“நான் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்!”
-கவுண்டமணி (படம் – சூரியன்)
வணக்கம்,
தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அடியேனின் குடியரசு தின மற்றும் தியாகிகள் தின நல்வாழ்த்துக்கள்! ‘வெகுமதி’ போட்டிக்கு விடையளித்த நண்பர் செழியன்-க்கு பாராட்டுக்கள்! பல முறை சரியான பதிலைக் கூறியுள்ள ஒரே நபர் அவர்தான் என்பதால் அவருக்கு சிறப்புப் பரிசொன்று ரகசியத் தபாலில் அனுப்பப் பட்டுள்ளது! பிரித்த ஐந்தாவது வினாடி வெடிக்கும் ஒரு வெடிகுண்டு தான் அது!
“ஹா! ஹா! ஹா!” -(கொடூர, வில்லத்தனமான சிரிப்பு)
கும்மியடிக்கும் ‘போண்டா’, ‘பஜ்ஜி’ மற்றும் ‘கொய்யா’ வாயனுங்களுக்கு ஒரு எச்சரிக்கை! தொடர்ந்து அடுத்தடுத்தப் பதிவுகளிலும் இதேப்போல் வந்து கும்மியடித்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்! கும்மி அடிக்காவிட்டாலோ விளைவுகள் இன்னும் கூட விபரீதமாக இருக்கும்! ஜாக்கிரதை!
அயல்நாட்டு சதி காரணமாகத் தலைமையகத்தில் சில நாட்களாக இனையத் தொடர்பு வசதி துண்டிக்கப் பட்டிருந்தது. கிடைத்த இந்த சந்தில் சிந்து பாடும் கயவர் கூட்டம் குடியரசு தின சிறப்புப் பதிவு இடாததாகக் காரணம் காட்டி என்னை ‘தேசத் துரோகி’ என முத்திரை குத்தி நாடுகடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக நம்பத்தகுந்த உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன!
ஆனால் அ.கொ.தீ.க. தலைவரிடம் நடக்குமா? அயல்நாட்டுச் சதியை அடியோடு அழித்ததுடன் அதிரடியாக ஒரு புதுப் பதிவுடன் உங்களை இதோ மீண்டும் சந்திக்கிறேன்! இதை முன்னிட்டே மேற்குறிப்பிட்டுள்ள கவுண்டரின் ‘பன்ச்’! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல!
மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு வருவோம்!
குடியரசு தினமென்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சிறுவயதில் நாம் தூர்தர்ஷனில் கண்டுகளித்த நம் நாட்டு ஜனாதிபதி அன்று பங்கெடுத்துக் கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகளேயாகும். ஜனாதிபதி தேசத்திற்காக உயிர்துறந்த நமது போர்வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல், கொடியேற்றம், ஜனாதிபதிக்கு முப்படைகளும் வழங்கும் அணிவகுப்பு மரியாதைகள், கொடியிறக்கம் மற்றும் நாளின் இறுதியில் படைகள் கோட்டைக்கு பின்வாங்கும் தாளம் சேர்ந்த அணிவகுப்புக்கள் கண்களில் இன்னும் நிற்கிறது!
இந்தத் தருணத்தில் நமது தமிழ் காமிக்ஸ்களில் வெளிவந்த போர் சித்திரக் கதைகள் பற்றிய சிறப்புப் பதிவொன்றை இடலாம் என்ற எண்ணத்தின் விளைவாகவே இந்த இடுகை! இதற்கு நாம் சரித்திரத்தில் சற்றுப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்!
போர் சித்திரக் கதைகள் – மூலம்:
முத்துவின் ஆரம்பகால இதழ்களின் மூலங்கள் இங்கிலாந்தின் ஃப்ளீட்வே நிறுவனத்தினர் 1960களில் வெளியிட்ட டைஜஸ்ட் வடிவிலான ஃப்ளீட்வே சூப்பர் லைப்ரரி சித்திரக் கதைகளேயாகும் என்பது நம் அனைவருக்கும் இப்போது பரிச்சயமானதே!
இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், ஜானி நீரோ, லாரன்ஸ் & டேவிட் ஆகிய அற்புத கதாபாத்திரங்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்த புத்தகங்கள் அவை! அதே நிறுவனம் போர் சித்திரக் கதைகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு மாதாந்திரப் புத்தகத்தில் இரண்டு சிறந்த தொடர்களை அதே சமயத்தில் வெளியிட்டன.
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற காரணத்தால் இங்கிலாந்தில் எப்போதுமே போர் சித்திரக் கதைகளுக்கு சிறந்த வரவேற்பு உண்டு. கணக்கிலடங்கா பெயர்களில் பல போர் கதைகள் வெளிவந்தன. இவற்றில் சுமார் ரகத்தில் தேறுவது சில கதைகள் மட்டுமே. எண்ணிலடங்கா போர் கதைகளில் நமக்கு பரிச்சயமான சில போர் கதைகளைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஃப்ரண்ட்லைன் (FRONTLINE) தொடர் என அழைக்கப்பட்ட அந்தப் புத்தகங்களில் நமக்கு மிகவும் பரிச்சயமான இரண்டு கதானாயகர்களின் சாகஸங்கள் மாதந்தோறும் வெளிவந்தன! அவை MADDOCK’S MARAUDERS மற்றும் SEARGENT IRONSIDE ஆவர்! இவற்றில் MADDOCK’S MARAUDERS-ஐ நாம் லயன் காமிக்ஸ் மூலம் மின்னல் படை என்ற பெயரில் அறிவோம். SEARGENT IRONSIDE-ஐ நாம் சார்ஜண்ட் தாமஸ் என்று அறிவோம்.
இவை 13 (மின்னல் படை) + 13 (சார்ஜண்ட் தாமஸ்) என மொத்தம் 26 கதைகள் வெளிவந்துள்ளன. இவை யாவும் 132 பக்கங்கள் கொண்ட கதைகள். இவற்றில் மூன்று கதைகள் நமது லயனில் வெளிவந்துள்ளன.
இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து ATTACK PICTURE LIBRARY எனும் ஃப்ளீட்வே நிறுவனத்தின் மற்றொரு டைஜஸ்ட் வடிவ 64 பக்கங்கள் கொண்ட மாதாந்திர காமிக்ஸில் இவ்விரு நாயகர்களின் சாகஸங்களும் தொடர்ந்து வெளிவந்தன. இதில் மின்னல் படையினரின் லயனில் வெளிவந்த பெரும்பாலான கதைகள் இடம்பெற்றன.
மின்னல் படை:
மின்னல் படை என்பது எவராலும் செய்து முடிக்க இயலா காரியங்களைச் செய்து முடிக்கும் நான்கு தீரர்களைக் கொண்ட அதிரடிப் போர்ப்படையாகும். அவர்கள்-
- கேப்டன் மாத்யூஸ் (CAPTAIN MATT MADDOCK) – அணித் தலைவர். பிரிட்டனைச் சேர்ந்த மாவீரர், மதியூகியும் கூட.
- ஜான் ஸ்மித் (JAN SMIT) – டச்சுக்காரன். மாமிச மலை, சற்றே மந்த புத்திக்காரன்.
- ஜூல்ஸ் கார்சியா (JULES GARCEAU) – ஃப்ரெஞ்சுக்காரன், அணியின் காமெடியன். எப்பேர்பட்ட கஷ்டத்திலும் எல்லோரையும் சிரிக்க வைத்து துயர்துடைப்பதில் வல்லவன். குறிப்பாக ஜான் ஸ்மித்தின் காலை வாருவதில் இவனுக்கு அலாதி பிரியம்.
- மிக் பால்ஸ்கி (MICK PAULSKI) – போலந்து நாட்டவன், முன்னாள் அரச வம்சாவழியினன். நாஜிக்கள் தனது நாட்டுக்கு இழைத்த கொடுமைகளுக்காக அவர்களை கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் பழிவாங்கத் துடிக்கும் இளைஞன்.
லயனில் இதுவரை மின்னல் படையினரின் கதைகள் மொத்தம் 5 வந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
- லயன்#92 – ராக்கெட் ரகசியம்!
