Saturday, April 11, 2009

முத்து ஸ்பெஷல்!

வணக்கம்,

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அடியேனின் புனித வெள்ளி, மற்றும் உயிர்த்த நன்ஞாயிறு நல்வாழ்த்துக்கள்!

கோடை விடுமுறைகள் ஆரம்பித்துவிட்டன. இந்த காலகட்டத்தில் நம் நினைவில் நிற்பதெல்லாம் சிறுவயதில் நாம் படித்து ரசித்து அகமகிழ்ந்த கோடை மலர்கள் தான். ஆகையினால் இந்தக் கோடைக் காலத்தின் வெம்மையைப் போக்கத் தமிழில் வெளிவந்த கோடை மலர்கள் பற்றிய பதிவுகள் அடுத்தடுத்து வந்து உங்களை அதிரடியாகத் தாக்கத் தயாராக இருக்கின்றன, உஷார்!

இந்தப் பதிவிற்கு நான் தேர்ந்தெடுத்துள்ள கோடை மலர், முத்து#167-முத்து ஸ்பெஷல்!

முத்து#167 - முத்து ஸ்பெஷல்! - அட்டைப்படம்முத்து#167 - முத்து ஸ்பெஷல்! – அட்டைப்படம்

அட்டைப்படத்தை ‘க்ளிக்’கிப் பெரிதாக்கி உற்று நோக்குங்கள்! எங்கோ பார்த்த மாதிரி உள்ளதா? சந்தேகமே வேண்டாம், இது 1987-ம் ஆண்டு திமோத்தி டால்டன் நடித்து(?!!) வெளியான 007 ஜேம்ஸ்பாண்ட்-ன் 15வது திரைப்படமான த லிவிங் டேலைட்ஸ்-ன் விளம்பரப் போஸ்டரின் தழுவலேயாகும்!

James Bond 007 - The Living Daylights - Poster JAMES BOND 007 – THE LIVING DAYLIGHTS - POSTER 

20 வருடங்களுக்கு முன் இந்தப் புத்தகத்தை நான் தேர்ந்தெடுக்கப் பல காரணங்கள் உண்டு, அவற்றில் சில…

  • முத்துவின் முதல் கோடை மலர்
  • நான் படித்த முதல் கோடை மலரும் இதுவே
  • முத்துவின் சரித்திரத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை விளைத்திட்ட இதழ் இது!
  • துப்பறியும் வீரர் ஜெஸ் லாங் நமக்கு அறிமுகமானது இந்த இதழில் தான்!

அதென்ன முக்கிய சரித்திர நிகழ்வு எனக் கேட்பவர்களுக்கு இதோ பதில். இதுநாள் வரையில் முத்துவை நிர்வகித்து வந்த ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்கள் இந்த இதழுடன் ஓய்வு பெற்றுக்கொண்டு பொறுப்புகள் அனைத்தையும் தனது காமிக்ஸ் வாரிசாகிய நம் அபிமான ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்.

முத்து#168 – கடல் பிசாசு! தான் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் இதழ் என்று அவரே கூறினாலும் இந்த இதழிலிலேயே அவரது தனிப்பட்ட முத்திரைகள் பலவற்றையும் நாம் காணலாம்.

முத்து#167 - முத்து ஸ்பெஷல்! – ஆசிரியர் பக்கம் முத்து#168 - கடல் பிசாசு! - முன்னட்டைப்படம்
முத்து#167 - முத்து ஸ்பெஷல்! – ஆசிரியர் பக்கம் முத்து#168 - கடல் பிசாசு! - முன்னட்டைப்படம்

உதாரணத்திற்கு, பாக்கெட் சைஸில் ரூ:5/- விலையில் கோடை மலர்களை 1986 & 87-ம் ஆண்டுகளில் ஏற்கெனவே லயன் & திகில்-ல் வெளியிட்டுப் பெருவெற்றி பெறவைத்த சூரராயிற்றே அவர். அதிலும் தனது தந்தைக்கு பிரிவுபச்சாரம் வழங்கும் இத்தருணத்தில் இத்தகையதொரு சிறப்பிதழை அவர் வழங்கியிருப்பதில் எந்த வியப்புமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து!

