Saturday, May 2, 2009

ருஷ்ய சிறுவர் இலக்கியம்!

“உழைக்கும் கைகளே! அதை உருவாக்கும் கைகளே!”

-மெக்கானிக் மாணிக்கம் (படம் – சேரன் பாண்டியன்)

வணக்கம்,

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அடியேனின் சற்றே தாமதமான உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! மே தினம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது பொதுவுடமையும், சமவுடைமையும் அச்சிந்தனைகளை உலகில் விதைத்த போராளிப் பேரறிஞர் கார்ல் மார்க்ஸ்-ம்,  அவை விளைந்த நன்னிலமான ருஷ்ய நாடும்தான்!

ஆனால் ருஷ்ய நாட்டிலிருந்து வரும் படைப்புகள் அனைத்தும் அரசியல் சார்ந்தவையே என்கின்ற தவறான கருத்து நமது மக்களிடையே நிலவி வருகிறது! உலகப் புகழ் பெற்ற பல அரிய படைப்பாளிகளை இலக்கியத்திலும், திரைத்துறையிலும் வழங்கியுள்ளது அம்மாபெரும் நாடு!

அதே போல் சிறுவர் இலக்கியத்திலும் பல சிறந்த படிப்புகளை அந்நாட்டவர் நமக்கு வழங்கியுள்ளனர்! இந்த மே தினத்தில் எனது சிற்றிளம் பருவத்தினை வியாபித்திருந்த அந்த உலகப்புகழ் பெற்ற சிறுவர் இலக்கியங்களில் சிலவற்றை இங்கே உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன்!

அறியாதோற்கு ஒரு சிறு அறிமுகமாகவும், அறிந்தோற்கு அற்புதக் காலப்பயணமாகவும் இப்பதிவு அமைந்திட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்!

இப்பதிவை உங்கள் வசதிக்காக கதாசிரியர்களைக் கொண்டு பகுத்துள்ளேன்! கதைகளின் பெயர்களில் உள்ள சுட்டிகளை ‘க்ளிக்’கினால் அக்கதையை இனையத்தில் படிக்க இயலும்! படித்து மகிழுங்கள்!

லியோ டால்ஸ்டாய் (LEO TOLSTOY):

அன்னா கரெனினா, போரும் அமைதியும் (இவற்றையெல்லாம் நான் படித்ததில்லை) போன்ற உலகமகாக் காவியங்களை இயற்றிய லேவ் நிக்கலாயெவிச் தல்ஸ்தோய் பிரபு அவர்கள் சிறுவர்களுக்கெனப் பிரத்தியேகமாகப் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். அவற்றின் ஒரு தொகுப்பு நான் படித்த ரசித்த முதல் புத்தகங்களில் ஒன்று!

பொய்யன் (THE BOY WHO CRIED WOLF), இரண்டு நண்பர்கள் (TWO FRIENDS AND THE BEAR) போன்ற ஏஸாப்-பின் நீதிக்கதைகளை தனது பாணியில் வழங்கியுள்ளார் டால்ஸ்டாய்! அதுமட்டுமல்லாது சிங்கமும் நாயும் (THE LION AND THE DOG) போன்ற பல உருக்கமான சிறுகதைகளையும் கொண்டது இந்தத் தொகுப்பு! அற்புதமான கருப்பு வெள்ளை ஓவியங்கள் புத்தகத்தின் சிறப்பை மேலும் கூட்டுகின்றன!

Leo Tolstoy - Stories For Children LEO TOLSTOY Leo Tolstoy - The Lion And The Dog

தமிழிலும் ஆங்கிலத்திலும் இப்புத்தகம் இந்தியாவில் வெளிவந்தது! இரண்டையுமே அடியேன் பத்திரமாக வைத்துள்ளேன் எனக் கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்!

சமீபத்தில் இந்தப் பதிவுக்காக இனையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது மேற்காணப்படும் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு $10  முதல் $30 வரை விற்பனையாகி வருவது கண்டு அதிசயித்தேன்! எப்பேர்ப்பட்டதொரு பொக்கிஷத்தை நான் கையில் வைத்துள்ளேன் என அப்போதுதான் உணர்ந்தேன்!

இக்கதைகளையும் டால்ஸ்டாயின் பிற நீதிக்கதைகளையும் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! பல வழிமுறைகளிலும் படிக்க வகை செய்யப் பட்டிருக்கிறது! படித்து மகிழவும்!

