Friday, November 28, 2008

லார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

வணக்கம்,

நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவராக சிறப்பாகப் பணிபுரிந்து வரும் திரு.ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்கள் அவ்வப்போது எனக்கு அனுப்பும் ரகசியத் தகவல்களில் ‘லார்கோ வின்ச்’ எனும் காமிக்ஸ் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

இத்தொடரை உருவாக்கியவர் நமக்கெல்லாம் ஏற்கெனவே பரிச்சயமான XIII-ஐ உருவாக்கிய அதே வான் ஹாம்மே தான். இதன் ஆங்கிலப் பதிப்பை நான் சில மாதங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. வான் ஹாம்மேவின் எழுத்தின் ரசிகர்களை இத்தொடர் நிச்சயம் கவரும்.

மேற்கூறிய வாசகத்தை எண்ணி (சொன்னது யாரு?) நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவரை இதைப் பற்றி ஒரு இடுகையிடுமாறு பணித்தேன்! அந்த இடுகை இதோ உங்கள் பார்வையில்! ஆங்காங்கே நானும் கொஞ்சம் “மானே! தேனே! பொன்மானே!” எல்லாம் போட்டுள்ளேன்!

எனது மொக்கை போதும். ஓவர் டு ஷங்கர் விஸ்வலிங்கம்!

 
லார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி
-ஷங்கர் விஸ்வலிங்கம்

Largo_Cதெருக்களை ஈரம் காய அனுமதிக்காத குளிர்,பெய்வதே தெரியாது தூவிக்கொண்டிருக்கும் சாரல், ஹைக்கூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகள். பிரகாசமாக ஒளியூட்டப்பட்ட புத்தகசாலைகளின் கண்காட்சி தட்டுக்களில் சம்மணமிட்ட நிலையில், இறுதியாக வந்துள்ள தன் ஆல்பத்தின் அட்டையில் தியானத்தில் ஆழ்ந்துள்ள லார்கோ வின்ச் (LARGO WINCH). சலிப்பான இவ்விலையுதிர் காலம் லார்கோவின் ரசிகர்களிற்கு உவப்பானதாக அமையும் என்பது நிச்சயம்.

பத்து பில்லியன் டாலர்கள் பெறுமதிப்பான கம்பனிகளுக்கு சக்கரவர்த்தி நீரியோ வின்ச் (NERIO WINCH), திருமணமாகதவன், வாரிசுகள் கிடையாது. தன் வாழ்வின் ஒர் முக்கிய தருணத்தில் தன் வேர்களை தேட ஆரம்பிக்கின்றான். அவன் தேடல் ஸரயேவோவில் (SARAJEVO) ஸனிட்ஸா வின்ஸ்லாவ் (SANITZA WINCZLAV) எனும் பெண்ணின் கல்லறையில் முடிவடைகிறது. அப்பெண்ணின் மகனான லார்கோ வின்ஸ்லாவ் (LARGO WINCZLAV) நகரத்தின் அனாதை இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனையே தன் மகனாக தத்தெடுத்துக்கொள்வதுடன் அவனை வளர்கும் பொறுப்பை நல்மனம் கொண்ட ஒர் தம்பதியினரிடம் ஒப்படைக்கிறான் நீரியோ வின்ச். லார்கோவிற்கு பத்து வயதாகும் போது இங்கிலாந்திற்கு கல்வி கற்க அனுப்பபடுகிறான் .

பதினாறு வருடங்களின் பின் உடல் வருத்தமுற்ற நிலையில் சந்தேகத்திற்குள்ளாகும் விதத்தில் மரணமடைகிறான் நீரியோ வின்ச். அவசரமாக கூடும் வின்ச் குழுமத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அது வரை பல நிர்வாகிகளிற்கு ரகசியமாக வைக்கப்பட்ட லார்கோ வின்ச் பற்றிய உண்மை வெளியாகிறது. நீரியோவின் முழுச்சொத்துக்களிற்கும் வாரிசாகிறான் லார்கோ வின்ச்.