இத்தகைய சிறப்பு மிக்க இதழ் எவ்வித பெரிய முன்னறிவிப்புமின்றி திடுதிடுப்பென வெளிவந்தது. இதன் விளம்பரம் ஒரேயொரு இதழில் தான் வந்தது (முத்து#166 – கொள்ளைக்காரப் பிசாசு! – மறுபதிப்பு)

முத்து#166 – கொள்ளைக்காரப் பிசாசு! - விளம்பரம்முத்து#166 – கொள்ளைக்காரப் பிசாசு! - விளம்பரம்

வழக்கமாக ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் ஏதேனும் சிறப்பிதழ் வெளியிட்டல் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே விளம்பரங்கள் வெளியிட்டு நமது எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிடுவதில் வல்லவர்! ஒரு வேளை முத்துவில் பரீட்சார்த்த முயற்சியாக இவ்விதழ் முதன்முறையாக வெளிவருவதால் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கலாம்!

ஓ.கே.! இனி கதைகளுக்கு வருவோம்!

கதை#1 – ஆழ்கடல் மயானம்!

Action Picture Library No.8 - Terror of the Deep (1969) - Cover
ACTION PICTURE LIBRARY No.8 - TERROR OF THE DEEP(1969) - COVER

கடலும் கடல் சார்ந்ததுமான இந்தக் கதை ஒரு அரிய பொக்கிஷமாகும்! கேப்டன் பிரின்ஸ் கதைத்தொடரை நினைவு படுத்தும் கதாபாத்திரங்கள், புதையல் வேட்டை, கடல் தேவதை என பல சுவாரசியமான அம்சங்கள் கொண்ட இக்கதை ஆங்கிலத்தில் 1969-ல் இங்கிலாந்தின் ஃப்ளீட்வே (FLEETWAY) நிறுவனத்தின் கொஞ்ச காலமே வெளிவந்த ஒரு மாதாந்திர வெளியீடான ACTION PICTURE LIBRARY-ன் 8வது இதழாக 64 பக்கங்கள் கொண்ட கதையாக வெளியானது!

மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான் ஸாண்டோ மிங்கோவில் வசிக்கும் நமது கதானாயகன் மாக்னீ கடலைச் சார்ந்து வாழும் ஒரு மாலூமி. அவனது கப்பல் ஷார்க். கப்பலில் அவனுக்கு உதவியாகப் பணிபுரிபவர்கள் ஜாக் என்னும் முரடனும், ஸ்மட்ஜ் என்னும் பொடியனும்.

மாக்னீ ஒரு முன்கோபி. கதையின் ஆரம்பத்தில் தனது படகை வாடகைக்கு எடுத்து சுறா வேட்டைக்குச் செல்லும் ஒரு செல்வந்தரோடு மோதிக்கொள்கிறான். ஸ்மட்ஜ் அவனை சாந்தப் படுத்துகிறான். கரைக்குச் சென்று சிறையில் ஒரு கைகலப்பில் ஈடுப்பட்டு மாட்டிக்கொண்ட ஜாக்கை அபராதம் கட்டி விடுவிக்கிறான் மாக்னீ.

தனது பழைய நண்பரான புரபஸர் பில்-லுடன் சம்மட்டித் தலை சுறாவின் குட்டி ஒன்றைப் பிடிக்க ஆழ்கடல் மயானம் எனத் தீவுவாசிகளால் அழைக்கப்படும் ஆபத்தானப் பகுதிக்குச் செல்கிறான். அப்பகுதியைக் காத்து வரும் கடல் தேவதை பற்றி ஸ்மட்ஜ்-ன் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கடலுக்குள் பாய்கிறான் மாக்னீ.

கடலுக்கடியில் ஒரு ராட்சஸ சம்மட்டித்தலை சுறாவுடன் மோதும் மாக்னீ அங்கு கிடக்கும் ஒரு பாழடைந்த கப்பலைக் காணுகிறான். சுறாக்குட்டியுடன் வெற்றிகரமாகத் திரும்புகிறான். புரபஸருடன் மீண்டும் கடலுக்குள் சென்று கப்பலின் பீரங்கியை மீட்டெடுத்து வருகிறான்.

அதன் மூலம் கப்பலின் பெயர் ஸான் கிறிஸ்டோபல் என்று அறிகிறார்கள். அதில் ஒரு புதையல் இருப்பதும் தெரிய வருகிறது. புதையல் வேட்டைக்குக் கிளம்புகிறான் மாக்னீ.