டால்ஸ்டாயின் மற்ற படைப்புகளைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

புத்தகம் : குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்
ஆசிரியர் : லேவ் தல்ஸ்த்தோய்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1981
ஆங்கிலத்தில் : ஃபெய்ன்னா க்ளகொலெவா
(FAINNA GLAGOLEVA)
தமிழில் : பூ. சோமசுந்தரம்
ஓவியர் : அ. பாகோமொவ் (A.PAKHOMOV)
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

நிக்கலாய் நோசவ் (NIKOLAI NOSOV):

Nikolai Nosov - விளையாட்டுப் பிள்ளைகள்ருஷ்ய நாட்டின் தலைசிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளரான நிக்கலாய் நிக்கொலெவிச் நோசவ் தனது 30 ஆண்டு கால இலக்கியப் படைப்புப் பணியில் பல்வேறு சிறுகதைகள், கதைகள் புனைந்துள்ளார்!

அழகிய கோட்டோவியங்களுடன் கூடிய விளையாட்டுப் பிள்ளைகள் தொகுப்பில் வரும் பல கதைகளில் ருஷ்யாவின் தலைசிறந்த காவியக் கவிஞராகிய அலெக்ஸாண்டர் புஷ்கின்-ன் பல கவிதைகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும்! அவற்றில் துருஷோக்கு எனும் கதையில் வரும் சில வரிகள் என் மனதில் நின்றுவிட்டன!

வெள்ளைப் பனி! அதில் வண்டியோட்டும் குடியானவன்
உள்ளக் களிப் புற்றே புதுத்தடம் பதிக்கின்றான்,
புதுப் பனியை முகரும் அவன் குதிரையும்தான்
புது முறுக்குடன் துள்ளிக் குதித்து ஓடுகிறது…

இக்கவிதை கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதே சிறப்பம்சம்!

புத்தகம் : விளையாட்டுப் பிள்ளைகள்
ஆசிரியர் : நிக்கலாய் நோசவ்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1978
தயாரிப்பு : ரூபேன் வார்ஜிகுலியான்
தமிழில் : ருக்மணி, பூ. சோமசுந்தரம்
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

Nikolai Nosov - Story-tellers Nikolai Nosov - Story-tellers - Front Inner Wrapper Nikolai Nosov - Story-tellers - Back Inner Wrapper

அதே போல கற்பனையாளர்கள் கதைக்கு வரையப்பட்ட அழகிய வண்ண ஓவியங்களும் சுலபத்தில் மறக்க இயலாது! சிறுவர்களுக்கு கற்பனைவளம் எவ்வளவு இன்றியமையாததொன்று என்பதையும், கற்பனைக்கும், பொய்மைக்கும் உள்ள வேறுபாட்டினை சுட்டிக் காட்டும் விதமாகவும் அமைந்திருக்கும் இக்கதை எனது ஆல்-டைம் ஃபேவரைட்களில் ஒன்றாகும்!

புத்தகம் : கற்பனையாளர்கள் (STORYTELLERS)
ஆசிரியர் : நிக்கலாய் நோசவ்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1982
ஆங்கிலத்தில் : ஃபெய்ன்னா க்ளகொலெவா
(FAINNA GLAGOLEVA)
தமிழில் : பூ. சோமசுந்தரம்
ஓவியர் : இ.ஸெம்யோனவ் (I.SEMYONOV)
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

இவரது கதைகளை இவ்விணைப்புகளில் அழகிய படங்களுடன் படித்து மகிழவும்!

மூன்று தடியர்கள் (THE THREE FAT MEN) - யூரி ஒலெஷா (YURI OLESHA):Yuri Olesha - The Three Fat Men

ருஷ்யப் புரட்சி வரலாற்றை சிறுவர்களுக்காக முதன்முதலாக எழுதியவர்தான் யூரி கார்லொவிச் ஒலெஷா.

1928-ல் எழுதப்பட்ட இக்கதை ருஷ்ய ஜனரஞ்சகக் கலாச்சாரத்தில் ஊறிவிட்ட ஒன்றாகும்! இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துவிடும்!

இக்கதையின் பாதிப்புகள் இதற்குப் பின் வெளிவந்த பல சிறுவர் இலக்கியங்களில் காணலாம்! இக்கதையின் நாயகர்கள் பலவேறு கதைகளில் குணச்சித்திர வேடத்தில் வந்துபோவது அப்போதைய சிறுவர் இலக்கியங்களில் சகஜம்!

சர்வாதிகார ஆட்சி புரிந்து வரும் மூன்று தடியர்களை சாதாரன மக்களின் சில பிரதிநிதிகள் எவ்வாறு வெற்றி கொண்டு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் விடுதலையளிக்கின்றனர் என்பதே கதை!

வழக்கம் போல அற்புத ஓவியங்கள் கதைக்கு மிகப்பெரும் பலம் சேர்க்கின்றன! ருஷ்ய சிறுவர் இலக்கியங்களில் இக்கதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!

