Saturday, May 16, 2009

தேர்தல் சிறப்புப் பதிவு!

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!”

-கவுண்டமணி (படம் : சூரியன்)

வணக்கம்,

தேர்தல் ஜுரம் உச்சத்திலிருக்கிறது! வாக்கெடுப்பு முடிந்துவிட்டிருப்பினும் வழக்கம் போலக் கள்ள வோட்டு போடுவதிலும், சாவடிகளைச் சூறையாடுவதிலும் பிஸியாக இருந்ததனால் பதிவு தாமதமாக வருகிறது!

ஆனாலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் இப்பதிவு வருவது பொருத்தமானதாகவேயிருக்கும்!

த.கா.உ. தலைவர் தேர்தல் சிறப்புப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்! அய்யம்பாளையத்தார் தனது அரசியல் கருத்துக்களுடன் எப்போது வேண்டினும் திடீரெனக் களமிறங்கலாம்! இப்படியிருக்கையில் அ.கொ.தீ.க. மட்டும் அமைதியாக இருந்தால் எப்படி? அதனால்தான் சம்மர் ஸ்பெஷல்-ஐ இப்போதைக்கு ஓரம்கட்டிவிட்டு இந்த அதிரடிப்பதிவு!

அப்புறம் தேர்தல்ல நமக்கு கள்ள வோட்டு போடாதவங்க வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல்ல வரும்! முடிஞ்சா உயிரக் காப்பாத்திக்கங்க!

சென்ற பதிவான ருஷ்ய சிறுவர் இலக்கியம்-க்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி! அப்பதிவுடன் தொடர்புடைய சிறியதொரு அப்டேட் இப்பதிவின் முடிவில் உள்ளது! பார்க்கத் தவறாதீர்கள்!

மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்கு வருவோம்!

தேர்தல் சம்பந்தமுடைய காமிக்ஸ் பற்றி பேசும் போது மதியில்லா மந்திரி கதைகள்  நினைவுக்கு வருவதுண்டு! லக்கி லூக் கதைகள் சிலவற்றில் அரசியல் பின்னனியும் இருப்பதுண்டு, ஆனால் அவை கதையின் ஒரு சிறு பகுதியாகவே இருக்கும்!

தமிழில் ஓவியர் செல்லம்-ன் கைவண்ணத்தில் காட்டிலே தேர்தல் என்றொரு கதை படித்த ஞாபகம்! ஆனால் கதை பற்றிய விபரங்கள் எதுவும் இப்போதைக்கு சிக்கவில்லை! அய்யம்பாளையத்தார் இடம் கேட்டால் இதேப் போல் நான்கைந்து(!!!) கதைகள் தன்னிடம் இருக்கலாம் எனக் கூறிக் கடுப்பேற்றினார்! ஆகையால் அவற்றைப் பற்றி அவர் விரைவில் பதிவிட வேண்டும் என விண்ணப்பமிட்டுவிட்டு அமைதியானேன்!

சரி வேறென்ன செய்யலாம் என யோசிக்கும் போது சட்டென்று நினைவுக்கு வந்தது ஒரேயொரு கதைதான்! அது சிக்பில் குழுவினரின் விற்பனைக்கு ஒரு ஷெரீப்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Banner

இக்கதை ஜூனியர் & மினி லயன் சரித்திரத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது! மேலும் விபரங்களுக்கு இங்கே ‘க்ளிக்’கவும்!Junior Lion#03 - Adhiradi Mannan - Chick Bill Intro

ஓ.கே. இனி கதைக்கு வருவோம்!

அதற்கிடையே சிக்பில் (CHICK BILL) யாரெனத் தெரியாத அறிவிலிகளுக்காக இதோ ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் அளித்திருக்கும் அறிமுகம்!

அமைதியாய் இருக்கும் உட்ஸிடி நகரில் தேர்தல் நேரம்! ஆண்டுக்கொரு முறை நிகழ்த்தப் படும் ஷெரீப்புக்கான தேர்தலில் எப்போதும் போல தன்னை எதிர்ப்போர் யாருமில்லாததால் அனைத்து தரப்பினரின் ஆதரவோடு அமோக வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்தில் என்ஜாயாக இருக்கிறார் ஷெரீப் டாக்புல் (BULL DOG-ஐ திருப்பி போட்டால் வருமே, அந்த DOG BULL)!

ஆனால் நகருக்கு வரும் புதிய நீதிபதியான ஜட்ஜ் ராட்டன்மைண்ட் (ROTTENMIND) டெபுடி ஷெரீப் கிட் ஆர்டின்-ன் (KID ORDINN) பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைக்கிறார்!

