Friday, January 16, 2009

பொங்கல் சிறப்புப் பதிவு!

"பொங்கலோ பொங்கல்! மாட்டுக்குப் பொங்கல்!
இன்னிக்கு சேட்டுக்குப் பொங்கல்!"

-கவுண்டமணி (படம்-ஜெண்டில்மேன்)

வணக்கம்,

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு தமிழ்/ஆங்கிலப் புத்தாண்டு, தமிழர் திருநாள், தைத் திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம், தைப் பொங்கல், காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் என அனைத்து நன்னாட்களும் இனியதாக அமைய அடியேனின் வாழ்த்துக்கள்! மாவீரன் மாண்டிஜூமாவைப் போல் ‘மஞ்சு விரட்டு’-ம் (யார் அந்த மஞ்சு?) மறத்தமிழர்கள் அனைவரும் வெற்றி மாலை சூட மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சென்ற பதிவான நடுநிசிக் கள்வன்-க்கு நீங்கள் அனைவரும் அளித்த உற்சாகமான வரவேற்புக்கு நன்றி! உங்கள் பாராட்டுக்களைத் தக்கவைத்துக் கொள்ள என்னால் இயன்றமட்டும் உழைப்பேன்(?!!) என்று இந்தப் புத்தாண்டில் உறுதிமொழி கூறுகிறேன்!

‘வெகுமதி’ போட்டிக்கு விரைந்து விடையளித்த நண்பர் ‘காமிக்ஸ் பிரியன்’ க.கொ.க.கூ.-வுக்கு வாழ்த்துக்கள்! இருப்பினும் அவர் ‘கொலைக்கரம்’ வில்லன் ‘மைக்கேல்’-ன் பெயரைக் கூறவில்லை என்பதால் பாராட்டுக்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இது ஒரு பொங்கல் சிறப்புப் பதிவு என்பதாலும் மொக்கை கொஞ்சம் ஓவராக இருப்பதாலும் இப்பதிவை இரு பாகங்களாகப் பிரித்துள்ளேன்! இப்பதிவை கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்புத் திரைப்படமான வீரத்தளபதி ஜே.கே.ஆர்.-ன் ‘நாயகன்’-ஐக் கண்டுகளித்தபின் அதன் பாதிப்பிலிருந்து விலகாமல் எழுதுவதால் நிறையோ, குறையோ எதுவாயினும் அது ‘வீரத் தளபதி’யையேச் சாரும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் சங்க மாநாடு!

சமீபத்தில் (சனிக்கிழமை, ஜனவரி 10) சென்னையில் மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் சங்க மாநாடு இனிதே நடைபெற்றது. சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த போது சக காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் சிலரை ஒரே கூரையின் கீழ் (உண்மையிலேயே) சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நண்பர் கிங் விஸ்வா வெளியிட்டிருந்த புத்தகக் கண்காட்சிப் புகைப்படங்கள் அனைவரது ஆர்வத்தையும் தூண்டிவிட, தற்செயலாக அனைவரும் ஒரே புத்தகக் கடையினுள் (கடை எண் : 35 - இன்ஃபோ மேப்ஸ்) காமிக்ஸ் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

கருத்துப் பரிமாற்றங்களும், சூடான விவாதங்களும் நடைபெற்றன என்று நான் இங்கு பொய் சொல்லப் போவதில்லை. நேரில் சந்தித்துக் கொண்டதில்லையே தவிர ஏற்கெனவே அனைவரும் தொலைபேசி மூலம் அறிமுகமாகியிருந்ததால் ஆளாளுக்கு கையில் கிடைப்பதை முந்திக் கொண்டு அள்ளுவதிலே மும்முரமாக இருந்துவிட்டோம். சந்திப்பின் நினைவாக சிலபல அரிய புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. அவையெல்லாம் அ.கொ.தீ.க.வின் ரகசியப் பாசறையில் பத்திரமாகப் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன. பொது மக்கள் பார்வைக்குச் சென்றால் எவ்வித நாசவிளைவுகள் ஏற்படக்கூடும் என்று யாராலும் கணிக்க முடியாத காரணத்தால் அவற்றை பரம ரகசியமாக வைத்திருக்க அனைத்துத் தரப்பினராலும் ஒருமனதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

காமிக்ஸ் வேட்டையில் சிலபல அரிய பொக்கிஷங்களும் சிக்கின. அவற்றைப் பற்றி விரிவாகப் பின்வரும் பதிவுகளில் காணாலாம். விலை காரணமாக சிலவற்றை ‘ச்சீ! ச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!’ என ஒதுக்கி விடவேண்டியதாயிற்று (உதாரணம் - BONE). புத்தகக் கண்காட்சி பற்றி புகைப்படங்களுடன் நண்பர் கிங் விஸ்வா இட்டுள்ளப் பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும். பின்னூட்டங்களையும் தவறாது படிக்கவும்.

மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டோர் விவரம்:

 1. வேண்டப்பட்ட விரோதி திரு.கிங் விஸ்வா அவர்கள் - தமிழ் காமிக்ஸ் உலகம்
 2. சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி திரு.அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்கள் - காமிக்ஸ் பூக்கள்
 3. தமிழிலும் ஆங்கிலத்திலும் காமிக்ஸ் வலையுலகில் கரைகண்ட கரிகாற்சோ(தோ)ழர் திரு.ரஃபிக் ராஜா அவர்கள் - காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
 4. வேதாள நகரம் தந்த வியாபார வேங்கை திரு.பங்கு வேட்டையர் (SHAREHUNTER) அவர்கள்
 5. இவர்களுடன், அடியேன் பயங்கரவாதி டாக்டர் செவன் - தலைவர், அ.கொ.தீ.க.

வரத்தவறியோர்:

 1. தமிழ் காமிக்ஸ் வலையுலகப் பிதாமகர் திரு.முத்துவிசிறி அவர்கள் - உலகம் சுற்றும் வாலிபன் போல் இவர் கண்டம் விட்டுக் கண்டம் தாவிக் கொண்டே இருந்ததனால் இவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
 2. அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் திரு.கனவுகளின் காதலன் அவர்கள் - இவர் ‘ஜெனீலியா’வுடன் ஜல்சா புரிவதிலும், அதன் காரணமாகத் தனது துனைவியார் திருமதி.நவஜோ மதகுருவிடம் பூரிக்கட்டையில் அடிவாங்குவதிலுமே பிஸியாக இருந்ததனால் கலந்துகொள்ளவில்லை.
 3. ஒலக காமிக்ஸ் ரசிகர் - மொக்கை காமிக்ஸ் (எ) GREATEST EVER COMICS - பயணக் களைப்பைக் காரணம் காட்டி வரத்தவறியதோடு மட்டுமல்லாது அழைக்கப்படவில்லை என்று அவதூறு வேறு கிளப்பிக்கொண்டிருக்கும் இவரை இச்சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!
 4. காமிக்ஸ் பிரியர் - க.கொ.க.கூ. - இவரு யாருன்னே தெரியல! அதனால அழைக்கக்கூட வழியில்ல!

சிறப்பு விருந்தினர்கள்:

 1. லக்கிலுக்
 2. தமிழ்குட்டி

‘டேய்! அடப் பாவிகளா! அஞ்சு பேரு கூடி நின்னு மொக்கை போட்டுட்டு, அதென்னங்கடா அது, மாபெரும் தமிழ் காமிக்ஸ் வலைப்பதிவர் சங்க மாநாடு?’ எனக் கேட்போருக்கு நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன்! நானும் நண்பர் கிங் விஸ்வாவும் ஃபோனில் பேசிக்கொண்டாலே அதுதான் பொதுக்குழு கூட்டம்! கூட ‘கான்ஃபரன்ஸ்’-ல் நண்பர்கள் அய்யம்பாளையத்தார், பங்கு வேட்டையர், ரஃபிக் ராஜா, கனவுகளின் காதலன், முத்து விசிறி, ஒலக காமிக்ஸ் ரசிகர் என இவர்களில் யாரேனும் ஒருவர் இருந்தாலுமே அது பேரணி! அப்போ அஞ்சு பேர் ஒரே இடத்துல கூடுனா அது மாநாடுதானே?

இது ஒரு சிறந்த மொக்கைப் பதிவாக மாறிக் கொண்டிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொண்டு இந்தத் தலைப்பிலிருந்து விலகி அடுத்த தலைப்புக்குச் செல்வோம்.

பொங்கல் மல(ர்)ரும் நினைவுகள்!

சமீபத்தில் நண்பர் ‘கனவுகளின் காதலன்’ இட்டிருந்த தமிழ் காமிக்ஸ் வலையுலகின் முதல் மங்கா பற்றிய பதிவில் இந்தப் பொங்கலுக்கேனும் பொங்கல் மலர் வருமா என வினவியிருந்தார். அதன் விளைவாகவே இந்தப் பதிவு.

பொங்கலுக்கும் தமிழ் காமிக்ஸிற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. இந்தத் தைத்திருத் திங்களில் தான் தமிழ் காமிக்ஸ் உலகம் மூன்று/நான்கு புதுவரவுகளைச் சந்தித்துள்ளது. 1972-ல் முத்து, 1986-ல் திகில், 1987-ல் மினி & ஜூனியர் லயன் எனப் பொங்கலன்று நமது வாழ்வில் மேலும் மகிழ்ச்சி பொங்க வைத்த வெளியீடுகள் அவை. இவற்றில் திகில், மினி & ஜூனியர் லயன் ஊத்திமூடப் பட்டுவிட்டாலும் முத்து மட்டும் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

திகில்#001 மினி லயன்#001 - துப்பாக்கி முனையில் முத்து#001 – இரும்புக்கை மாயாவி ஜூனியர் லயன#001 - சூப்பர் சர்க்கஸ்

இது மட்டுமல்லாது ‘முத்து’வில் முன்னொரு காலத்தில் புத்தாண்டு/பொங்கல் சிறப்பு மலர்கள் வெளிவரும். காலண்டர் போன்ற இலவச இனைப்புகளும் வழங்கப்பட்டது. பின்னர் முத்து மாதமிருமுறை வெளிவந்த போது புத்தாண்டு மற்றும் பொங்கல் மலர்கள் தனித்தனியாக ஆண்டு தோறும் வெளிவந்தன. லயனிலும் சில பொங்கல் மலர்கள் வெளிவந்தன. சில அட்டைப்படங்களை மட்டும் வெளியிட்டுள்ளேன். பார்த்துப் பரவசமடையுங்கள்!