புத்தகம் : மூன்று தடியர்கள்
ஆசிரியர் : யூரி ஒலெஷா
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ(PROGRESS PUBLISHERS)
வருடம் : 1976
ஆங்கிலத்தில் : ஃபெய்ன்னா க்ளகொலெவா
(FAINNA GLAGOLEVA)
தமிழில் : பூ. சோமசுந்தரம்
ஓவியர் : போரிஸ் கலாஷின் (B.KALAUSHIN)
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

கதையைப் படித்து மகிழ கீழ்கண்ட இணைப்புகளை உபயோகிக்கவும்!

ருஷ்ய மற்றும் உக்ரேனிய நாடோடிக் கதைகள்:

ருஷ்ய நாட்டின் சிறுவர் இலக்கியத்தில் தேவதைக் கதைகள் (FAIRY TALES) கிடையாது! ஏனெனில் ருஷ்யாவில் தேவதைகளே (FAIRIES) கிடையாது என்ற நம்பிக்கை உண்டு! ஆகையால் அவர்களது பண்டைக் கதைகளை நாடோடிக் கதைகள் (FOLK TALES) என்றே குறிப்பிட வேண்டும்!

Emelya And The Pike The Dog And The Cat The Fox and The Hare

பேரழகி வசிலிஸா, EMELYA AND THE PIKE, THE LITTLE ROUND BUN போன்ற கதைகள் எனது ஆல்-டைம் ஃபேவரைட்களாகும்! அதிலும் BUN வடிவத்திலேயே இருக்கும் THE LITTLE ROUND BUN புத்தகம் என்னை இன்றும் உள்ளம் உவகை கொள்ள வைக்கிறது!

இதில் THE LITTLE ROUND BUN கதையின் மறுபதிப்பு ஒன்றை சமீபத்தில் கண்டேன்! ஓவியங்கள் எல்லாம் தற்காலத்திற்கேற்ப அமெரிக்க வடிவில் வந்ததைக் கண்டு மனம் நொந்தது! விற்பனைக்காக இதெல்லாம் அவசியமெனும் போதும் எங்கோ ஒரு மூலையில் மனம் இதையெல்லாம் ஏற்க மறுக்கிறது!

The Little Round Bun The Little Round Bun - Reprint

நாடோடிக் கதைகள் படிக்க:

யா.பெரெல்மான் (Y.PERELMAN):

Y.Perelman - Fun with Mathematics யாகொவ் இஸிட்ரொவிச் பெரெல்மான் சிறுவர்களுக்கெனப் பல அறிவியல் புத்தகங்களை அவர்களும், நாமும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.

வெறும் பாடப் புத்தகம் போல் அல்லாமல் பல சுவாரசியமானத் துனுக்குகளையும், புதிர்களையும் இணைத்து அவை தோன்றிய விதம் குறித்தும் கூட எழுதியுள்ளார்!

உலகப் புகழ் பெற்ற 15 வில்லைப் புதிர் பற்றிய இவரது புதிர்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன! இதையும் ரூபிக்ஸ் க்யூப்பையும் சிறுவயதில் நாம் பலூன்காரனிடம் வாங்கி விளையாடத் தெரியாமல் விளையாடினோமே, ஞாபகமிருக்கிறதா?

அதியற்புத ஓவியங்களும் இப்புத்தகத்தில் உண்டு! இப்படியெல்லாம் பாடப் புத்தகம் நமக்கிருந்தால் படிப்பு என்பது ஒரு சுகானுபவமாகவே இருக்கும்!

புத்தகம் : விளையாட்டு கனிதம்
ஆசிரியர் : யா.பெரெல்மான்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1977
ஆங்கிலத்தில் : அ.ஷ்காரொவ்ஸ்கி(A.SHKAROVSKY)
தமிழில் : ரா.கிருஷ்ணையா
ஓவியர் : யெ.தாரோன், வி.கொரல்கோவ்
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

இவரது புத்தகமொன்றைப் படித்துப் பார்க்க ஆர்வ்மிருந்தால் கீழேயுள்ள சுட்டியைப் பயன்படுத்தவும்!

The Russian Revolution - What Actually Happened ருஷ்யப் புரட்சி வரலாறு:

இப்புத்தகத்தைப் பற்றி நண்பர் ஷிவ் ஏற்கெனவே பதிவிட்டுள்ளார். படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்

இருப்பினும் அவர் NCBH நிறுவனம் செய்த மறுபதிப்பு பற்றியே பதிவிட்டார். என்னிடம் இப்புத்தகத்தின் ஒரிஜினல் முன்னேற்றப் பதிப்பகம் (PROGRESS PUBLISHERS, MOSCOW) வெளியிட்ட பதிப்பு அட்டையில்லாமல் இருக்கிறது!