அப்போது ரிச்லிண்டர் என்னும் பேராசைக்காரச் செல்வந்தன் மாக்னீயைத் தன்னுடன் கூட்டு சேருமாறு அழைக்கிறான். கோபத்துடன் மறுத்துவிட்டுச் செல்லும் மாக்னீயை தனது மைதாஸ் (என்ன ஒரு பெயர்ப் பொருத்தம்) கப்பலில் பின்தொடர்கிறான் ரிச்லிண்டர்.

கடலில் அவர்கள் பல இன்னல்களைச் சமாளிக்கின்றனர். இவையெல்லாம் கடல் தேவதையின் எச்சரிக்கைகள் எனக் கூறுகிறான் ஸ்மட்ஜ். கடலுக்குள் செல்லும் மாக்னீயும், ஜாக்கும் புதையல் இருக்கும் பெட்டியைக் காப்டனின் அறைக்குள் கண்டெடுக்கும் காட்சி அதியற்புதமானது. வார்த்தைகளால் விளக்குவதைவிட நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்களேன்!

அப்போது அடிபட்டு மயங்கிவிடும் மாக்னீயைச் சுமந்துகொண்டு நீருக்குமேல் விரையும் ஜாக்கை எதிர்கொள்கின்றனர் ரிச்லிண்டரும் அவனது கைக்கூலிகளும். புதையலின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் ரிச்லிண்டர் தனது ஆட்களை அனுப்புகிறான். அவர்களெல்லாம் விசித்திரமான முறையில் மரணமடைய  ஸ்மட்ஜைப் பணையக் கைதியாகக் கொண்டு மாக்னீயை கடலுக்குள் அனுப்புகிறான் ரிச்லிண்டர்.

கடலுக்குள் கடல் தேவதையை எதிர்கொள்கிறான் மாக்னீ…

கடல் தேவதை என்பது என்ன? புதையல் யாருக்குக் கிடைத்தது? மாக்னீ, ஸ்மட்ஜ் & ஜாக் உயிருடன் திரும்பினார்களா? இக்கேள்விகளுக்கு விடையளிக்கிறது கதை!

முத்து#167 - முத்து ஸ்பெஷல்! – ஆழ்கடல் மயானம்! Action Picture Library No.8 - Terror of the Deep (1969) - Page 3
முத்து#167 - முத்து ஸ்பெஷல்! - ஆழ்கடல் மயானம்! ACTION PICTURE LIBRARY No.8 - TERROR OF THE DEEP(1969) - PAGE 3

அதியற்புதமான இக்கதையைத் தமிழில் வெளியிட்ட ஆசிரியரைப் பாராட்ட வார்த்தைகளேயில்லை. த அபிஸ், த டீப் போன்ற ஆழ்கடல் சாகஸத் திரைப்படங்களை நினைவு படுத்துகிறது இக்கதை. அட்டகாசமான சித்திரங்கள் கதைக்குப் ப்ளஸ்! அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு…

 சுழிக்காற்று! கேப்டனின் கேபினில்...
சுழிக்காற்று! கேப்டனின் கேபினில்…
கடல் தேவதை!
கடல் தேவதை!

கனவுகளின் காதலர் ஆழ்கடல் சாகஸங்களைப் பற்றி இட்டுள்ளப் பதிவுகளைக் கீழே சுட்டியுள்ளேன். படித்து மகிழுங்கள்!

வெகுமதி!:-

இந்தப் பதிவுக்கான ‘வெகுமதி!’க் கேள்வி இதோ…

  • கேப்டன் பிரின்ஸ்-க்கும் மாக்னீக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்துப் பின்னூட்டமிடுபவர்களுக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு! 

கும்மியடிப்போருக்கான சிறப்புக் கேள்வி…

  • கேப்டன் பிரின்ஸ்-க்கும் கேப்டன் விஜயகாந்த்-க்கும் ஆறு வித்தியாசங்களை முடிந்தால் கண்டுபிடித்து பின்னூட்டமிடுங்கள் பார்ப்போம்!

கதை#2 – சுட்டிக் குரங்கு கபீஷ்!

