Saturday, December 25, 2010

அ.கொ.தீ.க. டைம்ஸ்!

வணக்கம்,

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

டிசம்பர் இறுதி வரையில் எனது உலகப் பிரசித்தி பெற்ற சோம்பேறித்தனம் காரணமாக எந்தப் பதிவும் இடவில்லை! நாளை முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்சுகள் இரண்டு ஆரம்பித்து விடுவதால் கண்டிப்பாக இனி டிசம்பரில் வேறெந்தப் பதிவையும் என்னால் இட இயலாது!

டிசம்பரில் வேறெந்த பதிவுகளும் இடாததாலும் இனி அடுத்து உங்களைப் புத்தாண்டில்தான் சந்திப்பேன் என்பதாலும் இந்த எக்ஸ்பிரஸ் பதிவு! இம்முறை வெறும் நியூஸ் மட்டும் போடாமல் சற்று வித்தியாசமாக சுவாரசியம் நிறைந்த சில பல துணுக்குகளுடன் உங்களை சந்திக்கிறேன்!

இவற்றைப் படிக்கும் போது உங்களுக்கும் உங்களது இளம்பிராயத்து நினைவுகள் அலைமோதலாம்! அப்படி மோதினால் பின்னூட்டம் மூலம் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

ஓகே! மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்கு போவோம்!

சுட்டி டிவியில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் பேட்டி:

சமீபத்தில் வெளிவந்த இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமானதே! இச்செய்திகளின் தொடர்ச்சியாக இதோ இன்று காலை முதல் தமிழின் நம்பர் ஒன் குழந்தைகளுக்கான சேனலான சுட்டி டிவியில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் பேட்டி ஒளிபரப்பாகிறது!

இப்பேட்டியானது சுட்டி டிவி நியூஸில் ஒரேயொரு நிமிடம் மட்டுமே வந்தாலும் கூட இவ்வளவு பெரிய நெட்வொர்க்கில் காமிக்ஸ் குறித்த செய்திகள் வருவதென்பது நம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் செய்தியென்பதால் பாராட்டத் தக்க விஷயமே!

இதோ அதற்கான காணொளி! இதனை வலையேற்றிய நண்பர் கிங் விஸ்வாவுக்கு நன்றிகள்!

சுட்டி டிவி நியூஸ் ( 25/12/2010) லயன் காமிக்ஸ் ஆசிரியர் S.விஜயன் பேட்டி

இச்செய்தியைத் தவற விட்டோர் கீழ்காணும் நேரங்களில் இன்று முழுவதும் சுட்டி டிவியில் கண்டு மகிழலாம்!

காலை : 6:55AM & 7:55AM IST

இரவு     : 10:25PM IST

அத்தோடு திங்களன்று (27/12/2010) வரும் குங்குமம் வார இதழில் வரவிருக்கும் ஜம்போ ஸ்பெஷல் குறித்த விரிவான காமிக்ஸ் செய்தியையும் தவறாமல் படியுங்கள்!

ஈரோடு பேருந்து நிலைய புத்தகக் கடை:

சிறு வயது நினைவுகளைத் தூண்டும் விஷயங்கள் குறித்த பதிவு இது என்று கூறியிருந்தேனல்லவா? இதோ முதல் விஷயம்!

ரொம்ப நாளாக நானும் கிங் விஸ்வாவும் பதிவிட எண்ணியிருந்த விஷயம் இது! தற்போதெல்லாம் தமிழ் காமிக்ஸ் கடைகளில் கிடைப்பதென்பது அரிதாகி விட்டது! பழைய புத்தகங்களை விடுங்கள்! புதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பதே பல நெடுநாள் வாசகர்களுக்கு தெரியாததால் பல வாசகர்களை நமது காமிக்ஸ்கள் இழக்க நேரிடுகின்றன!  இதில் புதிய வாசகர்களை வேறு எங்கிருந்து உருவாக்குவது!

முன்பெல்லாம் ஒவ்வொரு ஊரின் முக்கிய சாலைகளிலும் குறைந்த பட்சம் 5 நியூஸ்பேப்பர் கடைகளாவது இருக்கும்! சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களின் ஒவ்வொரு பகுதியிலும் குறைந்த பட்சம் 10 கடைகளாவது இருக்கும்! அவற்றில் எல்லாவற்றிலும் காமிக்ஸ் கிடைக்கும்! அது ஒரு பொற்காலம்!