இரண்டையும் பார்த்த போது பழைய பதிப்பில் எழுத்துக்கள் கையால் எழுதப்பட்டும், மறுபதிப்பில் அவை கணினி எழுத்துக்களால் நிரப்பப்பட்டும் இருப்பதைக் கண்டேன்!

என்னதான் கணினி எழுத்துக்கள் சிறப்பாக இருந்தாலும், கையெழுத்தில் இருக்கும் ஒரு உணர்வு கணினி எழுத்துக்களில் காமிக்ஸ் படிக்கும் போது கிடைப்பதில்லை என்பதே உண்மை!

இதோ நீங்களும் பாருங்கள்! வித்தியாசம் தெரியும்!

Progress Publishers - First Edition முன்னேற்றப் பதிப்பகம், 1988

NCBH - Reprint NCBH, ஜனவரி 2008

புத்தகம் : ருஷ்யப் புரட்சி
(THE RUSSIAN REVOLUTION: WHAT ACTUALLY HAPPENED?)
ஆசிரியர் : எ.தப்ரவோல்ஸ்கயா, யூ.மக்காரவ்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1988
தமிழில் : த.ஜெயகாந்தன்
ஓவியர் : யெ.தாரோன், வி.கொரல்கோவ்
எழுத்துக் கலைஞர் : ஓ.வெச்சேரினா
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

பிற கதைகள்:

எனக்குப் பிடித்த இன்னும் சிலபல ருஷ்ய சிறுவர் புத்தகங்கள்!

Agnio Barto - How Vova Changed His Ways Galina Lebedeva - Masha's Awful Pillow L.Voronkova - Happy Days V.Mayakovsky - What is Good and What is Bad Vasil Vitka - General Sparrow Yevgeny Permyak - The First Fish

இவற்றில் வோவா மற்றும் HAPPY DAYS எனக்கு ஸ்பெஷலாகப் பிடிக்கும்! மாஷா-வில் இருக்கும் சித்திரங்கள் அதியற்புதமாக இருக்கும்!

பதிப்பகங்கள்:

PROGRESS PUBLISHERSNCBHஇப்பதிவில் இரு பதிப்பகங்களின் பெயர்கள் அடிக்கடி காணப்படும்! அவை இப்புத்தகங்களை தரமாகப் பல்வேறு மொழிகளிலும் அச்சிட்ட முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS) மற்றும் இந்தியாவில் இப்புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை (NEW CENTURY BOOK HOUSE) ஆகியவையே!

இவ்விரு பதிப்பகங்களின் மூலம் பல புத்தகங்களை உயர்ந்த தரத்தில், மலிவு விலையில், தமிழில் நாம் நமது சிறு வயதில் படிக்க முடிந்தது! இவை இன்னும் கூட NCBH-ன் கிளைகளில் கிடைக்கின்றன! புத்தகக் கண்காட்சிகளிலும் இந்தப் புத்தகங்கள் காணக் கிடைக்கலாம்!

உலகமயமாக்கலுக்குப்பின் வந்த அமெரிக்கப் பதிப்பாளர்களின் தரமற்ற, விலையுயர்ந்த, வணிக நோக்கம் மட்டுமே கொண்ட புத்தகங்களினால் இவற்றின் மவுசு குறைந்தாலும் நம் நெஞ்சங்களில் எந்நாளும் நீங்கா இடம் பெற்றிருக்கும்!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:-

 • இப்பதிவு ஒரு ONE-OFF முயற்சியே! இதனால் நான் ஏதோ அய்யம்பாளையத்தார்-க்கு போட்டியாகக் கிளம்பிவிட்டேன் என யாரும் எண்ண வேண்டாம்! என்னிடம் உள்ள சரக்கு மிகவும் குறைவு (இன்னும் ஒரு பதிவுதான் இது மாதிரி போடலாம்)! அவரோ சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி! நானோ சிங்கிள் டீக்கே சிங்கியடிப்பவன்! அவரோ கடல்! நானோ வெறும் கானல் நீர் (இந்தக் கானல் நீர் அல்ல)!
 • மேற்குறிப்பிட்டுள்ள கவுண்டரின் ‘பன்ச்’ காமெடிக்காக மட்டுமே! தயவு செய்து யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! தனது படங்களில் அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களின் வாழ்வியல்களையும் பிரதிபலித்த ஒரே கலைஞர் கவுண்டர்தான் என்பது என் கருத்து!

தொடர்புடைய இடுகைகள்:-

நண்பர் சிவ்-வின் சித்திரக்கதை வலைப்பூவில் ருஷ்யப் புரட்சி வரலாறு பற்றியப் பதிவு!