அதிக அறிமுகம் தேவையில்லாத நமது அபிமான சுட்டிக் குரங்கு கபீஷ்-ன் சிறுகதையை நீங்கள் அனைவரும் படித்து மகிழ விரும்புவீர்கள் என எனக்குத் தெரியும்! கோடை விடுமுறை போனஸாக இதோ முழுக்கதையும் உங்களின் பார்வைக்கு! “என்சாய்!” (ஜனகராஜ், படம் – அக்னி நட்சத்திரம்)

கபீஷ்-1 கபீஷ்-2 கபீஷ்-3 கபீஷ்-4

கதை#3 – கொலைக்கரம் (மறுபதிப்பு)

சாகஸ ஜோடி ஜானி நீரோ & ஸ்டெல்லாவின் மிகச்சிறந்தக் கதைகளில் இக்கதை தலையானதாகும்!  இக்கதை தமிழில் முதன்முறையாக ஃபிப்ரவரி 1974-ல் வெளிவந்தது! மறைந்த திரு.முல்லை தங்கராசன்-ன் அற்புதமான மொழிபெயர்ப்பில் வந்திட்ட இக்கதை ஒரு க்ளாஸிக் க்ரைம் த்ரில்லராகும்!

பின்னர் முத்து ஸ்பெஷல்-லும், காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ன் நான்காவது இதழாகிய ரிவென்ஜ் ஸ்பெஷல்-லும் (ஏப்ரல் 2000-ல்) இக்கதை மறுபதிப்பாக வெளிவந்தது! இப்பதிப்புகளின் வெற்றியைப் பற்றிக் கூறவும் வேண்டுமா என்ன? கடைசியாக வெளிவந்த காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழ் கூட இப்போது அரிதாகிவிட்டது!

முத்து#023 - கொலைக்கரம்! - அட்டைப்படம் முத்து#023 - கொலைக்கரம்! – அட்டைப்படம்

இக்கதை ஆங்கிலத்தில் ஜனவரி 1967-ல் இங்கிலாந்தின் FLEETWAY நிறுவனத்தினர் வெளியிட்ட FLEETWAY SUPER LIBRARY-ன் SECRET AGENT SERIES தொடரின் முதல் வெளியீட்டில் நமது அபிமான சாகஸ ஜோடியை நமக்கு அறிமுகப்படுத்தியது!

Fleetway Super Library - Secret Agent Series No.1 - Meet Johnny Nero - Cover காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#004 - கொலைக்கரம்! (மறுபதிப்பு) - அட்டைப்படம்
FLEETWAY SUPER LIBRARY - SECRET AGENT SERIES No.1 – MEET JOHNNY NERO - COVER காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#004 - கொலைக்கரம்! (மறுபதிப்பு) - அட்டைப்படம்
Fleetway Super Library - Secret Agent Series No.1 - Meet Johnny Nero - Page 3 முத்து#023 - கொலைக்கரம்! - பக்கம் 3
FLEETWAY SUPER LIBRARY - SECRET AGENT SERIES No.1 – MEET JOHNNY NERO – PAGE 3 முத்து#023 - கொலைக்கரம்! - பக்கம் 3

ஜானி நீரோ பற்றி அறியாத அறிவிலிகளுக்கு இந்தப் பத்தியை வீணடிக்கிறேன்! ஜானி நீரோ ஒரு அசகாயத் துப்பறியும் தீரர். ரகசிய உளவுத்துறையிலிருந்து VRS வாங்கிக் கொண்டு இப்போது உலகப் புகழ்பெற்ற ஒரு வியாபார காந்தமாக விளங்குபவர். அவ்வப்போது அவரது மேலதிகாரியான கர்னல் ஜாக்கப்-பின் (இவரது உண்மையான பெயர் COLONEL JASON ஆகும், மறைந்த திரு.முல்லை தங்கராசன் அவர்களின் கைங்கர்யம்) வேண்டுகோளுக்கிணங்க சிரமமான பணிகள் சிலவற்றை மேற்கொள்வதுண்டு!

இவரது காரியதரிசி ஸ்டெல்லா (இவரது உண்மையான பெயர் JENNY BIRD ஆகும், இதுவும் மறைந்த திரு.முல்லை தங்கராசன் அவர்களின் வேலையே) அழகும், அறிவும் இனைந்த ஒரு அரிய பெண்புலி. ஜானி நீரோவின் ஆணாதிக்கத்துவத்திற்கெதிராக உருவாக்கப்பட்ட பெண்ணியப் பாத்திரம்!  

ஜானி நீரோ கதைத் தொடருக்குரிய பல சிறப்பம்சங்களை இக்கதை நமக்கு அறிமுகப்படுத்துகிறது! உலகையே மிரட்டும் ஒரு சூப்பர் வில்லன், கர்னல் ஜாக்கப்பின் அதிரடி எண்ட்ரிக்கள், ஜானி நீரோ ஸ்டெல்லாவை ஒதுக்குவதும், ஸ்டெல்லா பின்னர் வந்து ஜானியைக் காப்பதும், அட்டகாசமான இறுதி மோதல் என அனைத்து விஷயங்களும் இக்கதையில் உண்டு!