முத்து#010 – நடுநிசிக் கள்வன் முத்து#022 - இயந்திரத்தலை மனிதர்கள் முத்து#046 - வைரஸ்-X முத்து#058 - முகமூடி வேதாளன் முத்து#086 - சூனியக்காரியின் சாம்ராஜ்யம் copy முத்து#132 - தவளை மனிதர்கள் முத்து#181 - கண்ணீர்த் தீவில் மாயாவி

இப்போதெல்லாம் காமிக்ஸ் வந்தாலே நமக்கெல்லாம் பொங்கலும், தீபாவளியும் ஒருசேர வந்ததைப்போல் இருக்கிறது. இந்நிலை மாற எல்லாம் வல்ல ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் மனசு வைத்தால் மட்டுமே முடியும். லயனுக்கு மட்டும் ஆண்டு மலர் வருடம் தவறாது (அது கூட சந்தேகம்தான்) வெளியிடும் அவர் முத்துவில் பல வருடங்களாக சிறப்பு வெளியீடுகள் எதையுமே வெளியிடவில்லை. பொங்கல் சிறப்பு வெளியீடு இடுவதால் ஆண்டு/பொங்கல் மலர் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கலாமே! நடக்குமா?!!

லயன்#013 - கொலைப் படை லயன்#013 - மர்மத் தீவு லயன்#021 - மனித எரிமலை லயன்#033 - பழி வாங்கும் பாவை

ராணியில் வெளிவந்த பொங்கல் மலர்கள் மொத்தம் ஐந்து. அவற்றில் திரு.ராமஜெயம் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றியப் பொற்காலமாகிய நான்காண்டு காலத்தில் வருடந்தோரும் பொங்கல் மலர்கள் வந்தன. வழக்கமாக ஜனவரி 16-31 என்று தேடியிடப்பட்ட இதழ்கள் ‘பொங்கல் மலர்’ என வெளிவரும். ஆனால் ராணி உச்சத்திலிருந்த போது பொங்கலுக்கு இரு நாட்கள் முன்பே நமது கைகளில் புத்தகங்கள் இருக்கும். அதுமட்டுமின்றி தமிழர் திருநாளான பொங்கல் மலரில் ‘இன்ஸ்பெக்டர் ஆசாத்’, ‘இன்ஸ்பெக்டர் கருடா’ போன்ற இந்திய கதாநாயகர்களே இடம்பிடித்திருப்பர். பொங்கலுக்கு அடுத்த இதழான ஃபிப்ரவரி 1-15 காமிக்ஸில் ஜேம்ஸ் பாண்ட் இடம்பிடித்திருப்பார். ஒரு வேளை ‘காதலர் தினம்’ சிறப்பிதழில் ‘காதல் மன்னன்’ 007 சாகஸம் புரிவதே சிறப்பு என திரு.ராமஜெயம் கருதியிருக்கலாம்.

Kollai Koottam Issue No 38, Jan 16 1986 Marana Dhandanai Issue No 62, Jan 16 1987 Poonai Kan Manithan Issue No 109, Jan 1 1989 Puthaandu Virundhu Issue No 86, Jan 16 1988 Visithira Vimanam Issue No 14, Jan 16 1985

அவருக்குப்பின் திரு.அ.ம.சாமியால் ஒரேயொரு பொங்கல் மலர்தான் வெளியிடப்பட்டது. அதுவும் திரு.ராமஜெயம் அவர்கள் முன்கூட்டியே வெளியிடத் திட்டமிட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த இதழ் (பூனைக்கண் மனிதன்) ஜனவரி 1-16-ம் தேதியில் வழக்கம் மாறி வெளிவந்தது. ஆறாவது ஆண்டிலிருந்து ஜனவரி இதழ்களில் பொங்கல் மலர் என்று குறிப்பிடப் பட்டிருக்காது.

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். ராணி காமிக்ஸ் பற்றிய சுவையான தகவல்கள் அளித்த நண்பர் ‘கிங் விஸ்வா’வுக்கு நன்றி.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:

 • ராணி காமிக்ஸ் ரசிகர்கள் பலர் நமது வலைப்பூக்களைத் தொடர்ந்து படித்து வருவது தெரிந்த விஷயமே. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தொடர்ந்து ராணி காமிக்ஸ் பற்றிப் பதிவிடுமாறு என்னை தயவுசெய்து வற்புறுத்தாதீர்கள். தமிழ் காமிக்ஸில் வெளிவந்த பொங்கல் மலர்கள் பற்றிய பதிவை பூர்த்தி செய்வதற்காகவே ராணி பொங்கல் மலர்களைப் பற்றி எழுதியுள்ளேன். ராணி மீது எனக்கு அவ்வளவாக நாட்டமில்லை என்பதோடு, ராணி காமிக்ஸ்-க்கென்று நண்பர் ரஃபிக் ராஜா பிரத்யேகமாக வலைப்பூ ஒன்றை வேறு ஆரம்பித்திருக்கிறார் என்பதால் ராணியிலிருந்து நான் விலகியே நிற்கப் போகிறேன். ராணி பொங்கல் மலர்களைப் பற்றி நண்பர் ‘ரஃபிக்’ விரைவில் தனது வலைப்பூவில் பதிவிடுவார் என எதிர் பார்க்கிறேன். காமிக்கியல்-லிலும் அவர் தொடர்ந்து பின்னிக் கொண்டிருக்கிறார்.
 • க.கொ.க.கூ. ‘டேஞ்சர் டயபாலிக்’ பற்றி சிறப்பு பதிவொன்று இட்டுள்ளார்.
 • கனவுகளின் காதலன் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் முதன்முறையாக மங்கா பற்றிய பதிவிட்டுள்ளார். படித்து மகிழுங்கள்.
 • கிங் விஸ்வா வழக்கம் போல செய்திதாள்களிலிருந்து பதிவுகளை சுட்டுப் போட்டு தான் ஒரு சிறந்த ‘பலாப்பழ சோம்பேறி’ என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தகவல்களை முந்தித் தருவது தமிழ் காமிக்ஸ் உலகம்  தான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார். யோவ்! சீக்கிரமா ஏதாவது காமிக்ஸ் பதிவு போடுமய்யா!
 • ப்ரூனோ ப்ரேசில் லயன் காமிக்ஸ் அடிக்கடி வராததாலும், லயன் ஆசிரியர் வாசகர் கடிதங்கள் படிக்கிறாரா/பிரசுரிக்கிறாரா என்று சந்தேகம் எழுவதாலும் தொடர்ந்து தனது கருத்துககளை தனது முதலைப் பட்டாளம் வலைப்பூவில் இட்டுக்கொண்டிருக்கிறார். ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் கவனிக்க!
 • செந்தழல் ரவி புத்தகக் கண்காட்சி பற்றி பதிவிட்டுள்ளார். ரொம்ப நாளாகத் துயில்கொண்டிருந்த தமிழ் காமிக் வலைப்பூ மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது!
 • முத்து விசிறி, அய்யம்பாளையத்தார், பங்கு வேட்டையர், ஒலக காமிக்ஸ் ரசிகர், சித்திரக்கதை இவர்களையெல்லம் கொஞ்ச நாளாய் ஆட்களையே காணோம். வேதாள நகரம் தூங்குவதால் கொஞ்சம் நிம்மதியாக உள்ளது! 

தொடர்புடைய இடுகைகள்:

'முத்து'வின் முதல் இதழ் - 'இரும்புக்கை மாயாவி':

‘மினி லயன்’-ன் முதல் இதழ் - ‘சூப்பர் சர்க்கஸ்’:

‘வைரஸ்-X’ பற்றி ‘முத்து விசிறி’-யின் பதிவு:

‘நடுநிசிக் கள்வன்’ பற்றிய பதிவு:

‘டெக்ஸ் வில்லர்’ ப்ற்றி ‘முத்து விசிறி’யின் பதிவு:

‘சென்னை புத்தகக் கண்காட்சி – 2009’ பற்றிய இடுகைகள்:

22 comments:

 1. காமிக்ஸ் டாக்டரே,

  அட்டகாசமான நினைவுகளை தூண்டி விட்டது உங்களின் இந்த பதிவு. அதுவும் இந்த சிறப்பான அட்டை படங்களை பார்க்கும் போது உங்கள் வீட்டுக்கு வந்து கொள்ளை அடிக்கு திட்டம் வலு பெறுகிறது. ஜாக்கிரதை.

  //மஞ்சு விரட்டு’-ம் (யார் அந்த மஞ்சு?)// நம்ம அஞ்சு'வோட அக்கா தான் இந்த மஞ்சு.

  //இப்பதிவை கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்புத் திரைப்படமான வீரத்தளபதி ஜே.கே.ஆர்.-ன் ‘நாயகன்’-ஐக் கண்டுகளித்தபின் அதன் பாதிப்பிலிருந்து விலகாமல் எழுதுவதால் நிறையோ, குறையோ எதுவாயினும் அது ‘வீரத் தளபதி’யையேச் சாரும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்// வீரத்தளபதி ஜே.கே.ஆர். அகில உலக தலைமை ரசிகர் மன்ற தலைவர் டாக்டர் சதீஷ் வாழ்க.

  //பொங்கலுக்கும் தமிழ் காமிக்ஸிற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு// பொங்கலுக்கும் உங்களுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு என்பது எங்களுக்கு தெரியும் அய்யா.

  //ஒரு வேளை ‘காதலர் தினம்’ சிறப்பிதழில் ‘காதல் மன்னன்’ 007 சாகஸம் புரிவதே சிறப்பு என திரு.ராமஜெயம் கருதியிருக்கலாம்/ அட, அட என்ன கண்டுபிடிப்பு.