ஒவ்வொரு நாளும் நான் பள்ளியிலிருந்து திரும்பும் போதும் தெருமுனையிலுள்ள இரண்டு புத்தகக் கடைகளிலும் தவறாமல் ஒரு பத்து நிமிடம் நோட்டம் விட்ட பின்புதான் வீட்டுக்கு செல்வேன்! பின்னர் கடைக்காரரிடம் சொல்லி புத்தகங்களைப் பதுக்கி வைத்து விடுமுறையின் போது வீட்டில் அடம் பிடித்து காசு வசூல் செய்து வாங்கிப் படிப்பது வழக்கம்!

ஆனால் தற்போது பெட்டிக்கடைகள் எண்ணிக்கையில் குறைந்து விட்ட நிலையில், பத்து கடைகள் இருந்த இடத்தில் ஒரேயொரு கடை இருந்தால் கூட பெரிய விஷயம் என்ற நிலையில், அதுவும் காமிக்ஸ் புத்தகங்கள் அங்கு கிடைக்க வேண்டுமெனும் பொழுது அது சற்று மலைப்பான விஷயமாகவே உள்ளது! 

இதை மனதில் கொண்டே ஒவ்வொரு ஊரிலும் புதிய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் குறித்து தொடர்ந்து பதிவிடுவது என்று நானும் கிங் விஸ்வாவும் 2008ல் எங்கள் வலைப்பூக்கள் முறையே ஆரம்பித்த போதே முடிவெடுத்தோம்! ஆனால் வழக்கம் போலவே இன்று வரை ஒரு பதிவு கூட உருப்படியாக இடவில்லை!  இதோ அந்த முயற்சியில் வரும் முதல் பதிவு!

கோவை வாசியான நான் விடுமுறைக் காலங்களில் எனது தாத்தா/பாட்டி ஊரான ஈரோட்டுக்குச் செல்வது வழக்கம்! விடுமுறையில் மாலை வேளைகளில் தினந்தோறும் தவறாமல் எனது தாத்தாவுடன் வாக்கிங் கிளம்பி விடுவேன்! வேறெதற்கு?!! புத்தக வேட்டைக்குத்தான்!

வாக்கிங் போகும் வழியிலுள்ள அத்தனை புத்தகக் கடைகளிலும் நோட்டம் விட்டு தினசரி ஒரு புத்தகம் வீதம் வாங்கி விடுவேன்! விடுமுறை முடியும் முன் எப்படியும் கையில் பத்து புத்தகங்களாவது இருக்கும்! இவையெல்லாம் அப்போது புதிதாக கடைகளுக்கு வந்த புத்தகங்கள் என்பதை நினைவில் கொள்ளவும்! விடுமுறை என்பதால் முந்தைய மாத வெளியீடுகளையும் கடைக்காரர்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்!

ஆனால் இப்போது அந்தக் கடைகள் ஏதும் இல்லை! ஒன்றைத் தவிர!

ஈரோட்டில் அப்போதும் இப்போதும் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கச் சிறந்த இடம் பேருந்து நிலையத்திலுள்ள புத்தகக் கடையே! இங்கு நான் வாங்கிய பல காமிக்ஸ்கள் இன்னும் பசுமையாக நினைவுள்ளன! முக்கியமாக மினி லயன் வெளியீடுகளான புதிர் குகை! விற்பனைக்கொரு ஷெரீஃப்!  ஆகியவை இன்னும் மனதில் நிற்கின்றன! 

இந்தப் புத்தகக் கடையின் சிறப்பு என்னவென்றால் வேறெந்த ஊரிலும் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் முன் இங்கு விற்பனைக்கு வந்து விடும்! விடுமுறையில் ஈரோட்டில் வாங்கிய புத்தகங்கள் கோவைக்கு வருவதற்கு குறைந்தது ஒரு மாதமாவது ஆகி விடும்!

ஒரு முறை வழக்கமாக விடுமுறைக்கு வரும் கோடை மலர் ஒன்றை தேர்வுகள் நடக்கும் போதே ஈரோட்டில் எனது தாத்தா வாங்கி எனது தந்தை மூலம் அனுப்பி வைத்தார்! பிறகென்ன தேர்வுக்குப் படித்த மாதிரிதான்! நல்லவேளை பரீட்சையில் நான் கோட்டை விடவில்லை! இல்லையேல் அன்றோடு எனது காமிக்ஸ் சகாப்தம் முடிந்திருக்கும்!

