Thursday, February 5, 2015

THE HOBBIT: THE BATTLE OF THE FIVE ARMIES - 12.12.2014 - திரைவிமர்சனம்!


1937ம் ஆண்டு ஜே.ஆர்.ஆர்.டோல்கீன் எழுத்தில் வெளிவந்து உலகெங்கும் விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் சிறுவர் இலக்கிய புதினம் தான் ‘த ஹாப்பிட்’. இந்த புத்தகத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து ‘த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ என்ற மகாகாவியத்தை இயற்றினார் டோல்கீன். 1954-55ல் மூன்று பாகங்களாக வெளிவந்த, இரண்டாம் உலகப் யுத்ததின் மத்தியில் எழுதப்பட்ட இந்நாவல் டோல்கீனின் 12 வருட கடுந்தவத்தால் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

நாவல் எழுதுவதென்றால் கதை மற்றும் கதாபாத்திரங்களை உருவாக்குவதோடல்லாமல் அவர்கள் வாழும் உலகம், அதன் பூகோள அமைப்பு, அவர்கள் பேசும் மொழி, அதற்கான அகராதி, ஒவ்வொரு இனத்தின் பாரம்பரியங்கள், கிளைக்கதைகள், பாடல்கள் என ஒரு மகாகாவியத்திற்கு தேவையான அனைத்தையும் டோல்கீனின் பிரம்மாண்ட கற்பனையில் உதித்துள்ளதையும், அதை அவர் நுண்ணியமாக  குறிப்பெடுத்து, ஆராய்ந்து கதைகளுக்குள் புகுத்தியிருக்கும் விதமும் மலைக்கச் செய்பவை.

இந்த புத்தகங்களைத் தழுவி பல்வேறு மாற்று ஊடகங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், சிலபல கார்ட்டூன் திரைப்படங்களைத் தவிர்த்து இந்த நூற்றாண்டிற்கு முன் வெள்ளித்திரையில் முழு நீள லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக கோலோச்சியதில்லை. க்ராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் மூலம் இந்த சாகஸங்களை இப்போது நாம் திரைப்படங்களாகவும் கண்டு மகிழ முடிகிறது!


2001 முதல் 2003 வரை பீட்டர் ஜாக்சனின் இயக்கத்தில் மூன்று திரைப்படங்களாக ‘த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ நாவல் படமாக்கப்பட்டது. உலகெங்கும் பெருவெற்றியும், வரவேற்பும் பெற்ற இந்த ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத் தொடர், மீண்டும் மாயாஜால திரைப்படங்களுக்கான மவுசை கூட்டின.

பீட்டர் ஜாக்சன் முதன் முதலில் இயக்க விரும்பியது ‘த ஹாப்பிட்’ சிறுவர் நாவலின் திரைவடிவத்தையே. சிலபல சட்ட சிக்கல்களால் அச்சமயத்தில் அப்படத்தை அவரால் உருவாக்க முடியவில்லை. ‘த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ திரைத் தொடரின் பெருவெற்றியைத் தொடர்ந்து ‘த ஹாப்பிட்’டை படமாக்க தயாரிப்பு நிறுவனங்கள் விரும்பின.

இம்முறை இயக்குனராக குல்லெரிமோ டெல் டோரோ தேர்ந்தெடுக்கப் பட்டார். இவருடன் பீட்டர் ஜாக்சன் இணைந்து பணி புரிந்தார். இருவருக்குள்ளும் பலத்த நட்பு விளைந்தது. ஆனால் படம் தொடங்க ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக டெல் டோரோ இயக்குனர் பொறுப்பிலிருந்து விலக மீண்டும் பீட்டர் ஜாக்சனே இயக்குனரானார்.

முயல் வளை போன்ற பொந்துகளில் வீடமைத்து வாழும் சின்னஞ்சிறு மனிதர்கள் தான் ஹாப்பிட்ஸ். யார் வம்புக்கும் போகாமல் தானுண்டு தன் வளையுண்டு என வாழும் இவர்களில் ஒருவன் தான் நம் கதையின் நாயகன் பில்போ. ஒரு நாள் இவன் வீட்டுக்கு அழையா விருந்தாளிகளாக வரும் மந்திரவாதி காண்டால்ஃபும், தோரின் ஓகென்ஷீல்ட் தலைமையிலான 12 குள்ளர்களும் (DWARVES) இவன் விருப்பமின்றி இவனை குள்ளர்களுக்கு சொந்தமான ஒரு புதையல் வேட்டைக்கு அழைத்து செல்கின்றனர்.


தோரின் ஓகென்ஷீலட் தனது மூதாதையர் ஆண்ட எரெபோர் (EREBOR) நாட்டிற்கு மீண்டும் தன்னை அரசனாக பிரகடணப்படுத்திக் கொள்ளத் தேவையான ஒரு மந்திரக் கல்லும் (ARKENSTONE) அப்புதையலில் அடக்கம். அப்புதையலைக் காத்து வருவது ஸ்மாக் என்ற டிராகன். வழியில் அவர்கள் சந்திக்கும் சாகஸங்களும் புதையலை மீட்பதும் தான் ’த ஹாப்பிட்’ நாவலின் கதை.