25 comments:

 1. உழைப்பாளர் தினம் அன்று அரசாங்க விடுமுறையாக இருந்தாலும் "உழைப்பாளர் தினம் அன்று உழைக்காதவன், மற்ற நாட்களில் எப்படி உழைப்பான்?" என்று நமது அபிமான சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன் அவர்களின் கருத்துப்படி இன்று கூட தன்னுடைய கடமையில் இருந்து சற்றும் மனம் தளராமல் பல நாச வேளைகளில் ஈடுபட்டு விட்டு வந்து தாமதமாக பதிவிடும் அ.கொ.தீ.க. தலைவர் அவர்களே,

  மீ த பஸ்ட்.

  இது நாள் வரையில் வித்தியாசமான சிந்தனையை தூண்டும் பதிவுகளை இட்டு காமிக்ஸ் பதிவர்களின் மனதுள் நீங்க இடம் பெற்ற சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன் அவர்களின் பதிவுகளை மிஞ்சும் வகையில் உள்ளது இந்த பதிவு. இதனை விட இந்த பதிவை பற்றி சிறப்பாக கூற இயலாது.

  சிறு வயதில் நான் கூட சில பல ருசிய சிறுகதை தொகுப்புகளை படித்துள்ளேன் ஆனால், காலப் போக்கில் இடம் பெயரும்போதெல்லாம் சில பல புத்தகங்களை இழந்ததால் இன்று நான் இதனை போன்ற பல அறிய பொக்கிஷங்களை இழந்து நிற்கிறேன். நான் இழந்தது என்ன என்பதை உணர தவரும்போதே நான் எவ்வளவு மேம்போக்காக இருந்துள்ளேன் என்பதை உணரலாம்.

  இனிமேல் தலைவரிடம் இருந்தும் நாம் வித்தியாசமான அதே சமயம் நம்முடைய ஆர்வத்தையும், எண்ணங்களையும் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்பதை என்னும்போது மனம் கள்ளுண்ட குரங்காய் குதிக்கிறது.

  இந்த சிறுகதைகளின் டவுன்லோட் லிங்க்குகளையும் வழங்கி எங்களை மகிழ்ச்சிக் கடலில் திக்கு முக்காட வைத்து விட்டீர்கள். தொடருங்கள். (நல்ல வேலை, அந்த லின்க்கில் உள்ளவை ருசிய மொழியில் இருக்குமோ என்று பயந்தே திறந்து பார்த்தேன்ன். நல்ல வேளை, ஆங்கிலத்தில் இருந்தன).

  நன்றிகள் பல.
  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 2. // தனது படங்களில் அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களின் வாழ்வியல்களையும் பிரதிபலித்த ஒரே கலைஞர் கவுண்டர்தான் என்பது என் கருத்து!//


  கடைசியா வச்சாலும் கப்புன்னு வச்சிட்டீங்க தல.

  ReplyDelete
 3. //புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு $10 முதல் $30 வரை விற்பனையாகி வருவது கண்டு அதிசயித்தேன்! //


  சிறுவர் இலக்கியங்கள்..?

  ReplyDelete
 4. தலைவரே,

  சிறு வயதில் நிறையப் படங்களுடனும்,குறைந்த எழுத்துக்களுடனும் வந்த சீன, ரஷ்ய சிறுவர் புத்தகங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். கால ஓட்டத்தில் அவை என் நினைவில் இருந்து மறைந்து விட்டன. நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்களில், கற்பனையாளர்கள் மட்டும், நீங்கள் தந்துள்ள படங்களை பார்த்த பின் நினைவிற்கு வருகிறது.

  நான் பார்த்த புத்தகங்களில் கரடியும், காளான்களும், பனியும் அதிகம் இடம் பெற்றிருக்கும். சிறுவர்களை கனவுலகிற்கு எடுத்து செல்ல இது போதாதா.

  மே தினத்தை முன்னிட்டு இச்சிறுவர் இலக்கியங்களை கவுரவிக்கும் விதமாக நீங்கள் தந்துள்ள இப் பதிவு பாராட்டிற்குரியது.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 5. //நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை// இந்த பெயரை என்னால் மறக்கவே முடியாது.

  என்னுடைய சிறு வயதில் (சிற்சில வருடங்களுக்கு முன்னரே) பள்ளிக்கூடம் செல்ல நான் ட்ரைனில் பிரயாணம் செய்ய வேண்டி இருக்கும். நாங்கள் இருந்த இடம் ஒரு பாதுகாப்புக்குட்பட்ட பகுதி என்பதால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ட்ரைன் மட்டுமே இருக்கும். அதனால் பல நாட்களில் மாலையில் பள்ளி முடிந்ததும் அந்த மணிக்கு வரும் வண்டியை தவற விடும்போதெல்லாம் நான் இந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் சென்று விடுவேன். அது ரயில்வே நிலையம் அருகிலேயே இருக்கும் என்பதால். அப்போதே எனக்கு புத்தகங்கள் மேல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு.

