Saturday, May 16, 2009

தேர்தல் சிறப்புப் பதிவு!

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!”

-கவுண்டமணி (படம் : சூரியன்)

வணக்கம்,

தேர்தல் ஜுரம் உச்சத்திலிருக்கிறது! வாக்கெடுப்பு முடிந்துவிட்டிருப்பினும் வழக்கம் போலக் கள்ள வோட்டு போடுவதிலும், சாவடிகளைச் சூறையாடுவதிலும் பிஸியாக இருந்ததனால் பதிவு தாமதமாக வருகிறது!

ஆனாலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் இப்பதிவு வருவது பொருத்தமானதாகவேயிருக்கும்!

த.கா.உ. தலைவர் தேர்தல் சிறப்புப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்! அய்யம்பாளையத்தார் தனது அரசியல் கருத்துக்களுடன் எப்போது வேண்டினும் திடீரெனக் களமிறங்கலாம்! இப்படியிருக்கையில் அ.கொ.தீ.க. மட்டும் அமைதியாக இருந்தால் எப்படி? அதனால்தான் சம்மர் ஸ்பெஷல்-ஐ இப்போதைக்கு ஓரம்கட்டிவிட்டு இந்த அதிரடிப்பதிவு!

அப்புறம் தேர்தல்ல நமக்கு கள்ள வோட்டு போடாதவங்க வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல்ல வரும்! முடிஞ்சா உயிரக் காப்பாத்திக்கங்க!

சென்ற பதிவான ருஷ்ய சிறுவர் இலக்கியம்-க்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி! அப்பதிவுடன் தொடர்புடைய சிறியதொரு அப்டேட் இப்பதிவின் முடிவில் உள்ளது! பார்க்கத் தவறாதீர்கள்!

மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்கு வருவோம்!

தேர்தல் சம்பந்தமுடைய காமிக்ஸ் பற்றி பேசும் போது மதியில்லா மந்திரி கதைகள்  நினைவுக்கு வருவதுண்டு! லக்கி லூக் கதைகள் சிலவற்றில் அரசியல் பின்னனியும் இருப்பதுண்டு, ஆனால் அவை கதையின் ஒரு சிறு பகுதியாகவே இருக்கும்!

தமிழில் ஓவியர் செல்லம்-ன் கைவண்ணத்தில் காட்டிலே தேர்தல் என்றொரு கதை படித்த ஞாபகம்! ஆனால் கதை பற்றிய விபரங்கள் எதுவும் இப்போதைக்கு சிக்கவில்லை! அய்யம்பாளையத்தார் இடம் கேட்டால் இதேப் போல் நான்கைந்து(!!!) கதைகள் தன்னிடம் இருக்கலாம் எனக் கூறிக் கடுப்பேற்றினார்! ஆகையால் அவற்றைப் பற்றி அவர் விரைவில் பதிவிட வேண்டும் என விண்ணப்பமிட்டுவிட்டு அமைதியானேன்!

சரி வேறென்ன செய்யலாம் என யோசிக்கும் போது சட்டென்று நினைவுக்கு வந்தது ஒரேயொரு கதைதான்! அது சிக்பில் குழுவினரின் விற்பனைக்கு ஒரு ஷெரீப்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Banner

இக்கதை ஜூனியர் & மினி லயன் சரித்திரத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது! மேலும் விபரங்களுக்கு இங்கே ‘க்ளிக்’கவும்!Junior Lion#03 - Adhiradi Mannan - Chick Bill Intro

ஓ.கே. இனி கதைக்கு வருவோம்!

அதற்கிடையே சிக்பில் (CHICK BILL) யாரெனத் தெரியாத அறிவிலிகளுக்காக இதோ ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் அளித்திருக்கும் அறிமுகம்!