தனக்காக காத்திருக்கும் பெரும் பொறுப்புகளை பற்றிய கவலையேதுமின்றி உல்லாசமாக,நாடோடியாக உலகத்தை சுற்றுகிறான் லார்கோ. இஸ்தான்புல்லில் (ISTANBUL) அவன் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் தருணத்தில் கொலைச்சதி ஒன்றில் சிக்கி சிறைக்கு செல்கிறான், சைமன் ஓவ்ரன்னாஸ் (SIMON OVRONNAZ) எனும் திருடனின் உதவியுடன் சிறையிலிருந்து தப்புகிறான். துருக்கி காவல் துறையின் K-பிரிவின் திட்டங்களை முறியடித்து தன் விமான ஓட்டியான ஃப்ரெட்டி கப்லான் (FREDDY KAPLAN) துணையுடன் துருக்கியை விட்டு தப்பி செல்லும் அவனிற்கு தன் வளர்ப்புத் தந்தையின் மரணச்செய்தி அறிவிக்கப்படுகிறது. வின்ச் குழுமத்திற்கு எதிராக லார்கோவின் அதிரடி அட்டகாசங்களும் ஆரம்பமாகிறது.

லார்கோவின் ஒவ்வொரு சாகசங்களும் இரண்டு புத்தகங்களில் கூறப்படுகிறது. முதல் புத்தகமானது லார்கோ சதிவலையில் இனி மீட்சியே இல்லை எனும் நிலையில் மாட்டிக்கொள்வதையும், இரண்டாம் புத்தகமானது அவன் எவ்வாறு சதிகளை முறியடித்து சதிக்கு பின்னுள்ள காரணிகளையும், காரணகர்த்தாக்களையும் உலகிற்கு வெளிப்படுத்துவதையும் விவரிக்கிறது. லார்கோ ஒர் சாதாரன கோடீஸ்வரனைப் போல் பெண்கள், உல்லாசம், கொண்டாட்டம் என வலம் வந்தாலும் அதிரடியான தருணங்களில் கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ இலகுவாக பயன்படுத்த தயங்காதவன். தன்னையும், தன் கம்பனிகளையும் குறிவைக்கும் எதிரிகளை சாத்தியத்தின் விளிம்பு வரை சென்று போராடுபவன். நட்பை மதிப்பவன், சொன்ன வார்த்தையை மீறாதவன். கண்ணிமைகள் மூடுவதற்குள் அழகிய பெண்களை மயக்குபவன். பெண்கள் மட்டுமல்ல வாசகர்களும் தான் லார்கோவிடம் மயங்கி போனார்கள்.

லார்கோ வின்ச்சின் பாத்திரமானது முதன் முதலாக ழான் வான் ஹாம்மே (JEAN VAN HAMME) எழுதிய நாவல்களில் அறிமுகமானது. மெர்க்யூர் டி ஃப்ரான்ஸ் (MERCURE DE FRANCE) எனும் பதிப்பகம் 1977 முதல் 1984 வரையில் அவர் எழுதிய ஆறு நாவல்களை வெளியிட்டது. நாவல்களோ, லார்கோவோ ரசிகர்களிடம் சொல்லிக்கொள்ளுமளவு பிரபல்யமடையவில்லை. ஆனால் வான் ஹாம்மே தன் மனதில் ஒர் அனலை ஊதிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அனல் 1988ல் பிலிப் ஃப்ரான்க்-ஐ (PHILIPPE FRANCQ) லார்கோ வின்ச்சின் சித்திரக்கதை உருவாக்கலில் சித்திரங்களிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவர் வேண்டிக்கொண்ட போது பற்றிக்கொண்டது. இன்றுவரை அது அனையவே இல்லை.

சோல்வே வியாபார பயிற்சிப்பள்ளியில் (SOLVAY BUSINESS SCHOOL) வான் ஹாம்மே மாணவனாக செலவிட்ட வருடங்கள் பணம் ,கம்பனிகள், நிர்வாகம் என கதையாடலில் தராளமாக அவரிற்கு உதவியிருக்கவேண்டும். பிலிப் ஃப்ரான்க்கின் சம்பவத்தை நேரில் காண்பது போன்ற யதார்த்தை தழுவிய சித்திரங்களும், மனதிலே ஒட்டிக்கொள்ளும் வண்ணத்தெரிவுகளும், தெளிவான ஆனால் படு வேகமான கதை சொல்லலும், லார்கோ வின்ச்சின் சித்திரக்கதை பாத்திரத்தை அவர் அறிமுகமான நாவல்களை விட பெரும் வெற்றியடைய செய்துள்ளது. சாதாரன வெற்றியல்ல, ஒவியர் பிலிப் ஃப்ரான்க் தற்போது லார்கோ வின்ச் ஆல்பங்களிற்கு மட்டுமே பணிபுரிந்தால் போதுமென்றளவிற்க்கான மாபெரும் வெற்றி அது.

