Wednesday, November 5, 2008

ஃப்ளைட் 731

"சோத்த வடிச்சாச்சு, இனி கொழம்பு வெக்கணுமே...!"

-கவுண்டமணி (படம் : உன்னை நான் சந்தித்தேன்)

வணக்கம்,

முதலில் வலைப்பூவை வந்து பார்த்து வாழ்த்தியோருக்கு நன்றிகள். அதே போல் புதுப் பதிவை எதிர்நோக்கி வந்து ஏமாந்தவர்களுக்கு வருத்தங்களைத் தெரிவித்து, மன்னிக்க வேண்டுகிறேன்.

தீபாவளிக்கு முன்னால் "அ.கொ.தீ.க. என்றால் என்ன?" என்ற பதிவு போடுவதாக இருந்தது. சில களப்பணிகள் பின்தங்கி விட்டதால் அப்பதிவை சில முறை மாற்றி மாற்றி போட்ட பின் நீக்கியே விட்டேன். ஆனால் நண்பர்களின் வலைப்பூக்களில் அது புதிய பதிவாக விளம்பரமாகி விட்டது. வந்து பார்த்து ஏமாந்தவர்களே, மீண்டும் ஒரு முறை மன்னிக்க வேண்டுகிறேன்! சோம்பேறித்தனத்துக்கு இப்படியெல்லாமா சாக்கு சொல்வது என்று நீங்கள் கடுப்பாகிக் கதறுவது கேட்கிறது.

வலைப்பூவுக்கு நீங்கள் அளித்த வரவேற்பு உண்மையிலேயே என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டது. "வெகுமதி" போட்டிக்கு முந்திக் கொண்டு விடையளித்த "முத்து விசிறி"-க்கு எனது வாழ்த்துக்கள். ஓட்டு போட்ட எல்லாருக்கும் நன்றிங்கோவ்! "காமிக்ஸ் குத்து" பகுதியை நீங்கள் வெகுவாக ரசிப்பது புரிகிறது. "காமிக்ஸ் குத்து"-ம், "வெகுமதி" போட்டியும் ஒவ்வொரு முறை புதுப் பதிவு போடும் போதும் இலவச இணைப்பாக வரும்!

பதிவின் ஆரம்பத்தில் நான் எடுத்தாண்டிருக்கும் கவுண்டரின் பன்ச்சுக்கும் இந்தப் பதிவிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று கேட்பவர்களுக்கு என் பதில் : ஆம்! இருக்கிறது! வலைப்பூ ஆரம்பித்தாயிற்று, இனி ஏதாவது பதிவு போடனுமே... என நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது பளிச்சென இந்த வசனம் ஞாபகம் வந்தது.

என்ன பதிவு போடுவது என யோசித்துக் கொண்டிருக்கும் போது, அ.கொ.தீ.க. பற்றி எழுதலாம் என முடிவு செய்து, அதற்கான களப்பணிகளில் இறங்கினேன். முடிவில்லாது நீண்டு கொண்டே சென்றது அந்தப் பதிவு. அதற்கான களப்பணிகளும் முற்று பெறவில்லை. ஆகையால், அப்பதிவை நீக்கி விட்டு தீபாவளி விடுமுறையில் களப்பணிகளை வெற்றிகரமாக முடித்து திரும்பியிருக்கிறேன். அது கொஞ்சம் நீளமான பதிவு என்பதாலும், தீவிர ஆவ்யு தேவைப்பட்டதாலும் அதை மேலும் சிறிது நாட்களுக்கு ஒத்தி வைத்துவிட்டேன். அ.கொ.தீ.க.வின் முதல் கதையான "ஃப்ளைட் 731" பற்றி ஒரு எக்ஸ்பிரஸ் பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த வார இறுதியில் அ.கொ.தீ.க. பற்றி விரிவான ஒரு பதிவை நீங்கள் படித்து மகிழலாம். மேலும் நண்பர்கள் விஸ்வா, ரஃபிக், மற்றும் அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தீபாவளி ஸ்பெஷலாக புதுப்புது பதிவகளை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் உங்களை மேலும் காத்திருக்க வைக்க கூடாதென்பதற்காகவும் இந்த திடீர் பதிவு.

மொக்கை போட்டது போதும், இனி மேட்டருக்கு வருவோம்!