அமைதியாய் இருக்கும் உட்ஸிடி நகரில் தேர்தல் நேரம்! ஆண்டுக்கொரு முறை நிகழ்த்தப் படும் ஷெரீப்புக்கான தேர்தலில் எப்போதும் போல தன்னை எதிர்ப்போர் யாருமில்லாததால் அனைத்து தரப்பினரின் ஆதரவோடு அமோக வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்தில் என்ஜாயாக இருக்கிறார் ஷெரீப் டாக்புல் (BULL DOG-ஐ திருப்பி போட்டால் வருமே, அந்த DOG BULL)!

ஆனால் நகருக்கு வரும் புதிய நீதிபதியான ஜட்ஜ் ராட்டன்மைண்ட் (ROTTENMIND) டெபுடி ஷெரீப் கிட் ஆர்டின்-ன் (KID ORDINN) பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைக்கிறார்!

பால் தவிர வேறெதுவும் பருகாத பச்சிளம் பாலகன் போன்ற கிட்டிற்கு பீரை வார்க்கிறார் ஜட்ஜ்! அவன் மனதில் ஷெரீப் பதவிக்கு போட்டியிடும் ஆசையை விதைக்கிறார்! நண்பர்களிடையே வேற்றுமையை வளர்க்கிறார்!

தேர்தலில் கிட் ஆர்டின் வெற்றிபெற்று ஷெரீப்பும் ஆகிவிடுகிறான்! அவனிடம் கற்றை கற்றையாக அலுவல் காகிதங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்ளும் ஜட்ஜ் பல புதிய சட்டங்கள் மூலம் உட்ஸிடியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்! 

தனது அடியாட்களான பிங்கோ (BINGO), மற்றும் டொமேடோ  (TOMATO) எனும் தடியர்களுடன் உட்ஸிடியில் அராஜகம் புரியும் ஜட்ஜின் திட்டத்தை ஒட்டுக் கேட்டுவிடும் சிக்பில்லை பிடித்துவைத்து விடுகிறார்கள் கயவர்கள்!

சிக்பில் தப்பினானா? டாக்புல்லின் கதி என்ன? அப்பாவி கிட்டின் நிலை என்ன? உட்ஸிடி இந்த சிக்கலிலிருந்து எப்படி மீண்டது? கேள்விகளுக்கு விடையளிக்கிறது கதை!

சிக்பில் கதைகளில் காமெடியில்லாமல் எப்படி? அதுவும் இப்படியொரு அருமையான கதைக்கருவைக் கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் கதாசிரியர்! இதோ நீங்கள் படித்து மகிழ சிலபல சிரிப்பு வெடிகள்!

முதலில் கிட் ஆர்டின் மக்களின் வாக்குகளைப் பெற ஆற்றும் உரை (?!!) மக்களின் அமோக ஆதரவை பிங்கோவும் டொமேடோவும் உறுதி செய்கிறார்கள்! எப்படியென்றுதான் பாருங்களேன்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Kid Ordinn Speech

அதையடுத்து நடைபெற்ற டாக்புல்லின் சொற்பொழிவு எப்படி அரங்கேறியது என நீங்களே காணுங்கள்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Dog Bull Speech

தேர்தலன்று நடைபெறும் அட்டூழியங்களை நமது அரசியல்வாதிகள் படித்து தெரிந்து  கொண்டால் என்னாவது? அப்புறம் நம் ஜனநாயக நாட்டின் கதி என்ன?

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Polling

தேர்தல் முடிவடைந்து விட்டது! கிட் ஆர்டின் அமோக வெற்றி! அதையடுத்து நிகழும் ஒரு காட்சி! இதற்குப் பெயர் தான் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Recruitment

ஆனால் நமது டாக்புல் கடமை வீரர் அல்லவா?!! அட்டையில் நமது நாயகர்களின் சீருடை மாறியிருப்பதை கழுகுக் கண் கொண்டு நீங்கள் இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள்! அதற்கான காரணம் இதோ!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Sheriff & Deputy

க்ளைமாக்ஸில் வழக்கமாக சண்டைக் காட்சிதான் வரும்! ஆனால் கதையின் மிகப்பெரிய காமெடியே இங்குதான் அரங்கேறுகிறது! சிரித்து மகிழுங்கள்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Climax

காமிக்ஸ் உலகின் கவுண்டமணி & செந்தில் ஜோடி எனக் கூறிவிட்டு கிட் ஆர்டின் டாக்புல்லிடம் உதை வாங்காதிருந்தால் எப்படி? இதோ CLOSING PUNCH! கூடவே வெளியீட்டு விபரங்கள்!

Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Credits & Closing Punch

கதையில் இன்னும் இது போல பல காமெடி காட்சிகள் உள்ளன! அவற்றையெல்லாம் வெளியிட்டால் முழு புத்தகத்தையும் வெளியிட வேண்டியிருக்கும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் விரைவில் இதை மறுபதிப்பு செய்வார் என வேண்டிக்கொள்வதுதான் நம்மால் இயன்றது!

சிக்பில் கதைகள் முழு வண்ணத்தில் வெளிவந்த கால கட்டங்கள் அவை! இதற்குப் பிறகு இன்றுவரை சிக்பில் முழு வண்ணத்தில் வெளிவரவில்லை! அதுவுமின்றி ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறன் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் வந்த கதையாகும்!

மினி லயனில் ஆரம்பத்தில் வந்தக் கதைகளில் கதையின் ஹீரோ சிக்பில் என்றே முன்னிறுத்தப்பட்டிருக்கும்! பின்னாட்களில் டாக்புல்லும் கிட் ஆர்டினும் அடிக்கும் கூத்துக்களைக் கண்டு அவர்களை காமிக்ஸ் உலகின் கவுண்டமணி & செந்தில் ஜோடி என விளம்பரம் செய்து வெற்றி கண்டார் ஆசிரியர்!

எனினும் கதையின் கருவிலுள்ள காமெடி கதை முழுவதும் விரவியிருப்பதால் மொழிபெயர்ப்பாளருக்கு பெரிதாக வேலையெதுவும் வைக்கவில்லை! இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சிக்பில் கதைகள் ஆங்கிலத்தில் எதுவும் வந்ததில்லை!

“இந்தியாவிலேயே… ஏன் நம்ம வோர்ல்டுலேயே…” (கவுண்டமணி – படம் : கரகாட்டக்காரன்) ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து தமிழில் மட்டும்தான் சிக்பில் கதைகள் வெளிவந்துள்ளன!

இது ஒரு பெருமைக்குறிய விஷயமாகும்! இந்த அற்புதக் கதைகளை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

கதை விவரங்கள்:

சிக்பில்லை உருவாக்கியவர் டிபெட் (TIBET), ஓவியரும் இவரே! இவர்தான் நமக்கு பரிச்சயமான ரிப்போர்ட்டர் ஜானி, துப்பறியும் மூவர், டிடெக்டிவ் ட்ரேக் போன்ற பல கதைத்தொடர்களை உருவாக்கியவர்!

மொத்தம் இதுவரை 69 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன! அவற்றில் பல இன்னும் தமிழில் வராதவை! இந்தத் தொடர் பற்றி நண்பர் கிங் விஸ்வா விரைவில் முழுமையான ஒரு ஆய்வுப் பதிவு இடப்போவதால் நான் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்!

விபரம் FRENCH தமிழ்
  Chick Bill#45 - Sheriff For Sale Junior & Mini Lion#09 - Virpanaikkoru Sheriff - Cover
கதை Shérif à vendre (SHERIFF FOR SALE) விற்பனைக்கொரு ஷெரீப்!
ஆசிரியர் TIBET S.விஜயன் (தமிழில்)
ஓவியர் TIBET TIBET
வெளியீடு# CHICK BILL – ALBUM 45 ஜூனியர் & மினி லயன் # 09
வருடம் 1st EDITION : JANUARY 1960
2nd EDITION : AUGUST 1980
OCTOBER 1987
பதிப்பாளர்கள் LE LOMBARD PRAKASH PUBLISHERS