  //கிங் விஸ்வா வழக்கம் போல செய்திதாள்களிலிருந்து பதிவுகளை சுட்டுப் போட்டு தான் ஒரு சிறந்த ‘பலாப்பழ சோம்பேறி’ என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தகவல்களை முந்தித் தருவது தமிழ் காமிக்ஸ் உலகம் தான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார். யோவ்! சீக்கிரமா ஏதாவது காமிக்ஸ் பதிவு போடுமய்யா!// இரண்டு நாட்களாக பொங்கல் சாப்பிட்டு விட்டு, பதிவு போடாமல் பொங்கல் பதிவையே கால தாமதமாக போடும் நீங்கள் என்னை சோம்பேறி என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது. என்ன செய்வது? விதி வலியது மட்டுமல்ல, விதி கொடியதும் கூட என்பதி நான் நன்கு உணர்ந்து கொண்டேன். நன்றி.

  //ரொம்ப நாளாகத் துயில்கொண்டிருந்த ஒரிஜினல் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூ மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது// இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நான் தான் உண்மையான தமிழ் காமிக்ஸ் உலகம் என்பது என்னுடைய வலைப் பூவின் முகவரியை பார்த்தாலே தெரியும். அந்த வலைப் பூவின் முகவரி வெறும் தமிழ் காமிக் மட்டும் தான் என்பதை நான் இங்கு தெரிவிக்க கடமை பட்டு உள்ளேன்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 2. காமிக்ஸ் டாக்டரே, காமிக்ஸ் உலகின் சித்தரே, கலை உலகின் புத்தரே,

  இந்த ஆண்டில் முதல் பதிவை போடும் நீங்கள் என்னுடைய பள்ளி கால நாட்களை நினைவு படுத்தி விட்டீர்கள். அதற்க்கு என்னுடைய முதல் நன்றி.

  அட்டை படங்கள் எல்லாம் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பதை காணும் போது கிங் விஸ்வா'வின் கொள்ளை அடிக்கும் திட்டம் தவறு இல்லையோ என்றே தோன்றுகிறது. பூட்டி வையுங்கள்.

  ஆனால், இந்த வலைப்பதிவர் சந்திப்பில் என்னையும் அழைத்து இருந்தால் நானும் வந்து இருப்பேன். என்ன செய்வது? இது திட்டமிட்ட ஒரு சந்திப்பு இல்லை என்று கிங் விஸ்வா தீபம் ஏற்றி (தீபா அல்ல) சத்தியம் செய்கிறார். என்ன செய்வது? அவர் நீண்ட நாள் நண்பர் என்பதால் நம்ப வேண்டி இருக்கிறது.

  தொடர்ந்து இது போன்ற பதிவுகளை இடுங்கள். வாழ்த்துக்கள்.

  செழியன்.

  ReplyDelete
 3. டாக்டர் செவன் அவர்களுக்கு,

  தமிழ்காமிக்ஸ் உலகம் என்ற வலை ரோஜாவை (எவ்ளோ நாளைக்குதான் பூ-அப்டின்னு சொல்றது) வைத்திருக்கும் தோழர் விஸ்வாவை பற்றி நீங்கள் சோம்பேறி என கூறியிருப்பது மனதை வருத்தமுற செய்கிறது.

  தோழர் விஸ்வா கூட பழகியும் அவரைப் பற்றி நிறைய தகவல்கள் உங்களுக்கு சரிவர தெரியவில்லை என நினைக்கிறேன்.

  தோழர் விஸ்வாவிற்கு அந்த வலைரோஜாவை மட்டும் கட்டிக்காப்பது மட்டுமே பொறுப்பு இல்லை. வேறு சில பொறுப்புகளும் உள்ளன.

  அகில இந்திய வினீத் இரசிகர் மன்ற பொறுப்பாளர் அவர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்த படம் வெளியானபோது அவர் கிராமத்தில் சூப்பர் ஸ்டார் பட முதல்காட்சி போன்று பில்ட்அப் கொடுத்தார் என்பது தெரியுமா?

  அவர் வசிக்கும் குக்கிராமத்தில் ஆங்கில தினசரிகளை பார்க்க வேண்டுமென்றாலே புகைவண்டி பிடித்து பட்டணத்திற்கு வரவேண்டிய அவசியத்தில் இருக்கும் அவர் தொடர்ந்து காமிக்ஸ் பற்றிய பதிவுகளை போடுகிறார் என்றார் அவரின் கடமையுணர்வை நீங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை?

  மேலும் அவரை நாடி நாள்தோறும் பல பொறுப்புகள் வந்தவண்ணம் உள்ளன. வீரத்தளபதி ஜேகேஆர் இரசிகர் மன்றத்திலிருந்து ஒரு முக்கிய பொறுப்பு தோழர் விஸ்வாவை தேடி வந்தது. அதை தோழர் ஒப்புக்கொள்கின்றாரா என்பதற்கு வரலாறுதான் பதில் சொல்ல வேண்டும்.