முத்து காமிக்ஸ்-ன் முதல் நான்கு இதழ்களும் "இரும்புக்கை மாயாவி" கதைகளையே தாங்கி வந்தன. அதன் பின்னர் புதிய கதாநாயகர்களை அறிமுகப் படுத்தும் முயற்சியில் இரும்புக்கை மாயாவி கதைகளை 1960-களில் ஆங்கிலத்தில் டைஜஸ்ட் வடிவில் வெளியிட்டுக் கொண்டிருந்த பிரிட்டனின் "ஃப்ளீட்வே" (FLEETWAY) நிறுவனத்தினரின் மற்றொரு படைப்பான "CODE NAME : BARRACUDA"-வை தமிழில் "சி.ஐ.டி. லாரன்ஸ்" என்ற பெயரில் அறிமுகம் செய்தனர். இதில் லாரன்ஸின் பெயர் தான் "பாரகுடா". டேவிட்டின் உண்மையான பெயர் "ஃப்ரோலோ". இந்தப் பெயர்கள் நம் வாயில் நுழையாது என்பதால்தான் தமிழில் நிகழ்ந்த பெயர்மாற்றம்.

அ.கொ.தீ.க. என்ற சர்வதேச தீவிரவாதக் கும்பலை ஒடுக்க ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழுவினால் விசேடமாக நியமிக்கப் பட்டவர்களே சி.ஐ.டி. லாரன்ஸும் அவரது சகாவான மொட்டைத் தலை "ஜுடோ டேவிட்"-டும். இவர்களது முதல் சாகசம் தான் "ஃப்ளைட் 731".

இந்தக் கதையை சமீபத்தில் தான் நான் படிக்க நேர்ந்தது. ஆகையால் சிறு வயதில் படித்த கதைகள் (அவை எவ்வளவு மொக்கையாக இருந்தாலும்) உண்டாக்கும் தாக்கம் ஏற்படவில்லை. மாறாக ஒரு முதிர்ந்த கண்ணோட்டத்தோடே இக்கதையை நான் விமர்சிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக என்னிடம் இந்தக் கதையின் முதல் பதிப்பு இல்லை. ஆகையால் அதன் அட்டைப்படத்தை வெளியிடவில்லை. இதன் மறுபதிப்புகளுக்கான அட்டைப்படங்களை மட்டும் இங்கு இட்டுள்ளேன்.

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. அ.கொ.தீ.க. தலைவர் இறந்து விடுகிறார். அடுத்த தலைவர் பதவிக்கு ஏழு பேர் போட்டியிடுகின்றனர். யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்கு அவர்களுக்குள் ஒரு போட்டி வைக்கப்படுகிறது. வேறென்ன? அ.கொ.தீ.க.வின் பரம வைரியான சி.ஐ.டி. லாரன்ஸை யார் கொல்கிறார்களோ அவர் தான் தலைவர். இதற்காக ஒரு பொய்த் தகவலின் பேரில் லாரன்ஸும் டேவிட்டும் ஆஸ்த்திரேலியா வரவழைக்கப் படுகின்றனர். திரும்பும் போது ஃப்ளைட் 731-ல் பயணம் செய்யும் அவர்கள் ஏழு ஊர்களில் ஏழு வில்லன்களை எதிர்கொண்டு வெற்றியோடு ஊர் திரும்புவதுதான் கதை. க்ளைமாக்ஸில் ஒரு திருப்பமும் உண்டு.

முல்லை தங்கராசனின் ஜனரஞ்சகமான மொழிபெயர்ப்பில் மறக்க முடியாத பல கட்டங்களை நாம் ரசிக்கலாம். அதிலும் இந்த முறை "காமிக்ஸ் குத்து"-வில் இடம்பெறும் வசனம் ஆறு வில்லன்களை முறியடித்து ஜெர்மனி வரும் லரான்ஸைக் கொல்லக் காத்திருக்கும் ஏழாவது வில்லன் பிஸ்மார்க் அடிக்கும் பன்ச் அற்புதம்!