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

Nikolai Nosov - விளையாட்டுப் பிள்ளைகள் பி.கு.:- 

  • சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த நிக்கலாய் நோசவ்-வின் விளையாட்டுப் பிள்ளைகள் சிறுகதைத் தொகுப்பு NCBH நிறுவனத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது! விலை - ரூ:125/- மட்டுமே! மோசமாக  ஸ்கேன் செய்யப்பட்ட அட்டைப்படம், சுமாரான அச்சுக் காகிதம், HARD BINDING இல்லாதது போன்ற சில குறைகள் இருப்பினும் நம் சிறுவயதை நினைவு படுத்தும் ஒரு பொக்கிஷம் இதுவென்பதால் ஏற்கெனவே படித்தோரும், புதிதாகப் படிக்கவிருப்போரும் தவறாது வாங்கிட வேண்டிய புத்தகமிது!  

தொடர்புடைய இடுகைகள்:-

Saturday, May 2, 2009

ருஷ்ய சிறுவர் இலக்கியம்!

“உழைக்கும் கைகளே! அதை உருவாக்கும் கைகளே!”

-மெக்கானிக் மாணிக்கம் (படம் – சேரன் பாண்டியன்)

வணக்கம்,

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அடியேனின் சற்றே தாமதமான உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! மே தினம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது பொதுவுடமையும், சமவுடைமையும் அச்சிந்தனைகளை உலகில் விதைத்த போராளிப் பேரறிஞர் கார்ல் மார்க்ஸ்-ம்,  அவை விளைந்த நன்னிலமான ருஷ்ய நாடும்தான்!

ஆனால் ருஷ்ய நாட்டிலிருந்து வரும் படைப்புகள் அனைத்தும் அரசியல் சார்ந்தவையே என்கின்ற தவறான கருத்து நமது மக்களிடையே நிலவி வருகிறது! உலகப் புகழ் பெற்ற பல அரிய படைப்பாளிகளை இலக்கியத்திலும், திரைத்துறையிலும் வழங்கியுள்ளது அம்மாபெரும் நாடு!

அதே போல் சிறுவர் இலக்கியத்திலும் பல சிறந்த படிப்புகளை அந்நாட்டவர் நமக்கு வழங்கியுள்ளனர்! இந்த மே தினத்தில் எனது சிற்றிளம் பருவத்தினை வியாபித்திருந்த அந்த உலகப்புகழ் பெற்ற சிறுவர் இலக்கியங்களில் சிலவற்றை இங்கே உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன்!

அறியாதோற்கு ஒரு சிறு அறிமுகமாகவும், அறிந்தோற்கு அற்புதக் காலப்பயணமாகவும் இப்பதிவு அமைந்திட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்!

இப்பதிவை உங்கள் வசதிக்காக கதாசிரியர்களைக் கொண்டு பகுத்துள்ளேன்! கதைகளின் பெயர்களில் உள்ள சுட்டிகளை ‘க்ளிக்’கினால் அக்கதையை இனையத்தில் படிக்க இயலும்! படித்து மகிழுங்கள்!

லியோ டால்ஸ்டாய் (LEO TOLSTOY):

அன்னா கரெனினா, போரும் அமைதியும் (இவற்றையெல்லாம் நான் படித்ததில்லை) போன்ற உலகமகாக் காவியங்களை இயற்றிய லேவ் நிக்கலாயெவிச் தல்ஸ்தோய் பிரபு அவர்கள் சிறுவர்களுக்கெனப் பிரத்தியேகமாகப் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். அவற்றின் ஒரு தொகுப்பு நான் படித்த ரசித்த முதல் புத்தகங்களில் ஒன்று!

பொய்யன் (THE BOY WHO CRIED WOLF), இரண்டு நண்பர்கள் (TWO FRIENDS AND THE BEAR) போன்ற ஏஸாப்-பின் நீதிக்கதைகளை தனது பாணியில் வழங்கியுள்ளார் டால்ஸ்டாய்! அதுமட்டுமல்லாது சிங்கமும் நாயும் (THE LION AND THE DOG) போன்ற பல உருக்கமான சிறுகதைகளையும் கொண்டது இந்தத் தொகுப்பு! அற்புதமான கருப்பு வெள்ளை ஓவியங்கள் புத்தகத்தின் சிறப்பை மேலும் கூட்டுகின்றன!

