Thursday, October 22, 2009

ஆண்டு மலர்!

ஓமக்குச்சி நரசிம்மன் : “நாராயணா… 420 கேஸ்ல சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாமே?!!”
பன்னிக்குட்டி ராமசாமி : “ஏன் கோயம்பத்தூர்ல முக்குனா கைது பண்ணமாட்டாங்களா?!!”
    -கவுண்டமணி (படம்: சூரியன்)

வணக்கம்,

இந்த தீபாவளித் திருநாள்/விடுமுறை சிறப்பு தினம் உங்களனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்! வாழ்த்து தெரிவித்துள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல!

சென்ற பதிவான் தீபாவளி மலர்! உங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி! இரும்புக்கை மாயாவி இருந்தாலே போதும், அது காமிக்ஸ் ஆனாலும் சரி… பதிவானாலும் சரி… நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகி விடும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்ததற்கு நன்றிகள்!

முதல் ஆண்டு மலர்:

அக்டோபர் 23 (நாளை) அ.கொ.தீ.க. ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் ஆகிறது! கடந்த ஒரு வருடத்தில் மொத்தம் 23 (இதையும் சேர்த்து) பதிவுகளே வந்துள்ளன! அவ்வப்போது காணாமல் போவதும், பின்னர் மீண்டும் புதுப் பொலிவுடன் வருவதும் நம் வாடிக்கையாகிவிட்ட நிலையில், அடியெடுத்து வைக்கப் போகும் புது ஆண்டிலாவது ரெகுலராக பதிவிட என்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறேன்!

இந்த தருணத்தில் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்! அ.கொ.தீ.க. பிறந்த அன்றுதான் நம் நாட்டின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்டாகப் போற்றப்படும் திரு.ஆர்.கே.லட்சுமண் அவர்களும் பிறந்தார்! ஆகையால் அவரைப் போற்றும் வகையில் பதிவில் அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் உண்டு!

அ.கொ.தீ.க.வின் முதல் பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! இது ஒரு சிறந்த மொக்கைப் பதிவு என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விடுகிறேன்! ஜாக்கிரதை!

இந்த ஆண்டு மலர் பதிவில் சிறப்பாக ஏதும் செய்ய நேரமிண்மை காரணமாக இதோ உங்களுக்காக சமீபத்தில் வெளிவந்த மொக்கை காமிக்ஸ் செய்திகளின் தொகுப்பு! ஆனால் அதற்கு முன்…

பதிவுக்கு போகும் முன் ஒரு மிகமிகமிகமிக முக்கிய அறிவிப்பு: 

XIII__logoநேற்று முன் தினம் லயன் காமிக்ஸ் அலுவலகத்தாரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் அளித்த சிலபல முக்கியத் தகவல்கள் நம்மையெல்லாம் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன! இத்தருணத்தில் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்!

இந்த மாதம் முடிவதற்குள் லயன் காமிக்ஸ்#207: கொலை செய்ய விரும்பு! (மாடஸ்டி பிளைஸி சாகஸம்) வெளிவரவிருக்கிறது! தொடர்ந்து முத்து காமிக்ஸ்#313: விண்ணில் ஒரு குள்ளநரி! (விங் கமாண்டர் ஜார்ஜ் சாகஸம்) மற்றும் காமிக்ஸ் க்ளாசிக்ஸ்#25: களிமண் மனிதர்கள்! (இரும்புக்கை மாயாவி சாகஸம்) ஆகியவை அடுத்த மாதத்திற்குள் வெளிவரவிருக்கின்றன! பின்னர் லயன் காமிக்ஸ்#208 – வெள்ளையாய் ஒரு வேதாளம்! (சிக்பில் சாகஸம்) புத்தாண்டிற்குள் வந்தாலும் வரலாம்!

ஆனால் நாம் அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் XIII COLLECTOR’S SPECIAL – இரத்தப்படலம்! (பாகம்1-18) ஜனவரி 2010-ல் நிச்சயமாக வந்துவிடும்! நானும் முதலில் இதைக் கேட்ட போது நம்பவில்லைதான்! வழக்கமாக கூறப்படும் கதைதானே என்று நினைத்தேன்! ஆனால் இம்முறை உறுதியாக சொன்ன தேதியில் புத்தகம் வந்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் சற்று அதிகமாகவே உள்ளன! அதற்கு அவர்கள் கூறிய காரணங்களை உங்களுக்கு அப்படியே தொகுத்து வழங்குகிறேன்!

இதுவரை மொத்தம் 640 புத்தகங்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன! ஆனால் கதைக்கான ராயல்டி, அச்சு முதலிய செலவுகளை ஈடுகட்டவே 1200 பிரதிகள் ரூ:200/- விலையில் விற்றால்தான் இயலும்! இம்மாபெரும் நஷ்டமே புத்தகம் வர இத்தனை நாள் தாமதம் ஏற்பட காரணம்!

இவ்வாறு நேரடி விற்பனை முறையில்லல்லாது வழக்கமான புத்தக கடைகளில் விற்பதற்கு விற்பனையாளார்கள் தயக்கம் காட்டியதே ஆரம்பத்திலேயே இந்த கனவு ப்ராஜக்ட் ஒத்தி வைக்கப்பட்ட காரணம்! இவ்வளவு விலை உயர்ந்த புத்தகத்தை முன் பணம் செலுத்தி பத்திரமாகப் பாதுகாத்து விற்ற பின்னர் ஒரு பகுதியை இலாபமாக வைத்துக் கொண்டு விற்காத புத்தகங்களை பத்திரமாக திருப்பியனுப்புவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எந்த விற்பனையாளரும் விரும்புவதில்லை! இதில் பதிப்பகத்தாருக்கு புத்தகத்திற்கான விலையில் ஒரு பகுதி மட்டுமே திரும்பக் கிடைக்குமென்பதால் இதில் பெரிய இலாபமும் இல்லை!