சொல்லப் போனால் இக்கதைக்கு "உலகம் சுற்றும் சி.ஐ.டி." என்று பேர் வைத்து எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடித்து இந்தக் கதை உருவாக்கப்பட்ட 1960-களின் பிற்பகுதியில் படமாக வந்திருந்தால் வெள்ளி விழா கண்டு வெற்றி பெற்றிருக்கும். வழக்கம் போல எம்.ஜி.ஆர். "சி.ஐ.டி.ராமு"வாக வருவார். வில்லன்களாக பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், அசோகன், ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, ஜாவர் சீதாராமன் ஆகியோரையும், வில்லியாக கவர்ச்சி நடிகை யாரையாவது போட்டு ஒரு காபரே டான்சும் வைக்கலாம். டேவிட்டுக்கு இந்தக் கதையில் அதிகம் வேலை இல்லை என்பதால் அவருக்கு பதில் காமெடிக்கு நாகேஷைப் போடலாம். அதே போல் ஒவ்வொரு ஊரிலும் ஜெயலலிதா, லதா, மஞ்சுளா, லட்சுமி, கே.ஆர்.விஜயா, காஞ்சனா, ராஜஸ்ரீ என ஒவ்வொரு ஹீரோயினுடனும் ஒரு கசமுசா டூயட் வைக்கலாம். கிளுகிளுப்புக்கு பஞ்சமே இருக்காது. கூடவே செண்டிமெண்டுக்கு அம்மாவாக பண்டரிபாய். படம் பின்னிப் பெடலெடுக்கும். என்ன சொல்றீங்க?

இந்தக் கதைத் தொடர்கள் அனைத்தும் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றாலும், வழக்கமாக பெரியவர்களும் ரசிக்கும்படியே இருக்கும். ஆனால் இந்தக் கதை கொஞ்சம் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேசத் தீவிரவாதிகளின் பெயர்களாக தேசத் தலைவர்களின் பெயர்களை உபயோகித்திருப்பது நெருடுகிறது. அதிலும் பாகிஸ்தானியராக வரும் பூட்டோ பழங்கால இந்திய மகாராஜாவைப் போல் தலைப்பாகை அணிவதும், யானை தாயத்து வைத்திருப்பதும், அவரது மகள் தாய்லாந்து நடனம் ஆடுவதும், அவரது மனைவி பர்மாவாசி போல் உடையனிந்திருப்பதும் காண சகிக்கவில்லை. ஜெர்மனியின் தேசத்தந்தையாகக் கருதப்படும் பிஸ்மார்க்கின் பெயரை ஒரு தீவிரவாதிக்கு சூட்டியிருப்பதன் மடமையை என்னவென்பது?

இது மட்டும் அல்ல, உலகெங்கும் சரித்திரப் பாட புத்தகங்களுக்கு இணையாகப் பேசப்படும் "ஆஸ்ட்ரிக்ஸ்" கூட இந்தியாவிற்கு வரும் கதையான "ஆஸ்ட்ரிக்ஸ் அண்டு தி மேஜிக் கார்பெட்"டில் துளி கூட ஆய்வு செய்யாமல் எவனோ ஒரு கிறுக்கு வெள்ளைக்காரன் கூறியதை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதப் பட்டிருக்கும். ஒரு வேளை கதைகளைத் தீர்க்கமாக ஆய்ந்து எழுதும் "கோஸ்சின்னி" இறந்த பிறகு வந்த கதை என்பதால் கதை எழுதியவரும் அற்புதமாக ஓவியம் வரைந்தவருமான "உடற்ஸோ" கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

வேதாளரை உருவாக்கிய "லீ ஃபால்க்"கும் இவ்விஷயத்தில் கோட்டை விட்டிருப்பார். வேதாளர் வாழும் காடு நமக்கெல்லாம் 'பங்கல்லா' அல்லது 'டென்காலி' என்றுதான் பரிச்சயம். ஆனால் அதன் உண்மைப் பெயர் "பெங்காலி". அது ஒரு மொழி என்று கூட ஆராய்ந்தறியாமல் விட்டு விட்டார். நல்ல வேளை நம்மூர் ஆசிரியர்கள் உஷாராக மாற்றி விட்டார்கள்.

இப்படி சிறுவர்களுக்கு தவறான கருத்துக்களைப் பரப்புவதால் வரும் விளைவுகள் என்ன என்பதை அறியாமல் உலகெங்கிலும் உள்ள பதிப்பாளர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள். அவர்களுடைய நாட்டுக்குள் மட்டுமே இக்கதைகள் விற்கின்றன என்ற எண்ணம் தான் காரணம். தங்கள் பதிப்புகள் உலக மக்கள் அனைவரையும் சென்றடையும் என்பதை மனதில் கொண்டு இனிமேலாவது அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்களா?

ஒரு வேளை இந்தக் கதையை சிறுவனாகப் படித்திருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சித்திருக்க மாட்டேனோ? ஆனால் மீண்டும் படிக்கும் போது மேற்கூறிய நெருடல்கள் வந்திருக்கத்தான் செய்யும்.