உலகின் தட்பவெப்ப நிலையை மாற்றியமைக்கக்கூடிய ஒரு கருவியைக் களவாடி, அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானியையும் கொன்றுவிட்டு உலகை அச்சுறுத்துகிறான் ஒரு மர்ம மனிதன். அவனைக் கண்டுபிடிக்க ஜானி நீரோவை அனுகுகிறார் கர்னல் ஜாக்கப்.

அவனை கண்டுபிடித்து ஜானி நீரோ உலகை எப்படிக் காக்கிறார் என்பதே கதை! சாதாரணமாகத் தோன்றும் இக்கதையில் வரும் வில்லனாகிய மைக்கேல்-ன் கதாபாத்திரப் படைப்பின் மூலம் கதையின் தரம் உச்சத்தை எட்டுகிறது!

 கொலைக்கரம்!கொலைக்கரம்!

ஒற்றைக் கையால் எதிரிகளின் கழுத்தை முறிக்கும் ஆற்றல் வாய்ந்த மைக்கேலை ஜானி நீரோ ஒவ்வொரு முறை எதிர்கொள்ளும் போதும் அனல் பறக்கும்! அற்புதச் சித்திரங்கள் கதையின் தரத்தை மேலும் மெருகூட்டுகிறது! 

பங்கு வேட்டையர்-க்கு ஜானி நீரோ பிடிப்பதில்லை என்பது உலகறிந்ததே! இக்கதையை அவர் படித்த பின்பும் அவருக்கு ஜானி நீரோ பிடிக்கவில்லையெனில் அவரது பரினாம வளர்ச்சியில் ஏதோ கோளாறு உள்ளது என எண்ணவேண்டியிருக்கும்!

இக்கதையைப் பற்றித் தனியாக ஒரு பதிவே போட வேண்டும் என்று ஆசைதான்! ரசித்திட அத்தனை அம்சங்கள் உள்ளன! நீங்கள் விரும்பினால் பின்னொரு தேதியில் பதிவிடலாம்!

காமிக்ஸ் குத்து!:-

மறைந்த திரு.முல்லை தங்கராசன் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறனுக்கு மற்றூமொரு சான்று! ஆக்ரோஷமான காவல் நாயுடன் போராடி எழும் ஜானியை மிகக் காஷுவலாக வரவேற்கும் மைக்கேலின் நக்கல் சொற்களே இம்முறைக்கான காமிக்ஸ் குத்து!

காமிக்ஸ் குத்து!

Jess Long#1 (1985) - Cover
JESS LONG#1 (1985) – COVER

கதை#4 – விசித்திர வியாபாரி!

ஜெஸ் லாங் தமிழில் அறிமுகமான கதை! பல நாட்களாக விளம்பரம் மட்டுமே படுத்தப்பட்ட ஹீரோ இவர். வந்த பிறகு ஏமாற்றவில்லை! அட்டகாசமானதொரு ஆக்ஷன், சஸ்பென்ஸ் கலந்த போலீஸ் த்ரில்லருடன் நம்மை பரவசப்படுத்துகிறார் ஜெஸ்!

கடத்தல் கும்பல் ஒன்றின் மிரட்டலுக்குப் பணிந்து ஒரு அப்பாவி ட்ரக் ட்ரைவரும் அவரது மகளும் சட்ட விரோதமான சரக்கொன்றை ஏற்றிச் செல்கின்றனர். வழியில் போலீஸாரால் துரத்தப்படும் போது நேரும் விபத்தில் தந்தை இறந்து விடுகிறார். மகளைப் பணயமாகக் கொண்டு எதிரிகளை எப்படி ஜெஸ் லாங் முறியடிக்கிறார் என்பதே கதை!

அட்டகாசமான துரத்தும் காட்சிகள் (சேஸிங்) கதையின் ஹை-லைட். இக்கதை 70& 80-களில் வெளிவந்தப் பல பிரபலமான கார் சேஸிங் திரைப்படங்களை நினைவூட்டுகிறது!