அதெப்படி கோவையில் புத்தகங்கள் கிடைக்கும் முன்னரே ஈரோட்டில் புத்தகங்கள் கிடைக்கின்றன என நான் பல நாட்கள் வியந்திருக்கின்றேன்! சமீபத்தில் தான் அதற்கு விடை கிடைத்தது!

சிவகாசியிலிருந்து கட்டு கட்டாக வரும் புத்தகங்கள் நேராக ஈரோடு பேருந்து நிலையத்தில்தான் இறக்கி வைக்கப்படுகின்றன! இங்கிருந்து தான் கோவை, திருப்பூர், சேலம் போன்ற நகரங்களுக்கு புத்தகங்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன! சென்னைக்கே கூட இங்கிருந்துதான் புத்தகங்கள் செல்வதாகக் கேள்வி! இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை! சிவகாசியிலிருந்து ஈரோட்டுக்கு தினசரி நேரடிப் பேருந்து வசதியிருப்பதாலேயே இது சாத்தியப் படுகிறது!

டிஸ்ட்ரிப்யூஷனில் உள்ள கட்டமைப்புகள் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லாததால் இது குறித்து நண்பர் கேப்டன் ஹெச்சை மேலும் விளக்கினால் நலம்! 

இதனால் ஈரோடு வாசகர்களுக்கு சந்தாதாரர்களுக்கு முதல் புத்தகம் அனுப்பப்பட்டவுடனேயே அதிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே புத்தகம் கிடைத்து விடுகிறது! ஹ்ம்ம்ம்! கொடுத்து வைத்தவர்கள்! கோவைக்கு புத்தகம் வர ஒரு மாதமாவது ஆகிறது!

DSC01328

ஈரோடு பேருந்து நிலைய புத்தகக் கடை!

முன்பு நான்கைந்து கடைகள் இருந்த இடத்தில் இப்போது ஒரேயொரு கடைதான் உள்ளது! புத்தகக் கடைகளுக்குப் பதில் பேக்கரிகள் முளைத்து விட்டன! ஆனால் இன்றளவிலும் ஈரோடு வாசகர்களுக்கு மற்ற ஊர்களுக்கு முன் காமிக்ஸ் புத்தகங்களை முந்தி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது ஈரோடு பேருந்து நிலைய புத்தகக் கடை!

அடுத்த முறை நீங்கள் ஈரோடு செல்ல நேர்ந்தால் தவறாமல் ஒரு முறையேனும் இந்தப் புத்தகக் கடையினுள் எட்டிப்பாருங்கள்! புதிதாக காமிக்ஸ் ஏதேனும் வந்திருக்கக் கூடும்!

உங்கள் ஊரிலும் இது போல் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் உள்ளனவா? அப்படியென்றால் தெளிவான முகவரி, புகைப்படம் இவற்றுடன் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்களேன்! தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகம் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கும்!

காமிக்ஸ் புத்தககங்கள் கிடைக்கும் கடைகள் குறித்த கிங் விஸ்வாவின் முந்தைய பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் இலவச இணைப்பு:

சிறு வயது நினைவுகளில் மூழ்க இதோ இன்னுமொரு சமாச்சாரம்!

சென்ற வருடம் இதே சமயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பதிவு! ஒன்றை வெளியிட்டோம்! அதைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

அப்பதிவில் முத்து காமிக்ஸ் # 180 – ஆழ்கடல் அதிரடி! குறித்து விரிவாக அலசியிருப்போம்! ஆனால் அச்சமயத்தில் வெளியிடாத ஒரு தகவலும் உண்டு! அது அப்புத்தகத்துடன் வழங்கப்பட்ட இலவச இணைப்பேயாகும்! அப்போது அந்த இலவச இணைப்பு என்னிடம் கைவசம் இல்லை!

Muthu Comics # 180 - Christmas Special

நெடுநாட்கள் ஆகிவிட்ட படியால் அது என்ன இலவச இணைப்பு என்பதும் எனக்கு ஞாபகம் வரவில்லை! ஆனால் சமீபத்தில் நண்பர் முத்து விசிறியின் உபயத்தால் அந்த இலவச இணைப்பின் ஸ்கேன்கள் சிக்கின! அவருக்கு எனது நன்றிகள்!  