எப்படியோ, ஒரு பதிவை போட்டு விட்டேனப்பா! ஆங்கிலப் பதிப்பு பற்றி செய்திகள் மற்றும் படங்கள் அளித்த நண்பர் "முத்து விசிறி"க்கு நன்றிகள் பல! மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள். இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு நன்றிகள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்.


20 comments:

  1. ஹைய்ய்ய்யா! மீ த பர்ஸ்ட்டு!

    ReplyDelete
  2. அடச்சே! ஜஸ்ட்டு மிஸ்ஸு! மீ த செகண்டு!

    ReplyDelete
  3. அய்யா காமிக்ஸ் டாக்டரே,

    அருமையான பதிவிட்டதற்கு பிடியுங்கள் பாராட்டுகளை.

    ஃப்ளைட் 731 பற்றி எனது அனுபவத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் மற்ற கதைகளைப் போல் இல்லாமல் புத்தகத்தை கையிலெடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு பின்னரே கீழே வைக்க முடியும்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ளதை போல் வெளிநாட்டு படைப்பாளிகள் பலர் தீர ஆராய்ந்து பின்னர் கதை எழுதுவதில்லை. உதாரணத்திற்கு இந்தியானா ஜோன்சின் டெம்பில் ஆப் டூம் படத்திலும் 007 ஜேம்ஸ் பாண்டின் அக்டோபுஸ்ஸி படத்திலும் இந்தியர்களை பிச்சைக்காரர்களாகவும் கொடிய மந்திரவாதிகளாகவுமே சித்தரித்துள்ளனர். அந்த காட்சிகள் இன்னும் என் மனதை நெருடிக்கொண்டே இருக்கின்றன.

    தொடரட்டும் தங்கள் பணி, மேன்மேலும் சிறப்புடன் பதிவுகள் இடுக.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல ஒரு அருமையான பதிவு. Flight 731 கதையை நான் படித்தது அது காமிக்ஸ் Classic ல் 2000 ல் வெளி வந்த போதுதான். வில்லர்கள் பெயரை சரித்திர நாயகர்களோடு ஒப்பிட்டு வைத்து இருப்பது ஒரு கொடிய என்னவாதம். அனேகமாக லண்டன், அமெரிக்க கதாசிரியர்கள், தாங்கள் வெறுத்து ஒதுக்கிய நாட்டின் தலைவர்களை இப்படி உள்குத்து வைத்து கதை எழுதுவதை ஒரு சகஜமாகவே கடைபிடித்தார்கள் என்று சொன்னால் மிகையாகது. புகழ் பெற்ற ஹெர்ஜ் கூட தனது டின்டின் கதைகளில் ஆப்ரிக்கா நாட்டு சிறுவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்ற கோணத்தில் எழுதி இருபது சமீபத்தில் ஒரு பிரச்சனையை உண்டு பண்ணியது அனைவருக்கும் நியாபகம் இருக்கும்.

    ஆனாலும் கதையை பொறுத்த வரை One of the Golden Oldies என்பதை மறுக்க முடியாது. கூடவே முத்து முத்தான கை எழுத்தில் ஆசிரியரின் பக்கம் எவ்ளவு அருமையாக இருக்கிறது. தற்போதைய அச்சு கோர்க்கப்பட்ட Hotline மற்றும் Comics-Time ல் அந்த பஞ்ச் இல்லை.

    மற்றபடி, ஆங்கில வலை பதிவுகளில் இருப்பது போல நான் முதலாவது, நான் ரெண்டாவது, என்று போடும் பதிவர்களை உடனே தடை பண்ண ஆவன செய்கிறேன் (அப்பா, என்ன ஒரு சந்தோசம்)

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்
    - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"

    ReplyDelete
  5. கலக்கல் !!!!!!!!!!!

    ReplyDelete
  6. வாவ்... அருமையா எழுதியிருக்கீங்க காதீ..(காமிக்ஸ் தீவிரவாதி).. :)
    அ கொ தீ க ஆரம்பமே அமர்க்களமா வந்திருக்கு. பட்டைய கௌப்புங்க..

    ReplyDelete
  7. இந்தியர்களை மட்டமாக பேசி விட்டார்கள் என்றுதானே வருத்தம்? இப்போது அகொதீக தலைமையகம் இயங்கி வருவதே .................நகரத்தில்தானே, அதுவும் இந்தியாவில் தானே இருக்கிறது, இது நமக்கெல்லாம் பெருமைதானே.
    நல்ல பதிவு என சொல்லதான் வேண்டுமா?