  அங்கு சென்று இந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன். நேரம் போவதே தெரியாது. என்னுடைய பகீரத முயற்சிகளால் சில பல புத்தகங்களை வாங்கியும் படிப்பேன். இந்த பதிவை படித்ததும் பழைய நினைவுகள் வந்து விட்டது. அடுத்த வாரத்தில் சென்று அந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் இன்னமும் அங்கேயே உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

  பதிவுக்கும், நினைவலைகளை சேர்த்ததற்கும் நன்றி தலைவரே.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 6. காமிக்ஸ் டாக்டரே,

  இது வரை முத்து லயன் குடும்ப கதைகளில் புகுந்து விளையாடி கொண்டிருந்த உங்களிடம் இருந்து மிகவும் மாறுபட்ட பதிவை படித்தவுடன் கருத்து பதியாமல் இருக்க முடியவில்லை.

  சிறு வயதில் ரஷ்ய புத்தகங்கள் பலவற்றை, வெறும் படங்களுக்காகவே நூலகங்களில் மேய்ந்து இருக்கிறேன். ஆனால், இது வரை புத்தகங்கள் எதையும் சொந்தமாக வாங்கியதில்லை. உங்கள் பதிவை படித்த பின் இப்படி பட்ட புத்தகங்களை சேகரிக்காமல் விட்டு விட்டோமே என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது.

  ஒவ்வொரு எழுத்தாளருடனும், கூடவே அந்த புத்தகங்களை படிக்கவும் சுட்டி அமைத்து அந்த ஆதங்கத்தை சற்றே போக்க உதவியதற்கு நன்றி.

  அடுத்த முறை அந்த நியூ செஞ்சுரி புதிப்பகத்திற்கு கட்டாயம் ஒரு விசிட் போயிட்டு வந்திறேன். புத்தக கண்காட்சியில் அந்த குடில் பக்கம் கால் கூட பதிக்காததற்கு பிராயசித்தமாகவும், அவர்கள் புத்தகங்கள் சிலவற்றை வாங்க ஏதுவாகவும் அது உதவலாம்.

  பல அறிய ரஷ்ய கதாசிரியர்களை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. தொடருங்கள் உங்கள் பதிவு அதிரடியை.

  ரஃபிக் ராஜா காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 7. காமிக்ஸ் டாக்டரே,
  உங்கள் பதிவை பார்த்த பின் நான் சிறுவயதில் என் வீட்டிற்க்கு அருகில் உள்ள நூலகத்தில் சேர்ந்து படித்தது நினைவுக்கு வருகிறது . நூலகத்தில் இருந்து இரண்டு LEO TOLSTOY இன் கதைகள் தமிழ்லில் படித்திருக்கிறேன். சரியாக நினைவு இல்லை . இதே போல் பல கதைகளை பற்றி பதிவிடவும் .

  Lovingly,
  Lucky Limat
  Browse Comics

  ReplyDelete
 8. தலைவரே,

  சற்றும் எதிர்பார்க்காத ஒரு பதிவு. இதில் மேலும் ஒரு பதிவு உள்ளது என்று முன்னூட்டம் வேறு. தூள் கிளப்புங்கள். இனிமேல் ஒரே பதிவு மழை தான் போங்கள்.

  மிக்க நன்றி அந்த கதைகளின் ஆங்கில இணைப்பை கொடுத்ததற்கு. உண்மையில் இதில் ஒரு கதையை கூட நான் படித்தது கிடையாது. படித்து விட்டு தான் கருத்து கூற இயலும்.

  உங்களின் புத்தக கலெக்ஷனை பார்க்க ஆசை.

  ReplyDelete
 9. எனக்கு பிடித்த கவுண்டமணி கமெண்டுகளை தொடர்வதற்கு நன்றி. நீங்கள் கூறுவது உண்மைதான். அனைத்து வகை உழைக்கும் பிரதிநிதிகளாக திரையில் தோன்றியவர் கவுண்டமணி தான்.

  ReplyDelete
 10. //இதில் THE LITTLE ROUND BUN கதையின் மறுபதிப்பு ஒன்றை சமீபத்தில் கண்டேன்! ஓவியங்கள் எல்லாம் தற்காலத்திற்கேற்ப அமெரிக்க வடிவில் வந்ததைக் கண்டு மனம் நொந்தது! விற்பனைக்காக இதெல்லாம் அவசியமெனும் போதும் எங்கோ ஒரு மூலையில் மனம் இதையெல்லாம் ஏற்க மறுக்கிறது!//

  முதலில் இந்த அட்டை படங்களை பார்க்கும்போதி ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் உங்களின் வார்த்தைகளை மறுபடியும் படித்தவுடன் தான் மாற்றங்கள் புரிந்தன. அமெரிக்க காமிக்ஸ் வகையறாக்களை ரசிக்காத கும்பலில் நானும் ஒருவன்.