Leo Tolstoy -  Stories For Children LEO TOLSTOY Leo Tolstoy - The Lion And The Dog

தமிழிலும் ஆங்கிலத்திலும் இப்புத்தகம் இந்தியாவில் வெளிவந்தது! இரண்டையுமே அடியேன் பத்திரமாக வைத்துள்ளேன் எனக் கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்!

சமீபத்தில் இந்தப் பதிவுக்காக இனையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது மேற்காணப்படும் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு $10  முதல் $30 வரை விற்பனையாகி வருவது கண்டு அதிசயித்தேன்! எப்பேர்ப்பட்டதொரு பொக்கிஷத்தை நான் கையில் வைத்துள்ளேன் என அப்போதுதான் உணர்ந்தேன்!

இக்கதைகளையும் டால்ஸ்டாயின் பிற நீதிக்கதைகளையும் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்! பல வழிமுறைகளிலும் படிக்க வகை செய்யப் பட்டிருக்கிறது! படித்து மகிழவும்!

டால்ஸ்டாயின் மற்ற படைப்புகளைப் படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!

புத்தகம் : குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்
ஆசிரியர் : லேவ் தல்ஸ்த்தோய்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1981
ஆங்கிலத்தில் : ஃபெய்ன்னா க்ளகொலெவா
(FAINNA GLAGOLEVA)
தமிழில் : பூ. சோமசுந்தரம்
ஓவியர் : அ. பாகோமொவ் (A.PAKHOMOV)
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

நிக்கலாய் நோசவ் (NIKOLAI NOSOV):

Nikolai Nosov - விளையாட்டுப் பிள்ளைகள்ருஷ்ய நாட்டின் தலைசிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளரான நிக்கலாய் நிக்கொலெவிச் நோசவ் தனது 30 ஆண்டு கால இலக்கியப் படைப்புப் பணியில் பல்வேறு சிறுகதைகள், கதைகள் புனைந்துள்ளார்!

அழகிய கோட்டோவியங்களுடன் கூடிய விளையாட்டுப் பிள்ளைகள் தொகுப்பில் வரும் பல கதைகளில் ருஷ்யாவின் தலைசிறந்த காவியக் கவிஞராகிய அலெக்ஸாண்டர் புஷ்கின்-ன் பல கவிதைகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும்! அவற்றில் துருஷோக்கு எனும் கதையில் வரும் சில வரிகள் என் மனதில் நின்றுவிட்டன!

வெள்ளைப் பனி! அதில் வண்டியோட்டும் குடியானவன்
உள்ளக் களிப் புற்றே புதுத்தடம் பதிக்கின்றான்,
புதுப் பனியை முகரும் அவன் குதிரையும்தான்
புது முறுக்குடன் துள்ளிக் குதித்து ஓடுகிறது…

இக்கவிதை கதையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதே சிறப்பம்சம்!

புத்தகம் : விளையாட்டுப் பிள்ளைகள்
ஆசிரியர் : நிக்கலாய் நோசவ்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1978
தயாரிப்பு : ரூபேன் வார்ஜிகுலியான்
தமிழில் : ருக்மணி, பூ. சோமசுந்தரம்
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

Nikolai Nosov - Story-tellers Nikolai Nosov - Story-tellers - Front Inner Wrapper Nikolai Nosov - Story-tellers - Back Inner Wrapper

அதே போல கற்பனையாளர்கள் கதைக்கு வரையப்பட்ட அழகிய வண்ண ஓவியங்களும் சுலபத்தில் மறக்க இயலாது! சிறுவர்களுக்கு கற்பனைவளம் எவ்வளவு இன்றியமையாததொன்று என்பதையும், கற்பனைக்கும், பொய்மைக்கும் உள்ள வேறுபாட்டினை சுட்டிக் காட்டும் விதமாகவும் அமைந்திருக்கும் இக்கதை எனது ஆல்-டைம் ஃபேவரைட்களில் ஒன்றாகும்!