    ReplyDelete
  8. டாக்டர்

    பதிவின் மூலம் லாரன்ஸ் அண்ட் டேவிட்டின் முத்து காமிக்ஸ் அறிமுகம் எனக்கு அறிமுகமாகியது. அதுவும் மாயாவியின் கடிதம் சூப்பர்.
    அந்த ஜடியாவை டாக்டரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலை நாடுகளில் உருவாகும் காமிக்ஸ்களில் கீழைநாட்டாரிற்கு மரியாதை கொஞ்சம் குறைவுதான் அவர்களின் மனநிலை அப்படி, அவர்களை மன்னிப்போம். ரஃபிக் விரைவில் பதிவு இடப்போகும் blake and mortimer தொடரும் இதற்கு விதிவிலக்கல்ல.

    டாக்டர் கிளுகிளுப்பிற்காக அழைத்துள்ள கதாநாயகிகளை பார்க்கும்போது எனக்கு ஏற்படுவது
    கிலி கிலிப்பு.

    பன்ச் டயலாக் அருமை, உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  9. தாங்கள் சார்த்த நாடு, இனம், அரசியல், மொழி பாதிப்பின்றி எழுதும் கதாசிரியர்கள் குறைவே. நீங்கள் சுட்டிக்காட்டிய கருத்துக்கள் மட்டுமன்றி இன்னொன்றையும் கவனியுங்கள். மந்திரவாதி மாண்ட்ரேக், லாரன்ஸ் இவர்களின் சகாக்களான லோதார், டேவிட் ஆகிய இருவரும் கறுப்பர்கள். வெள்ளை கதாநாயகர்கள் மூளைப்பலம் உள்ளவர்களாகவும் கறுப்பர்கள் உடல் பலம் மட்டுமே உள்ளவர்களாகவும் காட்டும் முயற்சி இது என்பது என் எண்ணம். ஒபாமா அமெரிக்காவின் அதிபர் ஆகும் அளவுக்கு மக்களிடையே மன மாற்றம் ஏற்ப்பட்ட பிறகு மேற்படி கதாசிரியர்களின் முட்டாள்தனங்களை விமர்சிப்பது செத்த பாம்பை அடிப்பது போலத்தான்!

    டாக்டர் அய்யா! எங்கள் எழுத்துகளில் உள்ள எள்ளல் நடை படிப்பதை ஒரு இனிய அனுபவமாக்குகிறது. அதுவும்... அந்த தலைப்புகள்..! மாற்று கருத்தே இல்லை - வலைப்பூ வாசகர்கள் தங்கள் வசமாவது உறுதி!

    ReplyDelete
  10. எனது முந்தைய பின்னூடத்தில்...
    //டாக்டர் அய்யா! எங்கள் எழுத்துகளில் உள்ள எள்ளல் நடை//
    என்ற வரியை
    "டாக்டர் அய்யா! உங்கள் எழுத்துகளில் உள்ள எள்ளல் நடை"
    என்று படிக்கவும். நன்றி!

    ReplyDelete
  11. தீவிரவாதி திலகமே, பிடியுங்கள் எமது பதிலடி புல்லட்டுகளை! டுமீல்! டுமீல்! டுமீல்!

    (1) ஏழாவது வில்லன் பிஸ்மார்க் அடிக்கும் பன்ச் அற்புதம் = அதற்க்கு முன்னால் அவர் "மவனே" என்று லாரன்சை அழைப்பார். என்ன ஒரு லோக்கல் டச் பாருங்கள். இவை எல்லாம் முல்லை தங்கராசனின் பிரத்யேக தயாரிப்புகள்.

    (2) கிளுகிளுப்புக்கு பஞ்சமே இருக்காது = "டேய், நீ யாரு, என்ன பண்ணுவ & எப்படி யோசிப்பன்னு எனக்கு தெரியுண்டா" என்று கௌண்டமணி ஒரு படத்தில் கூறுவர். அதைப்போல, உங்களை பற்றி இந்த Commentன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    (3) கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை = அப்ஜெசன் மை லார்ட். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்களுக்கு நாடாமையாகிய நான் தண்டனை அளிக்கிறேன். என்றா பசுபதி, இவன ஊர விட்டே ஒதுக்கி வைங்கடா. ஆறும் இவனுக்கு சோறு தரக்கூடாது. ஆறும் இவனுக்கு தண்ணீ தரக்கூடாது. அஆமாம்.

