Sunday, April 19, 2009

ரூ:5000/- பரிசு!

“ஃப்ரீயாக் கொடுத்தா ஃபெனாயிலக் கூடக் குடிப்பான்!”

-கவுண்டமணி (படம் – கரகாட்டக்காரன்)

வணக்கம்!

சென்ற பதிவான சித்திரைச் சிறப்பிதழ்கள்-க்குத் தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி! உங்கள் கருத்துக்களுக்கான எனது பதில்களை இறுதியில் அளித்துள்ளேன்!

இடைப்பட்ட காலத்தில் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் நடந்துள்ள ஒரு முக்கிய நிகழ்வு பற்றி இங்கு நான் குறிப்பிட்டேயாக வேண்டும்! நமது அபிமான முத்து விசிறி அவர்கள் தனது வலைப்பூவை வலைத்தளமாக மாற்றியமைத்துள்ளார். இனி அவரது தளத்தைக் காண இந்த முகவரியை உபயோகித்தாலே போதும்!

http://muthucomics.com/

வாழ்த்துக்கள் முத்து விசிறி அவர்களே! MUTHUFAN OWNS!!!

இனி பதிவிற்கு வருவோம்! இம்முறை நான் பதிவிடத் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு புத்தகம் அல்ல, போட்டியாகும்! இப்பதிவு அப்போட்டியின் மலரும் நினைவுகள்!

கோடை சிறப்பு மலர்கள் பற்றி மற்றுமொரு பதிவை எதிர்பார்த்து வந்து ஏமாந்தவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்! நடுவில் ஒரு மாற்றத்திற்காக லைட்-டான ஒரு பதிவிடும் எண்ணமே இப்பதிவிடக் காரணம்! வரும் வாரத்தில் சம்மர் ஸ்பெஷல் வந்திடும்!

Lion Comics No.067 - Emanukku Eman - Cover Lion Comics No.067 - Emanukku Eman -  Front Inner Cover

இப்போட்டி ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் அபார மூளையில் உதித்த அற்புதக் குழந்தையாகும்! 1990-ல் வெளியான லயன்#067 – எமனுக்கு எமன்-ல் இப்போட்டி ஆரம்பானது! இவ்விதழுடன் இலவச இனைப்பாக ஒரு ஆல்பம் வழங்கப்பட்டது! மாதந்தோரும் ஒவ்வொரு இதழின் பின்னட்டையிலும் வரும் லயனின் தலைசிறந்த ஹீரோக்களின் படங்களை வெட்டி ஆல்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்! குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் பத்து வாசகர்களுக்கு ரூ:500/- மதிப்பிலான பரிசு வழங்கப்படும்! மொத்தம் ரூ:5000/- பரிசு!

Lion Comics No.067 - Emanukku Eman - Supplement - Lion Album - Front Cover Lion Comics No.067 - Emanukku Eman - Supplement - Lion Album - Front Inner Cover Lion Comics No.067 - Emanukku Eman - Supplement - Lion Album - Back Cover

மொத்தம் 12 இதழ்களில் லயனின் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்தன. 12 படங்களும் இதோ உங்களின் பார்வைக்கு.

  1. லயன்#067 – எமனுக்கு எமன் – ஸ்பைடர்
  2. லயன்#068 – திக்குத் தெரியாத தீவில் – பேட்மேன்
  3. லயன்#069 – புதையலைத் தேடி – ஆர்ச்சி
  4. லயன்#070 – எமனுடன் ஒரு யுத்தம் – சாம்சன்
  5. லயன்#071 – கானகத்தில் ஒரு கைதி – டெக்ஸ் வில்லர்
  6. லயன்#072 – மீண்டும் ஸ்பைடர் – ஜான் மாஸ்டர்
  7. லயன்#073 – சிலந்தி வலையில் காரிகன் – இரும்புக்கை நார்மன்
  8. லயன்#074 – மரணத்தின் நிறம் பச்சை – லாரன்ஸ் & டேவிட்
  9. லயன்#075 – மரணத்தின் நிழலில் – இரட்டை வேட்டையர்
  10. லயன்#076 – அதிசயத் தீவில் ஆர்ச்சி – அதிரடிப்படை
  11. லயன்#077 – மர்ம முகமூடி - விச்சு & கிச்சு
  12. லயன்#078 – பொக்கிஷம் தேடிய பிசாசு – ஈகிள்மேன்

ஸ்பைடர் பேட்மேன் ஆர்ச்சி சாம்சன் டெக்ஸ் வில்லர் ஜான் மாஸ்டர் இரும்புக்கை நார்மன் லாரன்ஸ் & டேவிட் இரட்டை வேட்டையர் அதிரடிப் படை விச்சு & கிச்சு ஈகிள் மேன்

போட்டியில் வெற்றி பெற்றோர் லயன்#079 – OPERATION அலாவுதீன்–ல் வரவிருந்தது! ஆனால் வாசகர்களுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது! லயன்#080 – ஒரு பனிமலை பயங்கரம் இதழில் வெற்றிபெற்ற அதிர்ஷ்டசாலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது! இதோ அந்தப் பட்டியல்!

