Thursday, October 23, 2008

மொக்கை!


தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு எனது முதற்கண் வணக்கம்,

இது வரையில் பிறரின் காமிக்ஸ் வலைப்பதிவுகளில் திரை மறைவு சதி வேலைகளில் ஈடுபட்டும், பின்னூட்டங்களிட்டும் காலம் தள்ளிக் கொண்டிருந்த நான் திடீரென வலைப்பூ ஆரம்பிப்பதற்கான காரணம் என்ன? என்று நீங்கள் அனைவரும் எண்ணலாம்.

பெரிதாக ஒன்றும் இல்லை. இத்தனை நாள் என் சோம்பேறித் தனத்தால் (basically I'm a சோம்பேறி) வலைப்பூவில் எதுவும் எழுதவில்லை (தப்பியது தமிழகம்).

ஆனால் என்னை விட மிகப்பெரும் வாழைப்பழ சோம்பேறியான என் நண்பர் விஸ்வா கூட ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார். அவரால் எனக்கு வேலைப்பளு அதிகமானது தான் மிச்சம். பல புதிய காமிக்ஸ் ஆய்வுகள் மேற்கொண்டதில், அதிலும் குறிப்பாக 'ராணி' காமிக்ஸ் பற்றி ஆராய்ந்ததில் பெண்டு கழண்டுவிட்டது.

மேலும் நண்பர் ரஃபிக் வேறு தமிழில் காமிக்ஸ் பதிவு போட வேண்டும் என்று என்னையும், விஸ்வாவையும் அடிக்கடி ஆட்டத்திற்கு அழைப்பு விடுவார். எங்கள் சோம்பேறித்தனம் தான் இந்நாள் வரையில் எம்மையும் உம்மையும் காத்தது. ஆனால் இப்போது அதுக்கும் வழியில்லை.

நண்பர் அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் கூட ஒரு வலைப்பூ ஆரம்பித்து விட்டார். ஆனால் இன்னமும் ஒன்றும் பதிவு செய்யக் காணோம். பின்னே, எங்களுடன் சேர்ந்த பிறகு அவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க முடியுமா என்ன?

ஆகையால் ரோஷம் பொங்கி நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். பார்ப்போம் எப்படி செல்கிறதென்று.

மக்கள் மனதில் எழக்கூடிய அடுத்தக் கேள்வி, அ.கொ.தீ.க. என்றால் என்ன?

காமிக்ஸ் படிக்கும் எவருக்கும் அ.கொ.தீ.க. பற்றி தெரிந்திருக்கும். அழிவு, கொள்ளை, தீமை கழகம் என்பதன் சுருக்கம் தான் அ.கொ.தீ.க. லாரன்ஸ் & டேவிட் கதைகளில் இந்த தீவிரவாத கும்பல் தான் எப்போதும் வில்லன்கள். சில சமயம் இரும்புக்கை மாயாவி கூட இவர்களுடன் மோதுவார். இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

ஆனால் ஒரு தீவிரவாத இயக்கத்தைத் தலைப்பாகக் கொண்டு ஏன் வலைப்பூ தொடங்க வேண்டும்? ஒரு விளம்பரம்தான் ("அந்த சினிமாக்காரங்க தான் விளம்பரம், விளம்பரம்னு அலையறாங்க, உங்களுக்கெதுக்கு இதெல்லாம்" என நண்பர் விஸ்வா கவுண்டமணி ஸ்டைலில் நக்கலடிப்பது கேட்கிறது).

பொதுவாக எல்லா வலைஞர்களும் ஹீரோக்களைப் பற்றியே எழுதுவார்கள். அவற்றிலிருந்து வேறுபட வேண்டும் என்பதாலும், சில வித்தியாசமான விஷயங்களை பொதுவாக எந்த வலைத்தளத்திலும் பதிவு செய்யாததாலும், அவற்றிக்கான ஒரு இடமாக இந்த வலைப்பூ விளங்கும்.

அதுவுமில்லாமல் நாம் அனைவரும் விரும்பும் காமிக்ஸை அழிவு, கொள்ளை, தீமை ஆகியவற்றிலிருந்து காக்கவும் இது பயன்படும் (இது விஸ்வா பஞ்ச்).

இதில் காமிக்ஸ் சம்பந்தப்பட்ட நல்ல விஷயங்களை தமிழில் எவர் பதிவு செய்ய விரும்பினாலும் வரவேற்கப் படுகிறார்கள். அவர்களின் பெயரில் வெளியிட நான் தயார். அவர்கள் இந்த வலைப்பூவில் ஆசிரியர்களாகவும் சேர்த்துக் கொள்ளப் படுவர். என்ன ரஃபிக், மகிழ்ச்சிதானே?

காமிக்ஸ் பதிவுகள் தவிர அவ்வப்போது இது போல் எனது மொக்கைகளும் தொடரும். நான் பார்த்த 'ஒலக சினிமா' பற்றி கூட எழுதலாம் என்றிருக்கின்றேன் (ஒலக சினிமான்னா ஏதோ மேட்டர் படம்னு நெனச்சுடாதீங்க, எல்லாம் தரமான படங்கள்).

தயை கூர்ந்து பொறுத்தருளி தங்கள் நல்லாதரவை இந்த சாமானியனுக்கு வழங்குமாறு அன்பர்களை வேண்டிக் கொள்கிறேன்.

அப்புறம் ஒரு இன்பமும் துயரமும் கலந்த சேதி. ஓவியர் செல்லத்தை உங்களில் எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளீர்கள் எனத் தெரியவில்லை. திங்களன்று நானும் விஸ்வாவும் அவரை சந்தித்து ஒரு பேட்டி கண்டோம். அதை விரைவில் வீடியோவாக வலையிலேற்றவும் உள்ளோம். இது இனிப்பான செய்தி. துயரச் செய்தியை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதை நினைத்தாலே மனம் கனக்கிறது.

வழக்கம் போல வந்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக இட்டுச் செல்லுங்கள் என்பது என் அன்புக்கட்டளை. மீறக்கூடாது. அப்புறம் சிலபல போட்டிகளும், வாக்கெடுப்புக்களும் உண்டு. கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு பரிசு எதுவும் தரும் பொருளாதாரச் சூழ்நிலையில் நான் இல்லை என்பதால் வெறும் பாராட்டுக்கள் மட்டுமே வழங்க முடியும்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்.