    (4) வழக்கம் போல எம்.ஜி.ஆர். "சி.ஐ.டி.ராமு"வாக வருவார் = இந்த கதையை தான் சில பல மாற்றங்கள் செய்து உலகம் சுற்றும் வாலிபன் என்று தலைவர் படம் எடுத்தார்.

    (5) ஜெயலலிதா, லதா, மஞ்சுளா, லட்சுமி, கே.ஆர்.விஜயா, காஞ்சனா, ராஜஸ்ரீ என ஒவ்வொரு ஹீரோயினுடனும் ஒரு கசமுசா டூயட் வைக்கலாம். கிளுகிளுப்புக்கு பஞ்சமே இருக்காது = நீ ஒரு B J P (பயங்கர ஜொள்ளு பார்ட்டி) என்பது தெரிகிறது.

    (6) இந்தக் கதைத் தொடர்கள் அனைத்தும் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றாலும் = இந்த கருத்தை தயவு செய்து எடுத்து விடுங்கள். நீங்களே இவ்வாறு கூறலாமா? இவை Children of All Ages எல்லாம் என்கிற வகையில் வரும்.

    (7) சர்வதேசத் தீவிரவாதிகளின் பெயர்களாக தேசத் தலைவர்களின் பெயர்களை உபயோகித்திருப்பது நெருடுகிறது = நீங்கள் இதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கு கொண்டிஈர்கள். பிரபலமான ஒரு பெயரை கொண்டு வந்தால் அது மனதில் நின்று விடும். ஏதோ அஜித், விஜய் & தனுஷ், சிம்பு வகையில் அவர் பெயரை இவர் தவறாக பயன் படுகிறார் என்று கூறுகிறீர். இவர் பெயரை அவர் தவறாக பயன் படுத்துகிறார் என்று கூறுகிறீர்.

    ReplyDelete
  12. மருத்துவர் ஐயா,

    அற்புதமான பதிவு.

    போன போட்டிக்கான பரிசு எங்கே?

    இந்த போட்டிக்கான விடை "ஜுனைதா". கதை "மஞ்சள் பூ மர்மம்".

    முத்துவிசிறி

    ReplyDelete
  13. இங்கிலாந்து நாட்டில் ஒரு சில லாரியின் பின்புறம் மாடல் பெயராக லாரன்ஸ் டேவிட்(மாருதி 800 போல) என்று பெயர் போட்டிருக்கும். நம்முடைய லாரன்ஸ் டேவிட்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    முத்துவிசிறி

    ReplyDelete
  14. மன்னிக்கவும், அய்யம்பாளையம் சார்.

    (1) மந்திரவாதி மாண்ட்ரேக், லாரன்ஸ் இவர்களின் சகாக்களான லோதார், டேவிட் ஆகிய இருவரும் கறுப்பர்கள் = உங்களிடம் சொற்குற்றம் இருந்தால் அது மன்னிக்கப்படும் (உங்கள் = எங்கள்) ஆஅனால், பொருட்குற்றம் மன்னிகபடவே மாட்டாது. டேவிட் ஒரு கறுப்பர் அல்ல. (கறுப்பர் என்ற வார்த்தையை வெறுப்பவர்கள் நாங்கள்). டேவிட் ருஷ்ய நாட்டை சேர்ந்தவர்.

    (2) வெள்ளை கதாநாயகர்கள் மூளைப்பலம் உள்ளவர்களாகவும் கறுப்பர்கள் உடல் பலம் மட்டுமே உள்ளவர்களாகவும் காட்டும் முயற்சி இது என்பது என் எண்ணம் = இதற்க்கு மிக சரியான உதாரணம் டெக்ஸ் விலலேர் ஆவார். என்ன கொடுமை சார் இது? செவ்விந்தியர்களின் தலைவர் ஒரு வெள்ளையர். முஸ்லீம் ஒருவர் போப் ஆக கிருத்தவர்கள் எப்படி சம்மதிப்பார்கள்? அதை போல தான் இதுவும்.

    (3) ஒபாமா அமெரிக்காவின் அதிபர் ஆகும் அளவுக்கு மக்களிடையே மன மாற்றம் ஏற்ப்பட்ட பிறகு மேற்படி கதாசிரியர்களின் முட்டாள்தனங்களை விமர்சிப்பது செத்த பாம்பை அடிப்பது போலத்தான் = ஒபாமா அதிபர் ஆனது புஷ்'இன் முட்டாள் தனமான நடவடிக்கைகளால் தான். அதற்காக நாம் பாம்பை அடிக்காமலே விட கூடாது.