முத்து#167 - முத்து ஸ்பெஷல்! – விசித்திர வியாபாரி! Jess Long#1 (1985) -  Page 17
முத்து#167 - முத்து ஸ்பெஷல்! – விசித்திர வியாபாரி! JESS LONG#1 (1985) - PAGE 17

கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரக்கு உண்மையில் அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் சட்டவிரோதமாக நுழைய முயலும் பிற நாட்டவர் ஆவர் (குறிப்பாக லத்தீன் அமெரிக்கர்கள்). இது போன்ற ஆட்கடத்தும் மாஃபியாக்கள் அங்கு பிரபலம். ஆனால் தமிழில் பியூர்ட்டோரிகோ நாட்டைச் சேர்ந்தவர்களை சிலோன் அகதிகள் என ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

PUERTORICANS!PUERTORICANS!

ஒரு வேளை கதை வெளிவந்த 1988-ல் (நான் அப்போது பச்சிளம் பாலகன்) போர் காரணமாக இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து அகதிகள் பலர் வந்து தஞ்சம் அடைந்திருக்கலாம்! இது போல லோக்கல் டச் கொடுப்பதில் நம் ஆசிரியர்தான் வல்லவராயிற்றே!

சிலோன் அகதிகள்!சிலோன் அகதிகள்!

ஜெஸ் லாங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நண்பர் கிங் விஸ்வா இட்டுள்ள பதிவை இங்கே ‘க்ளிக்’கிப் படிக்கவும்

கதை#5 – ஸ்விட்சர்லாந்தில் மாயாவி!

இரும்புக்கை மாயாவியின் சிறுகதை! இக்கதை BOULDERMAN என்ற பெயரில் VALIANT வாராந்திர இதழில் 29-11-69 முதல் 10-01-70 வரை மொத்தம் 7 வாரங்கள், வாரம் 2 பக்கங்கள் வீதம் வெளிவந்தது! பின்னர் VULCAN HOLIDAY SPECIAL (1976)-ல் மொத்தமாக மறுபதிப்பு செய்யப்பட்டது!

  • கதை      : டாம் டல்லி (TOM TULLY) 
  • ஓவியம் :  கார்லோஸ் க்ரூஸ் (CARLOS CRUZ)

Vulcan Holiday Special (1976) VULCAN HOLIDAY SPECIAL (1976)

ஸ்விட்சர்லாந்தில் மாயாவி! முத்து#167 - முத்து ஸ்பெஷல்! கதை#5 – ஸ்விட்சர்லாந்தில் மாயாவி!

14 பக்க சிறுகதையை தமிழில் 40 பக்கங்களுக்கு மாற்றி வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர்.  இக்கதையை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் நண்பர் லிமட்டின் வலைப்புவிற்கு சென்று டவுன்லோடு செய்து படித்து மகிழலாம்! தரவிறக்கம் செய்ய இங்கே ‘க்ளிக்’கவும்! “என்சாய்!” (ஜனகராஜ், படம் – அக்னி நட்சத்திரம்)

இப்படியொரு சிறப்பான புத்தகத்தை நமக்களித்த ஆசிரியர்கள் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களுக்கும், திரு.S.விஜயன் அவர்களுக்கும் நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! வழக்கம்போல ஆங்கில பதிப்புகளின் அத்தனை விபரங்களையும் அளித்த நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:-

  • நான் இல்லாத நேரத்தில் வலையுலகில் பற்பல மாற்றங்கள்! இன்னமும்  நான் வலையுலகிற்கு முழுமையாகத் திரும்ப இயலாததால் அவற்றைப் படித்துக் குறிப்பிட முடியாமைக்கு வருந்துகிறேன்! இப்பதிவைக் கூட தலைமையகத்திலிருந்தல்லாமல் வெளியில் ஒரு ரகசிய வலை மேயும் தளத்திலிருந்து வெளியிட வேண்டியிருந்தது! ரொம்ப நாளாக இத்தருணத்தை எதிர்பார்த்துத் தயாரிப்பில் இருந்தபடியால் தான் பதிவைச் சிரமமின்றி வெளியிட முடிந்தது! காத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்!

தொடர்புடைய இடுகைகள்:-

கனவுகளின் காதலர்-ன் கடலும் கடல் சார்ந்தக் கதைகளும்:

ஜெஸ் லாங் பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:

முத்துவின் முதல் இதழ் - இரும்புக்கை மாயாவி:

இரும்புக்கை மாயாவி:

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பற்றிய இடுகைகள்:

பிற சிறப்பிதழ்கள்: