Sunday, January 1, 2017

HAPPY NEW YEAR!

இன்றுமுதல், தமிழின் நம்பர் 1 சிறுவர் இலக்கிய இதழான ஆனந்த விகடன் குழுமத்தின் “சுட்டி விகடனில்” க்ரைம் டைம் என்ற ஒரு புதிய காமிக்ஸ் தொடர் ஆரம்பிக்கிறது. இந்தக் கதையின் ஹீரோவான இன்ஸ்பெக்டர் தேவ் உடன் இணைந்து நீங்களும் துப்பறியலாம். சரியான விடைகளைக் கண்டுபிடித்தால், 10, 000 ரூபாய் பரிசும் உண்டு.

இது காமிக்ஸ் உலகில் என்னுடைய முதல் முயற்சி. நேரமிருப்பின், படியுங்கள். உங்களது வாழ்த்துகளையும், Constructive Criticism கொண்டு கருத்துகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.




Thursday, February 5, 2015

உன்னைப்போல் ஒருவன்!

வணக்கம்,

கடந்த ஜனவரி 26, 2015ல் இந்தியா தனது 66வது குடியரசு தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியது! ஆனால் அதே தினம் இந்திய கார்ட்டூன் உலகிற்கு ஒரு துக்க நாளாகிப் போனது ஏன் தெரியுமா?!!

ஆம்! அன்றுதான் இந்தியாவின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்டான ஆர்.கே.லக்‌ஷ்மண் அவர்கள் இயற்கை எய்தினார்! அவரது படைப்புகளிலேயே மிகவும் உண்ணதமான ஒருவரை அண்ணாரது நினைவாக இங்கு மீள்பதிவிடுகிறேன்!

2009ல் வெளிவந்த உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் வரும் காமன் மேன் (COMMON MAN) கதாபாத்திரம் அனைவரும் அறிந்ததே! ஆனால் கமலுக்கு பல வருடங்கள் முன்பிருந்தே மக்களின் சிந்தையை தொடர்ந்து தூண்டி வரும் ஒரிஜினல் காமன் மேனை உருவாக்கிய மேதைக்கு சிறப்பு சேர்ப்பதே எனது நோக்கம்!

அக்டோபர் 24, 1921-ல் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்டாகப் போற்றப்படும் திரு.ஆர்.கே.லட்சுமண் அவர்களால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரமே காமன் மேன்!
டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் YOU SAID IT! என்ற கார்ட்டூன் பகுதியின் நாயகன்தான் இந்த காமன் மேன்! தினசரி நாட்டுநடப்பில் தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அப்பாவியாக ஒரு ஓரத்தில் நின்று பார்ப்பதே இவரது குணாதிசயம்! இவரது காஸ்ட்யூம் அதை மிக பிரபலம்!

1951-லிருந்து தொடர்ந்து நம்மையெல்லாம் பல வருடங்கள் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் காமன் மேன் இந்திய உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்! காமன் மேனின் தாக்கத்தை உணர வேண்டுமெனில் பின்வரும் தகவல்கள் கொஞ்சம் உதவக்கூடும்!
  • இந்திய அரசால் 1988-ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் 150-வது ஆண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட ஒரு தபால் தலையில் காமன் மேன் படம் இடம்பெற்றுள்ளது!
  • புனேயில் SYMBIOSIS INSTITUTE-ல் காமன் மேன் சிலை நிறுவப்பட்டுள்ளது!
  • AIR DECCAN நிறுவணம் 2005-ல் தொடங்கிய மலிவு விலை விமானப் போக்குவரத்துக்கு காமன் மேனை MASCOT ஆக பயன்படுத்தி வருகிறது!


காமன் மேன் தவிர தன் அண்ணனாகிய அமரர் திரு.ஆர்.கே.நாராயண் அவர்களின் கதைகளுக்கு இவர் வரைந்த சித்திரங்கள் மிக பிரபலம்! இது குறித்த எனது முந்தைய பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான இன்னொரு கார்ட்டூன் கதாபாத்திரமான ASIAN PAINTS விளம்பரத்தில் வரும் சிறுவன்GATTUவையும் உருவாக்கியவரும் இவர்தான்! எனக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான கட்டுவின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு!





இத்தனை ஆண்டு காலமாய் நம்மையெல்லாம் மகிழ்வித்துவந்த அண்ணாரது ஆண்மா சாந்தியடைய நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

    காமன் மேன் குறித்து மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

    THE HOBBIT: THE BATTLE OF THE FIVE ARMIES - 12.12.2014 - திரைவிமர்சனம்!


    1937ம் ஆண்டு ஜே.ஆர்.ஆர்.டோல்கீன் எழுத்தில் வெளிவந்து உலகெங்கும் விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் சிறுவர் இலக்கிய புதினம் தான் ‘த ஹாப்பிட்’. இந்த புத்தகத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து ‘த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ என்ற மகாகாவியத்தை இயற்றினார் டோல்கீன். 1954-55ல் மூன்று பாகங்களாக வெளிவந்த, இரண்டாம் உலகப் யுத்ததின் மத்தியில் எழுதப்பட்ட இந்நாவல் டோல்கீனின் 12 வருட கடுந்தவத்தால் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

    நாவல் எழுதுவதென்றால் கதை மற்றும் கதாபாத்திரங்களை உருவாக்குவதோடல்லாமல் அவர்கள் வாழும் உலகம், அதன் பூகோள அமைப்பு, அவர்கள் பேசும் மொழி, அதற்கான அகராதி, ஒவ்வொரு இனத்தின் பாரம்பரியங்கள், கிளைக்கதைகள், பாடல்கள் என ஒரு மகாகாவியத்திற்கு தேவையான அனைத்தையும் டோல்கீனின் பிரம்மாண்ட கற்பனையில் உதித்துள்ளதையும், அதை அவர் நுண்ணியமாக  குறிப்பெடுத்து, ஆராய்ந்து கதைகளுக்குள் புகுத்தியிருக்கும் விதமும் மலைக்கச் செய்பவை.

    இந்த புத்தகங்களைத் தழுவி பல்வேறு மாற்று ஊடகங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், சிலபல கார்ட்டூன் திரைப்படங்களைத் தவிர்த்து இந்த நூற்றாண்டிற்கு முன் வெள்ளித்திரையில் முழு நீள லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக கோலோச்சியதில்லை. க்ராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் மூலம் இந்த சாகஸங்களை இப்போது நாம் திரைப்படங்களாகவும் கண்டு மகிழ முடிகிறது!


    2001 முதல் 2003 வரை பீட்டர் ஜாக்சனின் இயக்கத்தில் மூன்று திரைப்படங்களாக ‘த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ நாவல் படமாக்கப்பட்டது. உலகெங்கும் பெருவெற்றியும், வரவேற்பும் பெற்ற இந்த ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத் தொடர், மீண்டும் மாயாஜால திரைப்படங்களுக்கான மவுசை கூட்டின.

    பீட்டர் ஜாக்சன் முதன் முதலில் இயக்க விரும்பியது ‘த ஹாப்பிட்’ சிறுவர் நாவலின் திரைவடிவத்தையே. சிலபல சட்ட சிக்கல்களால் அச்சமயத்தில் அப்படத்தை அவரால் உருவாக்க முடியவில்லை. ‘த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ திரைத் தொடரின் பெருவெற்றியைத் தொடர்ந்து ‘த ஹாப்பிட்’டை படமாக்க தயாரிப்பு நிறுவனங்கள் விரும்பின.

    இம்முறை இயக்குனராக குல்லெரிமோ டெல் டோரோ தேர்ந்தெடுக்கப் பட்டார். இவருடன் பீட்டர் ஜாக்சன் இணைந்து பணி புரிந்தார். இருவருக்குள்ளும் பலத்த நட்பு விளைந்தது. ஆனால் படம் தொடங்க ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக டெல் டோரோ இயக்குனர் பொறுப்பிலிருந்து விலக மீண்டும் பீட்டர் ஜாக்சனே இயக்குனரானார்.

    முயல் வளை போன்ற பொந்துகளில் வீடமைத்து வாழும் சின்னஞ்சிறு மனிதர்கள் தான் ஹாப்பிட்ஸ். யார் வம்புக்கும் போகாமல் தானுண்டு தன் வளையுண்டு என வாழும் இவர்களில் ஒருவன் தான் நம் கதையின் நாயகன் பில்போ. ஒரு நாள் இவன் வீட்டுக்கு அழையா விருந்தாளிகளாக வரும் மந்திரவாதி காண்டால்ஃபும், தோரின் ஓகென்ஷீல்ட் தலைமையிலான 12 குள்ளர்களும் (DWARVES) இவன் விருப்பமின்றி இவனை குள்ளர்களுக்கு சொந்தமான ஒரு புதையல் வேட்டைக்கு அழைத்து செல்கின்றனர்.


    தோரின் ஓகென்ஷீலட் தனது மூதாதையர் ஆண்ட எரெபோர் (EREBOR) நாட்டிற்கு மீண்டும் தன்னை அரசனாக பிரகடணப்படுத்திக் கொள்ளத் தேவையான ஒரு மந்திரக் கல்லும் (ARKENSTONE) அப்புதையலில் அடக்கம். அப்புதையலைக் காத்து வருவது ஸ்மாக் என்ற டிராகன். வழியில் அவர்கள் சந்திக்கும் சாகஸங்களும் புதையலை மீட்பதும் தான் ’த ஹாப்பிட்’ நாவலின் கதை.

    எளிமையான இந்த கதை ஆரம்பத்தில் இரண்டு பாக படமாகத்தான் அறிவிக்கப் பட்டது. 2012ல் வெளிவந்த முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து மூன்று பாக தொடராக அறிவிக்க(இழுத்தடிக்க)ப்பட்டது. இம்முறை முப்பரிமாணத்தில் படமாக்கப் பட்ட இத்தொடரின் இறுதி பாகம் 12.12.2014ல் ‘லிங்கா’வுக்கு போட்டியாக வெளிவந்தது.