    முத்து விசிறி அவர்களே,

    நம்முடைய லாரன்ஸ் டேவிட்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை = கண்டிப்பாக இருக்கும். நம்ம ஆள் விஜயன் தான் ப்ளூ பெர்ரியையே டைகர் என் மாற்றியவர் ஆயிற்றே?

    ReplyDelete
  15. செழி! தவறை 'தாயுள்ளத்தோடு' சுட்டி காட்டியதற்கு நன்றி. 'கறுப்பர்' என்ற பதத்திற்கும் மன்னிக்க வேண்டுகிறேன். வேறு ஒரு மரியாதையான வார்த்தை உண்டு. தெரிந்தால் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  16. வணக்கம்,

    பதிவிட்ட அனைவருக்கும் நன்றி! குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டும் இங்கு பதிலளிக்கிறேன்.

    நிற துவேஷம் பற்றி பலர் கருத்துரையிட்டிருந்தாலும், கதை உருவாக்கப்பட்ட 1960-களில் பெரும்பாலான வாசகர்கள் வெள்ளையர்களாக இருக்கும் போது, அது அவ்வளவு பெரிய தவறாகத் தெரியவில்லை. சூப்பர்மேனை ஏன் கருப்பராகப் படைக்கவில்லை என கேள்வி கேட்போரும் இப்போது உண்டு. உருவாக்கியவரும், வாசகர்களும் வெள்ளையர்களாக இருக்கும் போது இதுதான் நடக்கும். ஆனால் சூப்பர்மேனை விட ஒரு மகத்தான ஹீரோ வேறு எவரும் இல்லை. இருப்பினும் தற்போது வரும் காமிக்ஸ்களைப்போல் வன்முறையோ, தகாத வார்த்தைப் பிரயோகங்களோ அப்போது கிடையாது.

    ஏனென்று நான் கூறினால் அடுத்த கேள்விக்கு அதுவே விடையாகும். காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று நான் கூறியதை நண்பர்கள் விஸ்வாவும், செழியனும் நேரிலும், பின்னூட்டமிட்டும் ஆட்சேபித்துள்ளனர். அந்தக் கருத்திலிருந்து எனக்கு எவ்வித மாற்றமும் இல்லை.

    உதாரணத்திற்கு நமது காலகட்டத்தில் (80-90 களில்) வாழ்ந்த ஒரு சிறுவனை எடுத்துக்கொள்வோம். பதினான்கு வயது வரை உள்ளவரை உலக சுகாதார மையம் சிறுவர்களாக வர்ணிக்கிறது. அவனது ஆறு வயதில் காமிக்ஸ் படிக்க ஆரம்பிப்பான். பதிமூன்று அல்லது பதினான்கு வரை பழக்கம் தொடரும். வளரிளம் பருவத்தில் அவனது நாட்டங்கள் காமிக்ஸை விட்டு விலகி வேறு திசைகளில் பயணிக்கும். நம்மில் பெரும்பாலானோர் காமிக்ஸ் படிப்பதை இந்த காலகட்டத்தில் தான் நிறுத்தியிருப்போம்.

    இந்த சிறுவர் வயதினர்தான் அதிகமாக காமிக்ஸ் படிப்பவர்கள். படைப்பாளிகள் இதை நன்கு உணர்ந்தவர்கள். ஆகையால் காமிக்ஸின் பொற்காலமான 60-களில் அதீத வன்முறை இருக்காது. ஜேம்ஸ் பாண்டு, மாடஸ்டி போன்ற சில காமிக்ஸ்கள் பிரத்யேகமாக பெரியவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. அவற்றில் கொஞ்சம் கிளுகிளுப்பும், வன்முறையும் அதிகமாக இருக்கும்.

    சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் காமிக்ஸ் என்றால் அதில் எனக்கு மகிழ்ச்சியே. நாம் அவர்களுக்கு என்ன செய்துவிட்டோம்? திரைப்படங்களில் அவர்களுக்கென்று தனியாக நம்மூர்களில் எதுவும் இல்லை. அஜீத்தையும், விஜயையும் தான் அவர்கள் பார்த்துத் தொலைத்தாக வேண்டும்.

    ஐரோப்பாவில் ஒவ்வொரு வயதினருக்கும் தனித்தனியே காமிக்ஸ் வகைகள் உண்டு. உங்களுக்கு 'அடல்ட்ஸ் ஒன்லி' காமிக்ஸ் வேண்டுமானாலும் கிடைக்கும். நாம் தமிழில் படித்தவை முக்கால்வாசி சிறுவர்களுக்கான காமிக்ஸ்களேயாகும்.