  ReplyDelete
 11. நம்ம வேட்டைக்காரன், அசல் , ஆதவன் கதையை படிச்சுபாருங்க....
  http://nee-kelen.blogspot.com/2009/04/blog-post_7629.html.
  http://nee-kelen.blogspot.com/2009/04/blog-post_29.html

  ReplyDelete
 12. தலைவரே,

  தங்கமான பதிவு. நாளை முதல் வேளையாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்று இந்த புத்தகங்களை எல்லாம் வாங்க வேண்டும்.

  அது ஏனுங்க தலைவரே, நீங்கள் பதிவிடும் புத்தகங்களில் பெரும்பான்மையானவை என்னிடம் இருப்பதில்லை? அல்லது நான் கேள்வியே படாதவையாக இருக்கின்றன.

  புலா சுலாகி,
  கவலைக்கேது பேரம், குறுகிய வாழ்வில்.

  ReplyDelete
 13. தலைவரே,

  //தயாரிப்பு : ரூபேன் வார்ஜிகுலியான்// இந்த பெயரை வார் குஜிலியான் என்று முதலில் படித்து விட்டேன்.

  நெடுநேரமாகியும் யோசனை அடங்கவில்லை. குஜிலியான் என்று யாராவது பெயர் வைப்பார்களா (அது ரசிய மொழியாக இருந்தாலும் கூட).

  இப்போது மீண்டும் வந்து படித்து சரி பார்த்த பின்னரே நிம்மதி.

  புலா சுலாகி,
  கவலைக்கேது பேரம், குறுகிய வாழ்வில்.

  ReplyDelete
 14. //குஜிலியான் என்று யாராவது பெயர் வைப்பார்களா (//

  திண்டுக்கல்லுக்கு பக்கத்தில் குஜிலியாம்பாறை என்று ஒரு ஊர் இருக்கிறது.

  திண்டுக்கல் டூ கரூர் சாலை என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 15. இது போன்ற விஷயங்களை நம்ம சங்கத்து ஆளுங்க நல்ல கவனிக்குறாங்க.


  தல, தப்பா நினைசுசுக்காதீங்க, அது உங்க சொந்த ஊருக்கு போற வழி என்பது தெரியும். இருந்தாலும் ஒரு ஜாலிக்கு போட்ட கமெண்ட்.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 16. இரும்புக்கை மாயாவி கதைகளை எந்த தளத்தில் படிக்கலாம்/

  ReplyDelete
 17. thanks for the download links.

  ReplyDelete
 18. டாக்டர் ஐயா!

  என்னடா காமிக்ஸ் டாக்டர் காமிக்ஸ் பூக்களின் இறையாண்மையில் தலையிடுகிறாரே என்று முதலில் சீற நினைத்தாலும் ருஷ்ய நாட்டின் சிறுவர் இலக்கியங்களை அறிமுகப்படுத்திய பாங்கை அறிந்ததும் கூட்டணியில் சீட்டு கிடைத்தபின் தணியும் சீற்றம் போல எனது சீற்றமும் தணித்தது.

  நானும் கூட சில பல ருஷ்ய சிறுவர் இலக்கியங்களை படித்துள்ளேன். பாதுகாத்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவை பெரிய சித்திரங்கள், கெட்டியானத் தாள், குறைவான விலை! சராசரி தமிழ் வெளியீடுகளை வாங்கும் பணத்தில் ஒரு பெரிய ருஷ்ய புத்தகத்தை வாங்கிவிடலாம்.

  //உலகமயமாக்கலுக்குப்பின் வந்த அமெரிக்கப் பதிப்பாளர்களின் தரமற்ற, விலையுயர்ந்த, வணிக நோக்கம் மட்டுமே கொண்ட புத்தகங்களினால் இவற்றின் மவுசு குறைந்தாலும் நம் நெஞ்சங்களில் எந்நாளும் நீங்கா இடம் பெற்றிருக்கும்!//

  இங்கு கூட கொள்ளை விலையில் விற்கும் ஆங்கில காமிக்ஸ்களுடன் நமது இதழ்கள் போட்டி போட முடியவில்லையே!


  //அவரோ கடல்! நானோ வெறும் கானல் நீர்//

  இன்னமும் இந்த ஊரு இப்படிதான் நம்புதா? கொஞ்சம் பொறுமய்யா..! கூடிய விரைவில் ஒரு பதிவை போட்டு விடுகிறேன். (போகிறப் போக்கை பார்த்தால் பேரை காப்பாத்தறதே பெரும்பாடாக போய்விடும் போல இருக்கிறது!)