கோடீஸ்வர மனிதர்களின் பணவெறி, அதிகார ஆசை, முன்னால் சிரித்து பின்னால் குத்தும் நற்குணம் என்பவையும், அழகான பெண்கள், அளவான செக்ஸ், அதிரடி ஆக்ஷன் ,கதைக்கு கதை நாடுவிட்டு நாடு மாற்றி புதிய காட்சி சித்திரங்களை அறிமுகப்படுத்தல் எனும் போதையேற்றும் காக்டெயில் கலவையும் வாசகர்களை கிறங்கடிக்க செய்தது என்பதில் ஜயமில்லை. லார்கோ வின்ச்சின் மகத்தான விற்பனையும், ரசிகர்களின் தொடர் வரவேற்பும் , ஆதரவும் அவர் இன்னும் வருவார் என்பதற்கு உறுதி அளிக்கும் சான்றுகளாகும்.

லார்கோ வின்ச்சின் சித்திரக்கதைகள் டுப்யீ (DUPUIS) எனும் பெல்ஜிய பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன. இதுவரை 16 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. 2005ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 500 000 பிரதிகள் விற்றுதீர்ந்திருக்கின்றன. ஆங்கில பதிப்பை சினிபுக் (CINEBOOK) வெளியிடுகிறது. லார்கோவின் வெற்றி சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. ஜெரோம் ஸால்லின் (JEROME SALLE) இயக்கத்தில், டோமர் ஸிஸ்லி (TOMER SISLEY) பிரதான வேடமேற்று நடிக்கும் "லார்கோ வின்ச்" எனும் திரைப்படம் பிரான்ஸ் திரையரங்குகளில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவருகிறது. ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பதை காண சற்று பொறுத்திருப்போம்.
 

படம் வந்தவுடன் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுமாறு அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவரை தலைமையகம் பணிக்கிறது. இது போல் மென்மேலும் பல சிறப்பான இடுகைகளைத் தொடர்ந்து வழங்குமாறு அவருக்கு கட்டளையிடப்படுகிறது!

படம் ஆங்கிலத்திலும் வருவதால் டிவிடி கிடைத்ததும் நாம் பார்த்துக் கொள்ளலாம்!

இதுவரை வெளிவந்துள்ள ஆல்பங்களின் அட்டைப்படங்கள்:

தொடர்ச்சியாக ஒரே கதையுள்ள இரண்டு ஆல்பங்களின் அட்டைப்படங்கள் ஒரே மாதிரியான வண்ணக் கலவையை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள்!

கீழ்கண்ட படங்களின் மேல் ‘க்ளிக்’கினால் அட்டைப்படத்தையும், உள்பக்கங்கள் சிலவற்றையும் காணலாம். கதைச்சுருக்கமும் உண்டு. ஃப்ரெஞ்சு மொழி தெரிந்தவர்கள் படித்து ரசித்துக்கொள்ளலாம்!

9782800117911-G9782800118321-G9782800119472-G9782800120461-G9782800121277-G9782800122014-G9782800123073-G9782800124445-G9782800126289-G9782800128498-G9782800129815-G9782800131238-G9782800133874-G9782800135366-G9782800138619-G9782800140704-G

இதுவரை வந்துள்ள ‘சினிபுக்’ ஆங்கில வெளியீடுகள்:

முதலிரண்டு பாகங்களைக் கொண்ட முதல் புத்தகம் சென்னை ஸ்பென்சர் மற்றும் நுங்கம்பாக்கம் ‘லாண்ட்மார்க்’கில் கிடைக்கும். விலை ரூ:350/- மட்டுமே. பிரதிக்கு முந்துங்கள்! நண்பர் ‘ரஃபிக்’ இதைப் பற்றி இன்னும் பதிவு போடாதது ஆச்சரியமூட்டுகிறது!