சென்னை புத்தகக் கண்காட்சியை குறிவைத்தே ஜனவரியில் புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்! ஆனால் அங்கு கடைகளில் குறைந்த பட்சம் 10% தள்ளுபடி அளிக்க வேண்டியது கட்டாயம்! கணிசமான புத்தகங்களை விற்றுவிட முடியும் என்றாலும் விற்பனையாளர்களுக்கு 40% வரை தள்ளுபடி அளிக்க வேண்டியிருப்பதால் அங்கும் பெரிய இலாபம் இல்லை! இதனால் நேரடி விற்பனை முறைதான் இந்த கனவு முயற்சிக்கு ஒத்துவரும்!   

ஆனால் இப்போது பெருத்த நஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு ஏன் இவர்கள் புத்தகத்தை வெளியிட வேண்டும்? 1986-ல் தொடங்கிய ஒரு தொடர், 2005 முதல் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் ஒரு காமிக்ஸ் களஞ்சியம், தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் (ஆசிரியர் உள்பட) கனவான இந்த XIII ஸ்பெஷலுக்காக முன்பதிவு செய்துள்ள வாசகர்களை மேலும் காக்க வைக்க வேண்டாம் என்ற எண்ணமே! மேலும் புத்தகக் கண்காட்சியையும் தவற விடக் கூடாது என்ற உந்துதலும் காரணம்! புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் எக்ஸ்போஷரையும், பரபர விற்பனையையும் அவர்கள் விட்டுவிட தயாராக இல்லை! 

இந்த முயற்சிக்கு நம்மால் இயன்ற உறுதுணையை அளிக்க நமக்கிருக்கும் ஒரே வழி, அவரவர் தங்களால் இயன்ற அளவு பிரதிகளை முன்பதிவு செய்வதுதான்! ஒரு புத்தகத்துக்கு மேல் வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்போருக்கு, காமிக்ஸ் படித்தறியாத, அல்லது படிப்பதை நிறுத்திவிட்ட உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக வழங்குங்கள்! புதிதாக காமிக்ஸ் படிக்க விரும்புவோருக்கு XIII-ஐ விட சிறந்ததொரு அறிமுகம் கிட்டுமா? இது மேலும் பல காமிக்ஸ் வாசகர்களை உருவாக்கும்!

இந்தப் பொங்கல் நம் அனைவருக்கும் XIII பொங்கல் ஆக அமைய அனைவரும் பிரார்த்திப்போம்! இல்லையெனில் வேட்டைக்காரன் பொங்கல், அசல் பொங்கல் என்று எதையாவது கொண்டாடித் தொலைக்க வேண்டியிருக்கும்!220789687_99fbe5f722

முக்கிய அறிவிப்பு போதும், இனி மொக்கை பதிவுக்கு போவோம்!

உன்னைப்போல் ஒருவன்:

சமீபத்தில் வெளிவந்த உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் வரும் காமன் மேன் (COMMON MAN) கதாபாத்திரம் வலையுலகில் பெரியளவு விவாதங்களைத் தூண்டியுள்ளது! யார் உண்மையான காமன் மேன்? என்ற கேள்வியை ஞாநி முதல் அண்ணன் SUREஷ் வரை அனைவரும் முன் வைத்துள்ளனர்!

ஆனால் கமலுக்கு பல வருடங்கள் முன்பிருந்தே மக்களின் சிந்தையை தொடர்ந்து தூண்டி வரும் ஒரிஜினல் காமன் மேனுக்கு சிறப்பு சேர்ப்பதே எனது நோக்கம்!

அக்டோபர் 23, 1924-ல் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்டாகப் போற்றப்படும் திரு.ஆர்.கே.லட்சுமண் அவர்களால் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரமே காமன் மேன்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் YOU SAID IT! என்ற கார்ட்டூன் பகுதியின் நாயகன்தான் இந்த காமன் மேன்! தினசரி நாட்டுநடப்பில் தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அப்பாவியாக ஒரு ஓரத்தில் நின்று பார்ப்பதே இவரது குணாதிசயம்! இவரது காஸ்ட்யூம் அதை மிக பிரபலம்!

1951-லிருந்து தொடர்ந்து நம்மையெல்லாம் பல வருடங்கள் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் காமன் மேன் இந்திய உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்! காமன் மேனின் தாக்கத்தை உணர வேண்டுமெனில் பின்வரும் தகவல்கள் கொஞ்சம் உதவக்கூடும்!

  • இந்திய அரசால் 1988-ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் 150-வது ஆண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட ஒரு தபால் தலையில் காமன் மேன் படம் இடம்பெற்றுள்ளது!
  • புனேயில் SYMBIOSIS INSTITUTE-ல் காமன் மேன் சிலை நிறுவப்பட்டுள்ளது!
  • AIR DECCAN நிறுவணம் 2005-ல் தொடங்கிய மலிவு விலை விமானப் போக்குவரத்துக்கு காமன் மேனை MASCOT ஆக பயன்படுத்தி வருகிறது!

Common_man396600588_c21ce6b8d7

காமன் மேன் தவிர தன் அண்ணனாகிய அமரர் திரு.ஆர்.கே.நாராயண் அவர்களின் கதைகளுக்கு இவர் வரைந்த சித்திரங்கள் மிக பிரபலம்! இது குறித்த எனது முந்தைய பதிவைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான இன்னொரு கார்ட்டூன் கதாபாத்திரமான ASIAN PAINTS விளம்பரத்தில் வரும் சிறுவன் GATTUவையும் உருவாக்கியவரும் இவர்தான்! எனக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான கட்டுவின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு!

asian-paints-gattu-1asian-paints-gattu-6asian-paints-gattu-8asian-paints-gattu-2asian-paints-gattu-3asian-paints-gattu-4asian-paints-gattu-5asian-paints-gattu-7

இத்தனை மகிழ்வுகளை நமக்கெல்லாம் தொடர்ந்து அளித்துவரும் அவர் மென்மேலும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! 