  //சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி திரு.அய்யம்பாளையம் லெட்சுமனன் வெங்கடேஸ்வரன்//

  படுத்தாராங்கைப்பா...

  //சிறு வயதில் நான் கூட சில பல ருசிய சிறுகதை தொகுப்புகளை படித்துள்ளேன் ஆனால், காலப் போக்கில் இடம் பெயரும்போதெல்லாம் சில பல புத்தகங்களை இழந்ததால் இன்று நான் இதனை போன்ற பல அறிய பொக்கிஷங்களை இழந்து நிற்கிறேன்.//

  விஸ்வா! இடம்பெயர்வு எப்போதும் வலித் தரக்கூடியதுதான். நாம் புத்தகங்களைதான் இழந்தோம். ஈழத் தமிழர்கள் உறவையும் உயிரையும் அல்லவா இழந்து திரிகிறார்கள்.


  //நெடுநேரமாகியும் யோசனை அடங்கவில்லை. குஜிலியான் என்று யாராவது பெயர் வைப்பார்களா (அது ரசிய மொழியாக இருந்தாலும் கூட)//

  ஐயா புலா சுலாகி!

  இதைதான் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது என்று சொல்வார்களோ!
  எனக்கும் ஒரு அடங்காத ஓசனை! 'புலா சுலாகி' என்று யாராவது பெயர் வைப்பார்களா என்ன? (அது புனைப்பெயராக இருந்தாலும் கூட)

  உண்மையில் திருச்சியில் 'குஜிலித் தெரு' என்று ஒரு தெரு உண்டு. அங்குதான் நமது லயன் குழும இதழ்கள் கிடைக்கின்றன என்பது கூடுதல் செய்தி!

  ReplyDelete
 19. Hi Sathish,
  It is very nice to read this article. It reminds me the Russian books I read, in my childhood days...

  விளையாட்டுப் பிள்ளைகள்
  Meesha Samaitha Pongal and Thurusekku are my favourite in that list...
  Niklai Nosav's stories are very nice...
  We should not forget about Mr. பூ. சோமசுந்தரம்
  who has translated the stories in Tamil..

  மூன்று தடியர்கள் - Is kind of a novel for the kids
  One more book "Navarathina Malai", which has russian fairy tales also worth to read.

  Hmm.. my favourite russian novels are listed below:
  Jameela,
  Vidivelli,
  Paattisaikkum Paiyangal (Choir boys),

  Regards,
  Mahesh

  ReplyDelete
 20. அருமையான பதிவு! படங்கள் எல்லாம் அமர்க்களம். இங்குள்ளவற்றில் நான்கைந்து புத்தகங்கள் என்னிடம் உள்ளன என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறேன் (ஆங்கிலத்தில்தான்). ஆங்கிலப் பதிப்புகளைக் கூட இணையத்தில் சிரமப்பட்டால் குறைந்த விலைக்கும் வாங்கிவிடலாம், தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதேயில்லை. :-(

  ReplyDelete
 21. Sathish,

  Thanks for providing down load links ....
  It's so nice to read these books again..

  Regards,
  Mahesh

  ReplyDelete
 22. download link for russian folk tales: http://www.mediafire.com/?xwdmvtodihm

  ReplyDelete
 23. ஆஹா நண்பரே கடலில் திமிங்கலம் இணையைக்கண்டது போல உங்களை கண்டு நான் சந்தோசப்படுகிறேன். என் ரஷ்யா சிறுவர் இலக்கியங்களை ரசிப்பதற்கு ஒரு சிறு வட்டம் உள்ளதைக்கண்டு மகிழ்ச்சி கொண்டேன்.

  நான் வாங்க தவறிய பாட்டிசைக்கும் பையன்கள்,செர்யோசா, குழந்தைகளும் குட்டிகளும், போன்ற நாவல்கள் PDF வடிவத்தில் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.
  அதற்க்கு என்று ஏதும் இணையத்தளம் இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பிளிஸ்.

  என் மெயில் முகவரி :

  raveendrann@yahoo.co.in .,
  nraveemdu@gmail.com

  ReplyDelete
 24. நிகலாய் நோசவின் விளையாட்டுப் பிள்ளைகள் நூலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த நூலின் பிரதி இருக்கும் தோழர்கள் தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி. சூர்யா +13195193592 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது nagappan.surya@gmail.com மின் அஞ்சல் முகவரியிலோ தெரியப்படுத்துங்கள். நன்றி.

  ReplyDelete
 25. நிகலாய் நோசவின் விளையாட்டுப் பிள்ளைகள் நூலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த நூலின் பிரதி இருக்கும் தோழர்கள் தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி. சூர்யா +13195193592 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது மின் அஞ்சல் முகவரியிலோ தெரியப்படுத்துங்கள். நன்றி.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!