எளிமையான இந்த கதை ஆரம்பத்தில் இரண்டு பாக படமாகத்தான் அறிவிக்கப் பட்டது. 2012ல் வெளிவந்த முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து மூன்று பாக தொடராக அறிவிக்க(இழுத்தடிக்க)ப்பட்டது. இம்முறை முப்பரிமாணத்தில் படமாக்கப் பட்ட இத்தொடரின் இறுதி பாகம் 12.12.2014ல் ‘லிங்கா’வுக்கு போட்டியாக வெளிவந்தது.

முதலிரண்டு பாகங்களில் பில்போவும், குள்ளர்களும் மந்திரவாதி காண்டால்ஃப் உடன் சேர்ந்து புதையலை எவ்வாறு அடைகின்றனர் என்பதை கூறுகின்றன. முதல் பாகத்தில் பில்போ கொல்லம் (GOLLUM) எனும் ஜந்துவிடமிருந்து மாய மோதிரத்தை கைப்பற்றும் காட்சி அட்டகாசம். கொல்லமும், மாய மோதிரமும் ‘த லார்ட் ஆஃப் த ரிங்கஸ்’ கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வழியில் அவர்கள் சந்திக்கும் பல்வேறு அபாயங்கள், புரியும் சாகஸங்கள், சந்திக்கும் மனிதர்கள் என படங்களின் நீளத்தையும் மீறி மிக சுவாரசியமாக செல்கின்றன. அவர்களுக்கு உதவிடும் வன தேவர்கள் (ELVES), லேக் டவுன் மக்கள் ஆகியோருக்கு புதையலில் பங்கு தருவதாக வாக்களிக்கிறான் குள்ளர் தலைவன் தோரின் ஓகென்ஷீல்ட்.

இரண்டாம் பாக இறுதியில் டிராகனுடன் தனியாக மோதுகிறான் பில்போ. மந்திரக் கல்லையும் கைப்பற்றுகிறான். பில்போ தன்னை நயவஞ்சகமாக வீழ்த்தியதை அறியும் ஸ்மாக் அவனுக்கு உதவிய லேக் டவுன் மக்களை அழிக்க புறப்படுவதாக முடிந்தது இரண்டாம் பாகம்.

மூன்றாம் பாகத்தின் ஆரம்பம் லேக் டவுனை சூறையாடும் ஸ்மாக் எவ்வாறு கொல்லப் படுகிறது என்பதை விவரிக்கிறது. புதையலில் பங்கு கேட்க வன தேவர்களும், லேக் டவுன் மக்களும் கோட்டையை புடை சூழ, புதையலைக் கண்டு மனம் பிறழ்ந்த தோரின் ஓகென்ஷீல்ட் அவர்கள் மீது போர் தொடுக்க முடிவெடுத்து தன் இனத்தவரை வரவழைக்கிறான். இது மட்டுமல்லாமல் ஆர்க்ஸ் (ORCS) எனப்படும் பூதங்களின் இருவேறு படைகள் புதையலை சொந்தமாக்கிக் கொள்ள எரெபோர் நோக்கி வருகின்றன. இந்த ஐந்து படைகளினூடே நிகழும் போர்தான் THE BATTLE OF THE FIVE ARMIES.


இந்த படத்துடன் டோல்கீனின் மாய உலகிலிருந்து நமக்கு வேண்டாத ஒரு விடுதலை கிடைக்கிறது. அதாவது டோல்கீனால் முடிக்கப்படாத குறிப்புகள் அடங்கிய ‘த சில்மரில்லியன்’ (THE SILAMARILLION) நாவலை பீட்டர் ஜாக்சன் படமாக்க முயலாத வரை மேற்கொண்டு படங்கள் வர வாய்ப்பில்லை.

’த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்’ படங்களின் காணப்பட்ட அந்த பிரம்மாண்டம் ஏனோ ‘த ஹாப்பிட்’ பட வரிசையில் மிஸ்ஸிங். கதையின் எளிமை ஒரு காரணமாக இருப்பினும், டிஜிட்டலில் படமாக்கப்பட்டதால் 3Dஐயும் மீறி ஏனோ டிவி சீரியல் பார்ப்பது போலவே தோன்றுகிறது.

ஆனால் படத்தில் இந்தக் குறைகளெல்லாம் போர் காட்சிகள் தொடங்கும் முன்பு மட்டுமே. பாதி படத்துக்கு மேல் ஆக்ரமித்துக் கொள்ளும் போர் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சம். ஆனால் படம் பார்த்து முடிந்த பிறகு நாவலில் ஒரு அத்தியாயம் மட்டுமே வரும் போரை ஒரு முழு நீள திரைப்படமாக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழாமலில்லை.

சுவாரசியமான துணுக்கு:

டிராகன் ஸ்மாக் வேடத்தில் நடித்த பெனிடிக்ட் கம்பர்பேட்ச், பில்போவாக நடித்த மார்டின் ஃப்ரீமேன் ஆகியோர் ஏற்கெனவே ஷெர்லாக் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளனர். இதில் மார்டின் ஃப்ரீமேன் வாட்சனாகவும், பெனிடிக்ட் கம்பர்பேட்ச் ஷெர்லக் ஹோம்ஸாகவும் நடித்துள்ளனர்.

பரிந்துரை:

     நாவலை படித்துள்ள டோல்கீன் ரசிகர்களும், முந்தைய திரைப்படங்களின் ரசிகர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய படமிது. பிரம்மாண்ட க்ராஃபிக்ஸ் காட்சிகளுக்காக ஏணைய திரை ரசிகர்களும் ஒரு முறை கண்டு களிக்கலாம்.

பைசா வசூல்: 80/120 ரூபாய்

2 comments:

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!