- லயன்#95 – முகமில்லா மாயாவி!
- லயன்#105 – மரண மண்டலம்!
- லயன்#112 – லயன் TOP 10 ஸ்பெஷல் – புரட்சிக்கொரு பயிற்சி!
- லயன்#125 – மேகக்கோட்டை மர்மம்!
லயன்#92 – ராக்கெட் ரகசியம்!
மின்னல் படையினர் லயனில் அறிமுகமான முதல் சாகஸம்!
லயன்#92 – ராக்கெட் ரகசியம்! - முன்னட்டைப்படம் | லயன்#92 – ராக்கெட் ரகசியம்! – பக்கம் 3 |
ஐரோப்பாவின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானி ஜெர்மானியர்களின் வசம் சிக்கிக் கொண்டு விட்டார். அவரை உடனடியாக மீட்டாக வேண்டும். படு ஆபத்தான பணி. எனவே, நெஞ்சுரம் மிக்க ‘மின்னல் வீரர்கள்’ வசம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. விஞ்ஞானியை மின்னல் படையினர் எப்படி மீட்டார்கள் என்பதே கதை.
Attack Picture Library - Holiday Special (1982) - Back Cover | Attack Picture Library - Holiday Special (1982) - Maddock's Marauders - Freedom March |
இக்கதை ஆங்கிலத்தில் ATTACK PICTURE LIBRARY – HOLIDAY SPECIAL (1982)-ல் மறுபதிப்பாக வந்தது. அட்டகாசமான ஆக்ஷன் கதை. ஆனால் ஒரே குறை இதன் சைஸ்தான். பாக்கெட் சைஸ் என்ற பெயரில் தீப்பெட்டியை விட சற்றே பெரிய சைஸில் வந்த இக்கதையைப் படிக்க பூதக்கண்ணாடி தேவைப்படும். விலையைக் கட்டுக்குள் வைக்க இவ்வாறெல்லாம் செய்ய வேண்டியதாகிவிட்டது என ஆசிரியர் திரு.S.விஜயன் கூறுவது சப்பைக்கட்டு.
லயன்#95 – முகமில்லா மாயாவி!
பிரிட்டிஷ் இராணுவத் தலைமையகத்தில் புல்லுருவி ஒருவன் ஜெர்மானியரின் கையாளாக செயல்பட்டு வந்ததால் அவர்களுடைய இரகசிய திட்டங்களை எதிரிகள் முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த விபரீதமான பின்னணியில், மேலிடத்து உத்தரவின்படி ‘மின்னல் படை’ என்று பெருமையாக பேசப்பட்ட அதிரடிப்படை வீரர்களை யுத்த களத்திற்கு வழி நடத்திச் சென்ற காப்டன் மாத்யூஸ், எதிரிகள் விரித்திருந்த வலையில் வீழ்ந்து, அல்லல் பட்டு… எப்படி தப்பி வந்தனர் என்பதே கதை.
லயன்#95 – முகமில்லா மாயாவி! – முன்னட்டைப்படம் | லயன்#95 – முகமில்லா மாயாவி! - உள்பக்கங்கள் |
80பக்கங்கள் கொண்ட இக்கதை ஒரிஜினலாக 120 பக்கங்கள் கொண்ட FRONTLINE தொடரில் வந்திருக்க வேண்டும். நமது ஆசிரியர் திரு.S.விஜயன் விலைக்குள் பக்கங்களை அட்க்கக் கொண்ட முயற்சியாக படங்களை சுருக்கியிருக்கலாம்.
என்னிடம் இக்கதையின் ஒரிஜினல் இல்லை. ஆகையால் படங்கள் வெளியிட இயலவில்லை. மன்னிக்கவும்!
லயன்#105 – மரண மண்டலம்!
1944ம் ஆண்டு! இரண்டாவது உலகப் போர் முடிவத்ற்கு சில மாதங்களே இருந்த சமயம் அது! நேச நாடுகளின் ராணுவத் தலைமையகத்திற்கு புதிரானதொரு முக்கிய தகவல் வந்தது. அதைத் துப்பறியும் பொறுப்பு “மின்னல் படை” என்று பெருமையாக பேசப்பட்ட அதிரடிப்படை வீரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது..!