‘சினிபுக்’ வெளியீடுகள் அனைத்தும் இரண்டு பாகங்கள் கொண்ட கதைகளை ஒரே புத்தகத்தில் வெளியிடுவதால் முடிவு தெரியாமல் நாம் அல்லாட வேண்டியிருக்காது.

Largo Winch Vol1 978-1-905460-48-9 CoverR_lLargo Winch - Takeover Bid_l9781905460786_l

லார்கோவை தமிழில் ரசிக்க நமக்கெல்லாம் கொடுத்துவைக்கவில்லை. S.விஜயன் சார் மனசு வைத்தால் முடியும்! செய்வாரா?

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். “வெகுமதி” போட்டியிலும் கலந்துகொண்டு பாராட்டுக்களைப் பெறுங்கள்! ஓட்டெடுப்பு முடியும் நேரமும் வந்துவிட்டது. வாக்களிக்க விரும்புவோர் சீக்கிரம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:

  • ஆசிரியர் S.விஜயன் அவர்கள் முதன்முறையாக நண்பர்கள் ‘முதலைப் பட்டாளம்’ மற்றும் ‘ரஃபிக் ராஜா’ ஆகியோரின் காமிக்ஸ் வலைப்பூக்களில் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். படிக்க முறையே இங்கே மற்றும் இங்கே ‘க்ளிக்’கவும். வாழ்த்துக்கள் நண்பர்களே!

லார்கோ வின்ச் இணையதளங்கள்:

லார்கோ வின்ச் டிவி தொடர்:

லார்கோ வின்ச் திரைப்படம்:

லார்கோ வின்ச் திரைப்பட ட்ரைலர்:

17 comments:

  1. அ கோ தீ க தலைவரே,

    //லார்கோ வின்ச் - கோடிகளின் நாடோடி// தலைப்பே மனதை அள்ளுகிறது. இந்த புத்தகத்தை படித்த வர்களுக்கு மட்டுமே இந்த தலைப்பின் உண்மையான அர்த்தம் புரியும். அட்டகாசமான ஆரம்பம். அ கோ தீ க வின் அயல்நாட்டு தலைவர் தன்னுடைய பணியை சிரமப்பட செய்துள்ளார். அவருக்கு எம்முடைய உளம் கனிந்த மனமுவர்ந்த பாராட்டுகள். வாய்பளித்த பயங்கரவாதிக்கும் நன்றி.

    //வான் ஹாம்மேவின் எழுத்தின் ரசிகர்களை இத்தொடர் நிச்சயம் கவரும்// புதிதாக வான் ஹம்மேவை படிப்பவர்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

    //தெருக்களை ஈரம் காய அனுமதிக்காத குளிர்,பெய்வதே தெரியாது தூவிக்கொண்டிருக்கும் சாரல், ஹைக்கூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகள்// என்ன கொடுமை சார் இது? இதிலும் ஹைகுவா? கவிஞ்சர் ஜோஸ் நம் அனைவரையும் மிகவும் பாதித்துள்ளார் என்பது கண்கூடாக தெரிகிறது.

    //அதிரடியான தருணங்களில் கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ இலகுவாக பயன்படுத்த தயங்காதவன். தன்னையும், தன் கம்பனிகளையும் குறிவைக்கும் எதிரிகளை சாத்தியத்தின் விளிம்பு வரை சென்று போராடுபவன். நட்பை மதிப்பவன், சொன்ன வார்த்தையை மீறாதவன். கண்ணிமைகள் மூடுவதற்குள் அழகிய பெண்களை மயக்குபவன்// எனக்கு தான் விளம்பரம் பிடிக்காதே? பிறகு என் என்னை பற்றியே பேசுகிறீர்கள்?

    //ஜெரோம் ஸால்லின் இயக்கத்தில், டோமர் ஸிஸ்லி பிரதான வேடமேற்று நடிக்கும் "லார்கோ வின்ச்" எனும் திரைப்படம் பிரான்ஸ் திரையரங்குகளில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவருகிறது//

    உங்களுக்கு அந்த பிரதான வேடம் ஏற்பவரை பிடிக்க வில்லை என்றால் விட்டு விடலாமே? என் அவரை போய் கெட்ட கெட்ட வார்த்தைகளில் எல்லாம் திட்டி கொண்டு இருக்கிறீர்கள்? (டோமர் ஸிஸ்லி) இதில் அவர் சிறுபிள்ளை தனமானவர் என்று வேறு கூறி இருக்கிறீர்கள் (ஸிஸ்லி silly).