    முதலிரண்டு பாகங்களில் பில்போவும், குள்ளர்களும் மந்திரவாதி காண்டால்ஃப் உடன் சேர்ந்து புதையலை எவ்வாறு அடைகின்றனர் என்பதை கூறுகின்றன. முதல் பாகத்தில் பில்போ கொல்லம் (GOLLUM) எனும் ஜந்துவிடமிருந்து மாய மோதிரத்தை கைப்பற்றும் காட்சி அட்டகாசம். கொல்லமும், மாய மோதிரமும் ‘த லார்ட் ஆஃப் த ரிங்கஸ்’ கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    வழியில் அவர்கள் சந்திக்கும் பல்வேறு அபாயங்கள், புரியும் சாகஸங்கள், சந்திக்கும் மனிதர்கள் என படங்களின் நீளத்தையும் மீறி மிக சுவாரசியமாக செல்கின்றன. அவர்களுக்கு உதவிடும் வன தேவர்கள் (ELVES), லேக் டவுன் மக்கள் ஆகியோருக்கு புதையலில் பங்கு தருவதாக வாக்களிக்கிறான் குள்ளர் தலைவன் தோரின் ஓகென்ஷீல்ட்.

    இரண்டாம் பாக இறுதியில் டிராகனுடன் தனியாக மோதுகிறான் பில்போ. மந்திரக் கல்லையும் கைப்பற்றுகிறான். பில்போ தன்னை நயவஞ்சகமாக வீழ்த்தியதை அறியும் ஸ்மாக் அவனுக்கு உதவிய லேக் டவுன் மக்களை அழிக்க புறப்படுவதாக முடிந்தது இரண்டாம் பாகம்.

    மூன்றாம் பாகத்தின் ஆரம்பம் லேக் டவுனை சூறையாடும் ஸ்மாக் எவ்வாறு கொல்லப் படுகிறது என்பதை விவரிக்கிறது. புதையலில் பங்கு கேட்க வன தேவர்களும், லேக் டவுன் மக்களும் கோட்டையை புடை சூழ, புதையலைக் கண்டு மனம் பிறழ்ந்த தோரின் ஓகென்ஷீல்ட் அவர்கள் மீது போர் தொடுக்க முடிவெடுத்து தன் இனத்தவரை வரவழைக்கிறான். இது மட்டுமல்லாமல் ஆர்க்ஸ் (ORCS) எனப்படும் பூதங்களின் இருவேறு படைகள் புதையலை சொந்தமாக்கிக் கொள்ள எரெபோர் நோக்கி வருகின்றன. இந்த ஐந்து படைகளினூடே நிகழும் போர்தான் THE BATTLE OF THE FIVE ARMIES.


    இந்த படத்துடன் டோல்கீனின் மாய உலகிலிருந்து நமக்கு வேண்டாத ஒரு விடுதலை கிடைக்கிறது. அதாவது டோல்கீனால் முடிக்கப்படாத குறிப்புகள் அடங்கிய ‘த சில்மரில்லியன்’ (THE SILAMARILLION) நாவலை பீட்டர் ஜாக்சன் படமாக்க முயலாத வரை மேற்கொண்டு படங்கள் வர வாய்ப்பில்லை.

    ’த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ படங்களின் காணப்பட்ட அந்த பிரம்மாண்டம் ஏனோ ‘த ஹாப்பிட்’ பட வரிசையில் மிஸ்ஸிங். கதையின் எளிமை ஒரு காரணமாக இருப்பினும், டிஜிட்டலில் படமாக்கப்பட்டதால் 3Dஐயும் மீறி ஏனோ டிவி சீரியல் பார்ப்பது போலவே தோன்றுகிறது.

    ஆனால் படத்தில் இந்தக் குறைகளெல்லாம் போர் காட்சிகள் தொடங்கும் முன்பு மட்டுமே. பாதி படத்துக்கு மேல் ஆக்ரமித்துக் கொள்ளும் போர் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சம். ஆனால் படம் பார்த்து முடிந்த பிறகு நாவலில் ஒரு அத்தியாயம் மட்டுமே வரும் போரை ஒரு முழு நீள திரைப்படமாக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழாமலில்லை.

    சுவாரசியமான துணுக்கு:

    டிராகன் ஸ்மாக் வேடத்தில் நடித்த பெனிடிக்ட் கம்பர்பேட்ச், பில்போவாக நடித்த மார்டின் ஃப்ரீமேன் ஆகியோர் ஏற்கெனவே ஷெர்லாக் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளனர். இதில் மார்டின் ஃப்ரீமேன் வாட்சனாகவும், பெனிடிக்ட் கம்பர்பேட்ச் ஷெர்லக் ஹோம்ஸாகவும் நடித்துள்ளனர்.