பால் தவிர வேறெதுவும் பருகாத பச்சிளம் பாலகன் போன்ற கிட்டிற்கு பீரை வார்க்கிறார் ஜட்ஜ்! அவன் மனதில் ஷெரீப் பதவிக்கு போட்டியிடும் ஆசையை விதைக்கிறார்! நண்பர்களிடையே வேற்றுமையை வளர்க்கிறார்!

தேர்தலில் கிட் ஆர்டின் வெற்றிபெற்று ஷெரீப்பும் ஆகிவிடுகிறான்! அவனிடம் கற்றை கற்றையாக அலுவல் காகிதங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்ளும் ஜட்ஜ் பல புதிய சட்டங்கள் மூலம் உட்ஸிடியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்! 

தனது அடியாட்களான பிங்கோ (BINGO), மற்றும் டொமேடோ  (TOMATO) எனும் தடியர்களுடன் உட்ஸிடியில் அராஜகம் புரியும் ஜட்ஜின் திட்டத்தை ஒட்டுக் கேட்டுவிடும் சிக்பில்லை பிடித்துவைத்து விடுகிறார்கள் கயவர்கள்!

சிக்பில் தப்பினானா? டாக்புல்லின் கதி என்ன? அப்பாவி கிட்டின் நிலை என்ன? உட்ஸிடி இந்த சிக்கலிலிருந்து எப்படி மீண்டது? கேள்விகளுக்கு விடையளிக்கிறது கதை!

சிக்பில் கதைகளில் காமெடியில்லாமல் எப்படி? அதுவும் இப்படியொரு அருமையான கதைக்கருவைக் கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் கதாசிரியர்! இதோ நீங்கள் படித்து மகிழ சிலபல சிரிப்பு வெடிகள்!

முதலில் கிட் ஆர்டின் மக்களின் வாக்குகளைப் பெற ஆற்றும் உரை (?!!) மக்களின் அமோக ஆதரவை பிங்கோவும் டொமேடோவும் உறுதி செய்கிறார்கள்! எப்படியென்றுதான் பாருங்களேன்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Kid Ordinn Speech

அதையடுத்து நடைபெற்ற டாக்புல்லின் சொற்பொழிவு எப்படி அரங்கேறியது என நீங்களே காணுங்கள்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Dog Bull Speech

தேர்தலன்று நடைபெறும் அட்டூழியங்களை நமது அரசியல்வாதிகள் படித்து தெரிந்து  கொண்டால் என்னாவது? அப்புறம் நம் ஜனநாயக நாட்டின் கதி என்ன?

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Polling

தேர்தல் முடிவடைந்து விட்டது! கிட் ஆர்டின் அமோக வெற்றி! அதையடுத்து நிகழும் ஒரு காட்சி! இதற்குப் பெயர் தான் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Recruitment

ஆனால் நமது டாக்புல் கடமை வீரர் அல்லவா?!! அட்டையில் நமது நாயகர்களின் சீருடை மாறியிருப்பதை கழுகுக் கண் கொண்டு நீங்கள் இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள்! அதற்கான காரணம் இதோ!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Sheriff & Deputy

க்ளைமாக்ஸில் வழக்கமாக சண்டைக் காட்சிதான் வரும்! ஆனால் கதையின் மிகப்பெரிய காமெடியே இங்குதான் அரங்கேறுகிறது! சிரித்து மகிழுங்கள்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Climax

காமிக்ஸ் உலகின் கவுண்டமணி & செந்தில் ஜோடி எனக் கூறிவிட்டு கிட் ஆர்டின் டாக்புல்லிடம் உதை வாங்காதிருந்தால் எப்படி? இதோ CLOSING PUNCH! கூடவே வெளியீட்டு விபரங்கள்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Credits & Closing Punch

கதையில் இன்னும் இது போல பல காமெடி காட்சிகள் உள்ளன! அவற்றையெல்லாம் வெளியிட்டால் முழு புத்தகத்தையும் வெளியிட வேண்டியிருக்கும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் விரைவில் இதை மறுபதிப்பு செய்வார் என வேண்டிக்கொள்வதுதான் நம்மால் இயன்றது!

சிக்பில் கதைகள் முழு வண்ணத்தில் வெளிவந்த கால கட்டங்கள் அவை! இதற்குப் பிறகு இன்றுவரை சிக்பில் முழு வண்ணத்தில் வெளிவரவில்லை! அதுவுமின்றி ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறன் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் வந்த கதையாகும்!

மினி லயனில் ஆரம்பத்தில் வந்தக் கதைகளில் கதையின் ஹீரோ சிக்பில் என்றே முன்னிறுத்தப்பட்டிருக்கும்! பின்னாட்களில் டாக்புல்லும் கிட் ஆர்டினும் அடிக்கும் கூத்துக்களைக் கண்டு அவர்களை காமிக்ஸ் உலகின் கவுண்டமணி & செந்தில் ஜோடி என விளம்பரம் செய்து வெற்றி கண்டார் ஆசிரியர்!