பாக்கெட் சைஸுக்குத் தோதாக எட்டாக மடிக்கப்பட்ட இரு வண்ண அச்சில் ஒரு காகிதம்! அதில் முன் பின் அட்டைப்படங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா! உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் சில புதிர்கள்! முழுவதுமாக விரித்தால் ஒரு பகுதியில் இரும்புக்கை மாயாவியும், C.I.D.லாரன்ஸ்-ம் கொண்ட ஒரு தாய விளையாட்டு! இப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்டதொரு இலவச இணைப்பு!

கண்டதும் அப்படியே சிறு வயது நினைவுகளில் மூழ்கி விட்டேன்! இந்த தாய விளையாட்டை அப்போது எத்தனை முறை உருட்டி விளையாண்டிருப்பேன் என்று எனக்கே நினைவில்லை! பின்னர் எப்படியோ தொலைந்து விட்டது! மீண்டும் நினைவு படுத்திய நண்பர் முத்து விசிறிக்கு நன்றிகள்! 

இந்த அற்புத இலவச இணைப்பின் ஸ்கேன்களை வெளியிட இதை விட சிறந்த சந்தர்ப்பம் வேறேதும் சிக்காதென்பதால் இதோ அந்தக் கண்கொள்ளா ஸ்கேன்கள் உங்கள் பார்வைக்கு!

Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 1Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 2Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 3Muthu Comics # 180 - Christmas Special - Free Gift 4

படங்களைக் ‘க்ளிக்’ செய்து பெரிதாக்கிப் பார்த்து மகிழவும்!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்!  உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:-

XIII ஜம்போ ஸ்பெஷல் குறித்த செய்திகள்/பதிவுகள்:

பிற XIII பதிவுகள்:

மங்கூஸ் சித்திர நாவல்:

XIII ஜம்போ ஸ்பெஷல் வருவதில் தாமதம் குறித்த புலம்பல்/அலம்பல் பதிவுகள்:

CINEBOOK வெளியிட்டு வரும் XIII ஆங்கிலத் தொடர் குறித்த செய்திப் பகிர்வுகள்:

XIII காமிக்ஸ் ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய:

XIII COLLECTOR’S EDITION WIDGET-ஐ உங்கள் வலைத்தளத்தில் இணைக்க:

39 comments:

  1. தலைவரே,

    வழக்கம் போல, மீ த ஃபர்ஸ்ட்டு!

    பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    ReplyDelete
  2. ச்சே, ஜஸ்ட்டு மிஸ்சு. எனிவே, மீ த செகண்டு.

    அதுவும் நம்ம சிபி அண்ணன் கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்டுவிட்டு வர்றதுக்குள்ளே வந்து கமென்ட் போட்டுட்டம்ல? அதுவே ஒரு கிலோ கேக் சாப்பிட்ட திருப்தி.

    ReplyDelete
  3. /டிசம்பரில் வேறெந்த பதிவுகளும் இடாததாலும் இனி அடுத்து உங்களைப் புத்தாண்டில்தான் சந்திப்பேன் என்பதாலும் இந்த எக்ஸ்பிரஸ் பதிவு!//

    காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பில் இனிய கிறித்துமசு, ஆங்கில புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

    (பின்னே, நாளை மற்றுமொரு நெடிய பயணத்திற்கு ஆயத்தமாகிறேன், திரும்பவருவது எப்போது என்று எனக்கும் என்னுடைய டிராவல் எஜன்ட்டுக்கும் கூட தெரியாத சூழலில், இப்போது முன்கூட்டியே சொல்லிவிடுவதுதானே நியாயம்? ). ஆகையால் வருகின்ற புக் எக்சிபிஷனில் (அது முடிவதற்குள் வந்துவிட்டால்,)சந்திக்கலாம்.

    இப்போதுதான் இரண்டு வாரம் ஒரு முக்கியமான டூர் ஒன்றை முடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்க நினைப்பதற்குள், இதுவா?

    ReplyDelete
  4. மறந்தே விட்டேன், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்தமஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தலைவரே,

    //கோவை வாசியான நான் விடுமுறைக் காலங்களில் எனது தாத்தா/பாட்டி ஊரான ஈரோட்டுக்குச் செல்வது வழக்கம்! விடுமுறையில் மாலை வேளைகளில் தினந்தோறும் தவறாமல் எனது தாத்தாவுடன் வாக்கிங் கிளம்பி விடுவேன்! வேறெதற்கு?!! புத்தக வேட்டைக்குத்தான்// எட்டு வயதிலேயே வேட்டையை ஆரம்பித்த தானைத் தலைவர் வாழ்க. வாழ்க.