    பரிந்துரை:

         நாவலை படித்துள்ள டோல்கீன் ரசிகர்களும், முந்தைய திரைப்படங்களின் ரசிகர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய படமிது. பிரம்மாண்ட க்ராஃபிக்ஸ் காட்சிகளுக்காக ஏணைய திரை ரசிகர்களும் ஒரு முறை கண்டு களிக்கலாம்.

    பைசா வசூல்: 80/120 ரூபாய்

    Tuesday, January 3, 2012

    தபால் தலையில் மாயாவி!

    வணக்கம்,

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    இந்த புது வருடம் தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கப் போவதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டன! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களே சொந்த வலைப்பூ ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்! கம்பேக் ஸ்பெஷல் குறித்த முன்னோட்டங்கள் இனையத்தில் உலாவ ஆரம்பித்து விட்டன! காமிக்ஸ் ஜுரம் கொஞ்சம் கொஞ்சமாக பற்றிக் கொண்டு விட்டது! என் பங்குக்கு நானும் ஒரு சிறிய ‘பிட்’டை போட்டு வைக்கிறேன்!

    இந்நிலையில் தமிழ் காமிக்ஸ் சூழல் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள காமிக்ஸ் ரசிகர்களும் வரவேற்கத் தக்க விஷயங்கள் நடந்தேறி வருகின்றன! அந்த வரிசையில் இதோ இன்னுமொரு சுவையான நிகழ்வு!

    தமிழ் காமிக்ஸ்களுள் தலையாய நாயகானாகிய இரும்புக்கை மாயாவி மற்றும் வேறுபல காமிக்ஸ்களை கெளரவப்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டு அஞ்சல்துறை தபால்தலைகளை வெளியிட்டுள்ளது! பிரிட்டிஷ் காமிக்ஸ் வரலாற்றின் 75 வருட பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது! இது குறித்த மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டியை சொடுக்கவும்!

    இதோ அந்த தபால்தலைகள்! காமிக்ஸ் ரசிகர்கள் கைப்பற்ற வேண்டிய இன்னுமொரு அரிய பொக்கிஷம்! ஆனால் இரும்புக்கை மாயாவியை சிறுமிகள் காமிக்ஸ் வகையில் சேர்த்தது ஏனென்று விளங்கவில்லை!

    Picture 12Picture 16Picture 15

    இதே போல் 1995ல் அமெரிக்காவில் செய்தித்தாள் சித்திரத் தொடர்களை கெளரவப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட தபால்தலைகள் இதோ! ஃப்ளாஷ் கார்டன், ப்ளாண்டி, டிக் ட்ரேசி மற்றும் தொலைக்காட்சி மூலம் பாப்பை தவிர வேறு எவரையும் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்பது வருந்தத்தக்கது!

    Classic Comic Strips

    வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    இப்போதைக்கு அவ்வளோதான்,
    மீண்டும் சந்திப்போம்!

    Sunday, May 1, 2011

    முகமூடி வேதாளன்!

    வணக்கம்,

    கடந்த ஏப்ரல் 28, 2011 அன்று உலகின் தலைசிறந்த செய்தித்தாள் சாகஸ சித்திரக்கதை தொடர்களாகிய வேதாளர் (THE PHANTOM) மற்றும் மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் ஆகிய கதைத் தொடர்களை உருவாக்கிய அமரர் லீ ஃபாக்கின் 100வது பிறந்த நாளாகும்!  

    மேலும் 2011ல் வேதாளர் கதைத்தொடர் தொடங்கி 75 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது!

    இத்தருணத்தில் நமது அ.கொ.தீ.க. வலைப்பூவின் 50வது பதிவை வெளியிடுவது சிறப்பாக இருக்கும் எனக் கருதி லீ ஃபாக்கின் நினைவுகளுக்கும் அவர் படைத்துச் சென்றுள்ள அற்புதங்களின் உலகிற்கு நன்றி கூறும் விதமாகவும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்!

    இக்கதையில் கூட காட்டரசன் வேதாளர் ஒரு நாட்டின் ராணியைத் திருமணம் செய்வது போல் கதை அமைந்திருந்தாலும் நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த ராஜ வைபவத்திற்கும் அதற்கும் ஏதேனும் ஒற்றுமை இருந்தால் அது தற்செயலானதே! 

    மேலும் இன்று மே முதல் திங்கள்! உழைப்பாளர் தினம்! ஞாயிற்றுக் கிழமையில் வந்திருக்கும் மேலும் ஒரு அரசு விடுமுறை! மே தினமும் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பது கொடுமை!

    எனிவே…அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! தல ரசிகர்களுக்கு தல பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    ஒகே! மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்குப் போவோம்!

    புத்தக விவரங்கள்:

    கதை முகமூடி வேதாளன்
    இதழ் முத்து காமிக்ஸ் (மாத இதழ்)
    வெளியீடு # 58
    முதல் பதிப்பு ஜனவரி 1, 1977
    மறுபதிப்புகள் இதுவரை இல்லை
    பதிப்பகம் MUTHU COMICS
    ஆசிரியர் M.சவுந்திரபாண்டியன்
    அச்சிட்டோர் SEKAR OFFSET PRESS, SIVAKASI
    நாயகர்(கள்) முகமூடி வேதாளன்
    மூலம் THE PHANTOM - SUNDAY STRIP # 064 - THE FOUNDING OF THE JUNGLE PATROL
    தேதி

    5 Jul 1964 - 24 Jan 1965 (30 Weeks)

    வெளியிட்டோர் KING FEATURES SYNDICATE
    கதை LEE FALK
    ஓவியம் SY BARRY
    தமிழில் M.சவுந்திரபாண்டியன்
    பக்கங்கள் 68 (இரு வண்ணங்களில்)
    சைஸ் 16cm X 20cm
    விலை ரூ:1/- (1977 முதல் பதிப்பின் போது)

    விளம்பரம்:

    இவ்விதழ் புத்தாண்டு மலர் என விளம்பரப்படுத்தப்பட்டது! முந்தைய வெளியீடுகள் மட்டுமின்றி 1977 ஜனவரி மாத கோகுலம் இதழிலும் விளம்பரம் வெளிவந்தது! இந்த கோகுலம் விளம்பரங்கள் அந்தக் காலத்தில் ரொம்ப பிரபலம்!

    Muthu Comics # 057 - Next Issue - AdGokulam (02-01-1977) - Vintage Muthu Comics Ad

    அட்டைப்படம்:

    கண்கவரும் அட்டைப்படம்! வேதாளரின் அசத்தல் ஆக்‌ஷனுடன்!  கண்டுகளியுங்கள்! அந்த காலத்தில் கடைகளில் பார்த்தவுடனேயே வாங்கிப் படிக்கத் தூண்டியிருக்க வேண்டும்!

    பிற அட்டைப்படங்கள் இதன் மூலத்தை உணர்த்தவே! இக்கதைக்கும் அவைக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை!

    முதல் பக்கம்:

    Muthu Comics # 058 - Mugamoodi VedhalanThe Phantom - S064 - The Founding of The Jungle Patrol 

    The Phantom Annual 1967பிற துணுக்குகள்:

    இனி வரும் துணுக்குகள் சில THE PHANTOM ANNUAL 1967 என்ற புத்தகத்திலிருந்து வந்தவையே!

    ஓவ்வொரு துணுக்குடனும் அதற்கான ஆங்கில மூலத்தையும் உடன் வழங்கியுள்ளேன்!

    கண்டு களியுங்கள்!

    இந்த புத்தகத்தை தரவிறக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

    உபயம்: http://bookscomics.blogspot.com/

    SPLASH PAGE:

    Muthu Comics # 058 - Splash PageThe Phantom Annual 1967 - Splash Page

    ரிப்லியின் விந்தை உலகம்:

    அந்தக் கால முத்து காமிக்ஸ்களின் உள்ளட்டைகளில் வழக்கமாக இடம் பெற்றிருக்கும் துணுக்குதான் ரிப்லியின் விந்தை உலகம்! இதிலும் அப்படியே!

    Muthu Comics # 058 - Ripley's Believe It or Not!

    இது குறித்த முழு நீளப் பதிவொன்று நெடுநாளாக கிடப்பில் கிடக்கின்றது! அதற்கு எப்போது விடிவு காலம் வரப்போகிறதோ தெரியவில்லை!

    சுட்டிப்பயல்:

    சுட்டிப்பயல் ஹென்றியின் நகைச்சுவைத் துணுக்குகள் இவ்விதழில் வந்துள்ளது! படித்து மகிழுங்கள்!

    இவன் செய்யும் சேட்டைகளுக்குப் பெயர் தான் ஊமைக் குசும்போ?!! என்றேனும் ஒரு நாள் இந்த மொட்டைப் பயலின் சாகஸங்களைப் பட்டியலிட வேண்டும் என்று ஆவல்! நடக்குமா?!! 

    Muthu Comics # 058 - Henry - 4Muthu Comics # 058 - Henry - 1Muthu Comics # 058 - Henry - 2Muthu Comics # 058 - Henry - 3

    KING FEATURES SYNDICATE இடம் காமிக்ஸ் தொடர்களுக்கு உரிமைகள் வாங்கும் போது அக்காலத்தில் இது போன்ற துணுக்குகளையும் சேர்த்து வாங்கியிருக்கலாம்! அல்லது ஒரு வேளை இவற்றைக் கொசுறாகவும் கொடுத்திருக்கலாம்! ஆனால் அவ்வாறு நடைபெற்றிருக்கும் வாய்ப்புகள் அரிதே!

