஆறுதலான விஷயம் ரெக் பன்-ன் ஓவியங்கள் தான்! அதிலும் வில்லன் நோ ஃபேஸ் சற்று கோணங்கித் தனமாக ஸ்பைடர் வில்லன் போல் வரையப் பட்டிருப்பது கதையின் தாக்கத்தைக் குறைக்கிறது!

இக்கதை முதன்முதலாக ஆங்கிலத்தில் VALIANT வார இதழில் 17-01-1970 முதல் 31-01-1970 வரை 3 வாரங்களுக்கு இரண்டிரண்டு பக்கங்களாகத் தொடராக வெளிவந்தது! பின்னர் VULCAN ANNUAL 1977-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது!

Vulcan Annual 1977 - The Steel Claw - Page 70 Vulcan Annual 1977 - The Steel Claw - Page 71 Vulcan Annual 1977 - The Steel Claw - Page 72 Vulcan Annual 1977 - The Steel Claw - Page 73 Vulcan Annual 1977 - The Steel Claw - Page 74 Vulcan Annual 1977 - The Steel Claw - Page 75

நண்பர் லக்கி லிமட் இக்கதையைப் பற்றி இட்டுள்ள பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! முன்பு அவர் இந்தக் கதைக்கு டவுன்லோடு லிங்க் வழங்கியிருந்தார்! ஆனால் இப்போது அதை நீக்கி விட்டபடியால் இதோ உங்களின் பார்வைக்கு முழுக்கதையும்! “என்சாய்!” (ஜனகராஜ், படம் – அக்னி நட்சத்திரம்)

கதை#5 – பார்முலா கடத்தல்!

மீண்டும் ஜெஸ் லாங்-கின் ஒரு அதிரடி ஆக்‌ஷன் சித்திரக் கதை! இதில் ஸ்லிம் ஸல்லிவன் மூக்கில் ஒரு கட்டி வந்து அவதிப் படுவது நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும் பின்னர் அதுவே கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை கொண்டு வருவதாகக் கதை அமைக்கப் பட்டிருக்கிறது!

அதே போல் ஸ்லிம் எப்போதும் கூலிங் க்ளாஸ் அணிந்திருப்பது குறித்து வியக்கும் நமக்கு அதற்கும் ஒரு ட்விஸ்ட் வைத்து கதையை அற்புதமாக நகர்த்திச் சென்றிருப்பார் ஆசிரியர்!

ராணுவத்திற்கான புதிய வித ரகசியத் தளவாடங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திலிருந்து ரகசியங்கள் கடத்தப் படுகின்றன! குற்றவாளி யார் என்பதைக் நமது சாகஸ ஜோடி எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை!

Muthu Comics # 176 - Summer Special - Story#5 - பார்முலா கடத்தல்! Jess Long #10 - Kidnapping Jess Long#10 - Cover

ஜெஸ் லாங் பற்றி மேலும் அறிந்து கொள்ள கிங் விஸ்வா இட்டுள்ள பதிவை இங்கே ‘க்ளிக்’கிப் படிக்கவும்!

கதை#6 – நியூஸ் டீம்

விளம்பரப் படுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் கருடா-விற்கு பதில் இக்கதை வந்தது! 80-களில் EAGLE பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு தொடர் என்பதைத் தவிர வேறு எதுவும் தகவல்கள் இப்போதைக்கு இல்லை! சிறுகதை என்பதால் கதையிலும் பெரிதாக மனம் லயிக்கவில்லை! புதிதாகத் திறக்கப் படவிருக்கும் ஒரு பாலத்தைப் பற்றிய மோசடிகளை ஆராய்ந்து அது திறக்கும் முன்னர் எவ்வாறு மக்களைக் காக்கின்றனர் என்பதே கதை!  Muthu Comics # 176 - Summer Special - Story#6 - News Team

இதன் ஓவியர் நமக்கு மிகவும் பரிச்சயமானவர்! சிறுவர் மலர்-ல் வெளிவந்த உயிரைத் தேடி! மற்றும் திகிலில் வெளிவந்த கம்ப்யூட்டர் மாக்ஸ் கதைகளுக்கு ஓவியம் வரைந்த ஜோஸ் ஆர்டிஸ் தான் இதற்கும் ஓவியர்! ஆகையால் சுமாரான கதைக்கு சூப்பர் ஓவியங்கள் அமைந்திருப்பது ஒரு ஆறுதல்!

இது குறித்து குறிப்பிட்டுள்ள சுட்டிகள் யாவும் நண்பர் ரஃபிக் ராஜா-வின் காமிக்கியல் வலைத்தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டவை! அவருக்கு நன்றிகள்!