    ReplyDelete
  6. தலைவரே,

    //நாளை முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்சுகள் இரண்டு ஆரம்பித்து விடுவதால் கண்டிப்பாக இனி டிசம்பரில் வேறெந்தப் பதிவையும் என்னால் இட இயலாது// அந்த பாக்சிங் டே டெஸ்ட் மேட்சில் ஆடும் டெண்டுல்கர் கூட இந்த அளவுக்கு பிசியாக இருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  7. தலைவரே,

    பொட்டிக்கடை கலாச்சாரம் அதன் இறுதி அடிகளை எடுத்து வைக்கும் காலமாக இது இருக்கலாம். முன்பெல்லாம் அவை வெகு இருட்டாக இருக்கும். பகலில் கூட சிறு விளக்கு தேவைப்படும். தமிழ் வாசனை பரப்பில் மறைந்து செல்லும் இந்த அடையாளங்களை நினைவுகூர வைத்து விட்டீர்கள்.

    பேட்டியின் காணொளிக்கு மிக்க நன்றி.

    பூங்காவனம் அம்மணியுடன் விடுமுறை சிறப்பாக கழியட்டும்.

    பி.கு.
    என்னை நிம்மதியாக இருக்க விடுகிறார்களா என பூங்காவனம் மேடம் கருத்திடுவாரா :))

    ReplyDelete
  8. தலைவரே,

    நிழற்படை விமானத்தில் 20க்கு செல்கிறேன், கரண்ட் பில் கட்டாத ஆசாமி ஒருவரைக் கைது செய்ய உத்தரவு :)

    ReplyDelete
  9. என்னுடைய வேட்டை மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையத்தில் ஆரம்பித்தது... பின்னர் கோயம்பத்தூரில் உள்ள பேருந்து நிலையத்தில் தொடர்ந்து... இப்போது சென்னை மந்தைவெளில் உள்ள லயன் மொத்த கொள்முதல் நிலையத்தில் தொடர்கிறது.......

    இப்பொழுது காமிக்ஸ்களை பொட்டிக்கடையில் பார்ப்பது அரித்க உள்ளது......

    ReplyDelete
  10. தலைவரே,
    சிறுவயதில் புத்தககடையில் உள்ள பல புத்தகங்களுக்கு மத்தியில் காமிக்சை கண்டுபிடிப்பதே அலாதியானது.ஆனால் தற்போது ரமேஷ் கூறியது போல் பெட்டி கடையில் காண்பதே அரிதாக தான் உள்ளது.

    கடைசியாக கோயம்பேட்டில் உள்ள கடையில் விசாரித்த போது நாங்கள் விற்கிறோம் என்று கேட்டாலும் காமிக்ஸ்களை விற்க ஏஜ்ஜென்ட் தர மாட்டேன்கிறார் என ஒரு குண்டை தூக்கி போட்டார்

    ReplyDelete
  11. லக்கி லிமட்,

    //கடைசியாக கோயம்பேட்டில் உள்ள கடையில் விசாரித்த போது நாங்கள் விற்கிறோம் என்று கேட்டாலும் காமிக்ஸ்களை விற்க ஏஜ்ஜென்ட் தர மாட்டேன்கிறார் என ஒரு குண்டை தூக்கி போட்டார் //

    இதில் எந்த அளவுக்கு அவர் உண்மையை கூறுகிறார் என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படியே இருந்தாலும்கூட புத்தகங்களை எஜன்ட்டுகலாக எடுப்பதில் பல கண்டிஷன்கள் உள்ளன. காமிக்ஸ் என்பதால் பல கடைக்காரர்கள் இளப்பமாக நினைக்கிறார்கள், சரியாக கணக்கு காட்டுவதும் கிடையாது.