    விளம்பரங்கள்:

    வேதாளர் வந்த பிறகு மாண்ட்ரேக் மட்டும் சும்மா இருப்பாரா?!! அவரும் விரைவில் முத்து காமிக்ஸ்-ல் வரப்போகும் விளம்பரம்! கூடவே சிஸ்கோ கிட்டும், ரிப் கிர்பியும்! கண்டு களியுங்கள்!

    Muthu Comics # 058 - Coming Soon - AdMuthu Comics # 058 - Coming Soon - AdMuthu Comics # 058 - Next Issue - Ad

    வேதாளரின் அடுத்த சாகஸமான ஜூம்போ விளம்பரமும் அதன் ஆங்கில மூலமும்!

    Muthu Comics # 058 - Coming Soon - AdThe Phantom Annual 1967 - Phantom's World

    CREDITS:

    Muthu Comics # 058 - Credits Credits

    புதிர் விளையாட்டு:

    Muthu Comics # 058 - PuzzleThe Phantom Annual 1967 - Ivory Smugglers

    இலவச இணைப்பு:

    முகமூடி வேதாளனின் கபாலக் குகை எனும் இலவச தாய விளையாட்டு இவ்விதழுடன் வழங்கப்பட்டது!

    Muthu Comics # 058 - Free GiftThe Phantom Annual 1967 - The Phantom's Cave

    ஒரிஜினலுக்கும் தமிழ் பதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணுங்கள்! தமிழில் வண்ணக் கலவை கண்ணைக் கவர்கிறதல்லவா?

    கதை:

    பங்கல்லா கானகப் பகுதியைக் காத்து வரும் வனக்காவல் படையை 300 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வேதாளர் உருவாக்கினார் என்பதே கதை! இடையில் ஒரு நாட்டின் ராணியையும் ரொமான்ஸ் செய்கிறார்!

    இந்தக் கதையை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை ஹீரோவாகப் போட்டு படமாக எடுத்திருந்தால் ஆயிரத்தில் ஒருவன் (1965) ரேஞ்சுக்கு இன்னொரு அமர்க்களமான திரைப்படம் நமக்குக் கிடைத்திருக்கும்! ஏனென்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்! 

    இக்கதையை 20ம் நூற்றாண்டைச் சேர்ந்த நமது வேதாளர் பழைய குறிப்புகளிலிருந்து குரன் மற்றும் ஏனைய பந்தர் குள்ளர்களுக்கும் படித்து காண்பிப்பது போல அமைக்கப் பட்டிருக்கும்!

    கடற்கொள்ளையர்களை அடியோடு ஒழிக்க சபதம் பூண்டிருக்கும் வேதாளர் பரம்பரையில் வந்தவர் நமது 17ம் நூற்றாண்டு வேதாளர்! கொள்ளையர்களின் தலைவனாகவும், கப்பல்களுக்கு சிம்மசொப்பனமாகவும் விளங்குகின்றான் செந்தாடி!

    Red Beard

    செந்தாடி

    தன்னை சண்டையில் வீழ்த்தும் ஒருவன் தான் அடுத்த தலைவனாக முடியும் என்று சவால் விடுக்கிறான் செந்தாடி! அந்தச் சவாலை ஏற்று கொள்ளையர்களின் தலைமையிடமான சன்லாய் துறைமுகத்திற்கு செல்ல தீர்மாணிக்கிறார் வேதாளர்! கதை ஆரம்பம் முதல் அனல் பறக்கும் அதிரடிதான்! கதையில் வேதாளரின் எண்ட்ரியே அமர்க்களமாக இருக்கும்!

    Phantom Intro

    சிங்கம் போல் கோட்டையினுள் நுழையும் வேதாளர் செந்தாடிக்கு சவால் விடுக்கிறார்! ஆனால் அவனுக்கு முன் அவனது தளபதிகளான கோடாரிச் சண்டையில் வல்லவனான BIG BART (தமிழில் கோடாரிக் கொம்பன்), கத்திச் சண்டை வீரன் SALLA (சல்லா) மற்றும் மாமிச மலை CRUSHER (தமிழில் கிங்காங்) ஆகியோர் வேதாளரை எதிர்கொள்கின்றனர்!

    வேதாளர் எல்லோரையும் தனது பாணியில் முறியடிக்கிறார்! இறுதியில் செந்தாடியுடனும் மோதுகிறார்! எம்.ஜி.ஆர். போல வேதாளர் கத்திச் சண்டை போடும் அழகைக் காணுங்கள்!

    Sword Fight With SallaDuel With Red Beard

    செந்தாடியுடன் மோதுகையில் சிறையில் இருக்கும் ஒரு அழகியைக் கண்டு வேதாளரின் கவனம் சிதறுகிறது! கண்டதும் காதலா?!!

    Love at First Sight

    கண்டதும் காதல்!

    ஆனால் மீண்டும் சுதாரித்துக் கொண்டு செந்தாடியை வீழ்த்துகிறார் வேதாளர்! அவனைக் கொல்லுமாறு வேதாளரிடம் அனைவரும் கூற வேதாளரோ அவனை மன்னிக்கிறார்! இது கண்டு கல்நெஞ்சம் கொண்ட கடற்கொள்ளையர் கண்களிலும் கண்ணீர் பெருகுகிறது!