காமன் மேன் குறித்து மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

எழுத்தாளர் எஸ்.ரா.வின் காமிக்ஸ் கனவுகள்:

சமீபத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் தன் வலைத்தளத்தில் தனது காமிக்ஸ் அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார்! அதன் முதல் பத்தியை மட்டும் சுட்டு அதை ஒரு துணுக்காக குங்குமம் வார இதழ் (26-10-2009) வெளியிட்டுள்ளது!

Kungumam Weekly Magazine Dated 26102009 Page 9 SRa Comics

பதிவை மறவாமல் படியுங்கள்! ஆதாரப்பூர்வ பிழைகள் சில இருப்பினும் (அவர் ஒன்றும் முழு நேர காமிக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கவில்லையே) தனது இளம்பிராய காமிக்ஸ் அனுபவங்களை அவருக்கே உரித்தான நடையில் அவர் தொகுத்து வழங்குவதைப் படிக்கும் போது மிகுந்த சுவாரசியமாக உள்ளது! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

புதிய தலைமுறை-ல் சித்திர நாவல் விமர்சனம்:

சமீபத்தில் தொடங்கப் பட்டுள்ள வாரப் பத்திரிக்கையான புதிய தலைமுறையின் இரண்டாவது இதழில் (06-10-2009) உலகப் புகழ் பெற்ற பெர்சிபொலிஸ் சித்திர நாவலின் தமிழாக்கம் விமர்சிக்கப்பட்டுள்ளது! இந்த சித்திர நாவலைத் தழுவி சமீபத்தில் ஒரு திரைப்படம் கூட வந்தது! 

இந்த வாரப் பத்திரிக்கையில் புகழ்பெற்ற வலைபதிவர்களான சில காமிக்ஸ் ரசிகர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது! 

Puthiya Thalaimurai Issue 2 Dated 06102009 Book Review Graphic Novel

தமிழில் வெளிவந்துள்ள இந்த அதியற்புத சித்திர நாவலை மறவாமல் வாங்கிப் படிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்! இந்த சித்திர நாவலை எனக்கு அறிமுகம் செய்து வைத்த கனவுகளின் காதலர்-க்கு இந்தத் தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

மீண்டும் பொன்வண்ணன் காமிக்ஸ் படிக்கிறார்:

இந்த வாரப் பத்திரிக்கைகள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் சளைக்காம இந்த நியூஸை போடுவாங்களோ தெரியல! அதை ஸ்கேன் பண்ணி போடுற பதிவர்களுக்கும், அதை படிச்சுத் தொலைக்க வேண்டியிருக்கிற வாசகர்களுக்கும் நிச்சயம் சலிப்பு தட்டியிருக்கும்! ஆனா தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல இவங்க எத்தனை முறை நியூஸ் போட்டாலும் அதை உங்களுக்கு வழங்கிடுவது நமது கடமையாகும்!

ஆகையால் இதோ வாசகர்களின் பேராதரவிற்கிணங்க மீண்டும் ஒரு முறை: பொன்வண்ணன் காமிக்ஸ் படிக்கிறார்! இம்முறை சினிமா எக்ஸ்பிரஸ் (16-10-2009) வார இதழில்!

Cinema Express Dated 16102009 Page 82 Ponvannan Comics Cinema Express Dated 16102009 Page 83 Ponvannan Comics

எகனாமிக் டைம்ஸ்-ல் காமிக்ஸ் டைம்: 

Economic Times Dated 19102009 Page 16 Dracula Revival

வழக்கமாக வணிக செய்திகள் வெளியிடும் எகனாமிக் டைம்ஸ் (19-10-2009) பத்திரிக்கையில் காமிக்ஸ் நியூஸ் கண்டவுடன் நான் அடைந்திட்ட இன்ப அதிர்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்! ஆனால் செய்திகள் என்னவோ படு மொக்கைதான்!

அந்த டிராகுலா செய்தி மட்டும் ஆர்வத்தைத் தூண்டுகிறது! புத்தகம் வந்ததும் பார்ப்போம் ப்ராம் ஸ்டோகர்-ன் பரம்பரைப் பராக்கிரமத்தை!

கனவுகளின் காதலர் புத்தகத்தை படித்துவிட்டு விமர்சிப்பார் என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

மொபைலில் காமிக்ஸ் படிப்பதையெல்லாம் ஏனோ என் மனம் ஏற்க மறுக்கிறது! இம்மாம் பெரிய கம்ப்யூட்டர் ஸ்க்ரீனிலேயே டவுன்லோடு செய்த காமிக்ஸை படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிற போது, இத்தணூண்டு மொபைல் ஸ்க்ரினில் என்னத்த காமிக்ஸ் பேரின்பத்தை பெருசா அனுபவிச்சிர முடியும்னு எனக்குத் தெரியல!  

வேதாளர் கதையை வேணும்னா மிஸ் பண்ணாம தினசரி படிச்சுக்கலாம்!

Economic Times Dated 19102009 Page 3 Airtel Comics Portal

மிகமிகமிகமிக முக்கியமான பின்குறிப்பு:

  • இதுக்கே “இப்பவே கண்ணக்கட்டுதே!” என்று புலம்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை! இன்னும் இது போல பல மொக்கை காமிக்ஸ் நியூஸ்களை கைவசம் வைத்திருக்கிறேன்! வரும் பதுவுகளில் அவை அவ்வப்போது வந்து உங்களைத் தாக்கும்! உஷார்!
  • குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறாங்களோ இல்லையோ, கண்டிப்பா ஒபாமா காமிக்ஸ் படிக்கிறார்! தகவல்கள் விரைவில்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

Thursday, October 15, 2009

தீபாவளி மலர்!