லயன்#105 – மரண மண்டலம்! - முன்னட்டைப்படம் | லயன்#105 – மரண மண்டலம்! - உள்பக்கங்கள் |
80பக்கங்கள் கொண்ட இக்கதையும் FRONTLINE தொடரில் வந்திருக்க வேண்டும். இக்கதையின் ஒரிஜினலும் என்னிடம் இல்லை. மன்னிக்கவும்!
லயன்#112 – லயன் TOP 10 ஸ்பெஷல் – புரட்சிக்கொரு பயிற்சி!
இரண்டாவது உலகப் போரில், நேச நாட்டுப் படைகளிடம் நாஜிகள் சரணடைவதற்கு முன்பே பல இடங்களில் பல தோல்விகளைத் தழுவினார். நாஜிப் படையினரால் அடக்கியாளப்பட்ட ஐரோப்பிய மக்கள் சுதந்திரம் பெறப் போராடினார். அப்படிப்பட்டதொரு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் “மின்னல் படையினர்” என்று அழைக்கப்படும் அச்காய அதிரடிப்படை வீரர்கள் “புரட்சிக்கொரு பயிற்சி” தரும் ஆசான்களாகவும் மாற நேரிட்டது!
லயன்#112 – லயன் TOP 10 ஸ்பெஷல் – அட்டைப்படம் |
லயன்#112 – லயன் TOP 10 ஸ்பெஷல் – கதை#9 - புரட்சிக்கொரு பயிற்சி! |
லயன் TOP 10 ஸ்பெஷலில் 10 கதைகளில் ஒன்றாக வந்த இக்கதை ஒரிஜினலில் 60 பக்கங்கள் கொண்டது. படங்களைச் சுருக்கி 30 பக்கங்களில் க்ரைம் நாவல் சைஸில் லயனில் வந்தது.
Attack Picture Library - Holiday Special (1984) - Cover | Attack Picture Library - Holiday Special (1984) - Maddock's Marauders - Patriot Army |
இக்கதை ஆங்கிலத்தில் ATTACK PICTURE LIBRARY – HOLIDAY SPECIAL (1984)-ல் மறுபதிப்பாக வந்தது.
லயன்#125 – மேகக்கோட்டை மர்மம்!
ஆஸ்ட்ரிய ஆல்ப்ஸின் மனித நடமாட்டமில்லாத பனிப்பரப்பின் கீழே பிரம்மாண்டமான கோட்டை ஒன்று ஒளிந்து கிடப்பதை ஒரு இத்தாலிய படைப்பிரிவு தற்செயலாக கண்டுபிடித்தது. முற்றுகையிடப்பட்டால் பத்தாண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டிருந்த அந்த உறுதியான கோட்டை அடால்ஃப் ஹிட்லருக்கும் அவரது மெய்க்காவல் படைக்கும் புகலிடமாகும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அதை அழிக்கும் பொறுப்பு “மின்னல் படை”யிடம் ஒப்படைக்கப் படுகிறது.
லயன்#125 – மேகக்கோட்டை மர்மம்! - முன்னட்டைப்படம் | லயன்#125 – மேகக்கோட்டை மர்மம்! – பக்கம் 5 |
64 பக்க ஒரிஜினல் கதை, 40 பக்கங்களில் வந்தது. கூட போனஸாக கேப்டன் பிரின்ஸ் சிறுகதை ஒன்றும் வந்தது. இக்கதை அலிஸ்டர் மெக்லீன் எழுதி, ரிச்சர்ட் பர்ட்டன், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இனைந்து மிரட்டிய WHERE EAGLES DARE கதையை தழுவியது என சொன்னால் அது மிகையாகாது.
Attack Picture Library - Holiday Special (1982) - Front Cover | Attack Picture Library - Holiday Special (1982) - Maddock's Marauders - The Last Stronghold |
இக்கதை ஆங்கிலத்தில் ATTACK PICTURE LIBRARY – HOLIDAY SPECIAL (1982)-ல் மறுபதிப்பாக வந்தது.