புத்தகம் : கற்பனையாளர்கள் (STORYTELLERS)
ஆசிரியர் : நிக்கலாய் நோசவ்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1982
ஆங்கிலத்தில் : ஃபெய்ன்னா க்ளகொலெவா
(FAINNA GLAGOLEVA)
தமிழில் : பூ. சோமசுந்தரம்
ஓவியர் : இ.ஸெம்யோனவ் (I.SEMYONOV)
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

இவரது கதைகளை இவ்விணைப்புகளில் அழகிய படங்களுடன் படித்து மகிழவும்!

மூன்று தடியர்கள் (THE THREE FAT MEN) - யூரி ஒலெஷா (YURI OLESHA):Yuri Olesha - The Three Fat Men

ருஷ்யப் புரட்சி வரலாற்றை சிறுவர்களுக்காக முதன்முதலாக எழுதியவர்தான் யூரி கார்லொவிச் ஒலெஷா.

1928-ல் எழுதப்பட்ட இக்கதை ருஷ்ய ஜனரஞ்சகக் கலாச்சாரத்தில் ஊறிவிட்ட ஒன்றாகும்! இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துவிடும்!

இக்கதையின் பாதிப்புகள் இதற்குப் பின் வெளிவந்த பல சிறுவர் இலக்கியங்களில் காணலாம்! இக்கதையின் நாயகர்கள் பலவேறு கதைகளில் குணச்சித்திர வேடத்தில் வந்துபோவது அப்போதைய சிறுவர் இலக்கியங்களில் சகஜம்!

சர்வாதிகார ஆட்சி புரிந்து வரும் மூன்று தடியர்களை சாதாரன மக்களின் சில பிரதிநிதிகள் எவ்வாறு வெற்றி கொண்டு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் விடுதலையளிக்கின்றனர் என்பதே கதை!

வழக்கம் போல அற்புத ஓவியங்கள் கதைக்கு மிகப்பெரும் பலம் சேர்க்கின்றன! ருஷ்ய சிறுவர் இலக்கியங்களில் இக்கதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!

புத்தகம் : மூன்று தடியர்கள்
ஆசிரியர் : யூரி ஒலெஷா
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ(PROGRESS PUBLISHERS)
வருடம் : 1976
ஆங்கிலத்தில் : ஃபெய்ன்னா க்ளகொலெவா
(FAINNA GLAGOLEVA)
தமிழில் : பூ. சோமசுந்தரம்
ஓவியர் : போரிஸ் கலாஷின் (B.KALAUSHIN)
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

கதையைப் படித்து மகிழ கீழ்கண்ட இணைப்புகளை உபயோகிக்கவும்!

ருஷ்ய மற்றும் உக்ரேனிய நாடோடிக் கதைகள்:

ருஷ்ய நாட்டின் சிறுவர் இலக்கியத்தில் தேவதைக் கதைகள் (FAIRY TALES) கிடையாது! ஏனெனில் ருஷ்யாவில் தேவதைகளே (FAIRIES) கிடையாது என்ற நம்பிக்கை உண்டு! ஆகையால் அவர்களது பண்டைக் கதைகளை நாடோடிக் கதைகள் (FOLK TALES) என்றே குறிப்பிட வேண்டும்!

Emelya And The Pike The Dog And The Cat The Fox and The Hare

பேரழகி வசிலிஸா, EMELYA AND THE PIKE, THE LITTLE ROUND BUN போன்ற கதைகள் எனது ஆல்-டைம் ஃபேவரைட்களாகும்! அதிலும் BUN வடிவத்திலேயே இருக்கும் THE LITTLE ROUND BUN புத்தகம் என்னை இன்றும் உள்ளம் உவகை கொள்ள வைக்கிறது!