துணுக்குகள்:

இட நிரப்பிகளாக விச்சு & கிச்சு-வின் க்ளாஸிக் கதை ஒன்றின் மறுபதிப்பும், அடங்காப் பிடாரி! என்ற BUSTER சிறுவர் இதழில் வெளிவந்த ஒரு சிறுகதையையும் வெளியிட்டுள்ளார் ஆசிரியர்! இரண்டுமே இதோ உங்களின் பார்வைக்கு! “என்சாய்!” (ஜனகராஜ், படம் – அக்னி நட்சத்திரம்)

Muthu Comics # 176 - Summer Special -  விச்சு & கிச்சு (Sporty) - Page 68 Muthu Comics # 176 - Summer Special -  விச்சு & கிச்சு (Sporty) - Page 69

விச்சு  & கிச்சு பற்றி மேலும் அறிந்து கொள்ள கிங் விஸ்வா இட்டுள்ள பதிவை இங்கே ‘க்ளிக்’கிப் படிக்கவும்!

Muthu Comics # 176 - Summer Special - அடங்காப் பிடாரி! - Page 70 Muthu Comics # 176 - Summer Special - அடங்காப் பிடாரி! - Page 71

இப்படியொரு சிறப்பான புத்தகத்தை நமக்களித்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! வழக்கம்போல ஆங்கில பதிப்புகளின் அத்தனை விபரங்களையும் அளித்த நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்! உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:-

எனது பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் தமிழ் காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் பலர் பதிவிட்டு சிறப்பித்துள்ளனர்! அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் இதோ அவற்றை சுட்டுகிறேன்!

  • அய்யம்பாளையத்தார் எனக்குப் பிறந்த நாள் பரிசாக பூந்தளிர் முதல் வருடம் குறித்து அற்புதமாக அலசி ஆராய்ந்திருக்கிறார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
  • ஒலக காமிக்ஸ் ரசிகர் எனக்குப் பிறந்த நாள் பரிசாக மாடஸ்தி-யின் குளியலறைக் காட்சிகளை வெளியிட்டுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
  • காமிக்ஸ் பிரியர் எனக்குப் பிறந்த நாள் பரிசாக தினத் தந்தியில் வெளிவந்த ஒரு காரிகன் கதையை வெளியிட்டுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
  • கனவுகளின் காதலர் மீண்டும் ஒரு தலைசிறந்த மங்கா பற்றி பதிவிட்டுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
  • புலா சுலாகி மீண்டும் ஒரு வேதாளரின் கதையோடு தாக்கியிருக்கிறார்! இதில் வசனப் போட்டியும் உண்டு! படிக்க, பங்கு பெற இங்கே ‘க்ளிக்’கவும்!   
  • நமது துப்பறியும் நிருபர் கிசுகிசு கோபால் என்னுடைய பிறந்த நாள் கொண்டா(களியா)ட்டங்களை லைவ் கவரேஜ் செய்துள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

பிற செய்திகள்:

  • எனக்குப் பிறந்த நாள் பரிசாகப் பதிவு கூட இடாத எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியாகிய கிங் விஸ்வா தனது வலைப்பூவில் 50-வது சிறப்புப் பதிவு இட்டுள்ளார்! வாழ்த்துக்கள்! பதிவைப் படித்து தொலைக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
  • ரொம்ப நாளாகத் தூங்கிக் கொண்டிருந்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் வலைப்பூ இப்பொது மீண்டும் துளிர் விட்டிருக்கிறது! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! 
  • கடைசியாக ஒரு சூப்பர் நியூஸ்! EUROBOOKS நிறுவனம் ரொம்ப நாளாக விளம்பரப் படுத்தியிருந்த 24 லக்கி லூக் கதைகளை ஒரு வழியாக வெளியிட்டுள்ளனர்! இது குறித்து நண்பர் ரஃபிக் ராஜா இட்டுள்ள பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

தொடர்புடைய இடுகைகள்:-

கிங் விஸ்வா-வின் 50-வது சிறப்(பிதழ்கள்)புப் பதிவு:

அதிமேதை அப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ள:

தனது ஆல்-டைம் ஃபேவரைட் சிஸ்கோ கிட் கதையாகிய ஆவியின் கீதம் குறித்து முத்து விசிறி-ன் முத்தான பதிவு:

காமிக்ஸ் பிரியன்-ன் சிஸ்கோ கிட் பதிவு:

லக்கி லிமட்டின் இரும்புக்கை மாயாவி பதிவுகள்:

ஜெஸ் லாங் பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:

விச்சு & கிச்சு பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:

முத்துவின் முதல் இதழ் - இரும்புக்கை மாயாவி:

இரும்புக்கை மாயாவி:

பிற சிறப்பிதழ்கள்:

37 comments:

  1. காமிக்ஸ் டாக்டரே,

    அருமையான ஒரு பதிவு. இந்த புத்தகத்தை நான் நண்பனிடம் இரவல் வாங்கி படித்த நியாபகம் மட்டும் தான் இருக்கிறது... அந்த குறையை போக்க அனைத்து கதைகளையும் பற்றி முன்னோட்டம் போட்டு கலக்கி எடுத்து விட்டீர்கள்.

    உங்கள் பதிவிற்கு பிறகு இனி இந்த புத்தகத்தை கையகபடுத்த நான் பிரம்மபிரயத்தனம் செய்தாலும் நடவாத காரியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். :)

    பதிவில் நடு நடுவே எனது வலைப்பதிவுகளுக்கு சுட்டி அமைத்தமைக்கு நன்றி. உங்கள் பிறந்த நாளுக்கு உங்கள் பதிவிலேயே வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

    இப்படி பல அறிய முத்து காமிக்ஸ் பற்றிய பதிவுகளை இட்டு எங்களை எப்போதும் சந்தோஷத்தில் கிரங்கடிக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.