  எனவே, டாக்டர் செவன் அவர்களே, இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் வசிப்பதனால்தான் தாஜ்மகால் தமிழ்நாட்டில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 4. தலைவர் அவர்கட்கு,

  நீண்ட காலமாக ரகசியப் பாசறையில்
  பெருச்சாளிகளின் தொல்லை அதிகரித்திருப்பதாக நீங்கள் கண்ணீர் விட்டது எனக்கு மறக்கவில்லை, இவ் அட்டைப்படங்களை கண்டதும் உடனடியாக பெருச்சாளி வேட்டையில் என்னை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளேன்,கழக திறைசேரி பொறுப்பாளர் விஸ்வாவிடம் எனக்கு ஒர் டிக்கட் புக் பண்ண சொல்லுங்கள்[முகமூடி வேதாளன் அட்டை சிம்ப்லி சூப்பருங்கோ]

  //இவர் ‘ஜெனீலியா’வுடன் ஜல்சா புரிவதிலும், அதன் காரணமாகத் தனது துனைவியார் திருமதி.நவஜோ மதகுருவிடம் பூரிக்கட்டையில் அடிவாங்குவதிலுமே பிஸியாக இருந்ததனால் கலந்துகொள்ளவில்லை.// இப்போது இதற்கும் சேர்த்து வாங்க வேண்டும்,ஹாஸ்பிடலில் ஒர் ரூம் போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  தம்பி விஸ்வா கடந்த சில நாட்களாக வெளியிட்டு வந்த தினசரி ஏன் இப்போது வெளிவருவதில்லை.

  இந்தப்பதிவு தான் எனக்குப் பொங்கல் மலர்,மனதில் பழைய நினைவுகள் வந்து போகின்றன.விஸ்வாவின் பதுக்கிடத்தினை சூறையாடி, யார் இந்த மாயாவி அட்டையை போட்டிருப்பீர்களாயின் போக்கிரிப் பொங்கல் தான் தலைவரே.

  பதிவில் எனது பதிவைப்பற்றி சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள். தமிழில் வெளிவந்த மங்கா கதைகள் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
 5. காமிக்ஸ் டாக்டரே.... தமிழ் சித்திர கதை வலையுலகில் உங்களை விட சிறந்த பதிவாளர் யாரும் கிடையாது என்பதை மீண்டும் நிருபித்து விட்டீர்கள்.

  இந்த பொங்கல் திருநாளில் கிடைத்த மிக பெரிய பரிசாக இந்த பதிவை எண்ணுகிறேன். கண்களை பறிக்கும் அட்டை ஓவியங்கள், என்னை மலரும் நினைவுகளில் உலர செய்து விட்டது. இந்த புத்தங்கங்களை நான் அது வெளியான கட்டங்களில் பார்க்க வில்லை (சில சமயங்களில் நான் பிறக்கவே இல்லை :)) என்றாலும், அதற்க்கு பிறகு எண்ணற்ற முறை பழைய காமிக்ஸ் கடைகளில் பார்த்து பாக்கெட் பணம் பற்றா குறையினால், வாங்க முடியாமல் ஏங்கி உள்ளேன். இப்படி ஒரு காமிக்ஸ் பொக்கிசத்தை வைத்து கொண்டு, அதை இப்படி பிரபலமாகி கொண்டு இருகிறீர்கள். நானும் விஸ்வா வுட கூட்டணி அமைத்து உங்கள் தலைமையகத்தில் தேட்டை போட சீக்கிரம் ஒரு மாஸ்டர் பிளான் போட போகிறோம் :)

  // கரிகாற்சோ(தோ)ழர் //
  என்னமையா, என் கால்களை நீங்கள் எப்போது பார்த்தீர்கள் :)

  // அடியேன் பயங்கரவாதி டாக்டர் செவன் //
  நீர் அடியரா, தலைவரே தாங்கள் தானே :)

  // அஞ்சு பேர் ஒரே இடத்துல கூடுனா அது மாநாடுதானே? //
  சரியாக கூறினீர்கள்... இப்படி அனைவரும் ஒரு கூடாரத்தின் கீழ் சந்திக்கும் வாய்ப்பு திரும்ப கிடைக்குமா....

  // லயனுக்கு மட்டும் ஆண்டு மலர் வருடம் தவறாது //
  அது கூட தற்போது நிலவரம் படி 2 வருடம் தவறி விட்டது :(

  // ராணி காமிக்ஸ்-க்கென்று நண்பர் ரஃபிக் ராஜா பிரத்யேகமாக வலைப்பூ //
  ராணி காமிக்ஸ் வலைபூவுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள், நன்றி.

  //ரொம்ப நாளாகத் துயில்கொண்டிருந்த ஒரிஜினல் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூ மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது//
  உண்மை தான். முதன் முதலில் தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற பெயர் காரணியுடன் உருவான வலைபூ என்ற பெருமை அவர்களுக்கு மற்றும் உரித்தானது. நமது விஸ்வா அந்த பெயரை வைத்து முதலில் முகவரியை கையக படுத்தியது அதற்க்கு பின் தான்.

  மொத்தத்தில், காமிக்ஸ் பிதாமகர் திரு.விஜயன், வழக்கம் போல இந்த முறையும் பொங்கல் அன்று முத்து அல்லது லயன் காமிக்ஸ் வெளியிடாமல் ஏமாற்றி விட்டதை, தங்கள் பதிவின் மூலம் சரி கட்டி விட்டீர்கள். தொடருங்கள் உங்கள் மேன்தங்கிய பணியை.

  புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய ஒரு புத்தகத்தை பற்றியும் நான் சீக்கிரம் பதிகிறேன்.

  // தமிழில் வெளிவந்த மங்கா கதைகள் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.// ஷங்கர் அவர்களே, எனக்கு தெரிந்து தமிழில் மங்கா கதைகள் எதுவும் வெளியிட பட வில்லை. காமிக்ஸ் டாக்டர் குறிபிட்டது தங்களுடைய பதிவை பற்றி தான்.