    //தொடர்ச்சியாக ஒரே கதையுள்ள இரண்டு ஆல்பங்களின் அட்டைப்படங்கள் ஒரே மாதிரியான வண்ணக் கலவையை கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள்// தென்னை மரத்தில் தேங்காய் தான் இருக்கும், ஆனால் வாழை மரத்திலோ வாழைக்காய் இருக்கும். அதுபோன்று உங்கள் கூற்றிலோ பல உண்மைகள் இருக்கின்றன. என்ன கண்டுபிடிப்பு, என்ன கண்டுபிடிப்பு?

    //S.விஜயன் சார் மனசு வைத்தால் முடியும்! செய்வாரா?// இந்த கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும்.

    பல மொக்கைகளை நான் என்னுடைய பின்னுட்டத்தில் கூறினாலும் உண்மையில் இந்த இடுகை வரவேற்க்கதக்க ஒன்றாகும். இந்த கதை அமைப்பு சிறப்பான ஒன்று. இதனை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகபடுத்திய எ கோ தீ க வின் அயல் நாட்டு தலைவர் திரு சங்கர் அவர்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள். வருங்கால அமெரிக்க காமிக்ஸ் ஜனாதிபதி சங்கர் வாழ்க.

    இந்த கதையை தமிழில் காண விருப்பம் உண்டா இல்லையா என்று கூட நீங்கள் ஒரு வோட்டெடுப்பு செய்யலாமே?

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  2. தலைவரே.

    இப்போது மும்பையில் நடக்கும் கலவரத்தால் தான் நீங்கள் தலைமறைவாக இருப்பதாக ஒரு பேச்சு. என்னமோ போங்கள். மற்றபடி தமிழுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தும் கதை வரிசையில் முதலாவதும், மேன்மையானதுமாகிய லார்கோ விஞ்சை வெள்ளித்திரையில் காண ஆவலாக காத்து உள்ளோம்.

    அந்த போட்டிக்கான விடை = அவர் உங்கள் கழக தலைவர்களில் ஒருவராகிய -------- ஆவார். விடையை நான் உங்களுக்கு குருன்செய்தியாகவும் அனுப்பி உள்ளேன்.

    நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  3. Hi people,

    I can see you guys are having a ball in here ! Too bad I'm no computer whiz.. I'd have loved to post in french too ! Looking at the Largo Winch episodes of the '80s brings back wonderfuly fond memories. "Le Groupe W" happens to be my personal favorite ! I still remember the strong gut feel I had about the success of the Largo Winch series - though the novel sales was skewed between absymal to worse till 1988, when we were so used to normal stuff! I'm glad my faith wasn't misplaced. Have fun ...I'll be around again soon !

    S.Vijayan (Editor)

    ReplyDelete
  4. என்ன ஒரு ஆச்சர்யம், என்னுடைய அடுத்த பதிவாக நான் போட எண்ணி இருந்த புத்தகம் லர்கோ வின்ச் தான். பிளேக்-மொர்டிமேர் கதை பற்றிய என்னுடைய பதிவு நெடு நாள் தள்ளி போனதால், அது இன்னும் செயல் வடிவத்திலேயே இருக்கிறது. கண்டிப்பாக அதை பற்றி சீக்கிரம் பதிகிறேன், பிளேக் பதிவு ஒரு வழியாக முடிந்தது, எனது வலைப்பூவை சுட்டி கண்டு, உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

    ஷங்கர் விச்வலிங்கதிர்க்கும், டாக்டருக்கும் நிறய சேதிகளுடன் பதிவை வெளியிட்டதற்கு நன்றி.

    விஜயன் இப்போது திடீர் திடீர் என்று உதயாமகி அவருடைய கருத்துக்களை வெளி இட்டு கொண்டிருக்கிறார்.... அவர் அப்படியே தொடருவார் என நம்புவோம்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  5. நண்பரே,

    பின்னிட்டிங்க. புதுப்புது எல்லைகளுக்கு காமிக்ஸ் வலைப்பூக்களை எடுத்துச் சென்றுள்ளீர்கள்.