எனினும் கதையின் கருவிலுள்ள காமெடி கதை முழுவதும் விரவியிருப்பதால் மொழிபெயர்ப்பாளருக்கு பெரிதாக வேலையெதுவும் வைக்கவில்லை! இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சிக்பில் கதைகள் ஆங்கிலத்தில் எதுவும் வந்ததில்லை!

“இந்தியாவிலேயே… ஏன் நம்ம வோர்ல்டுலேயே…” (கவுண்டமணி – படம் : கரகாட்டக்காரன்) ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து தமிழில் மட்டும்தான் சிக்பில் கதைகள் வெளிவந்துள்ளன!

இது ஒரு பெருமைக்குறிய விஷயமாகும்! இந்த அற்புதக் கதைகளை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

கதை விவரங்கள்:

சிக்பில்லை உருவாக்கியவர் டிபெட் (TIBET), ஓவியரும் இவரே! இவர்தான் நமக்கு பரிச்சயமான ரிப்போர்ட்டர் ஜானி, துப்பறியும் மூவர், டிடெக்டிவ் ட்ரேக் போன்ற பல கதைத்தொடர்களை உருவாக்கியவர்!

மொத்தம் இதுவரை 69 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன! அவற்றில் பல இன்னும் தமிழில் வராதவை! இந்தத் தொடர் பற்றி நண்பர் கிங் விஸ்வா விரைவில் முழுமையான ஒரு ஆய்வுப் பதிவு இடப்போவதால் நான் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்!

விபரம் FRENCH தமிழ்
  Chick Bill#45 - Sheriff For Sale Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Cover
கதை Shérif à vendre (SHERIFF FOR SALE) விற்பனைக்கொரு ஷெரீப்!
ஆசிரியர் TIBET S.விஜயன் (தமிழில்)
ஓவியர் TIBET TIBET
வெளியீடு# CHICK BILL – ALBUM 45 ஜூனியர் & மினி லயன் # 09
வருடம் 1st EDITION : JANUARY 1960
2nd EDITION : AUGUST 1980
OCTOBER 1987
பதிப்பாளர்கள் LE LOMBARD PRAKASH PUBLISHERS

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

Nikolai Nosov - விளையாட்டுப் பிள்ளைகள் பி.கு.:- 

 • சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த நிக்கலாய் நோசவ்-வின் விளையாட்டுப் பிள்ளைகள் சிறுகதைத் தொகுப்பு NCBH நிறுவனத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது! விலை - ரூ:125/- மட்டுமே! மோசமாக  ஸ்கேன் செய்யப்பட்ட அட்டைப்படம், சுமாரான அச்சுக் காகிதம், HARD BINDING இல்லாதது போன்ற சில குறைகள் இருப்பினும் நம் சிறுவயதை நினைவு படுத்தும் ஒரு பொக்கிஷம் இதுவென்பதால் ஏற்கெனவே படித்தோரும், புதிதாகப் படிக்கவிருப்போரும் தவறாது வாங்கிட வேண்டிய புத்தகமிது!  

தொடர்புடைய இடுகைகள்:-

29 comments:

 1. பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,

  மீ த ஃபர்ஸ்ட்டு!

  தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த வண்ணம் வந்து இருக்கும் இவ்வேளையில் தேர்தலையும் அதன் முடிவுகளையும் மைய்யமாக கொண்டு வந்த அற்புதமான இந்த கதையை பற்றிய பதிவு மனதை கொள்ளை கொள்கிறது. சிக் பில் கதைகளில் இது மார்க்-1 ஆகும் (மொத்தம் நான்கு வகை - விரிவாக பின்னர் பார்ப்போம்). அதிலும் இது மார்க்-1 வகையில் இதுவே கடைசியும் ஆகும்.

  இதன் மொழி மாற்றம் கூறிக் கொள்ளும்படி இல்லையென்றாலும் கதையின் மூலக் கருவே குபீர் சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு சிறந்து இருக்கும்.

  இந்தப் புத்தகம் யாரிடம் இருந்தாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "உங்களிடம் இருக்கும் புத்தகத்தில் வண்ணக் கலவை எப்படி? நன்றாக உள்ளதா?" என்பது தான். ஆம், அச்சிட்ட அனைத்து புத்தகங்களுமே, முழு வண்ணக் கலவை என்பதால், சிறு சிறு குறைகளுடன் வந்து இருக்கும்.


  அந்த ஜட்ஜின் பெயர் ராட்டன் மைன்ட். மறக்கவே இயலாத ஒரு பெயர். வழக்கமாக ஆஸ்ட்ரிக்ஸ் கதைகளில் வரும் ரசிக்கத்தக்க பெயர்களைப் போலவே இதுவும் சிறந்து இருக்கும்.


  //அப்புறம் தேர்தல்ல நமக்கு கள்ள வோட்டு போடாதவங்க வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல்ல வரும்! முடிஞ்சா உயிரக் காப்பாத்திக்கங்க!// என்னை போன்ற சிறுவர்களுக்கு தான் இன்னும் வோட்டு போடும் வயதே வரவில்லையே? என்ன செய்வது?


  //மினி லயனில் ஆரம்பத்தில் வந்தக் கதைகளில் கதையின் ஹீரோ சிக்பில் என்றே முன்னிறுத்தப்பட்டிருக்கும்! பின்னாட்களில் டாக்புல்லும் கிட் ஆர்டினும் அடிக்கும் கூத்துக்களைக் கண்டு அவர்களை காமிக்ஸ் உலகின் கவுண்டமணி & செந்தில் ஜோடி என விளம்பரம் செய்து வெற்றி கண்டார் ஆசிரியர்!// இதுதான் இந்த கதை வரிசையில் மார்க்-3. மேலும் வாசகர்களை கவரவும், கதையை ரசிக்கவும்

  //தொடர் பற்றி நண்பர் கிங் விஸ்வா விரைவில் முழுமையான ஒரு ஆய்வுப் பதிவு இடப்போவதால் நான் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்!// விளம்பரத்திற்கு நன்றி.விரைவில் அந்த பதிவு வரும்.

  அருமையான பதிவுக்கு நன்றி தலைவரே.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 2. தலைவரே,

  ஒரு விஷயம் மறந்து விட்டேன்.

  இந்த கதையில் ஷெரீப் பெயர் டாக்புல் என்று இல்லாமல் பிக்புல் என்று கூறப்பட்டு இருக்கும். நல்ல வேளையாக (முதல் கதையை போல இல்லாமல் - அதிரடி மன்னன்) ஷெரீப் என்று அழைப்பார்கள்.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 3. பயங்கரவாதி நண்பா..,

  //தனது அடியாட்களான பிங்கோ (BINGO), மற்றும் டொமேடோ (TOMATO) //

  எவ்வளவு ரசனையோடு பெயர் வைத்திருக்கிறார்கள்..

  ReplyDelete
 4. Dear Doc 7

  சிக் பில் கதைகள் 69 இருக்கும் என எனக்கு இப்போதுதான் சொல்லிதான் தெரிந்தது. தமிழில் இதுவரை படித்த கதைகளில் எதுவுமே மோசம் இல்லை என்ற நிலையில், தொடர்ந்து எடிட்டர் இவர்களுக்கு ஆதரவு கொடுத்து வெளியிட்டிருக்கலாம்.

  ஆர்டினின் அப்பாவி தனம் கதைகளின் பலம். ஒரு கதையை பற்றி இவ்வளவு அழகாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்த தேர்தல் வரை காத்திராமல் அடுத்த கதைகளையும் பற்றி எழுதுங்கள். குறிப்பாக கொலைக்கார காதலி. என்னுடைய பேவரைட்.

  ReplyDelete
 5. ஏன் இந்தப் பதிவுகளை தமிழ்மணம், தமிழீஷ் போன்ற திரட்டிகளில் இணைப்பதில்லை?

  ReplyDelete
 6. தமிழீஷில் ஓட்டுப் போட்டுவிட்டேன்

  ReplyDelete
 7. உங்கள் வேண்டுகோளுக்கிணங்க வேட்டைக்காரன் ஆரம்பித்துவிட்டேன்

  ReplyDelete
 8. ஜுடோ ஜோஸ்May 16, 2009 at 10:56 PM

  பயங்கரவாதியே,

  //அதற்கிடையே சிக்பில் (CHICK BILL) யாரெனத் தெரியாத அறிவிலிகளுக்காக இதோ ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் அளித்திருக்கும் அறிமுகம்!//

  என்னை அறிவிலி என்று கூறியதற்காக உங்களை என்ன மாதிரி தண்டிக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

  ஜுடோ ஜோஸ்.
  When you say “no one’s perfect”, Judo Josh takes this as a personal insult.

  ReplyDelete
 9. தலைவர் அவர்களே,

  தேர்தல் ஒன்றின் பின் நடக்கும் மோசடிகளை நகைச்சுவை குன்றாது வழங்கியிருக்கிறார்கள் கதாசிரியரும், ஆரம்பநிலை மொழிபெயர்ப்பாளரும். மீண்டும் என் சந்தேகம், ஆசிரியர் விஜயன் அவர்கள் பிரென்சு மொழி தெரிந்தவர்தானே?