இதர கதைகள்:
லயன்#67 - எமனுக்கு எமன்!
சார்ஜண்ட் தாமஸ் (TOP SERGEANT IRONSIDE)-ஐ நமக்கு அறிமுகப் படுத்திய அற்புதக் கதை.
லயன்#67 - எமனுக்கு எமன்! - முன்னட்டைப்படம் | லயன்#67 - எமனுக்கு எமன்! – பக்கம் 3 |
ஒரு படைத்தலைவன் தனது வீரர்களை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதற்கு உதாரணப் புருஷனாகத் திகழும் சார்ஜண்ட் தாமஸ் ஒரு நாஜி ஜெனரலின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்கிறார். அவரைப் பழிவாங்க அவரது படைப்பிரிவு எங்கு சென்றாலும் விடாது தாக்குதல் நடத்துகிறான் ஜெனரல் ஹிஞ்சர்மேன். தனது படைப்பிரிவைக் காக்க தனது உயிரை துச்சமாக மதித்து எதிரிகளிடம் சரணடையச் செல்லும் தாமஸைப் பின் தொடர்ந்து வரும் அவரது படைப்பிரிவினர் அவரைத் தடுத்து அவருடன் ஜெர்மானியர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். தப்பி செல்லும் அவர்களை பியரி எனும் ஃப்ரெஞ்சுப் புரட்சிப்படை உறுப்பினர் அடைக்கலம் அளித்துக் காக்கிறார். ஆனால் பியரி ஜெனரல் ஹிஞ்சர்மேனிடம் சிக்கிக் கொள்கிறான். மரண தண்டனை அளிக்கபட்டு சாவை எதிர்நோக்கியிருக்கும் பியரியைக் காக்க விரைகிறார் தாமஸ். பியரியை தாமஸ் காப்பாற்றினாரா? விடையை புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்க.
Fleetway Super Library - Frontline Series No.16 - Top Sergeant Ironside - Dead or Alive - Cover | Fleetway Super Library - Frontline Series No.16 - Top Sergeant Ironside - Dead or Alive - Page 3 |
இந்த அற்புதக் கதை ஆங்கிலத்தில் FRONTLINE தொடரில் வெளிவந்தது. தமிழில் இந்தக் கதையை வெளியிட்ட ஆசிரியர் திரு.S.விஜயனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் பாக்கெட் (தீப்பெட்டி) சைஸில் வெளியிட்டதால் பாராட்டுக்களைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
லயன்#69 – புதையலை தேடி...! - எதிரியின் கோட்டையில்…!
ராணுவ ரகசியங்கள் பலவற்றை அறிந்த ஒரு ஆஸ்திரேலிய அரசாங்க ஊழியன் ஜப்பனியர்கள் ஹாங்காங்-ஐ முற்றுகையிட்ட போது கர்னல் வடனாபே எனும் கொடியவனிடம் சிக்கிக் கொள்கிறான். அவனை மீட்க ஒரு விசித்திரப் படை புறப்படுகிறது.
- ஷங்காய் ஜிம்மி – ஹாங்காங் போலீஸ் துப்பறிவாளர்
- கடலோடி தாம்ஸன் – கைதி
- ஃபேபியன் ஸ்மித் – பல்கலைக்கழகப் பேராசிரியர்
- சார்லி ஸுஸூகி – ஜூடோ பயிற்சியாளர்
- சார்ஜண்ட் டெட் ஹார்மன் – கமாண்டோ
- சார்ஜண்ட் ஜிப்ஸி கோல்ஸ் – கமாண்டோ
லயன்#69 – புதையலை தேடி...! - முன்னட்டைப்படம் | லயன்#69 – புதையலை தேடி...! - எதிரியின் கோட்டையில்…! |
இன்னுமொரு அற்புதச் சித்திரக் கதை. ஆனால் மீண்டும் தீப்பெட்டி சைஸ். அட்டையில் உள்ள புதையலை தேடி..! கதை கொசுறாக வரும் ஒரு மொக்கை கதை (மீட்போர் ஸ்தாபனம்).