    இன்னொரு விஷயம்: லேஅவுட் டிசைன் மிக அருமை.... லெப்ட், ரைட், சென்டர், டாப், பாட்டம் என்று எங்கு நோக்கினும் கண்ணை உருத்தாத அமைப்பு ... கலக்கி விட்டீர்கள்... :)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது தல..

    குறிப்பாக சுட்டிகள்..,

    Muthu Fan's Comics Blog ஏன் தொடரவில்லை, வேறு பெயருக்கு போய் விட்டாரா..,

    அவரது பூவில் Sunday, November 06, 2005 பிற்கு எதுவும் எழுதவே இல்லை..,

    ReplyDelete
  3. அண்ணன் SUREஷ் அவர்களே...

    முத்து விசிறி சென்ற மே மாதம் கூட ஒரு பதிவை இட்டுள்ளார்!

    அவரது வலைப்பூவைப் படிக்க கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

    http://www.muthucomics.com/

    அல்லது

    http://muthufanblog.blogspot.com/

    நமது சைட்பாரிலும் அவரது பதிவுகள் அப்டேட் ஆகும்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய தலைவர் அவர்கட்கு,

    அற்புதமாக இருக்கிறது வலைப்பூவின் அமைப்பு. அதுவும் கழகக் கண்மணிகள் சந்தா கட்டுவதற்கு ஆன்லைனிலேயே ஏற்படு செய்து விட்ட உங்கள் சமயோசித புத்தியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    காப்டனின் ஸ்ட்டைலான ஸ்டில்களை சுட்டு ஹாலிவுட் மேதாவிகள் புகழ் பெறுகிறார்கள் என்பதை லிங்குகள் மூலம் உலகிற்கு எடுத்துக்காட்டி அவர்களின் மூகமூடிகளை கிழித்தி எறிந்திருக்கிறீர்கள்.

    கோடைமலர் பதிவு சிறப்பாக உள்ளது. ஒரிஜினல்கள், தமிழ் என ஸ்கேன்களும் சிறப்பாக உள்ளன.

    சிஸ்கோ கிட் கதைகளில் எனக்குப் பிடித்ததும் ஆவியின் கீதம் தான், நீல நிறப் பக்கங்களில் கதை வெளியானது என நினைக்கிறேன்[ சரிதானே ]

    கழகத்தில், பறக்கும் படையின் மகளிர் அணி தயாராகி விட்டது என்கிறாரே கிசு கிசு கோபால் இது உண்மையா.

    விரைவில் வருகிறது பகுதியில் உள்ள டிவிடி காமிக்ஸ் கதையாக வெளிவந்ததா?

    என் பதிவிற்கு சுட்டி அமைத்ததிற்கு நன்றி தலைவரே. தமிழிஷ் வோட்டளிப்பு பட்டையை நீக்கி விட்டீர்களே? அதிமேதை அப்பு பற்றி பதிவிடுங்கள் ஆவலாக உள்ளேன்.

    அற்புதமான இப்பதிவுகளை உற்சாகத்துடன் தொடருங்கள்

    ReplyDelete
  5. தலைவர் அவர்களே, வோட்டளிக்கும் பட்டையை கண்டேன் , இன்பம் கொண்டேன். முதல் கருத்தில் கேட்ட கேள்வியை பொருத்தருளுங்கள்.

    ReplyDelete
  6. கனவுகளின் காதலரே...

    முத்து விசிறியின் வலைத் தளத்தில் ஆவியின் கீதம் முழுமையாக விமர்சனம் செய்யப் பட்டுள்ளது! சுட்டிகள் அளித்துள்ளேன்! இதோ மீண்டும் உங்களுக்காக...

    http://muthufanblog.blogspot.com/2006/01/im-back-after-long-break-as-suggested.html

    கண்டு மகிழுங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. சுட்டிக்கு நன்றி தலைவரே, உங்கள் ஸ்கேன்கள் அங்கும் காணக்கிடைக்கின்றன என்பது ஆச்சர்யம்.

    ReplyDelete
  8. தலைவரே,

    //பதிவிடாத பஞ்சமா பாதகர்களுக்கு பார்சலில் பாம் வந்து பத்திரமாகப் பரலோகம் சேர்க்கும்!// உங்களின் இந்த மிரட்டலுக்கு பயந்து பொய் தான் நான் காலையில் இருந்து இன்னமும் வீடு போய் சேராமல் இருக்கிறேன். தயவு செய்து அந்த வெடிகுண்டை செயல் இழைக்கும் அந்த மந்திர வித்தையை செல் போனில் செய்தியாக அனுப்புங்கள்.

    ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு அதை விட பெரிது என்பது போல, பதிவிட வில்லை என்றாலும் நம்முடைய நீண்ட நாள் பகையை மனதில் கொண்டு பிழையை மன்னித்தருள்க.