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 6. டாக்டர் செவன் அவர்களே,

  நடந்து முடிந்த பிரமாண்டமான சித்திர கதை இரசிகர்களின் மாநாட்டை பற்றி விவரமாக எழுதியுள்ளீர்கள். ஆனால் சில விவரங்களை விட்டு விட்டீர்கள்.

  1) புத்தக கண்காட்சியில் ப்ரூட் சாலட் சாப்பிடும்போது கிங் விஸ்வா என் கிண்ணத்திலிருந்து பப்பாளி துண்டுகளை பிடுங்கி சாப்பிட்டது.

  2) ஒரு உணவகத்தில் கிங் விஸ்வா புரிந்த சாகச செயல்கள்.

  3) காமிக்ஸ் பூக்கள் வலை மல்லிகையின் ஆசிரியர் சிறுவர் இதழ் சிந்தனை சிற்பி என்றும், அனைவராலும் வெங்கி சார் என்று அழைக்கப்படுகிற அய்யம்பாளையம் லட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்களின் சுவாரஸ்யமான புத்தக தேடல்கள்

  4) காமிக்கலாஜி தோழர் சிறந்த வலைப்பதிவு டிசைனுக்கான விருதை பெற்றவர், எந்த ஒரு சப்ஜெக்டை எடுத்துக் கொண்டாலும் அதில் புகுந்து புறப்பட்டு வருபவரான இரஃபீக் ராஜாவின் இன்ப அறிமுகம்

  இது போன்ற சம்பவங்களுடன் நடந்த இந்த மாநாட்டின் விவரங்களை எழுதியதற்கு நன்றி. அடுத்த வருடமும் இது போன்ற மாநாடு நடத்தப்படவேண்டும் என்றும், அதில் இன்னும் நிறைய பேர் கலந்துக் கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறேன்.

  ReplyDelete
 7. பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,

  அருமையான பதிவு இது. என்னுடைய பழைய நினைவுகளை எல்லாம் என்னுடைய மனக்கண் முன் கொண்டு வந்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக.

  ராணி காமிக்ஸ் புத்தகம் கொள்ளை கூட்டம் இதழ் ஒரு நாள் தாமதமாக எங்கள் ஊருக்கு வந்தது. அதற்கு நான் காத்து இருந்த நாட்கள் கொடுமையானவை.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  அம்மா ஆசை இரவுகள் விசிறி.

  ReplyDelete
 8. Hiya,

  nice scans of rani covers. thanks for the little bit of nostalgia created by you.

  ReplyDelete
 9. நண்பர்களே,

  இந்த மாபெரும் காமிக்ஸ் மாநாட்டிற்கு என்னை அழையாமல் விட்டு விட்டார்கள். இருந்தாலும் செவி வழி செய்தியாக வந்த பல செய்திகளை இங்கே நான் வெளி இடுகிறேன்:

  (1) பாண்டியில் இருந்து வந்த ஒரு கொலை வெறி கவிஞர் சிலுக்கு சட்டை அணிந்து வந்து பலரின் கண்ணை பறித்தார். இதனால், மூன்று பாட்டிகளின் கண்பார்வை போனது. மேலும் எட்டு பசுக்கள் இறந்ததாகவும் கேள்வி.

  (2) மேலே குறிப்பிட்ட அந்த கொலை வெறி கவிஞர் அணிந்து வந்த பனியன் மிகவும் சிறப்பாக இருந்ததாக புத்தக சாலையில் பலரும் கூறினார்.

  (3) அ.கொ.தீ.க.வின் தலைவரும் இந்த கொலை வெறி கவிஞர் ஆகிய இரண்டு பெரும் சேர்ந்து அய்யம்பாளையம் வெங்கி சாரை மூன்று மணி நேரம் காக்க வைத்ததாக கேள்வி பட்டேன்.

  (4) கொலை வெறி கவிஞர் மீன் சாப்பிடும் போது அவருடைய காலணிகளை கழற்றி விட்டு சாபிட்டதாக கேள்வி.

  (5) கவிஞர் தமிழ் குட்டியின் தொப்பியை யாரோ சில கயவர்கள் அடித்து விட்டதாக கேள்வி. அந்த சிலர் அவர் அழைத்து வந்த கூட்டத்தில் இருந்த நபர்கள் தான் என்று அவர் சத்தியம் செய்கிறார்.

  (6) அ.கொ.தீ.க.வின் தலைவர் வழக்கம் போல புத்தக சாலையில் சில மணி நேரம் தலைமறைவாக இருந்ததாக கேள்வி. அப்போது அங்கு காவலர்களும் இல்லாததால் அவர் எங்கு சென்றார் என்பது ஒரு புரியாத புதிர்.

  (7) கிங் விஸ்வா அவர்கள் அய்யம்பாளையம் வெங்கி சார் வாங்கிய ஹாலிவூடில் ஜாலி என்ற காமிக்ஸ் புத்தகத்தை "சுட்டு" சென்று விட்டார் என்பதும் ஒரு சங்கதி.