இதில் THE LITTLE ROUND BUN கதையின் மறுபதிப்பு ஒன்றை சமீபத்தில் கண்டேன்! ஓவியங்கள் எல்லாம் தற்காலத்திற்கேற்ப அமெரிக்க வடிவில் வந்ததைக் கண்டு மனம் நொந்தது! விற்பனைக்காக இதெல்லாம் அவசியமெனும் போதும் எங்கோ ஒரு மூலையில் மனம் இதையெல்லாம் ஏற்க மறுக்கிறது!

The Little Round Bun The Little Round Bun - Reprint

நாடோடிக் கதைகள் படிக்க:

யா.பெரெல்மான் (Y.PERELMAN):

Y.Perelman  - Fun with  Mathematics யாகொவ் இஸிட்ரொவிச் பெரெல்மான் சிறுவர்களுக்கெனப் பல அறிவியல் புத்தகங்களை அவர்களும், நாமும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.

வெறும் பாடப் புத்தகம் போல் அல்லாமல் பல சுவாரசியமானத் துனுக்குகளையும், புதிர்களையும் இணைத்து அவை தோன்றிய விதம் குறித்தும் கூட எழுதியுள்ளார்!

உலகப் புகழ் பெற்ற 15 வில்லைப் புதிர் பற்றிய இவரது புதிர்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன! இதையும் ரூபிக்ஸ் க்யூப்பையும் சிறுவயதில் நாம் பலூன்காரனிடம் வாங்கி விளையாடத் தெரியாமல் விளையாடினோமே, ஞாபகமிருக்கிறதா?

அதியற்புத ஓவியங்களும் இப்புத்தகத்தில் உண்டு! இப்படியெல்லாம் பாடப் புத்தகம் நமக்கிருந்தால் படிப்பு என்பது ஒரு சுகானுபவமாகவே இருக்கும்!

புத்தகம் : விளையாட்டு கனிதம்
ஆசிரியர் : யா.பெரெல்மான்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1977
ஆங்கிலத்தில் : அ.ஷ்காரொவ்ஸ்கி(A.SHKAROVSKY)
தமிழில் : ரா.கிருஷ்ணையா
ஓவியர் : யெ.தாரோன், வி.கொரல்கோவ்
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

இவரது புத்தகமொன்றைப் படித்துப் பார்க்க ஆர்வ்மிருந்தால் கீழேயுள்ள சுட்டியைப் பயன்படுத்தவும்!

The Russian Revolution - What Actually Happened ருஷ்யப் புரட்சி வரலாறு:

இப்புத்தகத்தைப் பற்றி நண்பர் ஷிவ் ஏற்கெனவே பதிவிட்டுள்ளார். படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்

இருப்பினும் அவர் NCBH நிறுவனம் செய்த மறுபதிப்பு பற்றியே பதிவிட்டார். என்னிடம் இப்புத்தகத்தின் ஒரிஜினல் முன்னேற்றப் பதிப்பகம் (PROGRESS PUBLISHERS, MOSCOW) வெளியிட்ட பதிப்பு அட்டையில்லாமல் இருக்கிறது!

இரண்டையும் பார்த்த போது பழைய பதிப்பில் எழுத்துக்கள் கையால் எழுதப்பட்டும், மறுபதிப்பில் அவை கணினி எழுத்துக்களால் நிரப்பப்பட்டும் இருப்பதைக் கண்டேன்!

என்னதான் கணினி எழுத்துக்கள் சிறப்பாக இருந்தாலும், கையெழுத்தில் இருக்கும் ஒரு உணர்வு கணினி எழுத்துக்களில் காமிக்ஸ் படிக்கும் போது கிடைப்பதில்லை என்பதே உண்மை!

இதோ நீங்களும் பாருங்கள்! வித்தியாசம் தெரியும்!