Lion Comics No.080 - Oru Panimalai Bayangaram - WINNER'S LIST

பட்டியலின் முதல் பெயர் யாரெனத் தெரிகிறதா? அவர் வேறு யாருமல்ல, நமது அபிமான சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன் அவர்களேயாவார்! அவர் இது போல பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

அவரிடம் அந்தக் கடிகாரம் உள்ளதா என நான் கேட்டதற்கு தொலைந்து விட்டது என மழுப்பினார்! அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை! சுதந்திரத்துக்கு முன்னால் வந்த அம்புலிமாமா-வையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கும் அவர் இதையும் பத்திரமாகப் பதுக்கி வைத்திருப்பார் என நம்பலாம்!

இது போன்ற வாசகர்களை ஊக்குவிக்கும் போட்டிகள் நடத்துவதில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நிகர் அவரேதான்! இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

இந்த இலவச இனைப்போ அல்லது பரிசுக் கடிகாரமோ யாரிடமேனும் உள்ளதா? இருந்தால் புகைப்படம் எடுத்து அனுப்புங்களேன்! ரூ:5000/- பரிசு வ்ழங்க இயலாதெனினும், ஏதோ ரூ:5/-க்கு டீயாவது வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறேன்!

கீழே நான் வழங்கியுள்ள சுட்டியில் மேலும் ஒரு மலரும் நினைவு உள்ளது! கண்டு மகிழுங்கள்! மேற்கூறிய கவுண்டரின் ‘பன்ச்’ சிரிப்பதற்கு மட்டுமே, ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! ப்ளீஸ்!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:-

கிங் விஸ்வா-வின் மலரும் நினைவுகள்

14 comments:

  1. பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,

    இந்த ஐந்தாயிரம் ருபாய் பரிசுப் போட்டி ஒரு நல்ல விஷயம். இதனைப் போல இன்னமும் சில விஷயங்களை திரு விஜயன் அவர்கள் செய்ய வேண்டும். இதெல்லாம் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு டானிக் போல.

    //நமது அபிமான முத்து விசிறி அவர்கள் தனது வலைப்பூவை வலைத்தளமாக மாற்றியமைத்துள்ளார். இனி அவரது தளத்தைக் காண இந்த முகவரியை உபயோகித்தாலே போதும்!http://muthucomics.com/

    முத்து விசிறி அவர்களுக்கு தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பாக வாழ்த்துக்கள். Muthu Fan Rocks.

    //அவர் இது போல பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!// ஆமாம், அவர் வென்ற போட்டிகளை பற்றியே ஒரு பதிவு இடலாம்.

    //அவரிடம் அந்தக் கடிகாரம் உள்ளதா என நான் கேட்டதற்கு தொலைந்து விட்டது என மழுப்பினார்! அது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை!// அய்யா, யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வார்களா? விரும்பி யாராவது பயங்கரவாதியிடம் Book கொடுப்பார்களா?

    //அவர் இதையும் பத்திரமாகப் பதுக்கி வைத்திருப்பார் என நம்பலாம்!// உண்மை, உண்மை.

    //இது போன்ற வாசகர்களை ஊக்குவிக்கும் போட்டிகள் நடத்துவதில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நிகர் அவரேதான்! இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!// சரியே. இப்போதும் கூட வேறு ஏதாவது ஆரம்பிக்கலாம்.

    அற்புதமான நினைவுகளை மீண்டும் ஒரு முறை கொணர்ந்த உங்களை நான் மனமார வாழ்த்துகிறேன்.

    கிங் விஸ்வா
    Carpe Diem.

    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  2. ஜுடோ ஜோஸ்April 19, 2009 at 10:30 PM

    தலைப்பை பார்த்து விட்டு, நான் கூட ஏதோ நம்ம பயங்கரவாதி நிஜம்மாலுமே ஐந்தாயிரம் ருபாய் பரிசு தரப் போறார் என்று நம்பி வந்தேன்.

    வெறும் போட்டி பற்றிய விபரம் மட்டும் தானா?

    ஏம்பா, இதுல கூட உங்க ஜானி நீரோ வரலையா?