    Sentiment

    செந்தாடி மற்றும் அவனது தளபதிகளை மன்னிக்கிறார் வேதாளர்! அவர்களும் தங்களது விசுவாசத்தை வேதாளருக்கு சமர்ப்பிக்கின்றனர்! அவர்களோடு நம்பிக்கைக்குரிய நூறு பேரோடு வனக்காவல் படையை துவங்குகிறார் வேதாளர்!

    Jungle Patrol

    இதற்கிடையில் வேதாளர் சிறையில் பார்த்து மனதைப் பறிகொடுத்த அழகி நவரே நாட்டின் ராணி நடாலியா என்று தெரியவருகிறது! கிடைத்த கேப்பில் அலேக்காக அவரை கபாலக் குகைக்கு உல்லாசப் பயணமாக அழைத்துச் செல்கிறார்! பின்னர் சகல ராஜ மரியாதைகளுடன் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புகிறார் வேதாளர், தன் காதலை வெளிப்படுத்தாமலே!

    இறுதியில் ராணியைக் கைப்பற்றினாரா வேதாளர்? வனக்காவல் படையை எவ்வாறு விரிவாக்கினார்? இது போன்ற கேள்விகளுக்கு கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்! பதிவில் கீழே ஆங்கில மூலத்திற்கான டவுன்லோடு லிங்கை அளித்துள்ளேன்! 

    இது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே வெளிவந்த தொடர்கதை என்பதால் நடுவில் இடைவெளிக்காக திடீர் திடீரென வேதாளர் கதையை நிறுத்தி விட்டு சாப்பிடவோ, குளிக்கவோ கிளம்பி விடுவார்! மீண்டும் அவர் கதை சொல்ல ஆரம்பிக்கும் வரை பந்தர் குள்ளர்களோடு சேர்ந்து நாமும் ஆவலுடன் காத்திருப்போம்!

    Break

    இது முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் கதை எனினும் கதையில் ஏகப்பட்ட ரொமாண்டிக் காட்சிகள் நிறைந்திருக்கும்! நீங்களே படித்து மகிழுங்கள்!

    Romance

    இதயம் முரளி ரேஞ்சுக்கு வேதாளர் உருகுகிறார்! அந்த காலத்திலேயே வேதாளர் சொல்லாமலேயே காதல் புரிந்திருக்கிறார்! கதையைப் படிக்கும் நாமும் கதையோடு ஒன்றிப் போவதால் கதை கேட்கும் பந்தர் குள்ளர்கள் போல கடுப்பாவது இயல்பே!

    காமிக்ஸ் குத்து:

    கதையில் கானகப் பழமொழிகள் ஏதும் இடம்பெறவில்லையென்றாலும் குத்து வசனங்களுக்கு பஞ்சமே இராது!

    செந்தாடியை வேதாளர் எதிர்கொண்டது முதலே செந்தாடி அவரை எருமை என்று ஏளனம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பொங்குகிறார் வேதாளர்! மேலும் சல்லாவுடன் கத்தி சண்டை இடும் போதும் வீர வசனம் பேசுகிறார் வேதாளர்!

    Phantom Punch - 1Phantom Punch - 2

    இவை அனைத்திற்கும் உச்சமாக செந்தாடியை வீழ்த்திய பின்னர் அவனைக் கொல்லாமல் மன்னித்து விட்டு விடுகிறார்! அப்போது அவர் பேசும் வசனம் தான் கடற்கொள்ளையர்களையும் கலங்கச் செய்கிறது!

    Phantom Punch - 3

    கதை முடிவில் 20ம் நூற்றாண்டு வேதாளர் கூறும் ஒரு வசனம்! கதையைப் படித்து முடித்த பின் நமக்கும் இது போல் உணர்வுகள் தோன்றுவதில் ஆச்சரியமில்லை!

    Endஎன்ன நண்பர்களே?!! ஆரம்பத்தில் நான் கூறியது போல் இது புரட்சித் தலைவருக்கு உகந்த கதைதானே?!! திரைப்படமாக வந்திருந்தால் நிச்சயம் வெள்ளி விழா கண்டிருக்கும்தானே?!!