முத்து # 008 - இமயத்தில் மாயாவி - முன்னட்டைப்படம்
முத்து # 008 - இமயத்தில் மாயாவி - முன்னட்டைப்படம்
முத்து # 008 - இமயத்தில் மாயாவி - பின்னட்டைப்படம்
முத்து # 008 - இமயத்தில் மாயாவி - பின்னட்டைப்படம்
முத்து # 193 - இமயத்தில் மாயாவி - மறுபதிப்பு
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 007 - இமயத்தில் மாயாவி
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 007 - இமயத்தில் மாயாவி
Fleetway Super Library - Stupendous Series # 009 - Forbidden Territory
FLEETWAY SUPER LIBRARY - STUPENDOUS SERIES # 009 - FORBIDDEN TERRITORY
Fleetway Super Library - Stupendous Series # 009 - Forbidden Territory - Page 3
FLEETWAY SUPER LIBRARY - STUPENDOUS SERIES # 009 - FORBIDDEN TERRITORY – PAGE 3
இமயத்தில் மாயாவி - பக்கம் 3
இமயத்தில் மாயாவி – பக்கம் 3
பொதுஜனம் : “சாமி… ஐஸ் வெள்ளிங்கிரி மலைன்னா…
அது இமயமலை மாதிரிங்களா?”
ஐஸ் வெள்ளிங்கிரி மலை ஆக்கஜுருஜுருருரப்பாய் அப்புசாமி  : “நீ சொல்றது சாதாரண ஐஸ் மலை!
நான் இருந்தது சேமியா ஐஸ் மலை!”
   

-கவுண்டமணி (படம்: நானே ராஜா நானே மந்திரி)

வணக்கம்,

அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி சிறப்புப் பதிவாக முத்து காமிக்ஸ்-ன் முதல் தீபாவளி மலர்-ஐ உங்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறேன்!

கதைச்சுருக்கம்:

1972 நவம்பர் மாதம் தீபாவளி சிறப்பிதழாக இரும்புக்கை மாயாவி (வேறு யார்?) “இந்திய விஜயம்!” என்று விளம்பரப்படுத்தப்பட்டு வெளிவந்த கதைதான் இமயத்தில் மாயாவி!

இதோ இந்த கதைக்கு வெளியிடப்பட்ட விளம்பரம், கதைச்சுருக்கத்துடன்! கதை கிட்டத்தட்ட கொரில்லா சாம்ராஜ்யம் கதைதான். கொரில்லாக்களுக்கு பதில்  பனி மனிதர்கள் (YETI).

இமயத்தில் மாயாவி - விளம்பரம்

புகழ் பெற்ற மலையேறும் வீரர் ஜான் ஹென்றி-ஐ மர்ம நபர்கள் கடத்தி விடுகின்றனர்! அவரைத் தேடி இமய மலையிலுள்ள மோபால் நாட்டிற்கு செல்கிறார் மாயாவி! அங்கு பனி மனிதர்களின் தாக்குதலிலிருந்து தப்பி எதிரிகளின் பாசறைக்கு வந்தடைகிறார்! இதன் பின்னனியில் தன் பரம விரோதிகளான க.கொ.க.கூ. (நமது காமிக்ஸ் பிரியர் தற்போது தலைவராக இருக்கும் அதே நிறுவனம் தான்) இருப்பதைக் கண்டுகொள்கிறார்!

க.கொ.க.கூ. தலைவராக வரும் டோகோ கான் தான் கதையின் வில்லன்! மின்சாரதால் கட்டுப்படுத்தப்படும் பனி மனிதர்களைக் கொண்டு இமயத்தில் இந்தியாவிற்கு பாதையாக விளங்கும் மோபால் நாட்டினை கைப்பற்றுவதே இவனது திட்டம்! ஜான் ஹென்றி இப்பனி மனிதர்களை கண்டுகொண்டபடியால் அவரை கடத்துகிறான்!

மோபால் மன்னரையும் பனி மனிதர்கள் கொண்டு கடத்துகிறான்! அவரை மூளைச்சலவை செய்து நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அவனது நோக்கம்! மூளைச்சலவைக்கு அவன் மின்சாரத்தையே பயன்படுத்தப் போவதாகவும், அதற்கான சோதனை முயற்சியில் மாயாவியை பயன்படுத்தவும் முடிவெடுக்கிறான்!

டோகோ கான்!

டோகோ கான்!

க்ளைமாக்ஸில் வழக்கம் போல மாயாவியிடமிருந்து உண்மைகளை வரவழைக்கிறேன் பேர்வழி என்று அவரது உடலில் மின்சாரத்தை செலுத்தி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் வில்லன்கள் இன்னும் எத்தனை கதைகளில் தான் வருவார்களோ? ஆனாலும் மாயாவி ஒவ்வொரு முறையும் மாயமாக மறையும் போதும் நாம் அடையும் பரவச இன்பம் இன்னும் எத்தனை முறை இது போன்ற கதைகள் வந்தாலும் நம்மை வரவேற்கவே தூண்டும்!

காமிக்ஸ் குத்து!

முல்லை தங்கராசன்-ன் நயமான மொழிபெயர்ப்பில் சுமாரான கதை கூட சூப்பராக மாறிவிடும் என்பதற்கு இக்கதை சான்று! மாயாவி பேரரசு ரேஞ்சுக்கு ‘பன்ச்’ வசனங்களால் நம்மையெல்லாம் பரவசப் படுத்துகிறார்! சாம்பிளுக்கு ஒன்று! எதிரிகளிடம் சிக்கிக் கொண்ட மாயாவியை விசாரிக்கும் காட்சியில் இடம் பெறும் வசனங்கள் இவை!

எதிரி : “உன் பெயர் என்ன?”
மாயாவி : “உண்டுவளர்ந்தான்!”
எதிரி : “செயற்கை கை! உனக்கு எப்படி வந்தது?”
மாயாவி : “அப்படிக் கேள்! பழைய இரும்புக் கடையில் வாங்கினேன்!”