  ReplyDelete
 10. தலைவரே,

  அடியேன் உங்களின் எழுத்துக்களுக்கு அடிமை ஆகி விட்டேன். தொடர்ந்து தூள் கிளப்புங்கள். ஆனால் இந்த காமிக்ஸ் அட்டை படங்களில் (திகில், மினி, ஜூனியர்) என் திரு விஜயன் பொங்கல் ஸ்பெஷல் என்று போட வில்லை? ஏதேனும் காரணம் உள்ளதா? துப்பறிந்து சொல்லுங்களேன்.

  ராணி காமிக்ஸ் இதழ்களில் முன்னூறு இதழுக்கு பிறகு மறுபடியும் பொங்கல் மலர் வந்ததாக நியாபகம். பாருங்கள்.

  ReplyDelete
 11. அய்யா எனக்கு ஒரு சந்தேகம், மீன் சாபிடும்போது எதுக்கு அவர் காலணிகளை கழட்டி வைத்து விட்டு சாப்பிட்டார்?

  ReplyDelete
 12. உங்கள் பதிவுகளுக்கு நன்றி!

  ReplyDelete
 13. தலைவரே,

  குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

  புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். பாருங்களேன்:
  http://kakokaku.blogspot.com/2009/01/blog-post_22.html

  ReplyDelete
 14. கற்றறிந்வரே, நாலும் தெரிந்தவரே, அறிவியல் கலைக் களஞ்சியமே, லோக்கல் விக்கியே, தமிழ்நாட்டு கூகுளே,

  அடியேனின் சந்தேகத்தை தீர்க்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டா?

  ReplyDelete
 15. யோவ் பக்கீரன்,

  யாருயா நீ? உனக்கு அப்படி ஒரு சந்தேகம் வரவே கூடாது. உன்னோட வேலை யாருக்காவது அப்படி ஒரு சந்தேகங் வந்தால் அந்த சந்தேகத்தை தீர்த்தது வைப்பது தான்.

  போய்யா, போய் வேற வேலை இருந்த பாரு.

  வந்துட்டாரு, பெருசா சந்தேகம் கேக்க.

  ReplyDelete
 16. ராஜ போண்டா அவர்களே,

  பலவித போண்டாக்களை உண்ட நீங்களே இப்படி பேசலாமா? இது முறையாகுமா? உங்களை போன்ற மன்னர்கள் இருப்பதனால்தான் குதுப்மினார் குன்றில் இல்லை என்ற வரலாற்று தகவலை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

  பழ பஜ்ஜி என்றொரு ஐட்டம் இருக்கிறதே, போண்டு ராஜாவே. ஒருமுறை சுவைத்து பாருங்களேன்.

  ReplyDelete
 17. நான் ஒருத்தன் இங்கே இருக்கறத மறந்துட்டு நீங்க ரெண்டு பேரு மட்டும் இப்படி போண்டா, பஜ்ஜின்னு உள்ள தள்ளிகிட்டிருந்தா எப்படி?

  அப்புறம் ‘சிந்தகாயலு ரவி’ படம் சூப்பருங்கண்ணா!

  ReplyDelete
 18. தமிழ் நாட்டில் தாஜ் மகால் இல்லாததாலும், குதுப் மினார் குன்றில் இல்லாததாலும் நான் இரண்டு மூன்று பேரை தற்கொலை செய்ய வைக்கலாம் என்று உள்ளேன். தங்கள் சித்தம் எப்படி?

  ReplyDelete
 19. என்னை பற்றிய தவறான தகவல்கள் இங்கு காணப்படுகின்றன. உடனடியாக அவற்றை நீக்கா விட்டால், என்னுடைய ஹைக்கூ கவிதைகளை இங்கே பிரசுரிப்பேன் என்று எச்சரிக்கிறேன்.

  ReplyDelete
 20. நண்பர்களே,

  பல நாட்களாக நமது தலைவர் காமிக்ஸ் டாக்டர் அவர்கள் கெட்ட (கேட்ட) வெகுமதி கேள்விக்கு யாரும் பதில் அளிக்காததால் வேறு வழி இல்லாமல் நானே பதில் அளிக்க வேண்டிய கட்டாயம்: என்ன செய்வது?

  எவ்வளவோ செஞ்சுட்டோம், இதை செய்ய மாட்டோமா?

  இந்த வெகுமதி கேள்விக்கு பதில்: அந்த அற்புத பாத்திரம் இரும்புக்க் கை மாயாவி தோன்றும் இயந்திரப் படை என்ற கதையில் வரும் மயன் என்ற பாத்திரம் ஆவார்.

  இதில் இருந்தே நீங்கள் முல்லை தங்க ராசனின் திறனை அறியலாம். ஆங்கிலத்தில் இந்த பாத்திரத்தின் பெயர் Builder ஆகும். இதனை தமிழ்படுத்திய அழகை கவனியுங்கள்.

  டாக்டர், வேர் இஸ் த பரிசு? அ, எங்க வூட்ல பரிசு?

  ReplyDelete
 21. From The Desk Of Rebel Ravi:

  nice scans of the pongal special issues. waiting for Republic Day, Mothers Day, Womens Day, Tamil New Year Day, May Day, Independance Day, Diwali, New Year Posts from you.


  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

  ReplyDelete
 22. hi... great scans of the books we have hardly seen till now... great work... adios....

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!