    Muthu Comics # 060 - Announcementசுவாரசியமான தகவல்கள்:

    • 1977-ல் முத்து காமிக்ஸ்-ல் முதன்முறையாகப் புத்தாண்டு மலர் வெளியிடப்பட்டது! முத்து காமிக்ஸ் # 058 – முகமூடி வேதாளன்அட்டகாசமான சைஸில் இரு வண்ணங்களில் ஜனவரி 1977-ல் வெளிவந்தது!
    • வேதாளர் முத்து காமிக்ஸ்-ல் அறிமுகமானது இந்தக் கதை மூலம்தான்!
    • இவ்விதழுடன் புத்தாண்டு பரிசாக இலவச தாய விளையாட்டு வழங்கப் பட்டது!
    • ஆரம்பத்தில் பெரிய சைஸில் வந்து கொண்டிருந்த முத்து காமிக்ஸ் நடுவில் பாக்கெட் சைஸுக்கு மாறியது! பின்னர் மீண்டும் பெரிய சைஸுக்கு இக்கதை மூலம் வந்தது! இவ்விதழின் வெற்றியைத் தொடர்ந்து இரு வண்ணங்களில் பெரிய சைஸில் தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் வெளிவந்தது!
    • ஏற்கெனவே இந்திரஜால் காமிக்ஸ் மூலம் வேதாளர் என்றும், குமுதம் வார இதழ் மூலம் முகமூடி என்றும் தமிழ் வாசகர்களுக்கு வேதாளர் அறிமுகமாகியிருந்தார்! இதனாலேயே முத்து காமிக்ஸ்-ல் முகமூடி வேதாளன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம்!
    • கதையிலும் கூட PHANTOM என்பதற்கு தமிழ்ப்பதமாக குமுதம் பாணியில் முகமூடி என்றும், THE GHOST WHO WALKS என்பதற்கு இந்திரஜால் பாணியில் வேதாளர் (பந்தர் குள்ளர்கள் வழக்கம்) என்றும் குறிப்பிட்டிருப்பர்! பிற்காலத்தில் முகமூடி என்ற சொற்பதம் விடப்பட்டு வேதாளர் என்றே அழைக்கப்பட்டார்!  
    • குமுதத்தில் இக்கதை வந்ததாகத் தெரியவில்லை! இந்திரஜாலிலும், ராணியிலும் தமிழ் மொழிபெயர்ப்பு சகிக்கவில்லை! ஆகையால் முத்து காமிக்ஸ்-ல் வந்ததே சிறந்த மொழிபெயர்ப்பு என்று ஆணித்தரமாகக் கூறலாம்!

    கதாசிரியர்கள்:

    மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

    Lee Falk Sy Barry
    கதாசிரியர் லீ ஃபாக் ஓவியர் சை பேரி

    பிற பதிப்புகள்:

    இந்தியாவில் இக்கதையின் பிற பதிப்புகள் இதோ! இன்னும் இக்கதை செய்தித்தாள்களிலும், பத்திரிக்கைகளிலும் தொடராக பதிப்பிக்கப் பட்டிருக்கலாம்! இப்போதைக்கு மேலும் தகவல்கள் ஏதும் இல்லை!

    • INDRAJAL COMICS # 026 - THE JUNGLE PATROL (APRIL 1966) - ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளிலும்!
    • ராணி காமிக்ஸ் # 186 - வெள்ளை இளவரசி (16 MARCH 1992)
    • DIAMOND COMICS DIGEST # 058 – PHANTOM # 011 – ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்!
    • DIAMOND COMICS DIGEST # 164 – PHANTOM # 073 (REPRINT) – ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்!

     Indrajal Comics # 026 - The Jungle PatrolRani Comics # 186 - Vellai IlavarasiDiamond Comics Digest # 058 - Phantom # 011Diamond Comics Digest # 164 - Phantom # 073

    இந்திரஜால் காமிக்ஸின் தமிழ் பதிப்பு என்னிடம் இல்லை! ஆகையால் அட்டைப்படம் வெளியிட முடியவில்லை! மன்னிக்கவும்!

    ஆங்கிலம்/ஹிந்தி இதழ்களை தரவிறக்க கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

    ஆங்கில மூலம்:

    இக்கதையை ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

    உபயம்: http://bookscomics.blogspot.com/

    நிறைகள்:

    • அற்புதமான கதையம்சம்! அருமையான ஓவியங்கள்! சூப்பர் சைஸ்! பளிச் வெள்ளைக் காகிதத்தில் தெளிவான இரு வண்ண அச்சு! சிறந்த மொழிபெயர்ப்பு! அசத்தல் அட்டைப்படம்! நிறைவான துணுக்குகள்! இன்ப அதிர்ச்சியாக இலவச இணைப்பு! ஆவல் தூண்டும் விளம்பரங்கள்! என அனைத்து வகையிலும் நம் ஆவல்களைப் பூர்த்தி செய்கிறது இந்த இதழ்!

    குறைகள்:

    • முழு வண்ணத்தில் வராதது மட்டுமே!

    நன்றிகள்:

    • ஆசிரியர் லீ ஃபாக் மற்றும் ஓவியர் சை பேரிக்கு! இந்த அற்புதக் கதையை உலகிற்கு வழங்கியதற்கு!
    • ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களுக்கு – முத்து காமிக்ஸ்-ல் இக்கதைத் தொடரை அறிமுகம் செய்தமைக்கு!

    வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

    இப்போதைக்கு அவ்வளோதான்,
    மீண்டும் சந்திப்போம்!

    Splash