Battle Picture Library - Holiday Special - Cover | Battle Picture Library - Holiday Special - In Enemy Hands |
இக்கதை ஆங்கிலத்தில் BATTLE PICTURE LIBRARY – HOLIDAY SPECIAL-ல் மறுபதிப்பாக வந்தது.
ராணி காமிக்ஸ்:
ராணியிலும் சில போர் சித்திரக் கதைகள் வெளிவந்துள்ளன. அனைத்துமே அற்புதமான சித்திரக் கதைகள். நண்பர் ரஃபிக் இவற்றைப் பற்றி விரைவில் பதிவிடக் கூடும் என்பதால் நான் பெரிதாக எதுவும் கூற விரும்பவில்லை. அட்டைப் படங்களை மட்டும் இப்போதைக்கு கண்டுகளியுங்கள்!
- ராணி#18 – கொலை வாரண்ட்
- ராணி#26 – ராணுவ ரகசியம்
- ராணி#48 – கூர்க்கா வீரன்
- ராணி#397 – அதிரடிப் படை
இவை தவிர லயனில் அதிரடிப் படை, பெருச்சாளிப் பட்டாளம், இரும்புக்கை நார்மன் ஆகியோரின் சாகஸங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவையெல்லாம் தொடர்கதைகளாக வந்தவை. ஆகையால் அவற்றைப் பற்றி வரும் பதிவுகளில் காண்போம்.
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். ‘எமனுக்கு எமன்’ ஆங்கிலப் பதிப்பு பற்றி தகவல்கள் அளித்த நண்பர் முத்து விசிறி-க்கு நன்றி.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு.:
- தமிழ் காமிக்ஸ் வலைஞர்கள் பலர் தற்போது முன்னோட்டம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எதிர்பார்ப்பைக் கூட்டி பரபரப்பை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. மொக்கை திரைப்படங்களுக்கே பயங்கரமாக ட்ரைலர் போடும் போது நாம் முன்னோட்டம் போடுவதில் எவ்வித தவறுமில்லை எனக் கருதுகிறேன். ஆனால் நான் ஏன் இன்னும் முன்னோட்டம் போடுவதில்லை என்று கேட்டால், அதற்கு எனது உலகப்புகழ் பெற்ற சோம்பேறித்தனமே காரணம் என இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
- கிங் விஸ்வா உருப்படியாக ஒரு பதிவை இட்டுள்ளார். கொள்ளைக்காரக் கார் நம்மை நமது பள்ளிப் பருவத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்கிறது.
- கனவுகளின் காதலர் லயனில் பல காலமாக விளம்பரம் மட்டுமே செய்யப்பட்ட கோட் நேம் மின்னல் பற்றி அற்புதமாகப் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக அவரது பதிவுகளில் கவிதைப் போட்டி வேறு அறிவித்து அனைவரையும் கவிஞராக்கி கதிகலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது உப்புக் கடல் பாடல் பதிவையும் படிக்கத் தவறாதீர்.
- க.கொ.க.கூ. மதியில்லா மந்திரி மற்றும் ரகசிய ஏஜண்ட் ரஜினி (முன்னோட்டம்) பற்றி பதிவுகள் இட்டுள்ளார். ரகசிய ஏஜண்ட் ரஜினி ஆர்வத்தைத் தூண்டுகிறது.
- ரஃபிக் ராஜா நமக்கெல்லாம் மிகவும் பிடித்த TINKLE கதாபாத்திரங்களான காக்கை காளி, சுப்பாண்டி மற்றும் வேட்டைக்கார வேம்பு பற்றி பதிவிட்டுள்ளார். நம்மை சிறுவயதுக்கே அழைத்துச் செல்லும் இன்னொரு அற்புதப் பதிவு.
- ப்ரூனோ ப்ரேசில் சிலபல அரிய மினி லயன், திகில் அட்டைப்படங்களை வெளியிட்டு நமது காதுகளையெல்லாம் புகைய வைக்கிறார். படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்.
- வேதாள நகரம் விரைவில் முடியப் போகிறதாம். சேதி கேட்ட ‘முடி’சூடிய மன்னர் ஒருவர் ரொம்பவே மகிழ்ந்ததாகப் பட்சி ஒன்று சொல்லியது.