    ஜுடோ ஜோஸ்.
    Judo Josh can do a wheelie on a unicycle.

    ReplyDelete
  3. ஐயா,,,


    பயங்கரவாதி.....,

    உங்கள் பதிவுகளைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் மிகவும் பொறாமையாக இருக்கிறது. ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சி மிக மிக அதிகம்...

    பாராட்டுக்கள்...

    நீங்கள் படிக்கும் அனைத்து புத்தகங்களையும் சேர்த்து தனியே ஒரு நூல் நிலையமே அமைட்த்ஹு வைத்திருப்பீர்கள் போல் உள்ளதே....,

    நீங்கள் கல்லூரி வரைந்த ஓவியங்களைக் கூட பூக்களில் நிறவி விடலாமே....

    ReplyDelete
  4. தலைவர் அவர்களே, உங்கள் பதிவின் தலைப்பைக் கண்டு விட்டு அடடா தலைவர் குஷி மூடில் இருக்கிறார், எங்களிற்கெல்லாம் துட்டு தரப் போகிறார் என வந்தால் விஜயன் சாரின் போட்டி பற்றிய பதிவு என்று தெரிகிறது. பன்ச்சை படித்த போதே இது எனக்கு ஏன் உறைக்கவில்லை!!

    நண்பர் அ.வெ. அவர்களிடம் நிறைய பொக்கிஷங்கள் உள்ளது போலுள்ளதே. கில்லாடி கிரி கிரி கவனிக்கவும்.

    முத்து விசிறி அவர்கட்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒர் டீயைப் பரிசாக அறிவித்து எக்கசக்கமான இதயங்களின் டிக் டிக்குகளை எகிறச் செய்த தலைவர் வாழ்க வாழ்க.

    ReplyDelete
  5. கில்லாடி கிரிகிரிApril 19, 2009 at 11:11 PM

    இன்று இரவு தலைவரின் இருப்பிடம் தாக்கப்படும்.

    புத்தகங்கள் தூக்கப்படும்

    என்ன கனவுகளின் காதலரே, அங்கு என் நிற்கிறீர்கள்? இருட்டில் யோக்கியனுக்கு என்னையா வேலை?


    கில்லாடி கிரிகிரி

    ReplyDelete
  6. கில்லாடி கிரிகிரி, நான் இருட்டில் நிற்பது மங்கையர் குல மாணிக்கம் பூங்காவனத்தை எதிர் பார்த்து தான்.

    எதிர் பார்த்தேன் பூங்காவனத்த காணலியே
    டாக்டர் வீட்டிலிருந்து ஏன் வரலை தெரியலியே!!

    ReplyDelete
  7. ஜானி நீரோApril 20, 2009 at 1:37 PM

    தம்பி ஜுடோ ஜோஸ்,

    உனக்கு விவரம் பத்தாது போல இருக்கே? இங்கே இருப்பது வெருள் லயன் காமிக்ஸ் ஹீரோக்கள் மற்றும் திகில் ஹீரோ பேட்மேன் பட்டியல்.

    இதுல எங்கையா முத்து ஹீரோவாகிய நான் வந்தேன்?

    ஜானி நீரோ

    ReplyDelete
  8. காமிக்ஸ் டாக்டருக்கு வணக்கம்,

    பரிசு ரூ. 5000/- என்றதும் என்னடா டாக்டருக்கு வந்த சோதனை! காசு கொடுத்து படிக்க சொல்லும் அளவுக்கா காமிக்ஸ ப்ளாக்குகள் இருக்கின்றன என்று பரிதாபப்பட்டேன். (ரூ.5000 எனக்கே எனக்கு கிடைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தேன் என்றா சொல்ல முடியும்?)

    இந்த பதிவுடன் பரிசு பெற்றவன் என்ற முறையில் எனது அப்போதையை உணர்வுகளை பகிர்ந்து கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    லயன் குடும்ப இதழ்களை நண்பர்களிடம் இரவல் வாங்கியும், எனது பெரியப்பாவிடம் வாங்கியும் நான் படித்துக் கொண்டிருந்த நிலையில், முதன் முதலாக எனக்கே எனக்காக வாங்கி படித்த (தொடர்ந்து...) இதழ் எமனுக்கு எமன்தான். எனது அப்பா வாரம்தோறும் மளிகை பொருட்கள் வாங்க திருச்சிக்கு போவார். அவரிடம் லயன் காமிக்ஸ் வாங்கி வர சொன்னபோது அவர் முதலில் வாங்கி வந்த இதழ்தான் "எமக்கு எமன்".