    இந்த காமிக்ஸ் தமிழில் வெளிவர தடையாக இருப்பதாக சொல்லப்படும் காரணங்கள் (யாரால்?)

    1. செக்ஸ்
    ஜேம்ஸ்பாண்ட், மாடஸ்தி போன்ற கதைகளில் இல்லாத ஒன்றா? மேலும் இப்போதைய குமுதம், ஆனந்த விகடன் இதழ்களில் காணாததையா சித்திர கதைகளில் கண்டுவிட போகிறார்கள்? போதாக்குறைக்கு, உங்களுக்கு பிடித்த நமீதா பாட்டுகள், சிம்பு பாட்டுகள், இதையெல்லாம் பார்த்து கெட்டு விடாத இளைய தலைமுறை இந்த சித்திர கதைகளை பார்த்து கெட்டுவிட போகிறதா?

    2 கதை நீளம்

    ஐரோப்பிய மக்கள் சித்திர கதைகளின் நீளம் பெரிதாக இருந்தாலும் இரசிக்க ஆரம்பித்துள்ளார்கள். நாமும் இரசிப்பதில் என்ன தவறு? ஒரு டெக்ஸ் வில்லர் கதையை ஆறு மாதமாக நாம் படித்ததில்லையா, என்ன? வருடத்திற்கு எத்தனை தமிழ் காமிக்ஸ் படிக்கிறோம், தமிழில் ஒவ்வொரு பகுதி கதைகளும் வெளிவருவதற்காக மூன்று மாதம் கூட காத்திருக்க தயார்.

    3. கதைக்களம் வேறு

    ஜேம்ஸ் பாண்ட் என்னைக்கு டெல்லியில, சென்னையில், மதுரையில், முதுமலையில் சாகசம் புரிந்திருக்கிறார்? கேப்டன் டைகர் வத்தலகுண்டிலா சாகசம் புரிந்திருக்கிறார்?

    இது போல் வேறு தடைகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கள். அதுவும் ஒன்றுமில்லாததாகதான் இருக்கும்.

    தமிழில் வெளிவரும் காமிக்ஸ் ஒரு புதுப் பொலிவுடன் வர இதுவே தருணம் என தோன்றுகிறது. கருப்பு வெள்ளையில் 100 பக்கங்கள் என்பதிலிருந்து மாற வேண்டியது அவசியம்.

    இது போன்ற வலைப்பூக்கள் அந்த அவசியத்தை தொடர்ந்து உணர்த்தி கொண்டேயிருக்கும். இதில் எழுதி வரும் நண்பர்கள் கடுமையான பணிச்சுமை கொண்டவர்கள் என்பது எனக்கு தெரியும். இருப்பினும், சித்திர கதைகள் மேல் அவர்கள் வைத்துள்ள ஆர்வம் மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

    Hats off to you guys!

    ReplyDelete
  6. செக்ஸ்/கதை நீளம்/கதைக்களம் = இவை மூன்றுமே தடை அல்ல என்பது எனது எண்ணம். கதைகளுக்கான உரிமை என்ன விலையில் கிடைக்கும் என்பதே இங்குள்ள பிரச்சினை ஆகும். இதனை நாம் உணர வேண்டும்.

    செக்ஸ் = இரத்தப் படலம் கதையில் பதின்மூன்றாம் பாகத்திற்கு பிறகு இல்லாத செக்ஸ்'ஆ? நாம் அதனை தணிக்கை செய்ய முடியாதா? தணிக்கை என்ற ஒரு ஆயுதம் இல்லாத போது இவ்வாறு கூருநாள் அதில் ந்யாயம் இருக்கும். ஜேம்ஸ் பாந்து கதையையே நாம் தணிக்கை செய்து வெளியிடும் போது நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்றே கூறலாம்.

    கதை நீளம் = டெக்ஸ் வில்லர் / ப்ளுஎபெர்ரி / இரத்தப்படலம் இன்னும் பல உள்ளன.