    இதில் இந்தியா என்றில்லை, ஆசிய நாடுகளில் இலங்கையில் கூட இதே நிலைதான். குறிப்பாக ஐஸ்பெர்க் காமிக்ஸ் மூடப்பட்டதற்கு இதுபோன்ற எஜன்ட்டுகளே காரணம். முழுவதும் விற்கப்பட்டும்கூட பதிப்பகத்தார்க்கு பணம் செலுத்தாமல் இழுத்தடித்து, என்று பல கஷ்டங்கள். வருகிற புத்தாண்டில் ஒரு மாற்றம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. டாக்டர் ஐயா
    வீடியோவிற்கு நன்றி! ஈரோட்டில் நமது காமிக்ஸ் இதழ்கள் கோவையைக் காட்டிலும் முன்னரே கிடைப்பதன் மர்மம் ஆர்வத்திற்குரியதுதான். தினமலரின் சிறுவர்மலர் வெளியான தொடக்கக் காலங்களில் ஏஜெண்டுகளுக்கு புதன்கிழமையே சிறுவர் மலர் கட்டு வந்து விடும். எனது சித்தப்பா நியூஸ் ஏஜெண்ட், ஆதலால் நான் புதன் கிழமையே சிறுவர்மலர்களை படித்து விடுவேன். அதுபோலவே கையில் காசு இல்லாவிட்டாலும் கூட ராணிக்காமிக்ஸ்களை கடனுக்கு வாங்கி விடுவேன்.

    உங்களை போலவே நானும் 90களில் கல்லூரி முடிந்ததும் சில பல பழைய புத்தக கடைகளுக்கு நாள்தோறும் புத்தக வேட்டைக்கு செல்வேன். ஆனால் இன்று எல்லாமே கனவாகி விட்டது. பழைய புத்தக கடைகள் அருகிவிட்டன. இருக்கும் சில கடைகளிலும் காமிக்ஸ்கள் கிடைப்பதில்லை.

    ReplyDelete
  13. சூப்பர் நியூஸ்.

    சுட்டி டிவியில் வந்த இந்த செய்தி சற்றே குழந்தைத்தனமாக பட்டாலும்கூட, மீடியா கவரேஜ் என்று பார்க்கும்போது சரிகட்டப்பட்டு விடுகிறது.

    ReplyDelete
  14. பொட்டிக்கடைகள் இன்றும் கூட இருந்துக்கொண்டே இருக்கின்றன. நகரமயமாக்கலில் சிக்கிக்கொண்டும், பெரு வணிக சந்தையாளர்களின் மாயாஜாலங்களிலும் பிடிபடாத சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் பொட்டிக்கடைகள் இன்றளவும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றில் இப்போதெல்லாம் வணிகம் பெரிதளவில் இல்லாமல், (குறிப்பாக குளிர்பானங்கள் இல்லாததால்) அவையும் மாறிவரும் வணிக சந்தையில் காணாமல் போன கலைபோக்கிஷங்களாக மாறி வருகின்றன.

    ReplyDelete
  15. தற்போதைய போட்டிக்கடைகளில் சிகரெட்டுகளும், பாக்கும் தான் பிரதான பொருட்கள். பத்திரிகைகள் இப்போதெல்லாம் அங்கு கிடைப்பதே அரிதாகி வருகின்றன. அவைகளும் பெரிய கடைகளையே சார்ந்து வணிகம் செய்ய விழைகின்றன. குறிப்பாக தந்தி, ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை விநியோகம் செய்பவரே இந்த மாதிரியான கடைகளை பேருந்து நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் நடத்துவதால், சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
  16. அருமையான விளையாட்டு இந்த தாய விளையாட்டு. இன்றே இதனை ஆடப்போகிறேன். நன்றி உங்களுக்கும், இந்த ஸ்கான் கொடுத்து உதவிய முத்து விசிறிக்கும்.

    ReplyDelete
  17. அடுத்த பதிவு பற்றி யாரும் கேட்காமலேயே நீங்களே சொல்லிவிட்டீர்கள் - இனிமேல் அடுத்த வருடம்தான் என்று.

    ReplyDelete
  18. // அதுவும் நம்ம சிபி அண்ணன் கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்டுவிட்டு வர்றதுக்குள்ளே வந்து கமென்ட் போட்டுட்டம்ல? அதுவே ஒரு கிலோ கேக் சாப்பிட்ட திருப்தி. //

    ச்சே ஒரு நாள் இந்த பக்கம் வரல அதுக்குன்னு இப்புடியா

    கோவத்துல உங்களுக்குன்னு வச்சிருந்த கேக்கையும் சாப்புட்டாச்சு மிச்சமே இல்ல ;-)
    .