இலவச இனைப்பு: 

இந்த இதழுடன் இலவச இனைப்பாக தங்க மீன் புத்தகம் வழங்கப் பட்டது! துரதிர்ஷ்டவசமாக அப்புத்தகத்தை நான் கண்ணால் கூட கண்டதில்லை! யாரேனும் அந்தப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருந்தீர்களானால் புகைப்படம் அல்லது ஸ்கேன் அனுப்புங்களேன்… ப்ளீஸ்!

இதோ இலவச இனைப்பு குறித்த விளம்பரம் உங்கள் பார்வைக்கு!

இமயத்தில் மாயாவி - இலவச இனைப்பு - விளம்பரம்

பதிப்புகள்:

இங்கிலாந்தின் ஃப்ளீட்வே (FLEETWAY) நிறுவனம் மே 1967-ல் வெளியிட்ட டைஜஸ்ட் வடிவிலான காமிக்ஸ்களில் ஸ்டுபென்டஸ் ஸீரீஸ் (STUPENDOUS SERIES) எனும் தொடரில் ஒன்பதாவது இதழான ஃபார்பிட்டன் டெரிட்டரி (FORBIDDEN TERRITORY) எனும் கதைதான் இமயத்தில் மாயாவி-ன் மூலம்.

நவம்பர் 1972-ல் தீபாவளி மலராக முத்து காமிக்ஸின் எட்டாவது இதழாக முல்லை தங்கராசன்-ன் முத்தான மொழிபெயர்ப்பில் இக்கதை முதன்முதலில் தமிழுக்கு வந்தது.

அதன் பிறகு முத்து # 193 - மே 1991-லும், காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 007 - ஜனவரி 2001-லும் இக்கதை மறுபதிப்பு செய்யப்பட்டது. இன்னும் எத்தனை முறை வந்தாலும் இக்கதைக்கான வரவேற்பு காமிக்ஸ் ரசிகர்களிடையே குன்றவே குன்றாது! இக்கதைக்கு தமிழில் கிடைத்த வெற்றிக்கு முல்லை தங்கராசன்-ன் மொழிபெயர்ப்பு மாபெரும் பங்கு வகிக்கிறது.

ஆசிரியர் பார்வை:

இக்கதை காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ல் மறுபதிப்பு செய்யப்பட்ட போது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் சிலாகித்து எழுதியிருந்த தலையங்கப் பகுதி இதோ உங்கள் பார்வைக்கு! இப்போதெல்லாம் அவர் இது போல் எழுதுவதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்!

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 007 - OLD IS GOLD

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைத்து ஸ்கேன்களையும் அளித்துதவிய நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்!

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்: 

முத்துவின் முதல் இதழ் - இரும்புக்கை மாயாவி:

இரும்புக்கை மாயாவி:

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பற்றிய இடுகைகள்:

பிற சிறப்பிதழ்கள்:

முத்து இதழ்களின் முழு விவரம்:

ஃப்ளீட்வே/முத்து - ஒரு பார்வை:

Sunday, October 11, 2009

மால்குடி டேஸ்!

வணக்கம்,

வேட்டைக்காரன் – திரை விமர்சனம்! பதிவிற்கு நீங்கள் அனைவரும் அளித்த அமோக ஆதரவுக்கு நன்றி! இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாக புரிந்தது! என்னதான் மாங்கு, மாங்கென்று ஸ்கேன் செய்து, தீவிர ஆராய்ச்சியின் பின் பதிவுகள் வெளியிட்டாலும் அவை தமிலிஷ்-ல் பிரபலம் ஆவதில்லை! (உம்: சாட்டையடி வீரன்!) ஆனால் இது போல் ஏதோ ஒன்றை மொக்கையாக போட்டால் உடனே பிரபலம் ஆகி தொலைத்து விடுகிறது! நமது வலைப்பூவுக்கும் ஹிட்ஸ் வந்து குவிகிறது! என்ன கொடுமை சார் இது?

பதிவுக்கு செல்லும் முன் முந்தைய பதிவுகளில் இடம்பெற்ற வெகுமதி! கேள்விகளும், அவற்றின் விடைகளும், வெற்றி பெற்றோருக்கு பரிசு தர பொருளாதாரப் பின்னடைவால் இயலவில்லை என்பதால் பாராட்டுதல்களும் வழங்குகிறோம்!

வெகுமதி!

சாட்டையடி வீரன்! பதிவில் இடம்பெற்ற கேள்விக்கான விடை:

கேள்வி : சாட்டையடி வீரர் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்களை சரியாகக் கூறவும்!
விடை : சாட்டையடி வீரர்    – ஒற்றைக்கண் பிலிப்
அவரது நண்பர்கள்  – லியோ, சைமன்

சரியான விடையை முதலாவதாகக் கூறிய பங்கு வேட்டையர்-க்கும், இரண்டாவதாக வந்த VEDHAவுக்கும் பாராட்டுக்கள்!

வேட்டைக்காரன் – திரை விமர்சனம்! பதிவில் இடம்பெற்ற கேள்விக்கான விடை:

கேள்வி : கல்கியில் காந்தன் திரைவிமர்சனம் செய்யாத போது நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒருவர் அந்த பணிகளை செய்வதுண்டு! அவர் யார்?
விடை : நாமெல்லாம் வாண்டுமாமா என்று அறிந்த திரு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கல்கியில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கெளசிகன் என்ற புனைப்பெயரில் கதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனம் மற்றும் முக்கியமாக சித்திரக் கதைகள் பலவற்றையும் எழுதித் தள்ளியுள்ளார்!

சரியான விடையை முதன்மையாகக் கூறி பாராட்டுக்களைத் தட்டிச் செல்கிறார் நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் திரு.கனவுகளின் காதலன் அவர்கள்! அவருக்கு நவஜோ மதகுருவிடம் பூரிக்கட்டை அடி வாங்காமல் மேகான் ஃபாக்ஸ் முத்தம் கிட்டக் கடவுவதாக!