    அதன் பிறகு நான் தொடர்ந்து லயன் காமிக்ஸ்களை வாங்கினேன். கவனிக்கவும்... லயனை மட்டும்தான். முத்து, மினி லயன் காமிக்களின் மேல் ஏனோ அவ்வளவு ஈடுபாடு இல்லை. கேட்டிருந்தால் வாங்கியிருக்கலாம். அப்போது தோன்றவில்லை.

    ஒவ்வொரு மாதமும் ஆல்பத்தில் ஹீரோக்களின் படங்களை ஒட்டி முழுமை பெற்றவுடன் அனுப்பினேன். உள்மனதில் பரிசு நமக்கு கிடைத்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அப்போது நான் பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்தேன் -கையில் கடிகாரம் கட்டிக்கொள்வது எல்லாம் ஒரு கனவு அப்போது! நன்றாக நினைவு இருக்கிறது. பத்தாவது பரிட்சை எழுத உறவினர் ஒருவரின் கடிகாரத்தை இரவல் வாங்கி கொண்டு போனது.

    கனவும் ஒரு நாள் நனவானது! ஆம்! லயனின் பரிசுப் போட்டியில் எனக்கு கடிகாரம் பரிசாக - அதுவும் முதல் பெயர் என்னுடையது! அப்போது நான் எப்படி சந்தோசப்பட்டிருப்பேன் என்று எண்ணிப்பாருங்கள்! மகத்தான - மறக்க இயலாத தருணங்கள் அவை!

    அந்த கடிகாரத்தின் டயலும், முற்களும் ஒரு பாதி வெண்மையாகவும், ஒரு பாதி கருப்பாகவும் இருக்கும். கருப்பு நிற டயலின் மேல் இருக்கும்போது முள்ளின் வெண்மை பகுதி தெரியும், வெண்மை நிறப்பகுதியில் முள்ளின் கருமைப் பகுதி தெரியும். ஒரு அற்புதமான, ஆர்ப்பாட்டமான வாழ்க்கையின் சரியான தருணத்தில் கிடைத்த அரியப் பரிசு அது!

    1996-97 வரை அந்த கடிகாரத்தை நான் வைத்திருந்தேன். ஒரு நாள் காலை கிணற்றுக்கு குளிக்க போனபோது சைக்கிளில் வைத்திருந்த அந்த கடிகாரம் காணாமல் போய்விட்டது. டாக்டர் கூறுவது போல இது மலுப்பல் அல்ல. உண்மை அய்யா உண்மை!

    கால ஓட்டத்தில் நான் வேறு சில கடிகாரங்கள் வாங்கியது எல்லாம் கதை! இப்போது கடிகாரமே கட்டுவதில்லை. அந்த வயதில் எனக்கு கிடைத்த ஒரு அற்புத பரிசு லயனின் கைக்கடிகாரம் என்பது ஒரு மறுக்க இயலாத உண்மை!

    அந்த வெற்றியாளர்கள் பட்டியலில் உள்ள சென்னை சக்தி என்பவர் தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்று எனக்கு எழுதியிருந்தார். அந்த தொடர்பில் ஓரிரு ஆண்டுகள் அவருடன் கடித போக்குவரத்துக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் அது அறுந்து விட்டது. அவரை மீண்டும் சென்னையில் சந்தித்தால் என்ன என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது உங்களது இந்த பரிசுப் பதிவு.

    ஆயிரம் கோடி நன்றிகள் உங்களுக்கு!

    வெங்கடேஸ்வரன், காமிக்ஸ் பூக்கள்

    ReplyDelete
  9. ஜுடோ ஜோஸ்April 20, 2009 at 11:49 PM

    //இப்போது கடிகாரமே கட்டுவதில்லை.// அதானே, நாமெல்லாம் நேரம் பாத்தா வேலை செய்யுறோம்?

    ஜுடோ ஜோஸ்.
    தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை English.

    ReplyDelete
  10. சத்தியமா அந்த ஆல்பத்த இப்போ தான் முதல் தடவையாக பாக்குறேன்.

    வயித்தெரிச்சலை கிளப்பியதற்கு நன்றி.

    ReplyDelete
  11. தலைவர் கொடுக்கும் அத்தனை ரூபாயும் எனக்கே எனக்கா? என்று திருவிளையாடல் தருமி மாதிரி வந்து பார்த்த வெறும் பதிவு தலைப்பு தானா?

    quite nice.

    ReplyDelete
  12. From The Desk Of Rebel Ravi:

    i also sent the comics album. unfortunately didn't win the prize. good memories.

    Jai Ho.
    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  13. தலைவரே,

    அடுத்து சம்மர் ஸ்பெஷலா? தூள் கிளப்புங்கள்.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!