    உங்களுக்கே தெரியும். பிறந்த வாரப் பதிவுகள் என்று நான் ஐந்து பதிவுகளை ரெடி செய்து இருந்ததையும் காலம் செய்த சதியாலும் என்னுடைய தொடர் பயணங்களாலும் அதனை நிறைவேற்ற முடியவில்லை. அதற்க்காக இப்படியா செய்வது?

    ReplyDelete
  9. தலைவரே,

    //ஆனால் என்னைப் போல 80-களிலிருந்தே காமிக்ஸ் படிக்கும் வாசகர்களுக்கு இது சற்று புதிரானதாகவே இருந்தது!// உண்மையே. ஆனாலும் இதனை புரிந்து கொள்ளக் கூடியவர்கள் குறைவே.

    //என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? இதற்கே அதிர்ச்சியடைந்தால் எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கிறது! ஹாலிவுட்டின் அப்பட்டமான காப்பியடிக்கும் வழக்கத்திற்கு மற்றுமொரு சான்று இதோ! இளகிய மனமுடையோர் இங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்!// உடனடியாக ஆம்புலன்சை அனுப்பவும். இந்த பதிவை என்னுடன் பார்த்துக் கொண்டு இருந்த நண்பர் மயக்கம் போட்டு விட்டார்.

    //அவர் மூலம்தான் அதிமேதை அப்பு பற்றியும் முத்து காமிக்ஸ் வாரமலர் பற்றியும் அறிந்து கொண்டேன்! விரைவில் அதிமேதை அப்பு பற்றிய ஒரு முழு நீளப் பதிவிடலாம் என்று எண்ணம்! மக்கள் விரும்பினால் நிறைவேற்றலாம்!// தெரியாத பல பதிவர்களும் வாசகர்களும் தெரிந்துக் கொள்ளட்டும். பதிவிடுங்கள்.

    //அதுவும் இந்த அற்புதக் கதையை பேய் மனிதன் என்று ராணியில் படித்த பிறகு முத்துவில் வெளிவந்த சிஸ்கோ கிட் கதைகளுக்குத் தீவிர ரசிகனானேன்!//

    தலைவரே, இந்த வரிகளில் ஒரு சிறு திருத்தம் செய்யுங்கள். பேய் மனிதன் என்று ராணியில் படித்த பிறகும் தீவிர ரசிகனானேன்!

    வித்தியாசத்தை கவனியுங்கள்.

    ReplyDelete
  10. புலிப் பொறி, பார்முலா கடத்தல், ஆவியின் கீதம் என்று மூன்று அற்புதமான கதைகளை கொண்ட இந்த ஸ்பெஷல் ஒரு அற்புதமான ஸ்பெஷல் ஆகும். அதுவும் அந்த பார்முலா கடத்தல் கதையில் எப்படி நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவம் ஒரு சர்வதேஸ் குற்றத்தை துப்பு துலக்க உதவுகிறது என்று அறியும்போது மெய் சிலிர்க்கிறது.

    புலிப் பொறி கதையில் வரும் ஒரு குறிப்பிட்ட சம்பவம் அப்படியே நம் ராணி காமிக்ஸில் வந்த ஜேம்ஸ் பாண்ட் கதை ஆகிய கதிர் வெடியை நினைவு படுத்தும். அதுவும் ஜேம்ஸ் பாண்டும் அந்த பெண்ணும் ஒரு இருட்டு அறையில் அந்த புலியை எதிர் கொள்வது இப்போதும் கண் முன்னே நிற்கிறது.

    ஜோஸ் லூயிஸ் சாலினாஸ் அவர்கள் வரைந்த கதை என்ற ஒரு காரணத்தினாலேயே ஆவியின் கீதம் போட்டியின்றி முதல் இடத்தை பிடிக்கிறது.

    அதிமேதை அப்பு நான்காவது இடத்தையும்,நியூஸ் டீம் ஐந்தாவது இடத்தையும், விச்சு கிச்சு ஆறாவது இடத்தையும், பஸ்டரில் வெளியான அடங்காப் பிடாரி ஏழாவது இடத்தையும், இரும்புக் கை மாயாவி கதை எட்டாவது இடத்தையும் பிடிக்கிறது (என்னுடைய ரேட்டிங்கில்).

    ReplyDelete
  11. வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வா அவர்களே...

    // பேய் மனிதன் என்று ராணியில் படித்த பிறகும் தீவிர ரசிகனானேன்!//

    கூர்ந்து கவனித்தீர்களானால் நான் கூறியிருப்பது விளங்கும்! ராணியில் வந்த கதையைப் படித்த பிறகு முத்துவில் வந்தக் கதைகளுக்கு தீவிர ரசிகனானேன் என்றே குறிப்பிட்டிருப்பேன்! ராணியில் இந்தக் கதையை எவ்வளவு மொக்கை பண்ணியிருப்பார்கள் என்பதுதான் உங்களுக்கு நன்கு தெரியுமே!

    ஆனால் சிஸ்கோ கிட் கதைகளில் வெறும் படம் மட்டுமே பார்த்தாலே போதுமே! நம்மை ரசிகராக்க ஜோஸ் லூயிஸ் சாலினாஸ்-ன் ஓவியங்கள் போதாதா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  12. ஓவியர் ரெக் பன் ஒரு மிகச்ச் சிறந்த ஓவியர் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. ஆரம்ப கால ஸ்பைடர் கதைகளுக்கும், சில பல ஜான் ஸ்டீல் கதைகளுக்கும் அவர் வரைந்த படங்களை யாராலும் மறுக்கவோ மறக்கவோ இயலாது.

    அதுவும் அந்த துரோகியை தேடி கதையில் வரும் சித்திரங்கள்...........என்ன சொல்வது? அட்டகாசம். ஆனால், ரோமெரோ மார்க் 2 போல இவருடைய ஓவியங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் . எழுபதுக்கு முன்னாள் (At His Very Best என்று கூட சொல்லலாம், எழுபதுகளில் - Average, Still very good என்று கூறலாம்).

    ரோமெரோ விஷயத்தில் அதற்கான காரணத்தை நாம் அறிவோம் (ஸ்டிரிப் நீளம்). ஆனால், ரெக் பன் விஷயத்தில் அப்படி இல்லை. எனவே என் இப்படி மாறியது என்பதை ஆராய்ந்து கூறினால் நலம்.

    ReplyDelete
  13. தலைவரே,

    இப்போது தான் வீடு வந்து சேர்ந்தேன். இன்று முழுவதும் பல காமிக்ஸ் பதிவர்களை ஒருங்கே சந்தித்ததால் என்னுடைய அலுவலகப் பணியிலோ இல்லை உங்கள் பதிவை படிப்பதிலோ கவனம் செலுத்த முடியவில்லை.

    இதென்ன, விஸ்வா'வும் நீங்களும் தொடர்ந்து பேசுவதைப் போல தொடர்ந்து கருத்துக்களாக பொழிகிறீர்கள்?

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  14. தலைவரே,

    கொலைவெறியுடன் இருக்கும் ஒலக காமிக்ஸ் ரசிகர் இங்கும் வந்து விட்டதால் நான் விடை பெற்றுக் கொள்கிறேன். மனிதர் இன்று முழுவதும் Busyயாக இருந்ததால் கடுப்புடன் இருப்பார். இன்னமும் அவர் உணவு உண்ணவில்லை என்பது குறிப்பிடத் தக்கது (நான் சொன்னது மதிய உணவை - இப்போது நேரம் இரவு மணி பதினொன்று ஆகப் போகிறது).

    ஹா ஹா ஹா.

    ReplyDelete
  15. //சிஸ்கோ கிட் கதைகளில் எனக்குப் பிடித்ததும் ஆவியின் கீதம் தான், நீல நிறப் பக்கங்களில் கதை வெளியானது என நினைக்கிறேன்[ சரிதானே// மிகவும் சரி. ஆனால் மறுபடியும் ரீ பிரிண்ட் செய்யப் பட்டது கருப்பு வெள்ளையிலேயே இருந்தது தான் சற்று வருத்தம் தந்தது.

    //விரைவில் வருகிறது பகுதியில் உள்ள டிவிடி காமிக்ஸ் கதையாக வெளிவந்ததா?// அந்த படத்தை பார்த்து விட்டு தானே அப்படி கேட்கிறீர்கள்? இந்த கதை தான் தமிழில் வெளிவந்த மூன்று மாங்கா கதைகளில் முதல் கதை. இரண்டாவது கதையையும் அடுத்தே போட்டு நம்மை மகிழ்வித்து விட்டார். ஆனால் நண்பர் விஸ்வா தான் அவருடைய மாங்கா காமிக்ஸ் பற்றிய பதிவை எப்போது போடுவார் என்று தெரிய வில்லை.

    ஒரு வழியாக கனவுகளின் காதலரின் பதிவில் நாம் இட்ட பின்னுட்டம் வேலை செய்கிறது. நண்பர்களே, தமிழில் மாங்கா வரவில்லை என்ற எண்ணத்தை அடியோடு மறந்துவிட்டு இந்த பதிவுகளை படியுங்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  16. தலைவரே,

    உங்களுடன் அலை பேசியில் உரையாடியதிலிருந்தே நான் இந்த பதிவையும் பின்னணி மாற்றங்களையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன்.

    அட்டகாசமான மாற்றங்கள். இதன் விளைவுகள் வழக்கம் போல வெகு விரைவில் தெரிய வரும். (வழக்கம் போல).

    இன்னொரு விஷயம் - உங்களின் தளத்திலிருந்து பல விஷயங்களை இன்ஸ்பையர் ஆகும் பதிவர்கள் உங்களின் கருத்துப் போட்டி கமெண்ட்டையும் கூட விடாமல் இருந்தது வழக்கம் போல ஆச்சரியம் தரவில்லை.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  17. பதிவிற்கு வந்து இருக்கும் எங்கள் தலைவர் , சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அய்யம்பாளயத்தாரை வருக வருக என்று வரவேற்கிறோம்.

    இன்று முழுவதும் அவரின் பல பதிவுகளை பல வேற்று மொழி பதிவர்களுக்கும், காமிக்ஸ் பத்திப்பகத்தர்களுக்கும் மொழியாக்கம் செய்து வைத்த பேறு எனக்கு கிட்டியது. வாழ்க அவர் புகழ். விரைவில் அவரின் தளம் தமிழ மற்றும் ஆங்கிலம் என்று இருவேறு மொழியில் இயங்க இருப்பதால் அவரின் பதிவுகளை நாம் ஆங்கிலத்தலும் படித்து மகிழலாம்.

    மற்றுமொரு குட் நியூஸ்: ஹிந்தி மொழியிலும் அவரின் பதிவுகள் வரப் போகின்றது.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  18. யோவ் ஒலக காமிக்ஸ் ரசிகா,

    என்னையா இது?

    //உங்களுடன் அலை பேசியில் உரையாடியதிலிருந்தே// எதுக்காக இந்த சீன? நீங்க ரெண்டு பெரும் பேசியது ஊருக்கு தெரியனும் என்பதற்காகவா? இல்லை, நீங்கள் பயங்கரவாதியுடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறீர்கள் என்பதை காட்டும் எண்ணத்திலா?

    எதுவாக இருந்தாலும், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாண்டவன் மீண்டு வருவான், ஜூலை மாதத்தில். அப்போது இருக்கு உங்களுக்கும் இந்த பயங்கரவாதி டாக்டர் செவனுக்கும் கல்யாணம்.

    அதுவும் இல்லாமல் உலக பொலிஸாரும், உள்ளூர் போலிசும் தேடும் ஒரு நபரை நீங்கள் தொடர்பு கொண்டு உள்ளீர்கள். ஜாக்கிரதை.

    மொக்கை மாமா.

    ReplyDelete
  19. இன்ஸ்பெக்டர் கருடாJune 26, 2009 at 11:41 PM

    என்ன, என்ன விவகாரம் இங்கே?

    நானும் ஒரு போலீஸ தான், நானும் ஒரு போலீஸ்தான்.

    என்ன ஒன்னு, என்னுடைய பெயரை தான் ராணி காமிக்ஸில் இன்ஸ்பெக்டர் சம்பத்த் என்று மாற்றி விட்டார்கள். இந்த கதையிலும் என்னை வர விடவில்லை.

    யாருப்பா இந்த பயங்கரவாதி? இவ்வளவு நாளா இந்த வூட்டை மூடியே வச்சு இருந்தியாமே? பலர் வந்து உன்னை பத்தி என்கிட்டே கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க. இனிமேலாவது ஒழுங்கா இருப்பா.

    தம்பி ஒலக காமிக்ஸ் ரசிகா, நீ தனியா வா. உன்கிட்ட நெறைய விசாரிக்கணும்.

    இன்ஸ்பெக்டர் கருடா

    ReplyDelete
  20. தலைவரே,

    அருமையான பதிவு. இந்த புத்தகம் என்னிடம் உள்ளது. புத்தகத்தில் காகிதத்தின் தரம் தவிர மற்ற அனைத்துமே அருமையாக இருக்கும். குறிப்பாக அந்த புலிப்பொறி கதை - ஒரே ஒரு கதையை தான் அந்த வரிசையில் படித்து உள்ளேன். மிகவும் அற்புதம்.

    இந்த வரிசையில் வேறு கதைகள் வந்து உள்ளனவா? அப்படி இருந்தால் அவற்றை பற்றியும் கூறவும்.

    நான் முதன்முதலில் படித்த சிஸ்கோ கிட கதையும் இதுதான். இதற்கு பிறகே நான் மரணத்தின் பல முகங்கள் கதையை படித்தேன். பின்னர் இவரின் பல கதைகளை ராணி காமிக்ஸில் படித்து இருந்தாலும் எனக்கு என்னவோ இந்த அளவுக்கு மொழிமாற்றுத்த் தரமும், படிக்கும் அனுபவமும் வரவில்லை. அந்த பெயரே ஒரு மேஜர் put off.

    மாயாவி கதைகளை நான் எப்போதுமே ரசிப்பேன். ஆனால் இந்த கதையின் முடிவில் மாயாவி அந்த வில்லனிடம் தோற்றுப் போவது போல இருக்கும், அதுவும் மேஜர் பிராட் அவர்களின் புத்திசாலித்தனத்தினால் அது சரி கட்டப்பட்டு இருப்பது சற்று கடுப்பாக வேறு இருக்கும். எப்போது முகமில்லா நிழற்படை தலைவரின் முகத்தை காட்டத் துவங்கினார்களோ, அப்போதே இந்த தொடர் நீர்த்துப் பொய் விட்டது.

    அதிமேதை அப்பு கதைகளில் ஒன்றை மட்டுமே படித்து இருக்கிறேன். அதனால் பெரிய அளவில் கருத்து கூற இயலவில்லை. நியூஸ் டீம் உண்மையில் ஒரு நல்ல விறு விருப்பான ஆக்ஷன் கதை.

    ஜெஸ் லாங் கதைகளை அனைவருக்கும் பிடித்தி இருக்கும் என்றே நம்பிகிறேன். அதுவும் இந்த கதையில் அந்த மூக்கின் மேல் உள்ள அந்த கட்டியை கதையின் ஆரம்பம் முதலே அனைவரும் கவனித்து வருவார்கள். நல்ல கதையாக்கம்.

    இதைப் போல விரிவான புத்தக விமரிசனங்களை அடிக்கடி வெளியிடுங்கள்.

    உங்களின் வலைத்தளம் புதிய அமைப்பு பற்றி: அருமையாக உள்ளது. குறிப்பாக அந்த கதை லோகோக்களை கட செய்து நீங்கள் அவற்றையே தலைப்பாக உபயோகப் படுத்தி இருப்பது அருமை. ரசித்தது அந்த புரோபாஇல் படத்தில் உள்ள கிளிக் என்ற வார்த்தையை அமைத்து இருக்கும் அழகு.

    ஒரு வாரமாக உங்கள் தளம் திறவாமல் பல எண்ணங்களை உண்டு பண்ணியது. தொடர்ந்து பதிவிடுங்கள் தலைவரே.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
    புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

    ReplyDelete
  21. தலைவரே,

    அடுத்த வெளியீடுகள் ஆவலை தூண்டுகின்றன. குறிப்பாக அந்த முதல் விளம்பரம். என்னிடம் அந்த புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. அந்த புத்தகம் மற்ற தென்னக மொழிகளிலும் வந்ததாக என்னுடைய அண்ணன் கூறுவர் (மலையாளம் மற்றும் தெலுங்கு). உண்மையா?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
    புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

    ReplyDelete
  22. தலைவர் அவர்களுக்கு,

    நன்றிகள் கோடி. தமிழில் இயங்கும் மிகச்சிறந்த இரண்டு காமிக்ஸ் தளங்களில் ஒன்றை புதுப் பொலிவோடு காணும் ஆனந்தம் இருகிறதே, அதைப் பற்றி கூற வார்த்தைகள் குறைகு, உணர்ச்சிகள் அதிகம்.

    இப்போது தான் புரிகிறது, என் உகள் தளம் இரண்டு மூன்று நாட்களாக காணவில்லை என்று. காமிக்ஸ் வலைப் பூக்களில் உங்களுடைய தளமே மிகச் சிறந்த அமைப்பை கொண்டு உள்ளது என்பது இனிமேல் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அருமை.

    உங்கள் தொண்டன்.

    ReplyDelete
  23. தலைவரே,

    பின் குறிப்புகள் சில:

    இரண்டாவது சிறந்த தமிழ் காமிக்ஸ் வலைபூ என்று நான் கூறியது நண்பர் அய்யம்பாளையம் அவர்களின் தளத்தை. கடந்த வாரம் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் உங்களின் தளத்தை காணவில்லை, மேதரும் அய்யம்பாளையம் தளத்தில் கமெண்டுகளை இடவும் இயலவில்லை. ஒரு வாரமாக நான் இட்ட கமெண்டுகள் இன்னும் வலைஎரவில்லை. இன்றுதான் மகிழ்ச்சி அடைந்தேன்.

    சம்மர் ஸ்பெஷல்:இதுவரையில் இந்த கதையை நான் படித்ததே இல்லை. அதனால் குறிப்பாக கருத்து எதுவும் இல்லை. ஆனால் மாயாவி கதையை படிக்க உதவியதற்கு நன்றி. அப்பு பற்றி கூறவும்.

    அதனை எழுதியவர் முல்லை தங்கராசன் என்பதே என்னுடைய கருத்து. அவரும் சில நேரங்களில் வாண்டுமாமா போல பெயரிடாமல் கதைகளை எழுதி வந்தார். மேலும் அவர் வார மலர் ஆசிரியர் ஆக இருந்ததால் கூட அவர் பெயரை வெளியிடாமல் இருந்து இருக்கலாம்.

    ஸ்கான்கள் எல்லாம் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளன. நான் கூட இப்போது ஒரு ஸ்கானர் வாங்கி உள்ளேன். முடிந்தால் ஏதாவது உருப்படியாக செய்ய முயல்கிறேன்.

    அப்படி ஆரம்பித்தால் கண்டிப்பாக தலைவர் அவர்கள் தான் வந்து முதல் கமெண்ட்'ஐ இட்டு ஆரம்பிக்க வேண்டும். சரியா?

    ReplyDelete
  24. தலைவரே,

    மன்னிக்க வேண்டும். நான் அவசரத்தில் தவறாக கூறி விட்டேன். உண்மையில் நான் கூறியது நீங்கள் வெளியிட்டு இருந்த "விரைவில் வருகின்றன" விளம்பரத்தில் முதலில் இருக்கும் அந்த மாங்கா பற்றியே.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
    புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

    ReplyDelete
  25. அந்த கேப்டன் லிங்க் கலக்கல். சற்றும் எதிர் பார்க்க வில்லை. உங்களுக்கு நல்ல ஒரு சிந்திக்கும் திறன் உள்ளது.

    ReplyDelete
  26. இந்த புத்தகத்தை நான் பார்த்தது கூட இல்லை. தகவலுக்கு நன்றி. அதுவும் அந்த இரும்புக் கை மாயாவி கதையை முழுமையாக வெளியிட்டமைக்கு நன்றி.

    எங்கிருந்து தான் இத்தனை விஷயங்களை பிடிக்கிறீர்களோ? என்று ஆச்சர்யப் படுத்தும் வகையில் உள்ளது.

    ReplyDelete
  27. தலைவரே,

    உங்களுடைய பின்னுட்டம் இடும் முன் கவனிக்க பகுதியை நான் அப்படியே தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் பகுதியில் உபயோகப் படுத்திக் கொண்டேன். உங்களிடம் அனுமதி கேட்கவில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  28. டாக்டர் ஐயா!

    அற்புதமான ஒரு லே-அவுட்டில் உங்களது வலைத்தளத்தைக் காணும்போது நீங்கள் ஒரு காமிக்ஸ் களஞ்சியம் மட்டுமல்ல ஒரு கலைஞனும் கூட என்று அறியமுடிந்தது. இந்த கலையில் பரிச்சயம் உள்ளவன் என்ற முறையில் சொல்கிறேன் அட்டகாசமான ஒரு லே-அவுட் உங்களுடையது. அதிலும் தலைப்புகளுக்கு வாசகர்களால் நன்கு அறியப்பட்ட வடிவங்களை கையாண்ட உத்தியும், காமிக்ஸ் நாயகர்களை இட, வல ஓரங்களில் தொடரச் செய்த உத்தியும் பாராட்டுக்குரியன.

    உங்களது கலைத்திறமையை நிரூபிக்கும் பதிவொன்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  29. தலைவரே,

    நல்ல அருமையான, முழுமையான விமர்சனம் என்றால் என்ன என்பதை காமிக்ஸ் பதிவர்களுக்கு ஒரு பாடமாக இந்த பதிவின் மூலம் விளக்கி விட்டீர்கள்.

    பிடியுங்கள் பாராட்டை: மிகச் சிறந்த பதிவு இது.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  30. தலைவரே,

    ////அவர் மூலம்தான் அதிமேதை அப்பு பற்றியும் முத்து காமிக்ஸ் வாரமலர் பற்றியும் அறிந்து கொண்டேன்! விரைவில் அதிமேதை அப்பு பற்றிய ஒரு முழு நீளப் பதிவிடலாம் என்று எண்ணம்! மக்கள் விரும்பினால் நிறைவேற்றலாம்!// தெரியாத பல பதிவர்களும் வாசகர்களும் தெரிந்துக் கொள்ளட்டும். பதிவிடுங்கள்.//

    இதனை நான் வழி மொழிகிறேன்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  31. தலைவரே,

    //காமிக்ஸ் நாயகர்களை இட, வல ஓரங்களில் தொடரச் செய்த உத்தியும் பாராட்டுக்குரியன.//

    இந்த நாயகர்கள் பவளச்சிலை மர்மம் புத்தகமா? அல்லது பச்சை வான மர்மம் கதையா?

    கைவசம் புத்தகங்கள் இல்லாததால் இந்த சந்தேகம்.

    ReplyDelete
  32. காமிக்ஸ் பிரியரே,

    //இந்த நாயகர்கள் பவளச்சிலை மர்மம் புத்தகமா? அல்லது பச்சை வான மர்மம் கதையா?//

    போத் ஆஃப் த அபவ்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  33. தலைவரே,

    //காமிக்ஸ் பிரியரே,

    //இந்த நாயகர்கள் பவளச்சிலை மர்மம் புத்தகமா? அல்லது பச்சை வான மர்மம் கதையா?//

    போத் ஆஃப் த அபவ்!//

    இது என்ன கொடுமை?

    வழக்கமாக நாங்கள் பரிட்ச்சை தாளில் தான் இப்படி சாயஸ் கேள்விகளில் இப்படிப் பட்ட விடையை அளிப்போம். நீங்கள் இங்கேயே அளித்து அந்த பசுமையான நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  34. From the Desk of Rebel Ravi

    great review. one of the very best, if not the best.

    keep them churning at regular intervals, please.

    your blog design is also mind blowing. i have spent close to 30 minutes to marvel your design.

    your dedication simply bowled me over. hats off to you.

    jai ho.
    Rebel Ravi.
    Change is the only constant thing in the world.

    ReplyDelete
  35. From the Desk of Rebel Ravi

    thanks for the steel claw scans.

    Jai ho.
    Rebel Ravi.
    Change is the only constant thing in the world.

    ReplyDelete
  36. தலைவரே,

    நான் கேள்விப் பட்டவரையில் உங்கள் ஜென்ம விரோதியை நீங்கள் இன்னமும் இரண்டு வாரங்களில் சந்திக்கலாமே?

    ஏன் இன்னமும் அவனை பற்றிய ரகசிய குறியீட்டை அனுப்பாமல் இருக்கிறீர்கள்?

    மேலும் விஜயன் அவர்களின் வெள்ளி விழா குறித்து உங்களிடம் இருந்து பதிவு எதுவும் இல்லையா?

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    ஜூலை நான்காம் தேதி என்ன ஸ்பெஷல்?

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!