பின்னால் வந்த காமிக்ஸ் காதலன் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக பல அரிய தகவல்களை நமக்கு வழங்கியுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்! 

வாண்டுமாமா பற்றி மேலும் அறிந்து கொள்ள:

மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு வருவோம்!

அக்டோபர் 10, 2009 - இந்திய ஆங்கில மொழி எழுத்துலகின் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் அமரர் திரு.ஆர்.கே.நாராயண் அவர்கள் பிறந்த நாள்.

இவரது பல படைப்புகளை நான் படித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அனைத்தும் ஆங்கிலத்தில் தான். SWAMI AND FRIENDS, THE ENGLISH TEACHER, Mr.SAMPATH, THE FINANCIAL EXPERT, THE GUIDE, THE VENDOR OF SWEETS ஆகிய முழு நீள நாவல்களையும், MALGUDI DAYS, LAWLEY ROAD AND OTHER STORIES, A HORSE AND TWO GOATS AND OTHER STORIES முதலிய சில சிறுகதைத் தொகுப்புகளையும், MY DATELESS DIARY, RELUCTANT GURU ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் நான் தேடிப் பிடித்துப் படித்து ரசித்திருக்கிறேன். மீதம் உள்ளவற்றையும் வாங்கிப் படித்துவிட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.

தமிழில் விகடன் பிரசுரம் சுவாமியும் சினேகிதர்களும், இருட்டு அறை என இரண்டு புத்தகங்கள் மட்டும் வெளியிட்டு விட்டு அத்தோடு நிறுத்தி விட்டனர் என்பது வருத்ததிற்குரிய விஷயம். இக்கதைகள் ஆனந்த விகடன் வார இதழில் 1937 -ல் தொடராக வெளிவந்தன. அவற்றின் மறுபதிப்புகள் தான் இந்த புத்தகங்கள். 

ஆனால் இங்கு நான் அவரது உலகப் புகழ் பெற்ற நாவல்கள் குறித்து அலசப் போவதில்லை. மாறாக அவரது படைப்புகளின் திரை வடிவங்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன்.

VHIF0214 மிஸ்டர் சம்பத்:

1947-ல் ஆர்.கே.நாராயணின் நெருங்கிய நண்பரான ஜெமினி ஃபிலிம்ஸ் அமரர் திரு.எஸ்.எஸ்.வாசன் (ஆனந்த விகடன் பத்திரிக்கையின் நிறுவனரும் இவரே) அவர்களால் தயாரிக்கப்பட்டு, திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இயக்கி, மிஸ்டர் சம்பத்தாகவும் நடித்து, திரு.பரூர் எஸ்.அனந்தராமன் அவர்கள் இசையில் மிஸ் மாலினி என்ற பெயரில் இக்கதை திரைப்படம்மாக்கப்பட்டது.

இதில் புஷ்பவல்லி, ‘ஜாவர்’ சீதாராமன், சுந்தரிபாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல் மன்னன் ஜெமினி கணேசன் அறிமுகமான படம் இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.

இது ஒரு சிறந்த சமூக திரைப்படமாக கருதப் பட்டாலும், வசூலில் ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் ஜனரஞ்சக சமாச்சாரங்கள் எதுவும் இல்லாததே படத்தின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாகும். இப்படம் குறித்து தமிழ் சினிமா வரலாற்று பேரறிஞர் திரு.ராண்டார் கை அவர்கள் தி ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையை படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்.

பின்னர் 1952-ல் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள் இதே கதையை மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் ஹிந்தியில் தயாரித்து இயக்கினார். இதில் நாட்டியப் பேரொளி பத்மினி மிஸ் மாலினி-யாக நடித்துள்ளார். ஹிந்தியிலும் படம் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இப்படத்தின் VCD மோசர்பேர் நிறுவனத்தினரால் வெளியிடப் பட்டுள்ளது. வாங்க இங்கே ‘க்ளிக்’கவும்.

1972-ல் இதே கதையை திரு.சோ அவர்கள் இயக்கி நடித்து மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் ஒரு படம் வந்தது. இதில் சோ தான் மிஸ்டர் சம்பத் ஆக நடித்திருப்பார்.Guide_1965_film_poster

GUIDE:

ஆர்.கே.நாராயண்  1965-ல் தேவ் ஆனந்த், வஹீதா ரெஹ்மான் நடித்து, தேவ் ஆனந்தின் தம்பி விஜய் ஆனந்த் இயக்கி, எஸ்.டி.பர்மன் இசையமைத்து வெளிவந்த GUIDE திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். உலக அளவிலும் இப்படம் நற்பெயர் பெற்றது.

இந்திய (ஹிந்தி) சினிமாவின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக இப்படம் கருதப்பட்டாலும் ஆர்.கே.நாராயணுக்கு இத்திரைப்படம் குறித்து நல்ல அபிப்ராயம் இல்லை.

THE MISGUIDED GUIDE என்று தனது அற்புதக் கதை படமாக்கப்பட்ட விதம் குறித்து LIFE பத்திரிக்கையில் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார்.

கதை முழுவதும் விரவிக் கிடக்கும் மெல்லிய நகைச்சுவை உணர்வு படத்தில் மிஸ்ஸிங். தேவ் ஆனந்தின் ஹீரோ இமேஜுக்காக நகைச்சுவை பலிகடாவாக்கப்பட்டு காதல், தியாகம், உணர்ச்சிகள், செண்டிமெண்ட் என்ற வழக்கமான இந்திய சினிமா வட்டத்திற்குள் படம் சிக்கி விடுவது பரிதாபம்.