    கதைக்களம் = இதை தான் நமது ஆசிரியர் கூறுவர் என்பது எனது கருத்து. அந்த கருத்தில் சிறிது உண்மையும் உள்ளது. இது போன்ற கதைகளை எந்த அளவிற்கு வாசகர்கள் வரவேற்பார்கள் என்பது கேள்விக்குறியே. இந்த இணைய தளத்தில் உள்ள இருபது வாசகர்களை கருத்தில் கொள்ளாமல் நாம் ஒரு பெரிய வட்டத்தை உணர்ந்து செயல் பட வேண்டும்.

    முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்.

    ReplyDelete
  7. இது வேலைக்கு ஆகாது சாமியோவ். மறுபடியும் இன்னொரு இரத்தப் படலம் போன்ற தொடரா? நம்மாளு விஜயன் நம்மளை எல்லாம் இன்னும் இருவது வருஷம் இழு இழுன்னு இழுதுடுவாரே?

    ReplyDelete
  8. From The Desk Of Rebel Ravi:

    sankar,

    good intro about a new series to tamil readers. heard about this one & bought one set today. very nice reading. however, the panes will require a bit of censorship / editing so as to make it available in tamil.

    the best thing about these series is that almost all of them are two part stories & hence we may not wait for 20 years as someone as mentined in the above comment.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  9. அன்புடையீர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு பிரத்யேக தமிழ் வலைபூ கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது http://ranicomics.blogspot.com

    வருகை தந்து, தங்கள் மேன்மையான கருத்துக்களை பதியுமாறு கேட்டு கொள்கிறோம்.

    ReplyDelete
  10. காமிக்ஸ் உலக நண்பர்களே,

    தமிழக காமிக்ஸ் உலகில் உள்ள பல தவறான கருத்துக்களை மாற்றவும், உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை உங்களுக்கு எடுத்து காட்டவும் ஒரு புதிய வலைப்பூவை துவக்கி உள்ளேன்.

    சற்றும் சிரமம் பாராமல் வந்து உங்களின் மேலான எண்ணங்களை தெரிவியுங்களேன்.

    அன்புடன்,

    உலக காமிக்ஸ் ரசிகன்.
    Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  11. என்ன இது அநியாயமாக உள்ளது? யாரும் இன்னும் இந்த வெகுமதி போட்டிக்கு பதில் சொல்லவில்லை? அ.கொ.தீ.க வின் தலைவராகிய நான் விண்வெளி கொள்ளையர் என்ற கதையில் நாந்தான் எதிர்-கதாநாயகனாக வருவேன். இந்த உலகம் என்னை அதற்குள் மறந்து விட்டதா?

    ReplyDelete
  12. All,
    Largo Winch is glueing us as XIII did...
    Quite interesting graphic novels and it's wonderfully reviewed here..

    Friends,
    When are we going to get reviews regarding Captain Prince, Wing Commander George and John Silver (alias John Havoc) here....

    Rafeek/Viswa/Sathish,
    We are expecting more from you....

    Evvalovo Pannitinga.... Idha Panna Mattengala?

    With warm regards,
    Mahesh kumar

    ReplyDelete
  13. நண்பரே,

    சரியான நேரத்தில் வந்த சரியான இடுகை இது. மாற்றங்களை நோக்கி செல்லுன் தமிழ் காமிக்ஸ் உலகில் நீங்கள் சரியான ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு,

    என்னை நீங்கள் மன்னிக்க வேண்டுகிறேன். உங்களை பார்த்து நானும் ஒரு வலை பூவை ஆரம்பித்து விட்டேன். அதனால் எனக்கு பின்னுட்டம் இடும் அனைவரும் என்னை கிண்டல் செய்கின்றனர். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை புண்படுத்தும் விதத்தில் எதனையும் செய்ய வில்லை. இனிமேலும் உங்கள் சாயல் இல்லாமல் நான் என்னுடைய வலைப்பூவை இயக்க முயற்சி செய்கிறேன்.

    தொடருங்கள் உங்கள் சேவையை.

    ReplyDelete
  15. Hi,

    Nice update on the largo winch series. very good. is there any other series just like largo winch by van hamme? keep us informed on this.

    Cheers.
    Udhayam Sami.

    ReplyDelete
  16. hi there,

    nice update. been so long that i was out of blogosphere. many many new comers.

    all the best.

    ReplyDelete
  17. உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!