Progress Publishers - First Edition முன்னேற்றப் பதிப்பகம், 1988

NCBH - Reprint NCBH, ஜனவரி 2008

புத்தகம் : ருஷ்யப் புரட்சி
(THE RUSSIAN REVOLUTION: WHAT ACTUALLY HAPPENED?)
ஆசிரியர் : எ.தப்ரவோல்ஸ்கயா, யூ.மக்காரவ்
பதிப்பாளர்கள் : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS)
வருடம் : 1988
தமிழில் : த.ஜெயகாந்தன்
ஓவியர் : யெ.தாரோன், வி.கொரல்கோவ்
எழுத்துக் கலைஞர் : ஓ.வெச்சேரினா
விற்பனையாளர்கள் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

பிற கதைகள்:

எனக்குப் பிடித்த இன்னும் சிலபல ருஷ்ய சிறுவர் புத்தகங்கள்!

Agnio Barto - How Vova Changed His Ways Galina Lebedeva - Masha's Awful Pillow L.Voronkova - Happy Days V.Mayakovsky - What is Good and What is Bad Vasil Vitka - General Sparrow Yevgeny Permyak - The First Fish

இவற்றில் வோவா மற்றும் HAPPY DAYS எனக்கு ஸ்பெஷலாகப் பிடிக்கும்! மாஷா-வில் இருக்கும் சித்திரங்கள் அதியற்புதமாக இருக்கும்!

பதிப்பகங்கள்:

PROGRESS PUBLISHERSNCBHஇப்பதிவில் இரு பதிப்பகங்களின் பெயர்கள் அடிக்கடி காணப்படும்! அவை இப்புத்தகங்களை தரமாகப் பல்வேறு மொழிகளிலும் அச்சிட்ட முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ (PROGRESS PUBLISHERS) மற்றும் இந்தியாவில் இப்புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை (NEW CENTURY BOOK HOUSE) ஆகியவையே!

இவ்விரு பதிப்பகங்களின் மூலம் பல புத்தகங்களை உயர்ந்த தரத்தில், மலிவு விலையில், தமிழில் நாம் நமது சிறு வயதில் படிக்க முடிந்தது! இவை இன்னும் கூட NCBH-ன் கிளைகளில் கிடைக்கின்றன! புத்தகக் கண்காட்சிகளிலும் இந்தப் புத்தகங்கள் காணக் கிடைக்கலாம்!

உலகமயமாக்கலுக்குப்பின் வந்த அமெரிக்கப் பதிப்பாளர்களின் தரமற்ற, விலையுயர்ந்த, வணிக நோக்கம் மட்டுமே கொண்ட புத்தகங்களினால் இவற்றின் மவுசு குறைந்தாலும் நம் நெஞ்சங்களில் எந்நாளும் நீங்கா இடம் பெற்றிருக்கும்!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:-

  • இப்பதிவு ஒரு ONE-OFF முயற்சியே! இதனால் நான் ஏதோ அய்யம்பாளையத்தார்-க்கு போட்டியாகக் கிளம்பிவிட்டேன் என யாரும் எண்ண வேண்டாம்! என்னிடம் உள்ள சரக்கு மிகவும் குறைவு (இன்னும் ஒரு பதிவுதான் இது மாதிரி போடலாம்)! அவரோ சிறுவர் இலக்கிய சிந்தனைச் சிற்பி! நானோ சிங்கிள் டீக்கே சிங்கியடிப்பவன்! அவரோ கடல்! நானோ வெறும் கானல் நீர் (இந்தக் கானல் நீர் அல்ல)!
  • மேற்குறிப்பிட்டுள்ள கவுண்டரின் ‘பன்ச்’ காமெடிக்காக மட்டுமே! தயவு செய்து யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! தனது படங்களில் அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களின் வாழ்வியல்களையும் பிரதிபலித்த ஒரே கலைஞர் கவுண்டர்தான் என்பது என் கருத்து!

தொடர்புடைய இடுகைகள்:-

நண்பர் சிவ்-வின் சித்திரக்கதை வலைப்பூவில் ருஷ்யப் புரட்சி வரலாறு பற்றியப் பதிவு!