    ReplyDelete
  19. இதுவரைக்கும் காமிக்ஸ் பற்றிய தகவல்கள் தொலைகாட்சி மற்றும் செய்தி தாள் ஆகியவைகளில் வந்தது குறைவு

    ஆனால் இரத்தபடலம் வெளிவந்த பிறகு ஒரு மறுமலர்ச்சி தெரிகிறது

    வரும் ஆண்டு காமிக்ஸ் உலகிற்கு ஒரு மிகச்சிறந்த ஆண்டாக அமைய போவதற்கு ஒரு எடுத்துகாட்டாக இவைகளை எடுத்துக்கொள்ளலாம் :))

    ReplyDelete
  20. அருமையான பதிவு இது. மூன்று வெவ்வேறு விஷயங்களை சேர்த்து அருமையாக வழங்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
  21. நானும் பல பெட்டிக் கடைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

    ReplyDelete
  22. Execellent write up on the petti-shops. I always had fond memories of them in my childhood days, as my uncle had couple of them.

    ReplyDelete
  23. thanks for the you tube link.

    is there any way we can watch the full interview? these are mere chops of the full interview.

    ReplyDelete
  24. and i love the way you connect events and special posts.

    ReplyDelete
  25. சூப்பர். யீப்பி. வாவ், என்று பல வகையாக கூறலாம் - அந்த தாயவிளையாட்டை பற்றி. நானும் என்னுடைய சகோதரி மகனும் விளையாடுவோம்.

    அதில் யார் மாயாவியாக இருப்பது, யார் லாரன்ஸ் (அட, அந்த பாழாப்போன நடிகர் லாரன்ஸ் இல்லை) ஆக இருப்பது என்று சண்டையே வரும். மாயாவி யாரோ, அவரே ஜெயிப்பார் (கெலிப்பார்?) என்று ஒரு நம்பிக்கை.

    ReplyDelete
  26. அருமையான பல தகவல்களை உள்ளடக்கி உங்கள் பதிவு கமெண்ட்டுகள் உள்ளன. உதாரணமாக சிறுவர் மலர் புத்தகங்கள் முன்பே வந்துவிடும் என்பதெல்லாம் நான் சற்றும் அறியாத தகவல். நன்றி.

    ReplyDelete
  27. உங்களது பதிவுகளின் சிறப்பு அம்சமே நீங்கள் அணைத்து விதமான சார்-தகவல்களை சேர்த்து அளிப்பதே. உதாரணமாக இந்த பதிவில் நீங்கள் அளித்துள்ள சார்-பதிவுகள் குறித்த லின்க்குகள் அட்டகாசம்.

    ReplyDelete
  28. //டிஸ்ட்ரிப்யூஷனில் உள்ள கட்டமைப்புகள் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லாததால் இது குறித்து நண்பர் கேப்டன் ஹெச்சை மேலும் விளக்கினால் நலம்!//
    அவர் இந்த துறையில் உள்ளாரா? அப்படியானால் அவர் லயன் காமிக்ஸ் பற்றி சற்றேனும் உதவலாமே?

    ReplyDelete
  29. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் காமிக்ஸ் மறுமலர்ச்சி ஏற்படுமென்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    ReplyDelete
  30. தமிழில் காமிக்ஸ் படிக்கும் வழக்கத்தை குறைந்தது இரண்டு பேருக்காவது அறிமுகம் செய்து வைப்பதே என்னுடைய இந்த புதிய ஆண்டின் ரெசல்யூஷன்.

    ReplyDelete
  31. கண்டிப்பாக முப்பது பதிவுகள் இடவேண்டும் என்பதும் என்னுடைய இரண்டாவது ரெசல்யூஷன். கண்டிப்பாக நிறைவேற்ற முயல்வேன்.

    ReplyDelete
  32. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    வருகின்ற புத்தாண்டில் பலப்பல காமிக்ஸ் புத்தகங்களையும், காமிக்ஸ் பதிவுகளையும் படிக்க விழைகிறேன். எல்லாம் வல்ல தமிழ் காமிக்ஸ் உலக நண்பர்கள் ஆவன செய்வார்களா?

    ReplyDelete
  33. Happy new year, folks.

    Get comicking in a cracking way in this new year.

    ReplyDelete
  34. நண்பர்கள் அனைவருக்கும் (சற்றே தாமதமான) ஆங்கில கேலண்டர் முறையிலான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. நண்பர்கள் அனைவருக்கும் (சற்றே தாமதமான) ஆங்கிலேய வழக்கத்திலான ரோமன் கேலண்டர் முறையிலான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

    முஸ்தபா, எண்ணூர்.

    ReplyDelete
  37. காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

    முஸ்தபா, எண்ணூர்.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!