  இந்தியாவில் தமிழ் மொழியில் மட்டும் தான் சிக்பில்லின் கதைகள் வெளியானதற்கு காரணமான ஆசிரியரை பாராட்டி இந்த மலர் மாலையை அணிவிக்கிறேன்.

  கடைசிப் பக்கங்கள் சில கறுப்பு வெள்ளையாக காட்சி தருகின்றனவே இது தலைவரே உங்கள் திருவிளையாடலா அல்லது இதழிலேயே இப்படித்தானா?

  தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில், நல்ல ஸ்கேன்களுடன் வெளியான அருமையான பதிவிற்கு நன்றிகள்.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 10. தலைவர் கொடுரமான செயல்களில் பிஸியாக இருப்பதால் நான் பதில் அளிக்கிறேன்.

  //கடைசிப் பக்கங்கள் சில கறுப்பு வெள்ளையாக காட்சி தருகின்றனவே இது தலைவரே உங்கள் திருவிளையாடலா அல்லது இதழிலேயே இப்படித்தானா?//

  சில குறிப்பிட்ட பக்கங்கள் மட்டுமே முழு வண்ணத்தில் வெளிவந்ததால் இப்படி சில வேளைகளில் முடிவுப் பக்கங்கள் கருப்பு / வெள்ளையிலேயே வருவதுண்டு.

  உதாரணம்: லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் இதழில் வரும் லக்கி லூக்கின் பயங்கரப் பொடியன் முடிவுப் பகுதி.

  ReplyDelete
 11. விஸ்வா, விரைவான உங்கள் பதிலிற்கு நன்றி நண்பரே. ஜாக்குவார் ஜோஸ் அவர்களிற்கு ஒர் கொலைகாரக் காதலி மேல் ஒரு இதுவாமே, கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா!?

  ReplyDelete
 12. பங்கு வேட்டையரே,

  //குறிப்பாக கொலைக்கார காதலி. என்னுடைய பேவரைட்.//

  எனக்கும்தான்!

  அண்ணன் SUREஷ் அவர்களே,

  //உங்கள் வேண்டுகோளுக்கிணங்க வேட்டைக்காரன் ஆரம்பித்துவிட்டேன்//

  நான் படித்தும் விட்டேன்! ஆர்ப்பாட்டமான ஆரம்பம்! தொடருங்கள்!

  ஜூடோ ஜோஸ் அவர்களே,

  //என்னை அறிவிலி என்று கூறியதற்காக உங்களை என்ன மாதிரி தண்டிக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.//

  அதை ஏன் உங்களைக் குறிப்பிட்டுக் கூறுகிறேன் என நீங்கள் நினைக்க வேண்டும்! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ?!!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 13. கனவுகளின் காதலரே,

  //கடைசிப் பக்கங்கள் சில கறுப்பு வெள்ளையாக காட்சி தருகின்றனவே இது தலைவரே உங்கள் திருவிளையாடலா அல்லது இதழிலேயே இப்படித்தானா?//

  நல்லா கேட்டீங்க! நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி கேட்டீங்க! இதைப் பற்றி விளக்க வேண்டுமெனின் தனிப்பதிவே வேண்டும்!

  இது போன்று கடைசி பக்கங்கள் கறுப்பு வெள்ளையில் வருவது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் தனிப்பட்ட முத்திரைகளில் ஒன்றாகும்!

  குறிப்பிட்டளவு பக்கங்கள் மட்டுமே வண்ணத்தில் இடம்பெறும் பட்சத்தில் (உதா : 48 பக்கம்) அவர் மீதமிருக்கும் பக்கங்களை கருப்பு வெள்ளையிலேயே அச்சிடுவது வழக்கம்!

  அழகுக்காக மீதிப் பக்கங்களையும் வண்ணத்திலிட்டால் அவருக்கு கட்டுப்படியாகாது! இதே போல் இன்னுமொரு உதாரணத்திற்கு இங்கே ‘க்ளிக்’கவும்!

  இது பத்திரிக்கை தந்திரம்! இதை இவர் மட்டும் செய்வதில்லை! ஆனந்த விகடனில் முன்பக்கம் கருப்பு வெள்ளையிலும், பின் பக்கம் வண்ணத்திலும் வந்திட்டது உங்களுக்கு நினைவிருக்கும்!

  அதே போல இவரின் INSPIRATION-ஆன இங்கிலாந்தின் காமிக்ஸ் இதழ்கள் இதே போல் சில பக்கங்கள் மட்டும் வண்ணத்தில் கொண்டிருக்கும்! அவற்றிலும் ஒரே கதை வண்ணத்திலும், கருப்பு வெள்ளையிலும் வரும்!

  ஆகையால் இவ்விஷயத்தில் ஆசிரியரைச் சொல்லிக் குற்றமில்லை!

  இதைப் பற்றிப் பதிவிலேயே குறிப்பிட எண்ணியிருந்தேன்! மறந்து விட்டேன்! மன்னிக்கவும்!

  வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வா அவர்களே,

  முதன்மைக் கருத்துக்களுக்கும், பதில் கூறியதற்கும் நன்றி!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 14. here is the download link for this tory: http://rapidshare.com/files/118685463/Chick_Bill_45.cbr

  ReplyDelete
 15. தேர்தல் ஸ்பெஷலாக, ஒரு அருமையான ஒரு சிக்பில் கதையை பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி டாக்டரே. இந்த கதையை சிறு வயதில் நண்பன் ஒருவனிடம் மன்றாடி கேட்டு அவன் குடுத்த ஒரு மணி நேர கால அவகாசத்தில், கஷ்டப்பட்டு படித்து முடித்த நியாபகம் இன்றும் இருக்கிறது.

  இதுதான் சிக்பில் வரிசையில் வந்த கடைசி கலர் காமிக்ஸ் என்று நீங்கள் கூறியபின்புதான் தெரிகிறது... வழக்கம் போலவே அந்த கால மினி லயன் மற்றும் லயன் காமிக்ஸ்கள் என் சேகரிப்பில் இல்லை என்பதால் என்னால் இவற்றை ஆசையுடன் பார்க்க மட்டும் தான் முடியும். விஜயன் மனது வைத்தால் இக்கதைகளை 100 விலையில் கூட மறுபதிப்பு செய்யலாம்..... ஸ்பெஷல் என்றாலே 5 6 கதைகள் கொண்ட புத்தகம் தான் என்று அவர் எண்ணி கொண்டிருக்காமல், இப்படி கதைகளையும் ஸ்பெஷல் இதழாக வெளியிட்டால், வாங்க ஆள் இல்லாமலா போகும்? எனக்கு தெரிந்து இப்படி கதை பொக்கிஷங்களை கையில் வைத்து கொண்டு அதை காசாக்காமல் இருப்பது விஜயன் போல ஒருவராக மட்டும் தான் இருக்க முடியும். பார்ப்போம் காலம் பதில் சொல்லட்டும்.

  உங்கள் புத்தக சேகரிப்பை தேட்டை போட ஒரு நாள் கட்டாயம் முடிவெடுத்தே ஆக வேண்டும் போலிருக்கிறது. தொடருங்கள் உங்கள் சிறப்பு பதிவுகளை.

  ÇómícólógÝ

  ReplyDelete
 16. கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

  லெட் த கும்மி ஸ்டார்ட்.

  --
  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி.

  ReplyDelete
 17. டாக்டர் ஐயா!

  பதிவை வெளியிட்ட நேரம், தேர்ந்தெடுத்த கதை, கட்டுரையாக்கியவிதம் அனைத்தும் மிகவும் பொருத்தமாக இருந்தன. இதைதான் பழம் நழுவி
  பாலில் விழுந்தது போல என்பார்கள்.

  வண்ண இதழின் சில பக்கங்கள் வண்ணத்தில் இல்லாதது குறித்து இன்னொரு விளக்கம். (சற்று பொறுமையாக படிக்கவும்)

  எந்த ஒரு இதழும் ஒரு குறிப்பிட்ட அகலம், நீளம் உள்ள பெரிய தாளில் (standard paper size)அச்சிடப்படுகிறது. நமது இதழ்கள் தினமணி
  நாளிதழை முழுமையாக விரித்தால் என்ன அளவு இருக்குமோ அந்த அளவுள்ள தாளில் அச்சிடப்படுகின்றன. இந்த தாளிற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பது உங்களுக்கு தெரியும். ஒரு அடிப்படைத்தாளின் ஒரு பக்கத்தில் குமுதம் வடிவில் வரும் நமது காமிக்ஸின் 16 பக்கங்களை அச்சிட முடியும். எனவே ஒரு தாளில் முன், பின் பக்கங்களில் மொத்தம் 32 பக்கங்களை அச்சிடலாம்.

  அச்சிட்ட பின் இந்த பெரிய தாளை முறையாக இதழின் அளவு வரும் வரை மடித்தால் அதில் மொத்தம் 32 பக்கங்கள் இருக்கும். இதனை தான் அச்சக உலகில் ஒரு FORM என்று சொல்வார்கள். இந்த FORMகளை இரண்டு முறையில் அடுக்கி புத்தகமாக்கலாம். ஒன்று Centre Pin - (வாரமலர் போல) லயன், முத்துவின் சாதாரண இதழ்கள் இம்முறையில்தான் தற்போது வருகின்றன. இன்னொன்று side pin - (ரீடர் டைஜஸ்ட் போல) லயன், முத்துவின் சிறப்பிதழ்கள் இம்முறையில்தான் வரும். அதிக பக்கங்களுக்கு side pin மிகவும் ஏற்றது. தற்போதைய நமது இதழ்களை கவனித்தால் ஒவ்வொரு 16 பக்கத்தின் ஆரம்பித்திலும் F-1, F-2, F-3 என்று இருப்பதை கவனிக்கலாம்.


  பல வண்ண அச்சில் பொதுவாக நான்கு அடிப்படை மைகள் (CMYK, Cyan, Majenda, Yellow, Black) பயன்படுகின்றன. இந்த அடிப்படை மைகளின் கலவையில் இருந்தே ஆயிரக்கணக்கான வண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு அடிப்படை மைக்கு ஒரு பிளேட் (Plate - இது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போல) வேண்டும். ஒரு தாளின் ஒரு பக்கத்தில் முழுமையான பல வண்ண அச்சை உருவாக்க அது நான்கு மைகளாலும் அச்சிடப்பட வேண்டும்.

  ஆனால் கருப்பு அச்சிற்கு கருப்பு மையும், ஒரு பிளேட்டும் போதுமானது. குறுக்கி சொல்ல வேண்டுமானால் வண்ண அச்சிற்கு 4 மடங்கு அதிகம் செலவாகும்.

  (ஆனந்த விகடனில் முன் 16 பக்கங்களை வண்ணத்திலும், பின் 16 பக்கங்களை கருப்பிலும் அச்சிடும் போதுதான் வண்ணம்/கருப்பு பக்கங்கள் அடுத்தடுத்து வருகின்றன.)

  ஒரு இதழ் 80 பக்கங்களை கொண்டிருந்தால் அது 32+32+16 (3 forms) என பிரிக்கப்பட்டிருக்கும். விலையை கட்டுக்குள் வைக்க சில சமயங்களில் ஏதேனும் ஒரு form கருப்பு வண்ணத்தில் அச்சிடப்படலாம்.

  ReplyDelete
 18. அ.கொ.தீ.க. தலைவர் அவர்களே,
  பின்னுட்டம் இட சற்று தாமதமாகிவிட்டது . சிக் பில் கதை கலரில் இப்போது தான் பார்க்கிறேன் . அட்டை படமும் அருமை. பார்க்க பார்க்கபடிக்க வேண்டும் போல் இருக்கிறது . திரு.S.விஜயன் அவர்கள் கண்டிப்பாக மறு பதிப்பு செய்ய வேண்டும் என வேண்டுகிறேன்.

  Lovingly,
  Lucky Limat
  Browse Comics.

  ReplyDelete
 19. // திரு.S.விஜயன் அவர்கள் கண்டிப்பாக மறு பதிப்பு செய்ய வேண்டும் என வேண்டுகிறேன்//

  நண்பர்கள் பலர் இதைப் போல எழுதி வருவதால் இந்த பதில் - ஒரு விஷயத்தை நீங்கள் காமிக்ஸ் பதிப்பாளர் என்ற முறையில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மறுபதிப்பு செய்யவும் கூட நீங்கள் அந்த பதிப்பகத்தின் உரிமையாளருக்கு பணம் செலுத்த வேண்டும்.

  ஒவ்வொரு கதையை வாங்கும்போதும் அந்த கதைக்கு என்று கால அவகாசங்களை கொடுப்பார்கள். உதாரணமாக நீங்கள் லக்கி லுக் கதைகளுக்கான உரிமையை வாங்கினால், அவர்கள் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் கொடுப்பார்கள். அந்த இரண்டு வருடங்களில் நீங்கள் அந்த கதையை வெளியிட வேண்டும். அதற்க்கு பிறகு நீங்கள் அந்த கதையை மறுபடியும் வெளியிட இயலாது. அப்படி வெளியிட்டால் அது காப்புரிமை சட்டப்படி தவறாகும்.

  நீங்கள் நினைக்கும்படி இருந்தால், அவர் இந்நேரம் லக்கி லுக், சிக் பில் கதைகளை வெளியிட மாட்டாரா எனா? இல்லை அவருக்கு தான் சந்தை நிலவரங்கள் தெரியாதா? இல்லை, எந்த கதை நல்ல விற்பனையை கொடுக்கும் என்பதை அவர்தான் மறந்து விட்டாரா? ஒரெஉ ஒரு முறை தான் அவர் டெக்ஸ் வில்லர் கதைகளை மறுபதிப்பில் வெளியிட்டு பின்னர் நிறுத்தி விட்டதின் பின்னணியும் இதுவே.