THE FINANCIAL EXPERT:

1983-ல் இக்கதை கன்னடத்தில் பேங்கர் மார்க்கைய்யா என்ற பெயரில் படமாக்கப் பட்டது. இப்படம் குறித்த விவரங்களுக்கு இங்கே ‘க்ளிக்’கவும்.

மால்குடி டேஸ்:

1986-ல்   PADAM RAG FILMS திரு.டி.எஸ்.நரசிம்மன் அவர்கள் தயாரித்து பிரபல கன்னட நடிகரும், இயக்குனருமான அமரர் திரு.ஷங்கர் நாக் அவர்கள் இயக்கத்தில் மால்குடி டேஸ் என்ற தலைசிறந்த தொலைக்காட்சித் தொடர் தூர்தர்ஷன்-ல் ஒளிபரப்பானது.

இதில் அனந்த் நாக், கிரிஷ் கர்னாட், ஷங்கர் நாக் உள்ளிட்ட பலர் அற்புதமாக நடித்துள்ளனர். எல்.வைத்தியநாதன்-ன் இசையை கேட்ட யாரலும் மறக்க முடியாது. டைட்டில் கார்டுகளில் காணப்படும் கார்ட்டூன்கள் ஆர்.கே.நாராயணின் தம்பியும் இந்தியாவின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்டுமான திரு.ஆர்.கே.லட்சுமண் அவர்களால் உருவாக்கப்பட்டவை. இவர் ஏற்கெனவே தி ஹிந்து நாளிதழில் தனது சகோதரரின் படைப்புகள் பிரசுரிக்கப் பட்ட போது அதற்கு ஓவியங்கள் வரைந்தவர் ஆவார்.

இத்தொடரில் SWAMI AND FRIENDS மற்றும் VENDOR OF SWEETS ஆகிய கதைகள் படமாக்கப்படன. அற்புதமான இந்தத் தொடர் அனைவராலும் பாராட்டப் பெற்றது. ஆர்.கே.நாராயணும் கூட இத்தொடரை முழுமையாக அங்கீகரித்துள்ளார். மொத்தம் 39 பகுதிகள் கொண்ட இத்தொலைக்காட்சித் தொடர் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.

2004-ல் மீண்டும் மால்குடி டேஸ் தொடர் கவிதா லங்கேஷ் இயக்கத்தில் தொடங்கப் பட்டது. இதில் அனந்த் நாக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார். ஏப்ரல் 26, 2006 முதல் இத்தொடர் தூர்தர்ஷன்-ல் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரையை வாசிக்க இங்கே ‘க்ளிக்’கவும்.

இத்தொடரில் THE MAN-EATER OF MALGUDI, LAWLEY ROAD முதலிய கதைகள் படமாக்கப் பட்டன. இதிலும் டைட்டில் கார்டுகளில் ஆர்.கே.லட்சுமணின் கார்ட்டுன்கள் இடம்பெற்றன. ஆனால் முதல் தொடர் போல் இது அவ்வளவு பிரபலமடையலில்லை. சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் இத்தொடர் வந்ததும் போனதும் யாருக்கும் தெரியாமலேயே போய் விட்டது.LOGO   

இத்தொடர் இப்போது DVD/VCDகளில் பல இனையதளங்களில் கிடைக்கிறது. பல இடங்களில் தரவிறக்கம் செய்ய வசதிகளும் உண்டு. ஆனால் இவையெல்லாம் ஹிந்தி அல்லது ஆங்கிலத்திலேயே உள்ளன. இன்று வரை இத்தொடர் தமிழில் வந்ததில்லை.

இக்குறையை போக்கும் விதத்தில் தமிழில் முதன்முறையாக சமீபத்தில் தொடங்கப்பட்ட பாலிமர் டிவி-யில் அடுத்த ஞாயிறு (18-10-2209) முதல் ஒளிபரப்பாகவுள்ளது. காணத் தவறாதீர்கள். இப்பதிவை நான் இடத்தூண்டியதும் இந்த மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.

போனஸ்:

ஆனந்த விகடன் வார இதழின் இந்த வாரப் பிரதியில் (14-10-2009) பொக்கிஷம் பகுதியில் வெளிவந்துள்ள 22-01-1989 இதழில் வெளிவந்த திரு.ஆர்.கே.நாராயண் அவர்களின் பேட்டியின் மறுபதிப்பு இதோ உங்கள் பார்வைக்கு.Anantha Vikatan Dated 22011989 RK Narayan Interview1

துணுக்கு:

  • LAWLEY ROAD என்று கோவையில் ஒரு சாலை உண்டு. இதற்கும் ஆர்.கே.நாராயணின் கதைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என நான் அடிக்கடி வியந்ததுண்டு. ஏனெனில் அவரது கதைகளின் களமான மால்குடி என்பது தமிழக-கன்னட எல்லையில் அவர் வளர்ந்த கிராமத்தை அடிப்படையாகக் கொண்டதென அறிஞர்கள் கூறுவதுண்டு. சரி கர்நாடகாவிலும் ஏதாவது LAWLEY ROAD இருக்கலாம் என நான் மனதை தேற்றிக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, அவர் காதலித்து திருமணம் புரிந்த அவரது மனைவி வாழ்ந்திருந்தது கோவையில் தான் என்று. ஒரு வேளை அவர் LAWLEY ROAD அருகே வசித்திருக்கலாமோ? 

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:

  • நெடு நாட்கள் கழித்து ஒரு முழு நீள பதிவின் மூலம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். கடந்த சில பதிவுகள் சற்று மொக்கையாக அமைந்து விட்டபடியால் அதை நிவர்த்தி செய்யவே இந்த பதிவு. ரசித்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.
  • திரு.ஆர்.கே.நாராயனண் அவர்களின் சகோதரர் திரு.ஆர்.கே.லட்சுமண் அவர்களின் பிறந்த நாளும் இதே அக்டோபர் மாதத்தில் வருவதால் அவரைப் பற்றிய ஒரு பதிவையும் நீங்கள் விரைவில் எதிர் பார்க்கலாம். இந்த முறை போல் அல்லாது அம்முறையேனும் தாமதமில்லாமல் சரியான நேரத்திற்கு பதிவிட முயல்கிறேன்.

தொடர்புடைய இடுகைகள்:

மால்குடி டேஸ் அனைத்து பாகங்களையும் ஆன்லைனில் கண்டு மகிழ:

மிஸ் மாலினி திரைப்படம் குறித்து தி ஹிந்து நாளிதழில் ராண்டார் கை:

மிஸ்டர் சம்பத் ஹிந்தி திரைப்பட VCD வாங்க:

ஆர்.கே.நாராயண் கதைகளை தமிழில் விகடன் பிரசுரம் வெளியிட்ட புத்தகங்களை வாங்க:

Sunday, October 4, 2009

வேட்டைக்காரன் – திரை விமர்சனம்!

புளி வியாபாரி : “கொட்டை எடுத்தது வேணுங்களா?
கொட்டை எடுக்காதது வேணுங்களா?”
கவுண்டமணி : “ஓ! அத வேற எடுத்துட்டீங்களா?"
    -படம்: தாலாட்டு கேட்குதம்மா

வணக்கம்,

1964-ம் வருடம் பொங்கல் அன்று தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில், கே.வி.மஹாதேவன் இசையில் எம்.ஜி.ஆர், நம்பியார், சாவித்ரி, எம்.ஆர்.ராதா, அசோகன், நாகேஷ், ஒரு குழந்தை (பேபி ஷகிலா-ஆண் வேடத்தில்) மற்றும் ஒரு சிறுத்தை ஆகியோரது நடிப்பில் வெளிவந்து பெருவெற்றி பெற்ற வேட்டைக்காரன் திரைப்படத்தைப் பற்றி கல்கி வார இதழில் வெளியான திரை விமர்சனம், இதோ உங்கள் பார்வைக்கு!

எம்.ஜி.ஆர் இதில் கெள-பாய் வேடத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது! விமர்சனத்தில் கட்டிப்பிடிக்கும் காதல் காட்சிகளை கண்டித்திருப்பதை கவனிக்கவும்!

பெயர் குறிப்பிடப்படவில்லையெனினும் வழக்கமாக அந்த காலத்திலெல்லாம் கல்கியில் காந்தன் என்பவர்தான் விமர்சனம் எழுதுவார்! இதுவும் அவர் எழுதியதாகத்தான் இருக்கக் கூடும்!

வெகுமதி:

கல்கியில் காந்தன் திரைவிமர்சனம் செய்யாத போது நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒருவர் அந்த பணிகளை செய்வதுண்டு! அவர் யார் என சரியாக யூகிப்பவர்களுக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயமுண்டு!

Vettaikaran

பி.கு.:

  • இளைய(?!!) தளபதி(?!!) மருத்துவர்(?!!) விசய்(?!!) நடித்து(?!!) தீபாவளிக்கோ(?!!), பொங்கலுக்கோ(?!!) வெளிவரவிருக்கும் இதே பெயர் கொண்டதொரு படத்தைப் பார்த்து அதை விமர்சனம் வேறு செய்து சொந்த செலவிலே சூனியம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அகிலமே அஞ்சி நடுங்கும் அ.கொ.தீ.க. தலைவர் ஒன்றும் அடிமடையரல்ல!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

Thursday, October 1, 2009

சாட்டையடி வீரன்!

வணக்கம்!

சமீபத்தில் பிரிட்டிஷ் காமிக்ஸ் பிதாமகர் ஸ்டீவ் ஹாலண்ட்-ன் தளத்தில் கண்டதொரு துயரச் செய்தியின் விளைவே இப்பதிவு!

கார்லோஸ் கேப்ரியல் ரெளம் (CARLOS GABRIEL ROUME) எனும் காமிக்ஸ் ஓவியரின் மரணச் செய்தியே அது!

இவர் நமக்கு மிகவும் பரிச்சயமானவர் ஆவார்! ராணி காமிக்ஸில் வெளிவந்த சாட்டையடி வீரரின் சாகஸங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவையே!

சாட்டையடி வீரரின் கதைகளில் தென்படும் இவரது உயிரோட்டம் நிறைந்த பாணி தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானதே! வேறு சில பல கெளபாய் கதைகளுக்கும் இவர் தனது பாணி ஓவியங்கள் மூலம் உயிரூட்டியிருப்பது இன்றும் நம் நினைவில் நிற்கிறது!

இதோ அவரது நினைவாக சாட்டையடி வீரரின் ராணி காமிக்ஸ் அட்டை படங்கள்!

Rani Comics Issue 10 Dated Nov 15 1984 Saattaiyadi Veeran Rani Comics Issue 24 Dated June 15 1985 Puratchi Veeran Rani Comics Issue 64 Dated Apr 1 1987 Satta Virodhi Rani Comics Issue 105 Dated Nov 1 1988 Ragasiya Kollaikaaran

இதோ உங்கள் பார்வைக்கு ஒரிஜினல் அட்டைப் படங்கள்! மொத்தமாக வந்த சாட்டையடி வீரர்களின் கதைகளின் எண்ணிக்கை நான்கு மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது! இவற்றை நமக்கு தமிழில் அறிமுகப் படுத்திய ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களுக்கு இந்த தருணத்தில் நாம் நன்றி கூறுவது பொருத்தமாகவே இருக்கும்!

Cowboy Picture Library 404 The Gun Tamers Cowboy Picture Library 412 The Gun Tamers The Rebel Cowboy Picture Library 424 The Gun Tamers way of an outlaw Cowboy Picture Library 432 The Gun Tamers the defenders

அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!

வெகுமதி:

சாட்டையடி விரர் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்களை சரியாக கூறுபவர்களுக்குப் பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு!

இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளை பயன்படுத்தவும்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!