    நம்மை போன்ற வெகு சிலர் இன்னும் காமிக்ஸ் படிக்கிறோம் என கூறிக்கொண்டிருப்பது நமது வசந்த காலத்தை மீண்டும் ஒரு முறை ருசி பார்க்க நாம் காலத்தில் பின்னோக்கிச் செல்ல எடுக்கும் முயற்சியே ஆகும். நாம் விரும்பிய பழைய புத்தகங்களையே நாம் தேடிச் செல்கிறோம். (நம்மைப் பொறுத்தவரையில்) புதிதாக முளைத்திருக்கும் 'மாங்கா'வை நம்மில் எத்தனை பேர் படித்திருக்கிறோம்? இன்னும் அதே பழைய லக்கி லூக், டெக்ஸ் வில்லர் தான் படிக்கிறோம். என்ன வசதி கூடிவிட்டதால் ஆங்கிலத்திலும் வாங்கிப் படிக்கிறோம். அவ்வளவுதான்!

    புதிதாக வரும் காமிக்ஸ்கள் நமது காலகட்டத்திற்கு ஒத்துவராது என்பதால் 'சீ!சீ!இந்த பழம் புளிக்கும்' என்று ஒதுக்கி விடுகிறோம். நமது இளம்ப்ராயத்தை நினைவு கொண்டீர்களானால் பொன்னி முதல் ராணி வரை வந்த அனைத்து மொக்கை காமிக்ஸ்களையும் ஒரு பதம் பார்த்து விட்டு பின்னரே ஒரு வகை காமிக்ஸ்களுக்கு நாம் விசிறியாகியிருப்போம். இப்போது நம்மில் எத்தனை பேர் அதற்கு தயாராக உள்ளோம்?

    பின்னுட்டாங்களையே பதிவு நீளத்துக்குப் போடுவதை எப்படியாவது கட்டுப் படுத்த வேண்டும் என முயற்சிக்கிறேன். வழக்கம் போல உங்கள் மேலான கருத்துக்களை புதிய பதிவில் பின்னூட்டமாக இடுங்கள். அதுவரையில் வணக்கம் கூறி விடைபெறுவது,

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  17. டாக்டர் அய்யா!
    காமிக்ஸ் சிறுவர்களுக்கு மட்டுமே உரியதா என்ற விவாதத்திற்கு தாங்கள் அளித்துள்ள பதில்கள் விவரமானவை. இப்போது வரும் புதிய காமிக்ஸ் -களை படிக்க தோன்றாத (என்னை போல) யாருமே உங்களுடைய விளக்கத்திற்கு வலு சேர்ப்பவர்கள்தான்.

    இது போன்ற விவாதங்களை அவசியம் வெளியிடுங்கள்!

    ReplyDelete
  18. தலைவரே,

    காமிக்ஸ் சிறுவர்களிற்குரியது என்று நீங்கள் கூறுவது,நிலா சிறுவர்களிற்குரியது என்பதாக தோன்றுகிறது. அனுபவங்களுடன் மெருகேறும் ரசனையானது தன் தாகம் தீர்க்கும் சுனையை ஒய்வின்றி தேடிக்கொண்டேயிருக்கிறது, வாய்ப்புகள் எம்மை அரவணைக்கும்போதெல்லாம் அது தன் தாகத்தை ஆற்றிக்கொண்டே புதிதாகிக்கொண்டேயிருக்கிறது, உண்மையான ரசனையாளன் என்றும் தனக்குரிய கதையை தன்னுள் உருவாக்கி பின் அதனை கண்டடைய முயல்கிறான். அது லக்கிலுக்,டெக்ஸ்வில்லர்,எனும் சிறுவர்கள் பாத்திரங்களாகவிருக்கலாம் அல்லது சிருங்காரரசம் தோய்ந்த பாத்திரங்களாக அமையலாம், இந்த தமிழ் காமிக்ஸ் உலகில் இதனை கண்டடைவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே.வசதி இருந்தால் ஆங்கிலத்தில் படிக்கலாம் ,இல்லாவிடில் அருவி வரும்வரை தாகம் சற்று காத்திருக்கும்...கனவுகளை சுமந்துகொண்டு.

    ReplyDelete
  19. nice post ji! hi hi hi hi late coming but latest coming . already readed. but pinootam ida maranthu vitten pola!

    ReplyDelete
    Replies
    1. sir what about the great editer comics king
      mulai thangarasan?

      Delete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!