  ReplyDelete
 20. அய்யம் வெங்கி அவர்களே,

  அச்சுத்துறையின் நுணுக்கங்களை தெளிவாக அதே நேரத்தில் அழகாக விவரித்து விட்டீர்கள். பள்ளி கால விடுமுறையில் அச்சகம் ஒன்றில் வேலை செய்த போது, இந்த விஷயங்களை கடை முதலாளி சொல்லி கேள்விபட்ட நியாபகம், ஆனால் அப்போது அதை கடமைக்காக செவிமடுத்தேனே தவிர, முழுவதும் புரிந்து கொள்ளவில்லை.

  இப்போது அந்நுணுக்கத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. பல்கழைக்கழகம் என்று தங்களை அறிவிப்பதில் எந்த தவறுமில்லை. கலக்குங்கள்.

  ReplyDelete
 21. தலைவரே,

  சிக் பில் பற்றிய நல்ல ஒரு பதிவு. உண்மையில் தற்போது வரும் சிக் பில் கதைகள் சற்று மொக்கையாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதனால் தான் அந்த காலத்தில் வந்த சிக் பில் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.

  உங்களுக்கு நீலப் பேய் மர்மம் பிடிக்குமா? என்னை பொறுத்தவரை அது தான் சிக் பில் கதைகளில் சிறந்தவை. மில்லேனியம் சூப்பர் ஸ்பெஷல் கதைக்கு பிறகு தான் விஜயன் டாக் புல் கிட ஆர்டின் ஜோடியை முன்னணிப் படுத்த ஆரம்பித்தார்.

  நானும் ஒரு தேர்தல் சார்ந்த கதையை ரெடி செய்து வைத்து இருந்தேன். ஆனால் இட இயலவில்லை. ஆனால் உங்கள் பதிவு அந்த குறையை நீக்கி விட்டது.

  நீங்கள் DD-2 பார்த்தது உண்டா? அதில் 91-92ல ஒரு பிரபல நகைச்சுவை ஜோடி (மிர்ச்-மசாலா என்ற தொடரிலும் வந்தார்கள்) இருந்தது. அந்த ஜோடியை கொண்டு நமது சிக் பில் கதைகளை போன்றே ஒரு ஹிந்தி தொலைகாட்சி தொடர் வந்தது.

  இன்ஸ்பெக்டர் (டாக் புல்), ஹெட் கான்ஸ்டபில் (கிட ஆர்டின்) மற்றும் அவர்களுக்கு உதவும் ஒரு டிடேக்டிவே ஜோடி (சிக் பில் மற்றும் பொடியன்) என்று நமது பாத்திரங்களை அப்படியே காப்பி அடித்து இருந்தார்கள். ஆனால் தொடர் வெற்றி அடைய வில்லை.

  அய்யம்பாளையம் வெங்கி அவர்களுக்கு: தகவலுக்கு நன்றி.

  புலா சுலாகி,
  கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

  ReplyDelete
 22. //ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறன் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் வந்த கதையாகும்//

  நெத்தி அடி.

  புலா சுலாகி,
  கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

  ReplyDelete
 23. நண்பர்களே,

  என்னுடைய புதிய அலுவலகத்தில் பிளாக்கர் தடை செய்யப் பட்டு இருந்ததால் இவ்வளவு நாட்களாக பின்னுட்டம் இட இயலவில்லை. தமிலிஷ்'ல என்ன பதிவுகள் வந்து உள்ளது என்று பார்த்து தெரிந்து கொள்வேன். இப்போது பிரவுசிங் சென்டரில் இருந்து இந்த பின்னுட்டம் இடுகிறேன்.

  சிக் பில் கதைகளில் இந்த கதை டாப் ஐந்து கதைகளில் வரும். அந்த கொலைகாரக் காதலி தான் டாப். அதனைப் பற்றி எப்போது பதிவிடப் போகிறீர்கள்?

  இந்த கதையில் மொழி பெயர்ப்பில் எந்த குறையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது வரும் சிக் பில் கதைகள் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்பது உண்மை.

  தொடருங்கள் உங்கள் பதிவுகளை. சம்மர் ஸ்பெஷல் விமர்சனத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
 24. தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  டிரீட் எங்கே தலைவரே? இதற்காகவே அடுத்த நாதம் நடைபெற உள்ள மாபெரும் காமிக்ஸ் வலைப் பதிவர்கள் மாநாட்டில் நான் கலந்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 25. அன்புடையீர்,

  கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

  லெட் த கும்மி ஸ்டார்ட்.

  இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி.

  ReplyDelete
 26. தலைவருக்கு சற்று தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  புலா சுலாகி,
  கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

  ReplyDelete
 27. recently i purchased the full set of mini lion comics and the cover of this one was missing. you have more than made it to me.

  great review.

  my humble request: kindly review lucky luke's puratchi thee.

  ReplyDelete
 28. if possible, do a review on the super pilot tiger stories.

  i think they are from europe and mini lion published 3 stories of him.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!